Saturday, March 16, 2013

ரயில் ஸ்னேகா!


ஒரு நீண்ட நேர ஓட்டத்திற்குப் பிறகு அந்த ரயில் பெரிதாய் பெருமூச்சு விட்டுக் கொண்டு, ஸ்டேஷனுக்கு வந்து நின்றது.
  “சார்....காஃபி....சார்...காஃபி..”
  “டீ.........டீ........டீ.......”
 “இட்லி வடை....சார் உப்மா......உப்மா....”
 “ஹிண்டு...எக்ஸ்ப்ரஸ்....ஆனந்த விகடன்..”
“சார்...போளி....போளி.....”
      வியாபாரிகளின் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது.
      அந்த பருத்த மனிதர், மேல் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார்..அவருக்கு இது காறும் இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஆசாமி, ஒரு மரியாதைக்குக் கூட  அவரிடம் சொல்லிக்கக்  கூட மாட்டாமல் ஒரு வழியாய் இறங்கி விட்டான்..
      அந்த ஸீட்டில் நாம் உட்காரலாமா என்று நினைத்தார்...உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்..அவன் உட்கார்ந்திருந்த இடம் கூட அவ்வளவு எரிச்சல் உண்டாக்குமளவுக்கு
அவரை ‘போர்’ அடித்து விட்டான் அந்த ஆள்!
    பசி வயிற்றை கவ்வவே, கையோடு கொண்டு வந்த டிபன் பாக்சைத் திறந்தார்.
    மிளகாய் பொடி தூவிய அந்த மல்லிகைப் பூ போன்ற இட்லிகள் ஒவ்வொன்றாய் அந்தர்த்யானமாகிக் கொண்டிருந்தது...
    “....பேச்சு கொடுத்தால் தானே பேசுகிறான்கள்..வாய் மூடி மெளனமாய் இருந்து விட்டால்....” என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, டக்டக்கென்று பூட்ஸ் கால்கள் சப்தமிக்க கோட்டு சூட்டுடன் ஒரு அழகிய இளம் பெண்  எதிர்த்தாற் போல் உட்கார்ந்தாள்....
    பரவாயில்லையே என்று  நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ஸ்டேஷனில் இறங்கின அந்த பழைய ஆள் மனதுக்குள் வந்து மறுபடியும் பயமுறுத்தினான்!
   ரயில் சினேகிதம் எல்லாம் நமக்கு செளகர்யமான ஸீட் கிடைக்காத வரை தான் கொண்டாடப் பட  வேண்டும்..வசதியாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது எதற்கு அனாவசியமாய் வாய்
வளர்த்துக் கொள்ள வேண்டும் அடுத்த ஆளிடம்?
    சட்டென கண்களை மூடிக் கொண்டு தூங்குகிறார்போல பாசாங்கு செய்யலாமா என்று எண்ணினார்..உடனே எண்ணத்தை மாற்றிக் கொண்டார்...
   டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எப்படி தூங்குவது?   
   இதற்குள் ரயில் கிளம்பி விட்டது.
   சினேகிதமாய் சிரித்தாள் அந்த இளம் அழகி.
   “அதற்குள் வெயில் ஆரம்பிச்சாச்சு...இல்லையா  சார்”
   ஆம் என்பது போல தலையை ஆட்டினார்..
   ”என் பெயர் ஸ்னேகா”
   இதற்கும் மெளனமே அவர் பதிலாய் இருந்தது! 
  ”சார்....மதுரைக்கா போறீங்க..”
  ”..”
 “சும்மா..பேச்சுக்குத் தான் சொல்றேன்...ஓடற ரயில்ல உங்களுக்கு ஏதாவது     ஆச்சுன்னா....நெருப்புன்ன உடனே வாய் வெந்துடுமா என்ன?”
  “..”
  “பரவாயில்ல.. நான் ஒரு இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட்..”
  ”..”
  “ஏதாவது நம்ம கிட்ட பாலிஸி போட்டீங்கன்னா..”
  ”..”
  “இது மார்ச் மாசம் நல்ல எண்டெளமோண்ட் பாலிஸி ஒண்ணு இருக்கு...போட்டீங்கன்னா...இன்கம்டாக்சுக்கு SAVE பண்ணினா மாதிரியும் ஆச்சு”
 “..”
 “முத ரெண்டு ப்ரீமியம் நான் கட்டறேன்..மூணாவதிலிருந்து நீங்க கட்டினாப் போறும்”
 “..”
 “பரவாயில்லை சார்..தெரிஞ்ச மனுஷனாப் போயிட்டீங்க..உங்களுக்காக மூணு பிரீயமும்  நானே கட்டறேன்..”
 “..”
  “என்ன சார்...பேனா வேணுமா...பேப்பரும் வேணுமா..இந்தாங்க”
  “..”
  “என்னது... நான் படிக்கணுமா...’சார் நான் ஒரு செவிட்டூமை... நீங்க பேசினது ஒண்ணுமே புரியவில்லை’...அடப் பாவமே... நான் வரேன் சார்”
அந்த இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட் இடத்தை காலி செய்ததும், இவர் ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா...என்று தன் சாமர்த்தியத்தை நினைத்து தனக்குத் தானே நன்றாக  வாய் விட்டு சிரித்தார்.
அதற்குப் பிறகு, அரை மணி நேரம் கழித்து,குய்யோ,முறையோ என்று கூச்சலும் போட்டார்.....
ரயிலை விட்டு இறங்கிய அந்த ஸ்னேகா சும்மா இறங்காமல்,இவர் சூட்கேசையும் கூட எடுத்துக் கொண்டு இறங்கியது தான் காரணம்!

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... அடப்பாவமே...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அருமையான ஒரு ஸ்நேகாவைப்போய் இப்படி அநியாயமாக மிஸ் பண்ணியதுடன் தன் சூட்கேஸையும் அல்லவா இழந்து விட்டார், அந்த மனுஷ்யர்.

நானாக இருந்தால், பாலிஸி ஏதும் எடுக்கவே கூடாது என்ற பாலிஸியுடன் இருந்தாலும், ஸ்நேகாவிற்காக அவளிடம் நிறைய பாலிஸி எடுத்திருப்பேனாக்கும்.

நல்ல சுவாரஸ்யமான கதை.

தலைப்பைப்பார்த்த்தும் தாங்கள் வளர்க்கும் ஸ்நேகா என்ற பாம்புக்குட்டியைப்பற்றிய கதையாக்கும் என்று நினைத்தேன், ஸ்வாமீ.

இந்த ரயில் ஸ்நேக ஸ்நேகாவுக்கு, அந்தப்பாம்புக்குட்டி ஸ்நேகாவே தேவலாம் என்று நினைக்கிறேன்.

பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

ஜீவி said...

தலைப்பு அருமை. ஸ்நேக பாவத்துடன் இருந்தது.

”தளிர் சுரேஷ்” said...

சுவையான சிறுகதை! அருமை! நன்றி!

G.M Balasubramaniam said...

இவர் எட்டடி பாய்ந்தால் சிநேகா பதினாறடியோ.? ஹும்...வல்லவனுக்கு வல்லவன். என் பதிவில் ஒரு நாடகம் தொடராக எழுதி வருகிறேன். கதாசிரியர்கள் படித்துச்சொன்னால் உங்கள் பதிவின் முகப்பில் இருப்பது போல் இருக்கும். நன்றி.

அப்பாதுரை said...

nice.

RAMA RAVI (RAMVI) said...

சுவாரசியமான கதை. எதிர்பாராத திருப்பம். அருமை.

உஷா அன்பரசு said...

ஹா..ஹா..!

இராஜராஜேஸ்வரி said...

ரயிலை விட்டு இறங்கிய அந்த ஸ்னேகா சும்மா இறங்காமல்,இவர் சூட்கேசையும் கூட எடுத்துக் கொண்டு இறங்கியது தான் காரணம்!

ஸ்னேகா ஸ்னேக் ஆக மாறிவிட்டாளே.!

வெங்கட் நாகராஜ் said...

அட.... :)))

ரிஷபன் said...

உங்க நகைச்சுவை உணர்வை ஸ்னேகிக்கிறேன்..

VOICE OF INDIAN said...

சொந்த அனுபவமாதிரி தெரியுதே..............!