Sunday, March 11, 2012

போகிற போக்கில்...!!!


ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஆயிரம் ஆண்களுக்கு, தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு பெண்கள் தான் இருக்கிறார்களாம்!
எந்த ஒரு ப்ராடக்டுமே, SCARCE ஆக இருக்கும் போது,அதற்கு DEMAND ஜாஸ்தி என்பது சாதாரண மார்க்கெட்டிங் தியரி! இதில் SCARCE ஐ விட DEMAND க்கு DEMAND ஜாஸ்தி! பாருங்களேன் SCARCEக்கு ஆறு எழுத்துக்கள் ஆனால், DEMANDக்கு வெறும் ஐந்து எழுத்துக்கள் தான்!
எதற்கு சொல்கிறேன் என்றால், காலையில் சாவதானமாக எழுந்திருந்து, பல் தேய்த்து (பல் தேய்க்கும் பழக்கம் இருந்தால்) காஃபி குடித்து, சோம்பல் முறித்து, ஹிண்டு பேப்பரை அதன் பன்னிரெண்டு பக்கங்களையும் அக்கு வேறு..ஆணி வேறாக ..அலசி, சலித்து,பார்த்து படித்து..ஆராய்ந்து பின் குளிக்கலாமா, வேண்டாமா என்று பூவா, தலையா வேறு போட்டு, குளிக்கப் போய், கொட்டு வாக்கில் ஷூ லேஸை மாட்டிக்கொண்டு, ‘என்ன டிஃபன் ரெடியா?’ என்று உள்ளே அதிகாரம் இடும் ஆசாமி நீங்களா இருந்தால், சாரி..மாற்றிக் கொள்ளுங்கள் ..உங்கள் ஆணவம்..ஆர்ப்பாட்டம் எல்லாம் இனி கொஞ்ச நாட்கள் தான்!
கல்யாணச் சந்தையில் ஆண்களின் ஜாதகங்கள் தேங்குகின்றன..இருபத்தி நான்கே வயதான ஆண் வரன் ஒன்று சும்மாக் கிடக்காமல் M.COM., MBA., MCA., ACA,AICWA,ACS, BGL என்று எல்லாம் படித்து விட்டு, மாதம் ஒன்றிற்கு சுமார் ஒரு லகரம் சம்பளம் வாங்கி கொண்டு, வருஷக் கணக்காக ஒரே ஒரு பெண்ணிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது!இதுவே இப்படி என்றால், சாதாரண குமாஸ்தாக்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை!
முதிர் கன்னிகள் போய் முதிர் காளைகள் கல்யாண சந்தையை முட்டுகின்ற காலம் இது! MATRIMONIAL ஐ PATRIMONIAL ஆக மாற்றப் போகிறார்களாம்!
சந்தையில் காத்துக் கொண்டிருக்கும் ஆண் வரன்கள் பெண் வரன்களை ஈர்க்க, கோலம், சமையல், சங்கீதம் என்று கற்றுக் கொள்கிறார்கள்...
வருடத்திற்கு இரண்டு மகளிர் தினங்கள் வரப் போகிறது!ஜாக்கிரதை!
நான் சொல்கிறது நூற்றுக்கு நூறு உண்மை..எப்படி சொல்கிறேன் என்றால், நம்ம நாராயண ராவே நான் சொன்னதை ஒத்துக் கொண்டு விட்டாராக்கும்...
எது சொன்னாலும் ’நாட் தட்’ என்று ARGUE செய்யும் எதிர் வீட்டு நாராயண ராவ் நான், ’பெண்களின் கை ஓங்கிக் கொண்டே போகிறது’ என்று சொன்னதிற்கு ”ஆமாம் ஓய், நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்று சட்டென்று, தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே
ஒத்துக் கொண்டார்!
அப்போது அவர் தலை விண்ணென்று புடைத்துக் கொண்டு இருந்தது!!

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

// ”ஆமாம் ஓய், நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்று சட்டென்று, தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே
ஒத்துக் கொண்டார்!
அப்போது அவர் தலை விண்ணென்று புடைத்துக் கொண்டு இருந்தது!!//

ஒப்புக்கொண்டதன் காரணம் கடைசியில் வெட்ட வெளிச்சம்.... :)

சுவையான பகிர்வு. இப்போதே ஹரியானாவில் பெண்கள் கிடைக்காததால் சில வீடுகளில் வெளி மாநில பெண்களை பணம் கொடுத்து மணமுடிக்கிறார்கள்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

காலம் மாறி ரொம்ப நாட்கள் ஆச்சு ஸ்வாமி.

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பொருத்தமான திருப்தியான பெண்கள் அமைவது மிகவும் குதிரைக்கொம்பாகவே உள்ளது.

அப்படியே அமைந்தாலும் பெண்கள் பக்கம் நிறைய கண்டிஷன்கள் போட ஆரம்பித்து விட்டார்கள்.

[நல்லா வேணும் இந்த ஆண்களுக்கு. நல்லவேளையாக எனக்கும், உமக்கும் எப்போதோ கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் நாம் என்ன வேணுமானாலும் தைர்யமாகப் பேசலாம், எழுதலாம்.]

ஆனால் பாவம் ஸ்வாமி, இந்தக்கால வயசுப் பையன்கள். கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்கள், ஸ்வாமி.

கௌதமன் said...

பக்கத்தில் உள்ள அடுக்ககத்தில், விளையாடுமிடத்திற்கு வருகின்ற குழந்தைகளை அடிக்கடி புள்ளி விவர ஆவலோடு எண்ணிக்கை எடுக்கையில், பத்து பையன்கள், நாலு பெண்கள் என்ற விகிதமே எப்பொழுதும் கண்களில் படுகின்றது.

ரிஷபன் said...

MATRIMONIAL ஐ PATRIMONIAL ஆக மாற்றப் போகிறார்களாம்!

SCARCEக்கு ஆறு எழுத்துக்கள் ஆனால், DEMANDக்கு வெறும் ஐந்து எழுத்துக்கள் தான்!

புகுந்து விளையாடிட்டீங்க..

RVS said...

கல்யாண சந்தையைப் பற்றி அலசோ அலசென்று அலசிவிட்டீர்கள். :-)

கே. பி. ஜனா... said...

பிரமாதப்படுத்துகிறீர்கள் நகைச்சுவையில்! நன்றாக ரசித்தேன்.

என்னுடைய பதிவில் புதிதாக ஒரு சுய முன்னேற்றத் தொடர்.
'அன்புடன் ஒரு நிமிடம்...' முதல் பகுதி. 'எண்ணிச் சிந்திடுவோம்...'

http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html

ADHI VENKAT said...

ஆமாம் சார். நீங்க சொல்லியிருக்கற மாதிரி நாளை நிச்சயம் நடக்கலாம்....

ராஜி said...

// ”ஆமாம் ஓய், நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்று சட்டென்று, தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே
ஒத்துக் கொண்டார்!
அப்போது அவர் தலை விண்ணென்று புடைத்துக் கொண்டு இருந்தது!!//
>>>
வீட்டுக்கு வீடு வாசப்படிதான். இதை போய் பெருசு பண்ணிக்கிட்டு.

அப்பாதுரை said...

நிறைய மாற்றம் வருது வருது குடுகுடு..
கை ஓங்கியிருப்பது தெரிந்த நாராயண ராவ்கள் தான் இனி நம்மில் :)