Thursday, March 15, 2012

என்ன ஆயிற்று இந்த அப்பாவிற்கு?


செங்கல்வராயன் பெரிய தொழில் அதிபர்.அவர் பெயரில் ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்..ஒரு இஞ்ஜினீயரிங் காலேஜ் எல்லாம் இருக்கிறது..இருந்து என்ன பயன்? அவரின் ஒரே வாரிசு..அவர் பெண்... படிப்பது பாடாவதி அரசு கல்லூரியில்!இத்தனைக்கும் அவளுக்கு எல்.கே.ஜி.யிலிருந்து ப்ளஸ் டூ வரை ஊரிலேயே பெரிய கான்வெண்ட்டில் தான் சேர்த்தார்கள்..
இப்போது என்ன வந்து விட்டது அவருக்கு?
ஒரு சாதாரண கல்லூரியில் சேர்த்து விட்டார். அதுவும் அவராக சேர்க்கவில்லை..இவள் வாங்கிய மார்க்குக்கு அந்த கல்லூரி தான் கிடைத்தது.அதையும் ” எனக்கு வேலை இருக்கிறது.. நீயே போய் சேர்ந்து கொள்..வேண்டுமானால், உன் அம்மாவை கூட்டிக் கொண்டு போ” என்று சொல்ல, தேஜா தான் வீம்பாக தானே அக்கல்லூரியில் சேர்ந்தாள்.
அவர் நினைத்திருந்தால், அவளை ஹார்வர்டில் சேர்த்திருக்கலாம்..அதில்லை என்றால், அவர் காலேஜிலேயே ஒரு நல்ல கோர்சில் சேர்த்திருக்கலாம்..அவ்வளவு பாசமாய் இருந்த அப்பா ஏன் இப்படி திடீரென்று மாறி விட்டார்?
எல்லாவற்றையும் விட இது தான் கொஞ்சம் ஓவர்..ஹாஸ்டல் செலவுக்கு முதல் இரெண்டு மாதம் சுளையாக மூவாயிரம் ரூபாய் அனுப்பியவர், நான்காம் மாதத்திலிருந்து வெறும் ஆயிரம் ரூபாய் தான் அனுப்புகிறார்..
என்ன ஆயிற்று இந்த அப்பாவிற்கு?
செமஸ்டர் லீவிற்கு வந்தவளுக்கு அப்பாவுடன் பேசவே பிடிக்கவில்லை.. அவரும் அவள் வந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..”வா” என்கிற ஒற்றைச் சொல்லோடு சரி!
முதல் வேலையாய் அம்மாவிடம் புலம்பி தீர்த்து விட்டாள்.
ஒரு சாவதானமான ஞாயிற்றுக்கிழமை!
நியூஸ் பேப்பருக்குள் தலையை புதைத்துக் கொண்டிருந்தார் செங்கல் வராயன்.
“ என்னங்க...உங்களுக்கே இது நல்லா இருக்கா? தேஜா நம்ம ஒரே பொண்ணு..அதை நம்ம காலேஜிலே சேர்க்கல..கேட்டா, அப்புறம் சொல்றேன்னு சொல்றீங்க..புள்ளையோட ரொம்ப பேச்சை குறைச்சுட்டீங்க..அதாவது பரவாயில்ல..செலவுக்கு பணத்தையும் வேற குறைச்சுட்டீங்களாம் ...தேஜா சொல்லி அழுதா..யாருக்காக நீங்க சேர்க்கப் போறீங்க? ஏன் இப்படி இருக்கீங்க..”
பொலுபொலுவென பிடித்துக் கொண்டாள், பார்வதி.
“பார்வதி நம்ம புள்ள மேல பாசம் இல்லாமலா இருக்கு எனக்கு? அளவுக்கு மேல அது இருக்கிறதினால தான் நான் இப்படி இருக்கேன்”
“என்ன சொல்றீங்க?”
“ நான் யார் ஒரு பெரிய பிஸினஸ் மேக்னட்.. நான் என்ன பிறவியிலேயே பெரிய பணக்காரனா? இல்லையே..எஸ்.எஸ்.எல்.ஸி ஃபெயில் ஆனதினால, வீட்டில யாருக்கும் சொல்லாம, திருட்டு ரயிலேறி பட்டணம் வந்து, படாத பாடு பட்டு இன்னிக்கி ஒரு பெரிய ஆலமரமா வளர்ந்து இருக்கேன்..இந்த ஆலமர நிழல்ல இன்னொரு ஆலமரம் வளராது..அதோட நிழல் அந்த செடியை வளர விடாது..அதனால தான், என் பொண்ணும் அவ சுயமா நிற்கணும்னு தான் பல்லக் கடிச்சுண்டு இப்படி இருக்கேன்..அவளும் என்னை மாதிரி பசியை உணரணும்..ஒரு ஆலமரமா வளருணும்னு நான் ஆசைப் படறது தப்பா, பார்வதி?”
”தப்பே இல்லை”
எதேச்சையாய் பக்கத்து ஹாலுக்கு வந்த தேஜா தனக்குள் சொல்லிக் கொண்டாள், தன் கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே...

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்த ஆலமர நிழல்ல இன்னொரு ஆலமரம் வளராது..அதோட நிழல் அந்த செடியை வளர விடாது..அதனால தான், என் பொண்ணும் அவ சுயமா நிற்கணும்னு தான் பல்லக் கடிச்சுண்டு இப்படி இருக்கேன்..அவளும் என்னை மாதிரி பசியை உணரணும்..ஒரு ஆலமரமா வளருணும்னு நான் ஆசைப் படறது தப்பா,//

சூப்பர் வரிகள்.

இருந்தாலும் தேஜாவை நினைத்தால் பாவமாக உள்ளது.

தேஜாவைக் கொஞ்சம் தாஜா செய்து கொஞ்சம் பணம் அதிகம் கொடுத்தால் தான் என்ன, குறைஞ்சாப் போய்விடுவார். இவர் அன்று கஷ்டப்பட்டார் என்றால், அவளும் இன்று கஷ்டப்படணுமா?

பாவம் அவள் ஒரு பெண்குட்டி இல்லையா!

இரக்கம் காட்ட வேண்டாமா, அந்தக் கோடீஸ்வரர்.

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு நியாயம்...!

middleclassmadhavi said...

Nalla needhiyulla kathai.

வல்லிசிம்ஹன் said...

வித்தியாசமான சிந்தனை. பொறுப்பான அப்பா. நல்ல கதை.

ரிஷபன் said...

என் பொண்ணும் அவ சுயமா நிற்கணும்னு தான் பல்லக் கடிச்சுண்டு இப்படி இருக்கேன்..அவளும் என்னை மாதிரி பசியை உணரணும்..ஒரு ஆலமரமா வளருணும்னு நான் ஆசைப் படறது தப்பா, பார்வதி?”

”தப்பே இல்லை" !!!!

ADHI VENKAT said...

தப்பே இல்லை தான்.

இருந்தாலும் முதல்ல இருந்து வசதியா வளர்ந்தவளை இப்போது கஷ்டப்பட சொல்வது...... சட்டென்று மாறுவது சற்று கடினமாயிற்றே....

வெங்கட் நாகராஜ் said...

ஆமாம் தப்பே இல்லை!

நல்ல பகிர்வு...

selva said...

வலியை உணர முடியாதவனுக்கு
இன்பத்தினால் பயனில்லை
கஷ்டத்தை தாங்காதவனுக்கு
வெற்றி நிரந்தரமில்லை.
பெற்றவருடைய சிந்தனை
நூற்றுக்கு நூறு சரியானதே...........

இராஜராஜேஸ்வரி said...

"என்ன ஆயிற்று இந்த அப்பாவிற்கு?"

பெண்ணின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிவிட்டு அல்லவா உபதேசம் செய்யவேண்டும் அந்த ஆலமரம்!

சாந்தி மாரியப்பன் said...

தப்பில்லைதான்.. ஆனால் ஆரம்பத்துலேர்ந்தே அப்படி வளர்த்துருக்கணும்.

அவ்வளவு நாள் சொகுசாக நிழலில் வளர்ந்த பூச்செடியை திடீர்ன்னு வெய்யில்ல கொண்டு போய் வாட வைக்கலாமோ !!!