Saturday, January 7, 2012

முப்பத்தொன்பது பை மூணு! மூக்கப்பிள்ளை லேனு!!


திருச்சிராப்பள்ளி வடக்கு ஆண்டார்வீதி நடுவில்...இடிச்சுவிட்ட வாசல் படிக்கு அடுத்தது பொன்னம்மாள் டாக்டர் பிரசவ ஆஸ்பத்திரி!பக்கத்தில் மூக்கப்பிள்ளை லேன்!அதில் மணிவாசகம் ஸ்டோர்!
1969 வாக்கில், எங்கள் குடும்பம் தாத்தா, பாட்டியுடனான கூட்டுக் குடும்பத்தை விட்டு, எங்கள் படிப்பிற்க்காக திருச்சி வந்தது காலத்தின் கட்டாயம்.கிராமத்தில் இருந்தால் முன்னேற முடியாது என்று டவுனுக்கு வந்து கூடாரம் போடும் வேலையை நாங்கள் அன்றே செய்து விட்டோம்! ஆனால் முன்னேற்றம் தான் மிஸ்சிங் இந்த MIGRATION இல்!
ஆங்கரையில் பெரிய வீடு..இது டவுன். வாடகை முப்பது ரூபாய்! எப்படி இருக்குமோ.. நாம நிறைய பேர் இருக்கோமே..வீடு பத்துமா..என்று அந்த சிறு வயதிலேயே எனக்கு ஏகப் பட்ட கவலை!
அதற்கேற்றார் போல தான் இருந்தது மணி வாசகம் ஸ்டோர் வீடும்! ஒரு சிறிய திண்ணை..ரேழி..வலது பக்கம் சமையல் உள். நடுவே.பத்துக்கு எட்டு சின்ன ஹால்.கதவைத் திறந்தால்..இன்னொரு கதவு..அதை பாத்ரூமாக இருக்கும் என்று நினைத்து திறந்தால் அங்கு இருந்தது பத்து குடித்தனங்கள்!
பயத்தில் ஜூரம் வந்து விட்டது.
என்ன செய்வது? ஸ்டோர் லைஃப்க்கு எங்களை கொஞ்சம்..கொஞ்சமாய் தயார் படுத்திக் கொண்டோம்.. நானும், கிரியும் முறையே 9ம் கிளாசும்..7ம் கிளாசும் E.R.HIGH SCHOOL லில்..ஜெயந்தி, ராஜு, மோகன் அங்கேயே பக்கத்தில் உள்ள ஒரு சின்ன ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள்..அண்ணாவிற்கு ஆஃபீஸ் ஜங்ஷன்..EB காமராஜ் பில்டிங்! சைக்கிளிலேயே ஆஃபீஸ் போய் விடுவார். எல்லார்க்கும்..பக்கத்து பக்கத்தில் அலுவல்..ஆனால் வீடு மட்டும் புறாக்கூண்டு! அங்கு ஆங்கரையில் எல்லாமே தூரம்..ஆனால் வீடு பெரிசு!
நாங்கள் இருந்த கதவுஇலக்க எண் 39/3..இப்படி வலது பக்கம் ஆறு வீடு..இடது பக்கம் ஆறு வீடு..மூன்று வீடுகள்..எல்லாம் நெருப்பு பெட்டி சைஸில்! அதிலும்,எஙக்ள் 39/3ம், எதிர்வீடு 40/1ம் இன்னும் சின்ன நெருப்பு பெட்டி!
ஒரு சின்ன அறிமுகம்!
நாங்கள்..எதிர் வீடு பஞ்சு, ராஜி, ..பஞ்சு பெயருக்கேற்றார் போல் பஞ்சு போல் லேசு இல்ல..குண்டு..செம குண்டு நம்ம அப்புசாமி,சீதா பாட்டி குடும்பத்துல வர பீமா ராவ் சைஸ்! அடுத்த வீடு சாஸ்திரிகள் வீடு..அந்த மாமிக்கு நாங்கள் வைத்த பெயர் லிட்டர் மாமி..அந்த மாமி முறை வைத்து தண்ணீர் பிடிக்கும் போது, யாராவது கூட பிடித்தால், தான் ஒன்றும் சொல்ல மாட்டாள்..எங்களையோ..அல்லது வேற யாரையோ கூப்பிட்டு..”உஷ்..அவாத்துல, ஒரு குடம் கூட பிடிக்கிறா..என்று ’வத்தி’வைக்க, அதை நம்பி நாங்கள் வீராவேசமாய் சண்டை போட,அதை ஜோராய் வேடிக்கை பார்ப்பாள், அந்த மாமி!எதேச்சையாய் அந்த மாமியை நாம் பார்த்தோமென்றால்,முகத்தில் விளக்கெண்ணைய் வழியும் லிட்டர் கணக்கில்! அதனால் தான் லிட்டர் மாமி என்று பெயர்!
முப்பது வருடங்கள் முன்னாடியே முல்லை பெரியார் வந்து விட்டதாக்கும் எங்கள் ஸ்டோரில்!
அடுத்த வீடு லட்சுமி மாமி வீடு..மாமா கிருஷ்ண மூர்த்தி மாமாவிற்கு ரயில்வேயில் உத்யோகம்..லட்சுமி மாமி ’வாராயோ வெண்ணிலாவே’ என்று ஏதாவது ஒரு பாட்டு பாடிக் கொண்டே வீட்டு வேலைகள் செய்ய,கிருஷ்ண மூர்த்தி மாமா இருமல் தாத்தா மாதிரி இருமிக் கொண்டே இருப்பார்..
அடுத்த வீடு ராதா கிருஷ்ண மூர்த்தி.இருவருமே டீச்சர்ஸ்..அடுத்த வீட்டில் உள்ள அத்தனை பேரும் நெட்டை கொக்குகள்.. முகம் செவ்விந்தியர் போல் இருக்கும்..அவர்களுக்கு வைத்த பெயர் பெடகோணியன்ஸ்..அவர்கள் வீட்டு கடைசி பெண் குஷி வந்து விட்டால், சர்ரென்று திண்ணை இரும்பு தூண் மேல் ஏறுவாள் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே!
பெடகோணியன் வீட்டிற்கு எதிர்த்தாற்போல், அர்த்தனாரி மாமா! அவர் பார்ட் டைம் ஜாப் டைப்பிங்.பெடகோணியன் ஃபுல் டைம் ஜாப் டைப்பிங்..மணிவாசகம் ஸ்டோர் மணியான இரவுகளை அவர்கள் இருவரும் லொட்லொட்டென்று டைப் மெஷினை தட்டியே பங்கு போட்டுக் கொள்வார்கள்..
பாக்கி ஆட்கள் அவ்வளவு ஸ்வாரஸ்யமில்லை..
”..ஸ்லோகப் புத்தகங்கள்...வெங்கடேச சுப்ரபாதம் என்று கூவிக் கொண்டு புஸ்தகம் விற்பவர் வருவார்..மற்றபடி கோபால்,சுப்ரமணி பால்..பத்து தேய்க்கும் பாப்பா..தனம்..
ஸ்டோரின் கட்டோ கடைசியில் கிணறு..அந்த கிணறு சொல்லும் கதைகள் பல..எங்களுக்கு அது தான் மெரினா!
இப்போது வருபவர் நம் நண்பன் கல்யாண ராமன்..நம்ம ஸ்டோர் ஆசாமி இல்லை..பக்கத்து மூக்கப் பிள்ளை சந்து!
(பி.கு.: இதன் தொடர்ச்சி வருகிற 11.1.2012ல் வெளி வரும்..)

8 comments:

ஸ்ரீராம். said...

மீள் பதிவு மாதிரி தோன்றுகிறது. Stored நினைவுகள் என்று அப்போது கமெண்ட் அடித்ததாய் நினைவு! ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் வைத்திருப்பது சுவாரஸ்யம். எங்களுக்கும் அந்தப் பழக்கம் உண்டு! (யாருக்குதான் இல்லை?!) நமக்கு அவர்கள் என்ன பெயர் வைத்திருப்பார்கள் என்று அறிய எனக்கு ஆவலாய் இருக்கும்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சாரே...இது மீள் பதிவு அல்ல..ஒரு பழைய டயரி.. நீங்கள் Stored நினைவுகள் என்று கமெண்ட் போட்டது
‘பாலகிருஷ்ணன் வீடு’ என்ற கதைக்கு..
அதிலும் ஸ்டோர் வரும்..
பட்ட பெயர் வைப்பது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்! நேஷனல் காலேஜ் உயரமான ஒரு ப்ரொஃபசருக்கு
Y AXIS என்று பெயர் வைத்தோம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பதிவு. சுவாரஸ்யம் அதிகமாக உள்ளது. திருச்சியிலேயே, ஏன் தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே மிகப்பெரிய “பெரிய நாராயண ஐயர் ஸ்டோரில்” 5/1 to 5/52 என ஐம்பத்து இரண்டு வீடுகள் உள்ள ஜே ஜே என்ற ஸ்டோரில் கொஞ்சகாலம் வாழ்ந்த அனுபவம் உள்ளதால், நீங்கள் சொல்வது எல்லாம் டக்டக்கென்று கற்பூரம் போல எனக்குப் பற்றிக்கொள்கிறது, ஸ்வாமி!

தொடருங்கள். புத்தாண்டு+பொங்கல் வாழ்த்துக்கள்.

[என்னிடம் வீட்டுக்கு 10 வீதம் அந்த 52*10=520 கதைகள் உள்ளன. பதிவிட நேரம் தான் இல்லை.]

அன்புடன் vgk

வெங்கட் நாகராஜ் said...

Store.... என் உறவினர் ஒருவர் கூட தண்ணீர் பந்தல் ஸ்டோரில் இருந்தார்... :) அதனால் இந்த ஸ்டோர் என்பதைப் பார்த்திருக்கிறேன்....

“Y” Axis... - என்ன ஒரு பெயர்.. நாங்க கூட ஒரு பெண்ணிற்கு "Saline Stand" என்று பெயர் வைத்திருக்கிறோம்.....

இனிய நினைவுகள்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

'எழுத்துலக ’தானே’ வைகோ அவர்களுக்கு,
நான் சொல்வது ஏதோ பிறந்தகத்து சமாச்சாரங்களை உடன் பிறந்தானிடம் சொல்வது போல் உள்ளதால் சற்று அடக்கியே வாசிக்கிறேன்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி வெங்கட் அவர்களே...

ADHI VENKAT said...

அருமையான நினைவுகள். காத்திருக்கிறோம் சுவாரசியங்களுக்காக.......

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி கோவை டூ டில்லி அவர்களே!