Saturday, January 14, 2012

பத்மப்ரபோதாயனே வருக ..வருகவே...


எங்கு பார்த்தாலும் இருட்டு..பனி...உடம்பு நடு நடுங்குகிறது..வெப்பத்திற்கு மனசும், உடலும் ஏங்குகிறது...இதோ...துளி வெளிச்சம்...பனித்துளிகள் மறைய ஆரம்பிக்கின்றன......கொஞ்சம்..கொஞ்சமாய் சூடு பரவ...வெப்பம் எட்டிப் பார்க்க...குளத்திலுள்ள, பத்மங்களை (தாமரை) உயிர்ப்பிக்க, ஆதவன் வந்து கொண்டிருக்கிறான்..ஆ..வந்து விட்டான்...பத்ம ப்ரபோதாயனே வருக..வருக.......
காட்சி : 1
மஹா பாரததின் ஹிதோபதேசம் போல், இங்கும் ஒரு உபதேசம் நடந்துள்ளது..ஆனால் இங்கு பகவான் தடுமாறுகிறார்..அவருக்கு தைரியம் சொல்பவர் அகஸ்திய மாமுனி!
எதிரில், பத்து தலையுடன் ராவணன்!
ராவணன் ஒரு உருவம் அவ்வளவு தான்..ஐந்து கர்ம இந்திரியங்களும், ஞான இந்திரியங்களும் சேர்ந்த ஒரு கலவை..இந்த பத்தும் ஒன்று சேர்ந்தால், அங்கு,ஆணவம், செருக்கு,பழி பாவத்திற்கு அஞ்சாத தைர்யம்.....எல்லாம் ஒன்று சேர்ந்து விடும். அதனை எதிர்க்க ஒரு யுத்தமே அவசியம் ஆகிறது அப்போது!
அந்த பத்து இந்திரியங்களை எதிர் கொள்ள, அகஸ்திய மஹா முனிவர் ஆதித்ய ஹ்ருதயம் என்றொரு மந்திரத்தை ராமனுக்கு உபதேசிக்கிறார்..அது ஒரு சூர்ய உபாஸனா மந்திரம்..அது நிறைய பலன்கள் கொடுக்கும் ஒரு அற்புதமான சஞ்சீவி....
... ஸர்வ மங்கள மாங்கல்யே ஸர்வ பாப ப் ப்ரஹாசனே..
சிந்தா சோகப் ப்ரஸமனம் ஆயுர் வர்த்தன உத்தமம்....
மனம் தெளிந்த ராமன், ராவணனை வென்றதை அறிவோம்..அதுபோல, இப்போதும் நாம் எதிர்கொள்ளும் நம் அன்றாட வாழ்வில் வரும் சங்கடங்கள் எத்தனை எத்தனை!! கோபம்..பாபம்..சண்டாளம்..ஊழல்...துஷ்ப்ரயோகம்...காமம்..களவு ...ஆகிய அத்தனையையும் எதிர்கொள்ள அகஸ்தியர் வேண்டாம்...அவர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் போதும்..அந்த பானுமூர்த்தியின் கடைக் கண் பார்வை பட்டால், அனைத்தும் கடந்து போம்!
...பூஜயஸ்வை நமோகாக்ர: தேவதேவம் ஜகத்பதிம்...
ஏகத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயஷஷி..
ஆம்..இன்றைய நடைமுறை வாழ்வில் எல்லாவற்றுடனும், யுத்தம் செய்ய வேண்டிய கால கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம்!
காட்சி : 2
இங்கு ஒரு வயதான மாதா ஆசனத்தில் அமர்ந்து உள்ளாள்..எதிரில் ஒரு மன்னவன்..அந்த வயதான ஸ்த்ரீயைப் பார்த்தால்,ஏதோ ராஜமாதா போல் ஒரு கம்பீரம்..அவர் இந்த ராஜாவிடம் ஒரு காரியத்திற்கு வந்திருக்கிறாள் போல இருக்கிறது.
என்னவென்று பார்ப்போம்...
மாதா : கர்ணா நான் யார் தெரிகிறதா?
மைந்தன் : தெரிகிறது தாயே!
மாதா : உன் பகைவர்களின் தாய்..
மைந்தன் : யாராயிருந்தால் என்ன...தாய் தாய் தானே?....
மாதா : (மனத்துள்) மகனே உன்னை ஈன்ற தாயும் நான் தான்!
தனக்கும் சூர்யதேவனுக்கும் பிறந்த புத்திரன் என்று உண்மையை உரைக்கிறாள்..மகனுக்கு விஷயம் விளங்குகிறது..’உன் ஐந்து சகோதரர்களுடன், ஆறாவதாக சேர்ந்து விடு..சோர்வுற்ற என் மனம் ஆறும்’ என்று சொல்ல,கர்ணனின் பதில் இது! சொல்கிறான்...
மதமா மழ களிற்றான் மற்றெனக்குச் செய்த
உதவி உலகறியுமன்றே - உதவிதனை
நன்று செய்தோர் தங்கட்கு நானிலத்தில் நல்லோர்கள்..
குன்றுவதோ செய் நன்றி கூறு?
என்று சொல்லி, இன்னொரு நிகழ்வினை எடுத்தியம்புகிறான்..
’இந்த பக்கம் பானுமதி, துரியனின் பத்னி.. அந்த பக்கம் நான் - சொக்கட்டான் விளையாடுகிறோம்.. அவள் திடீரென எழ, தோற்பதினால் எழுகின்றாள் என்றெண்ணி, இழுக்க அவள் கழுத்தில் உள்ள மணி மாலை அதனால், கழன்று விழ, என் பின்னால் துரியன்! அவன் வருகிறான் என்று மரியாதை நிமித்தம் அவள் எழுந்திருக்கிறாள். எனக்கு அது தெரியவில்லை
இன்னொருவன் என்றால் என்ன செய்திருப்பான்? துரியன் மனதில் களங்கமில்லாமல் சொன்னான் :
”......அற்று விழுந்த அறுமணிகள் மற்றவற்றை கோக்கேனோ என்றுரைத்த மன்னவர்க்கே என்னுயிரை போக்கேனோ வெஞ்சமத்து புக்கு..” என்று கூறி, ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு..போய் வா..” என்றான் தன்னை ஈன்றெடுத்த தாயைப் பார்த்து!
சூர்ய குமாரன் அல்லவா அவன்!
இன்று சூர்ய தினம்! சூர்ய குமாரனும் நம் நினைவிற்கு வருகிறான்!!
* * * * * * * * * * *
சூரியன் என்ற ஒன்று இல்லை என்றால் என்ன நிகழும்?
நினைத்துப் பார்க்கவே அச்சமாய் இருக்கிறது..அவன் அருமை உணர்ந்த இளங்கோ அடிகள் அதனால் தான் சொன்னாரோ...
இந்த பொங்கல்..மகர சங்கராந்தி நன்னாளில், நாமும் சொல்வோமா?
”ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்.......!!”

12 comments:

Rathnavel Natarajan said...

எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

சரியான தருணத்தில் கதிரவனையும் கர்ணனையும் பதிவுலகில் பதிந்திருக்கிறீர்கள்.
அருமை. கண்ணெதிரில் உலாவரும் கடவுளே எந்நாளும் எங்களைக் காப்பாய்.
இனிய பொங்கல் நாள் நல் வாழ்த்துகள்.

ரிஷபன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரதன்வேல் சார்..உங்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம்...மேம்..கண்ணெதிரே உலா வரும் கண் கண்ட கடவுள் கதிரவன் தானே?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன் சார்,
இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

குமரன் (Kumaran) said...

உட்பகைவர்களுடன் நாம் என்றென்றும் போரிட்டுக் கொண்டே இருக்கிறோம்; அதற்கு ஆதவனின் அறிவெனும் ஒளி என்றும் துணை செய்யும்; என்பதை நினைவூட்டியதற்கு நன்றிகள் ஐயா.

அப்பாதுரை said...

எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம் இந்தப் பதிவை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உட்பகைவர்களுடன் போரிட ஆதவன் நமக்கு கொடுக்கும் அந்த கதிரொளி ஆக்ஸிஜன் அல்லவா?
நன்றி, குமரன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி திரு அப்பாதுரை!

நிலாமகள் said...

ப‌ண்டிகை நெருக்க‌டியிலும், ஊர்ப்ப‌ய‌ண‌ அலைச்ச‌லிலும் த‌வ‌ற‌ விட்டிருப்பேன் இப்ப‌திவை. நீங்க‌ள் சுட்டியிராவிட்டால்...

இராவ‌ண‌னின் ப‌த்துத் த‌லை விள‌க்க‌ம், ஆத‌வ‌னின் அருமை, க‌ர்ண‌னின் பெருமை என‌ க‌ல‌க்க‌லான‌ பொங்க‌ல் ப‌திவு! நிறைந்த‌ த‌க‌வ‌ல்க‌ளால் ம‌ன‌ம் நிறைந்த‌து. சூர்யோத‌ய‌மும், சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌மும் பார்க்க‌ப் பார்க்க‌ தீராத‌ அவா த‌ரும் காட்சிக‌ள். ஆதித்ய‌ ஹிருத‌ய‌ம் தெரியாவிட்டாலும், சூர்ய‌ வ‌ண‌க்க‌ம் வ‌ழிவ‌ழியாக‌ ந‌ம் உயிர‌ணுவில் பொதிந்துள்ள‌து. 'அவ‌னி'ன்றி ஓர‌ணுவும் அசையாதே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி மேம், என் வேண்டுகோளை செவிமடுத்ததிற்கு!
யூ ட்யூப்பில் ஆதித்ய ஹ்ருதயம் குடும்பத்துடன்..குழந்தைகளுடன்..கேட்டுப் பாருங்கள்..அருமை.. விஷ்ணு சஹஸ்ர நாமம்...தியாகையர் கீர்த்தனை கேட்டால் மனம் எவ்வளவு ஆனந்தம் கொள்ளுமோ, அவ்வளவு ஆனந்தம் ஆதித்ய ஹ்ருதயத்திலும் இருக்கிறது..
குழந்தைகளுடன் கேளுங்கள்..
எல்லார்க்கும் மேன்மை அளிக்கும் சங்கதிகள் அந்த ஸ்லோகத்தில் அதிகம்!