Tuesday, March 8, 2011

கல்யாண சமையல் சாதம்..........

( மனோ சாமிநாதன் அவர்கள் சாப்பாடு பற்றிய தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். அதன் விளைவு இதோ!)

கேள்வி 1 : தங்களுக்கு அம்மா சமையல் பிடிக்குமா..மனைவி சமையல் பிடிக்குமா?
பதில் : சந்தேகம் இல்லாமல் மனைவி சமையல் தான். அவங்க தான் எனக்கு பிடிக்கும்னு
உருளைக் கிழங்கு சேர்ப்பாங்க..அது என்னைப் பிடிக்கும்!
கேள்வி 2 : தங்களுக்கு சமையல் தெரியுமா?
பதில் : என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். நம் ஆடவர்கள் தான் சமையலில் EXPERT.
நளன்..பீமன் என்று! அவர்கள் பெயருக்கு என்னால் களங்கம் வராதது போல்,
சூப்பராய் வென்னீர் வைக்கத் தெரியும்!
கேள்வி 3 : குளிக்கவா..? குடிக்கவா..?
பதில் : அட..அட...இதானே வாணாம்?
கேள்வி 4 : சாப்பாட்டினால் கஷ்டப் பட்டதுண்டா?
பதில் : நிச்சயமாய்..பேப்பர் படித்துக் கொண்டும்...டி.வி. பார்த்துக் கொண்டும் ஞாயிறுக்
கிழமை மத்யானம் இரண்டு மணிக்கு சாப்பிடுவோம். சுவாரஸ்யத்தில் அளவுக்கு
அதிகமாய் சாப்பிட்டு, ஆடு விழுங்கின மலைப் பாம்பு மாதிரி மல்லாந்து
கிடப்பேன். செய்வது தப்பு என்று தெரியும். வேறு வழி!
கேள்வி 5 : புஸ்தகம் படிச்சுகிட்டு சாப்பிடாதீங்கன்னு வீட்டில சொல்ல மாட்டாங்களா?
பதில் : சொல்வாங்களே... நிறைய சொல்வாங்க..புஸ்தகம் படிச்சுகிட்டு சாப்பிட்டா,
சாப்பாட்டோட டேஸ்ட் தெரியாதும்பாங்க...டேஸ்ட் தெரிஞ்சிடக் கூடாதுங்கிறது
க்காகத் தான் நான் புஸ்தகமே படிக்கிறேன்னு சொல்ல மாட்டேன்..மனதுக்குள்ள
நினைச்சுக்குவேன்!
கேள்வி 6 : சாப்பாடு விஷயமாய் எதாவது துயரம்?
பதில் : இருக்கே... நண்பன் ஒருவன் கல்யாணத்திற்கு சென்றேன். எல்லாரும்
முகூர்த்தம் முடிந்ததும்,பந்திக்கு முந்தினார்கள். நான் ரொம்ப கித்தாப்பாக
மக்கள் ஏன் இவ்வள்வு மட்டமாய் நடந்து கொள்கிறார்கள். இன்று நாம் ஒரு
எடுத்துக் காட்டாய் இருக்க வேண்டும் என்று நினைத்து, கொஞ்ச நேரம் கழித்து
சென்றால், ஆட்டம் க்ளோஸ்..படுதா காலி!இதைப் பார்த்த நண்பன் மண
மேடையிலிருந்து கண்களால் ’ஏய் சாரிடா,உன்னோட மொய் கவர் வேணா
இந்தாடா’என்று சொல்ல,வேண்டாம்டா’ என்று அதே கண்களால் சொல்லி
வீராப்போடு வந்தால், நான் கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு வந்திருப்பேன் என்று
எல்லாவற்றையும் ஒழித்துப் போட, ‘ சரி, ஒழியட்டும் சனி’ என்று அந்த
வேளைக்கு வயிற்றை காயப் போட்டேன்..என்ன ஒரு ட்ராஜிடி!
கேள்வி 7 : உணவில் ஏதாவது கட்டுப் பாடு?
பதில் : நிறைய படித்திருக்கிறேன். ஆனால், உடம்புக்கு ஒவ்வாது என்று நாம் ஒதுக்கித்
தள்ளுவோம் என்றால் அது நம் நாக்கிற்கு பிடித்துத் தொலைக்கிறது. நாக்கு,
நம் வீட்டு மருமகள் காம்பவுண்டு சுவரில் சாய்ந்து கொண்டு பக்கத்து வீட்டு
மருமகளிடம் நம்மைப் பற்றி வம்பு பேசுவது போல,அதற்கு பிடித்ததை
சாப்பிடாவிட்டால், வம்பு செய்கிறது..
ஒரு தடவை டாக்டரிடம் செல்ல, “உங்களுக்கு ஒபிசிடி இல்லை..
இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.என்ன ஆயில் யூஸ்
பண்றீங்க?” என்று கேட்க, நான் டக்கென்று “கோல்ட் வின்னர்” என்று
சொல்ல, அதை ”சாப்பிடாதீங்க” என்று அவர் சொல்ல, “ இல்லை,
டாக்டர், டிவி.ல கூட ஒரு டாக்டர் தான் கோல்ட் வின்னரை” ப்ரிஸ்க்ரைப்
செய்கிறார்” என்று நான் மறுதலிக்க, “ அவர் ரியல் டாக்டர் இல்லே..
நான் தான் ஒருஜினல் டாக்டர், நான் சொன்னதை கேளுங்க” என்றார்!
ரொம்ப சிம்ப்பிள்..எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம்
உடம்புக்குக் கெடுதல்.. நாக்குக்கு பிடிக்காதது எல்லாம் உடம்புக்கு நல்லது!
கேள்வி 8 : விரதம் இருப்பீர்களா?
பதில் : ஊஹூம்.. அன்று நண்பன் வீட்டுக் கல்யாணத்தில் இருந்த விரதம் தான்
எனக்கு நினைவு தெரிந்து..
கேள்வி 9 : முடிவாய் சாப்பாட்டைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
பதில் : உணர்வுகளுக்கும், சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு உண்டு.இதோ மகாபாரதம்!
அம்பு படுக்கையில் இருந்த பிதாமகர் பீஷ்மர் பக்கத்தில் எல்லோரும்
அமர்ந்து கொண்டிருக்க, அவர் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ’களுக்’கென்று சிரிப்பு!
பீஷ்மர் : யாரம்மா, சிரித்தது?
பாஞ்சாலி : நான் தான் தாத்தா?
தர்மர் ( கோபத்துடன்) : என்ன திரெளபதி, இது?
பீஷ்மர் : தர்மா... நீ பேசாமல் இரு..போகட்டும் ஏனம்மா, சிரித்தாய்?
பாஞ்சாலி : இப்ப இவ்வளவு நியாய, தர்மம் சொல்றீங்களே..அன்று துரியனின்
சபையில் இதையே சொல்லியிருந்தால் இவ்வளவு மனக்கஷ்டம்..
உயிர் விரயம் தடுத்திருக்கலாமே?
( எல்லாரும் திரெளபதியை கோபத்தோடு பார்த்தார்கள்.மனுஷன் மரணப்
படுக்கையில் கிடக்கிறார்..என்ன கேலி...கிண்டல்..இது?)
---- ஒரு நிமிடம் ம் மெளனம் அங்கு கோலோச்சியது. அதனை உடைத்தார்,
பிதாமகர்)
பாஞ்சாலி : .. நீ சொல்வது சரிதான்.ஆனால் அப்போது நான்
சாப்பிட்டது துரியன் போட்ட உணவு.அந்த தீயவனின் உணவு
என் மதியை மழுங்கச் செய்தது.அவன் செய்தது சரியே என்று
அன்று நினைத்தேன். ஆனால், செரிக்கப் பட்ட அந்த தீய உணவு
எல்லாம்,உன் பர்த்தா பார்த்தன் என் மேல் வீசிய கணைகளால்,
ரத்தமாய் வெளியேற, இன்று தான்...இப்போது தான்... எது
நியாயம் என்று தெரிகிறதம்மா....!

21 comments:

எல் கே said...

நல்லா இருக்கு. கடைசி விஷயம் அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு நகைச்சுவையான தனக்குத்தானே பேட்டி.
கடைசி விஷயம் சிந்திக்க வைக்கிறது.

நாம் உண்ணும் உணவு, அதைத் தயாரித்தவர், பரிமாறியவர் போன்ற எல்லோருடைய மனநிலையும் நம் எண்ணங்களை, நல்லவை தீயவைகளாக மாற்றும் சக்தி படைத்தவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கேண்டீன்+ஹோட்டல்களால் தான் நாம் ஒரு மாதிரியாக இருக்கிறோமோ? என்றும் நினைத்துக் கொள்வேன்.

ஸ்வர்ணரேக்கா said...

//நான் கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு வந்திருப்பேன் என்று
எல்லாவற்றையும் ஒழித்துப் போட//

-- ஹா.. ஹா.. அருமையான கல்யாண சாப்பாடு தான் போங்க...

நானும் புக் படிச்சிட்டே சாப்பிடுவேன். சாப்பாட்டு ருசியும் தெரியாது, அளவும் தெரியாது... அதுபாட்டுக்கு உள்ள போய்ட்டேயிருக்கும், பக்கம் தீர வரைக்கும்... இப்போ இப்போ தான் அந்த பழக்கத்தை குறைச்சுக்கிட்டே வரேன்...

மோகன்ஜி said...

உங்கள் பேர் நீண்டு விட்டது மூவார்முத்தே!
ஆர்.ஆர்.ஆர்.எஸ்.ஆர் !

உங்கள் நகைச்சுவையும், பீஷ்மன் கதையும் மனதைக் கொள்ளைகொண்டு விட்டது

R. Gopi said...

கடைசி மேட்டர் சூப்பர். சரியான கற்பனை

R. Gopi said...

ஆனா பாஞ்சாலி சொல்வது போல நடந்திருந்தால் நமக்கு சஹஸ்ரநாமம் கிடைத்திருக்காதே

Chitra said...

சிரிக்க, கலகலப்பான பதில்கள் கொடுத்து விட்டு, கடைசியில் சிந்திக்கவும் வைத்து இருக்கீங்க.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான பதில்கள். கடைசியில் சொன்ன விஷயம் சிந்தனையைத் தூண்டியது.

GEETHA ACHAL said...

நல்ல நகைசுவையான பதில்கள்...

//பதில் : இருக்கே... நண்பன் ஒருவன் கல்யாணத்திற்கு சென்றேன். எல்லாரும்
முகூர்த்தம் முடிந்ததும்,பந்திக்கு முந்தினார்கள். நான் ரொம்ப கித்தாப்பாக
மக்கள் ஏன் இவ்வள்வு மட்டமாய் நடந்து கொள்கிறார்கள். இன்று நாம் ஒரு
எடுத்துக் காட்டாய் இருக்க வேண்டும் என்று நினைத்து, கொஞ்ச நேரம் கழித்து
சென்றால், ஆட்டம் க்ளோஸ்..படுதா காலி!இதைப் பார்த்த நண்பன் மண
மேடையிலிருந்து கண்களால் ’ஏய் சாரிடா,உன்னோட மொய் கவர் வேணா
இந்தாடா’என்று சொல்ல,வேண்டாம்டா’ என்று அதே கண்களால் சொல்லி
வீராப்போடு வந்தால், நான் கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு வந்திருப்பேன் என்று
எல்லாவற்றையும் ஒழித்துப் போட, ‘ சரி, ஒழியட்டும் சனி’ என்று அந்த
வேளைக்கு வயிற்றை காயப் போட்டேன்..என்ன ஒரு ட்ராஜிடி!//அதுக்கு தான் எப்பொழுதுமெ பந்திக்கு முந்திக்கனும் என்று சொல்லுவாங்க...

Asiya Omar said...

very interesting post.

Nagasubramanian said...

மகாபாரதம் காட்சி விளக்கம் அருமை!

RVS said...

தின்ற உப்புக்காக பேசாமால் இருந்தாரோ?
பேட்டி அற்புதம் ஆர்.ஆர்.ஆர். சார்! ;-) (இன்றைக்கு நிச்சயம் உருளை உண்டு...) ;-)))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ரொம்ப சிம்ப்பிள்..எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம்
உடம்புக்குக் கெடுதல்.. நாக்குக்கு பிடிக்காதது எல்லாம் உடம்புக்கு நல்லது// இந்த தத்துவத்தைக் கொண்டு மிக அற்புதமான மலையாள படம் ஒன்று மோகன்லால் நடித்து வந்தது. குரு என்று பெயர்.

ADHI VENKAT said...

அருமையான கேள்விகளும், பதில்களும். பீஷ்மர் கதை சிந்திக்க வைத்தது.

ரிஷபன் said...

அரண்மனையில் விருந்து சாப்பிட்ட முனிவர் கையோடு தங்க வட்டிலையும் எடுத்துப் போய் விடுகிறார். காணாமல் போனது அரசனின் பேவரைட் பாத்திரம் என்பதால் தேடிப் பார்த்து அமளி. மறு நாள் முனிவர் ‘கக்கா’ போனதும் சுயபுத்தி திரும்பி திரும்ப எடுத்துக் கொண்டு வருகிறார். ‘ஸ்வாமி.. நீங்களா’ ராஜாவுக்கு வியப்பு. முனிவர் ‘உன் வீட்டு சோத்தை தின்னேன்ல.. அந்த புத்தி வந்திருச்சு’ என்று பதில். உணவு மன நிலையில் பெரும்பங்கு வகிக்கிறது என்பார்கள்.

vasan said...

உண்ணும் உண‌வு புத்தியாய்,
உங்க‌ளின் உண‌ர்வு ப‌த்தியாய்.
வாழ்த்துக்க‌ள் செம‌த்தியாய்..

மனோ சாமிநாதன் said...

"ரொம்ப சிம்ப்பிள்..எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம்
உடம்புக்குக் கெடுதல்.. நாக்குக்கு பிடிக்காதது எல்லாம் உடம்புக்கு நல்லது!"
பாருங்கள், சாப்பாட்டினால் எத்தனை எத்தனை பழமொழிகள் வந்து விழுகின்றன! அருமை!
கேள்விகளை மாற்றி விட்டாலும் கூட நல்லதொரு நகைச்சுவை பதிவு!

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

கே. பி. ஜனா... said...

காமெடி பிரமாதம்.. கடைசி விஷயம் மிக அருமை.

சிவகுமாரன் said...

கலகலப்பாய் ஆரம்பித்து இறுதியில் மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் பீஷ்மரின் மிகப்பெரிய செய்தியோடு அபாரம் சார்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

மிகவும் ரசித்தேன்... நல்ல பதிவு....மஹாபாரத கதை அபாரம்.....