Thursday, February 4, 2010

காயத்ரி........


(என்னுரை: 'காயத்ரி' என் மூன்றாவது குழந்தை.தினமணி கதிரில் 10.2.85 அன்று சுப ஜனனம். இருபத்திநான்கு வருடங்கள் ஆனாலும், என் நெருங்கிய நண்பர்கள் இன்னமும் 'காயத்ரி'யை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சரி..சரி ..புரிகிறது.... உங்களுக்கும் 'காயத்ரி'க்கும் நடுவில் நான் எதற்கு? விடைபெறுகிறேன், வணக்கம்)
* * * * * * *

'சுக்லாம்பரதரம் ..... சொல்லுங்கோ' என்று அந்த காவேரி ஆற்றங்கரையில் ஆவணி அவிட்டத்திற்கு வந்திருப்பவர்களைப் பார்த்து, இயந்திர கதியில் சொல்லிக் கொண்டிருந்தான், நாராயணன். பிடிப்பில்லாமல், மனதின் லயிப்பில்லாமல், அவன் சொன்ன வார்த்தைகளை மந்திரங்களாக நினைத்து, பின்னால் பயபக்தியுடன் சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கூட்டம்.
காரணம் இல்லாமல் இல்லை. உணர்ச்சி வசப் பட்டுக் கொண்டு,கண்களில் நீர் கசிந்துருகி, பதம் பிரித்து, அர்த்தத்துடன் ஒவ்வொரு வேத மந்திர உச்சாடனையையும் ஸ்பஷ்டமாக, உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டிருந்த நாணா இன்று இல்லை. செத்துப் போய்ட்டான். இவன் வேறு யாரோ. வெளி நாட்டில் சொல்வாளே ரூபாவோ,ரோபாவோ ஏதோ ஒண்ணு. அதைப் போல எந்திர மனுஷன் தான் இதோ இங்க நின்னுண்டு சொல்லிண்டு இருக்கானே இவன்.
வாய் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், கண்கள் வந்திருந்த தலைகளை எண்ணிக் கொண்டு இருந்தது. மனதோ, தலைக்கு முக்கால் ரூபா என்று கணக்குப் பார்த்துக் கொண்டு இருந்தது.
யாருக்காக சேர்க்கப் போகிறான் நாணா? உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு, இந்த உலகில் ஒட்டிக்கொண்டிருப்பது அவனுடைய அம்மா தான். அம்மாவிற்கு அவன் மேல் அபரிமிதமான பாசம். ஆஸ்த்துமாவிற்கு அவள் மேல் பாசம். பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறது. குரங்குப் பிடி தான்.
மனசுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறானே, தட்சிணை.. அது அம்மாவை சந்தோஷப் படுத்தாது. இவன் அம்மான்னு வாய் கொள்ளாம கூப்பிடறதே போறும் ..அதுவே ஆனந்தம் அந்த ஜீவனுக்கு.
...இதோ இங்க நிக்கறாளே, இவாளைப் போல கார்த்தாலே பத்து மணிக்கு ஆபீசுக்குப் போய்,அரட்டை அடிச்சுட்டு, சாயங்காலம், புதுசா குளிச்சவன் போல, 'பளிச்' னு ஆத்துக்கு ஓடோடி வராளே... அது மாதிரி இல்லையேன்னு தான் ஏக்கமா இருக்கும். அதுக்கென்ன பண்றது? வைதீகன் தர்ப்பக் கட்டையை தூக்கிண்டு தான் போகணும். டை கட்டிண்டு ஆபீஸ் போக முடியுமா? குடுமியோடு, டையை கற்பனை செய்து பார்த்தான். கவிந்து கொண்டிருந்த துக்கத்திலும், மின்னல் கீற்றாக சிரிப்பு மலர்ந்தது, மனதிற்குள்.
'சூர்யஸ்ய... மாமன்யஸ்ய..' மனம் சூரியனை நினைக்கவில்லை. சந்திராவை நினைத்துக் கொண்டிருந்தது.
அவனைப் போல் தான் அவளும். ஆனா ஒரு வித்தியாசம். அவ அம்மா, நாலு ஆத்துக்கு உபகாரம் பண்ணக் கிளம்பிடுவா..எதாவது விசேஷம்னா, அவாத்திலே கனகத்து மாமியோட சமையல் தான் மணக்கும்.
கனகத்து மாமி, தம் பொண்ணு சந்திராவையும் ஒத்தாசைக்கு கூட்டிண்டு போவா. அந்த காலத்து, கல்லிடைகுறிச்சி மாதிரி, வட்டமா, பெரிய ஆத்து கூடத்தில, எல்லாரும், ஊர் வம்பு பேசிண்டும், அப்பளாத்துக்கு வட்டு இட்டுண்டும், இருக்கும்போது தான் ஒரு நாள் நாணாவின் கவனத்தைக் கவர்ந்தாள், சந்திரா.
தாழ்வாரத்திலே வெய்யில் வந்தா மணி பன்னிரெண்டுன்னு தெரியும். தெரிஞ்சுண்டும், வாசல் வழியா போற நாணாவை சந்திரா எதுக்கு கூப்பிடணும்?
இந்தாங்கோ, நாணு சாஸ்திரிகள்வாள், மணி என்ன ஆறது? சித்த சொல்லுங்களேன்'.
கண்களில் குறும்பு மின்ன அவள் அன்று கேட்டதை நினைத்துக் கொள்கிறான், நாணா..
அவனை யாரும் நாணு சாஸ்திரிகள்னு கூப்பிடமாட்டா. அதுக்காக 'டேய் நாணா'ன்னும் கூப்பிடறது கிடையாது. கும்பகோணம் ராஜா வேத பாடசாலைல படிச்ச புள்ளையாண்டாங்கற மரியாதை அவனண்டை ஒட்டிண்டு இருக்கும்.
"விசாலாட்சி அம்பா சமேத விஸ்வநாத ஸ்வாமி ஸன்னிதௌ, அகிலாண்டேஸ்வரி அம்பா சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.."
" சமையல்காரா ஆத்தில பொறந்ததே போறும். தர்ப்பை பிடிக்கிற வாத்யாருக்கு வேற வாக்கப் படணுமா நான். நன்னா கதை சொன்னே நாணா, போ. எனக்கு வர ஆம்படையான் சின்ன வேலையில் இருந்தாலும் பரவாயில்லே..டெய்லி ஆபீஸ் போயிண்டு வந்துண்டு இருக்கணும். அதான் என் ஆசை."
'மளுக்'கென்று நாணாவின் ஆசையை ஒடித்துப் போட்டு விட்டு, வெகு ஸ்டைலாக நடந்து சென்று விட்டாள் சந்திரா.
அதான் என் ஆசை. அதான் என் ஆசை.. சினிமால சொல்றாப்பல, ஏதோ ஒண்ணு, மனசுல படீர்..படீர்னு வந்து அடிச்சது, நாணாவுக்கு.அவனையும் மீறி வாயிலே அதான் என் ஆசைன்னு சொல்ல வந்துடுத்து. தன்னை ரொம்பவும் கட்டுப்படுத்திண்டு, 'ஆனந்த வல்லி அம்பா சமேத நாகநாத ஸ்வாமி ஸன்னிதௌ'ன்னு ஒரு வழியா சமாளிச்சுண்டுட்டான்.
தேவதைகளுக்கு அர்க்யம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள் எல்லாரும். முழங்காலளவு தண்ணியில் நின்று கொண்டு,நாணா கரையில் நின்று கொண்டு மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
சே என்ன பொழைப்பு இது.. ஒவ்வொருத்தன் எவ்வளவு அமெரிக்கையா இருக்கான். இந்தக் காலத்திலும் நாம் காயத்ரியைக் கட்டிண்டு மாரடிக்கணும்னு தலைல எழுதியிருக்கே..என்ன
பண்றது...!
இதான் கடைசி ஆவணி அவிட்டம். தலையை சிரைச்சுண்டு, இன்னும் பத்து நாள்ல, பட்டணத்தைப் பாக்க ஓடிப்போக வேண்டியது தான். வாசு ஏதோ ஆட்டோ ஓட்டறானாம். ஏதாவது 'ஒர்க் ஷாப்ல' கிளீனர் வேலையாவது வாங்கித் தர மாட்டானா...! அப்புறம் கொஞ்சம் காசு சேர்த்துண்டு இப்ப என்னடி சொல்றேன்னு சந்திராவைப் பார்த்து நாலு கேள்வி கேக்கணும்.
'சொல்லுங்கோ... ஓம் பூர்ப்புவஸ்ஸுவஹா...தத்ஸ விதுர்வரேண்யம்...'
அவன் காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொண்டே போக எல்லாரும் கோரஸாக சொன்னார்கள்.
இது தான் நாம பண்ணி வைக்கிற கடைசி ஆவணி அவிட்டம். அதனால சிரத்தையா, மந்திரம் சொல்வோம்னு, தீர்மானம் பண்ணிண்டான், நாணா.
நாணா என்ன நாணா... பட்டணம் போனதுக்கப்புறம், கிராப்பு வைச்சுண்டு, மீசை வைச்சுண்டு, நம்பளைப் பார்த்தாலே 'டிப் டாப்பா' இருக்கணும்.எல்லாரும் மிஸ்டர் நாராயணன் ஸார் இருக்காரான்னு கூப்பிடணும்..கலர் கலரா சட்டை போட்டுக்கணும்..பேண்ட் போட்டுக்கணும்..
எல்லாரும் ஒருவரை ஒருவர் நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். புதுசா யாரோ ஒருத்தர் நாணா பக்கம் வந்தார்.அவருடன் கூட கோடி ஆத்து சீனு.
" நாணா.. இவர் நம்மூருக்கு புதுசா வந்திருக்கார்.டெல்லியில பெரிய ப்ரொஃபஸரா இருந்து ரிடையரானாராம்.உன்னோட பேசணும்னு ஆசைப்படறார்" என்றான் சீனு.
"நமஸ்காரம்..." என்று கை கூப்பியவர், அப்படியே அவன் கையை வாத்ஸல்யமாய் பிடித்துக் கொண்டார். 'இந்த இருபது வயசில அவனவன் எப்படி அலையறான்.பழமை மாறாம உங்களைப் போல சில பேர் இருக்கிறதால்தான் நாட்டில மழை கொஞ்சம் பெய்யறது.. சும்மா சொல்லக் கூடாது...மந்திரத்தை எல்லாம் ஸ்வர சுத்தமா நன்னா சொல்றேள். நானும் டில்லில பார்த்திருக்கேனே..என் பர்ஸ் மேல தான் நாட்டம் எல்லாருக்கும். காயத்ரிக்கு அர்த்தம் கூடத் தெரியாது. பெரீசா தர்ப்பக் கட்டையை தூக்கிண்டு வந்துடும் சாஸ்திரிகள்னு.."
சொல்லிச் சொல்லி மாய்ந்து போனவர், அவனது கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். நாணாவிற்கு மனது நெகிழ்ந்து போய்விட்டது.
நானும் சம்ஸ்கிருத காலேஜ்ல லெக்சரரா, இருந்துட்டுத் தான் வந்திருக்கேன். இத்துனூண்டு வயசுல இவ்வளவு ஞானத்தைப் பார்த்தது இல்ல..தீர்க்காயுசா இருக்கணும்...." அவர் சொல்லிக் கொண்டே போனார்.
நாணாவிற்குப் பெருமை தாங்கவில்லை. குடுமியை முடிந்து கொண்டவன், கணீரென்று மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தான்.
சந்திராவாவது, ஒண்ணாவது !!!!

7 comments:

வசந்தமுல்லை said...

ennudai karuththai
thamilishil parungal!
mattrum ennudaiya
valai paguthiyil
en kavithai
"natpin ilakkanam"
paarungalaen.

வசந்தமுல்லை said...

ஓம் அப்பாடா! இப்போதாவது என்னுடைய கவிதையை படித்தீர்களே!!!!!!!!!!!!!!!!!!! நன்றி ராமூர்த்தி !..............

Chitra said...

இன்னும் இருபத்து நான்கு வருடங்கள் ஆனாலும், சிறந்து விளங்கும் கதை.

creativemani said...

வாவ்... :)

Rekha raghavan said...

அருமையான மறக்க முடியாத சிறுகதை.

ரேகா ராகவன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Paaraattu enbathu thaan oruvanukku avan paarkkum thozhilil/pataikkum pataippil, uRsaakam tharuvathu enbathai viLakkum kathai ithu. There are some highly qualified vedic scholars, having all modern facilities like own house, own car, computer net connection, Phone, mobile & More income than an Office goer. ellaavatrirkum athirshtam vendum. Mukaraasi vendum. Luck irunthaal Chandra enna, Chandrakala pola sweet girl amaivaaL.

ரிஷபன் said...

காலத்தைத் தாண்டி ஜீவிக்கும் கதை..