Thursday, December 19, 2013

இலக்கிய விருந்து.....

குன்று போல் யானை பல தழுவி,வாள் சுழற்றி
கன்று போல் துள்ளி சமர் புரிந்த நாயகனை,
என்றுமிலா போதை விழி பாய்ச்சி,வீழ்த்தி விட்டு
'இன்று போய் நாளை வா' என்றாள், இனிந்து!     



     போரில் குன்று போன்ற யானைகளைத் தழுவி, தன் கூர்மையான வாளை நாலாபக்கமும் சுழற்றி தாய் பசுவின் மடி
கண்ட கன்று போல் துள்ளி குதித்து போர் புரிந்து எதிரிகளின் தலைகளை சாய்த்து, எல்லை இல்லா களிப்புடன்
தலைவியைக் காண வருகிறான் தலைவன். அப்போது வெற்றி பெற்ற செருக்கால் அவன் கால்கள் சற்றே 
தடுமாறுகின்றன.தன் பிரதாபங்கள் அத்தனையையும் அவள் முன் கொட்டி விட வேண்டும் என்கிற அவசரம்
அவனுக்கு.
    தாபத்துடன் காத்திருக்கிறாள் தலைவி. அவள் முன் தோழி வந்து அவனுடைய வீர, தீர பராக்ரமங்களை
இயம்ப, சட்டென தலைவி துணுக்குற்றாள்.' என்ன இது? அவருக்காகவே காத்திருக்கும் என்னைப் பற்றி
ஏதாவது பேசுவாரோ என்கிற ஏக்கத்தில் இங்கு நான் இருக்க,வெற்றி பெற்ற தாக்கத்தால் தன்னைப்
பற்றி பேசத் தான் வருகிறாரோ...' 
   அச்சம் ஊடலாக மாறியது உடனே! 
   'போகட்டும்....வெற்றி எனும் போதை தெளியட்டும். பொறுத்தது தான் பொறுத்தோம். இனி ஒரு நாள்
பொறுப்போம்' என தீர்மானம் செய்து கொண்டிருக்கும் போதே தோழி வந்து 'தலைவன் வந்து விட்டான்'
எனக் கூறுகிறாள்.
  தலைவி விரைகிறாள் வாசலுக்கு...
 அதோ தலைவன் வந்து கொண்டிருக்கிறான்....
  வந்தே விட்டான்....
  தலைவன் நோக்கினான்; தலைவியும் நோக்கினாள்.
  ஆ....இதென்ன, 
தாபத்தின் முன் பிரதாபம் எங்கே போய் விட்டது?
   கூர் விழி பார்வையின் முன் வாள் முனை மழுங்கி விட்டதா?
எதிரிகளை சாய்த்த கரங்கள் இதோ சாய்ந்து விட்டதே!
 விழிகளின் எழிலில் வீரம் தான் விடை பெற்றுக் கொண்டதோ?
இதைத் தான் 'புறத்தினை புறமுதுகு காட்டிடும் அகம்' என்கிறார்களோ தமிழறிந்த சான்றோர் பெருமக்கள்!
தடுமாறி நின்ற தலைவனைப் பார்த்து, தலைவி கூறுகிறாள்.
'வத்ச, களைத்துப் போய் இருக்கிறீர்கள்..களைப்பாற்றிக் கொண்டு நாளை வாருங்கள்!'
              கண் முன் விரிந்த இவ்வரிய காட்சியை ஒரு வெண்பாவில் வடிக்க முயன்ற என் சிறுமதியைத் தான்

என்னவென்பது?

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

விருந்து அருமை.

[அமெரிக்க விருந்தல்லவா !அதனால் தானோ ? ;) ]

அப்பாதுரை said...

ஆகா!

Anonymous said...

வணக்கம்
ஐயா.

அருமை வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-