Friday, January 20, 2012

கல்யாண ராமன் பிரதாபங்கள்......(2)


பிறகு கல்யாண ராமனின் அப்பா மலைக்கோட்டையில் வீடு வாங்கிக் கொண்டு போக,
அவனுக்கு ஜோசப் காலேஜில் சீட் கிடைக்க, ஐயா பிள்ளை
காலரை தூக்கி விட்டுக் கொண்டு நடப்பார்..அப்போதெல்லாம், ஜோசப் காலேஜ் ஸ்டூடண்ட் என்றால் தனி மரியாதை!
இருந்தாலும் பழகிய பாசம் விட்டுப் போகுமா? லீவ் நாளில், அவன் வீட்டிற்கு நானும், கிரியும் போவோம்..பயலுக்கு இஞ்ஜினீயரிங் மூளை! ஒரு பல்ப்..பெரிய லாண்டிரிக்குப் போட்ட வேட்டி..கொஞ்சம் துண்டு பிலிம்கள்..படம் காட்டி விடுவான்..கிரி டிக்கெட் கிழித்து கொடுக்க, நான் கல்லாவில் காசு கட்ட, அரை மணி நேரம் படம் ஓடும்..அந்த காசை எடுத்துக் கொண்டு நாங்கள் மூன்று பேரும்,சினிமா கிளம்பி விடுவோம்!சினிமா விற்ற காசு சினிமாவிற்கே!
திடீரென்று அவன் அப்பாவிற்கு தஞ்சை ட்ரான்ஸ்பர் ஆக, அங்கு படிக்க சென்று விட்டான்.லீவ் நாட்களில் திருச்சி வருவான்..அண்ணா அவனை கல்லாணம் என்று செல்லமாக கூப்பிடுவார்..அவன் எங்கள் அகத்து மனிதர்களுடன் ரொம்பவும் பாசமாய் பழகுவான்..அவன் அப்பாவிற்கு நானென்றால் உயிர்!ராமூர்த்தி...ராமூர்த்தி என்று பாசமாய் பழகுவார்.அது ஒரு காலம்!
ஒரு வழியாய் பி.காம் முடித்தோம், இருவரும்!..1977ல் என்று ஞாபகம்..அப்போது,வாண்டு என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம்..VANDU..VISUALISERS ARTISTS NOVELISTS DRAMATISTS UNION என்பதின் சுருக்கமே வாண்டு! கிரி நல்ல ஆர்ட்டிஸ்ட்..கையெழுத்து மணி,மணியாய் இருக்கும்.. நான் கெஞ்சினால், அவன் படம் போட மாட்டான்..இந்த கல்யாணம் என்ன மாய மந்திரம் போட்டானோ..அவனுக்கு இந்த கிரி(என் தம்பி!) விழுந்து விழுந்து வேலை செய்வான்!கிரி படம் மட்டுமல்ல..அழகாய் கதையும் எழுதுவான்..கல்யாணமும் கதை எழுதுவான்..அவன் எழுதிய கதையில் தஞ்சாவூர் சாந்த பிள்ளை கேட் இருக்கும்..இப்பொழுதெல்லாம் தஞ்சாவூர் அடிக்கடி போகிறேன்..அந்த சாந்த பிள்ளை கேட் எங்கே இருக்கிறது என்று தெரியாது..தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்... மேலும் அவன் மாமா தேச ஊழியன் என்றோரு பத்திரிகை நடத்தி வந்தார்..அதிலிருந்து சில பிளாக்குகளை நாங்கள் எங்கள் வாண்டுவில் உபயோகப் படுத்திக் கொண்டோம்..
அப்புறம் ஒரு நாளிதழில் எனக்கு சொல்ப சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்க, கொஞ்ச நாளில் கல்யாணமும் அங்கு வந்தான்!. நான் ஆடிட் அஸிஸ்டெண்ட்..ஸார் கேஷியர்!
லஞ்ச் அவரில் ஒரு நாள், நான் கோதையாறு லோயர் கேம்ப்பில் நடந்த நிகழ்வினை கதை கட்ட,ஒரு குடுமி அங்க்கிள் அப்படியா..அப்படியா ..என்று தலையை அப்படியும்,இப்படியும் ஆட்ட, குடுமி எதிர்த் திசையில் ஆட்டம் போட,ஒரே வேடிக்கை..
>>>> கோதையாறிலிருந்து, நாகர் கோவிலுக்கு EB OFFICE TRUCK போயிட்டிருந்தது..அப்ப.. எதிர்த்தாற்போல, ஒரு பெரிய மலைப் பாம்பு! எவ்வளவு பெரிசு தெரியுமா?அதன் தலை ஒரு குளத்தில். நடு உடல் ரோடில்..வால் ஒரு மரக்கிளையில்! டிரக் ட்ரைவர் சடக்கென்று ப்ரேக் போட்டார்.. அந்த ட்ரக் மட்டும் அந்த மலைப்பாம்பு மேல் ஏறியிருந்தால்..அது ஒரு சுருட்டு சுருட்டி, அந்த ட்ரக்கையே தள்ளி விட்டு விடும்>>>> நான் ஏகத்துக்கு ரீல் விட, அந்த அங்க்கிள் அப்புறம்..என்ன ஆச்சு..என்ன ஆச்சு.. என்று சுவாரஸ்யமாய் தலையை ஆட்ட, நான் சொன்னேன்: “எல்லாருக்கும் செம பயம்..கந்தா..கடம்பா..கதிர்வேலா..என்று கந்த சஷ்டி கவசத்தை பய பக்தியுடன் எல்லாரும் சொல்லிண்டே வர..., அந்த பாம்பு சட்டென வழி விட்டதாக்கும்..”
பொறுக்க முடியாமல் கல்யாணம் கத்தினான் :”டேய்..எவனாவது குடுமி வைச்சுண்டு இருப்பான் அவனிடம் சொல்லு உன் கதைய..”
அதற்கும் அந்த அங்க்கிள் தலை ஆட்ட அவர் குடுமியும் எதிர்திசையில் ஆட, அவனுக்கு பயம் வந்து விட்டது, நிஜமாவே..!
லஞ்ச் டைம் முடிஞ்சு, அவரவர் வேலைக்கு திரும்பினோம்..அவன் என்னையும், அவரையும் மாறி..மாறிப் பார்த்துக் கொண்டே இருந்தான்..அப்புறம் நைசாய் என் சீட் வந்து ”ஏய்..அந்த மாமாட்ட போய் மன்னிப்பு கேட்கலாமா..வர்ரியா” என்று சொல்ல, நான்,” பேசாம சீடல உட்கார்ந்து வேலையைப் பார்..அவருக்கு நீ சொன்னது தெரியாது.. நீயாக ஏதாவது உளறிக் கொட்டிக் கிளப்பாதே” என்று அவனைக் காப்பாற்றினேன்..ஆனால், என்னடா இவ்வளவு தூரம் நம்மைக் காப்பாற்றினானே என்பது துளிக்கூட இல்லாமல், அந்த பழி என் கல்யாணத்திற்கு வரவில்லை..ஆனால், தஞ்சாவூரில் நடந்த கிரி கல்யாணத்திற்கு மட்டும் வந்திருந்தான்..என்ன இருந்தாலும் கிரி கிரி தான்..அவனுக்கு மட்டுமல்ல..இப்ப இருக்கிற என் ஃப்ரெண்ட் சீனுவும் அப்படி தான்! கிரின்னா போய் ஈஷிப்ப்பான்..ஈஷி!
என்ன செய்ய.. நாம வாங்கிண்டு வந்த வரம் அப்படி!!!
சரி தான் !!!!

18 comments:

ஸ்ரீராம். said...

"அந்த பழி ஏன் கல்யாணத்துக்கு வரவில்லை"

இப்போ மாம்ஸ், மச்சி என்றெல்லாம் சொல்வது போல 'பழி' என்ற அந்தக் கால சொல்வழக்கை நான் பழைய படங்களை பார்த்திருக்கேன், கதைகளில் படித்திருக்கிறேன்!

மலைப் பாம்பு கதை போல அதே மாதிரி பாம்பு கதை விட எங்கள் உறவு வட்டத்திலும் ஒரு ஆள் உண்டு. கதை என்று தெரியும். ஆனால் சொல்லும் அந்த நேர்த்திக்காக ரசிப்போம்.(இப்போது அவர் இல்லை)

ADHI VENKAT said...

//பொறுக்க முடியாமல் கல்யாணம் கத்தினான் :”டேய்..எவனாவது குடுமி வைச்சுண்டு இருப்பான் அவனிடம் சொல்லு உன் கதைய..”
அதற்கும் அந்த அங்க்கிள் தலை ஆட்ட அவர் குடுமியும் எதிர்திசையில் ஆட, அவனுக்கு பயம் வந்து விட்டது, நிஜமாவே..!//

ஹா...ஹா..ஹா.. பாவம்.

சில பேர் கிட்ட எப்பவுமே, எல்லாரும் நண்பர்களா...அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பவர்களாக இருப்பார்கள். ராசி தான்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த ‘பழி’ எதேச்சையாய் வந்து விழுந்தது, ஸ்ரீராம்! ஒரு வேளை நான் கல்யாண ராமனிடம் பேசும் போது அவன் அந்த வார்த்தையை உபயோகப் படுத்தியதாலும் இருக்கலாம்..இந்த ’பழி’ங்கற வார்த்தையை யூஸ் பண்ணினதினால் ஏதோ வயசானவனா நினைக்காதீங்க...
அட..1977 பி.காம் என்று சொல்லிவிட்டேனோ.முன்னாடி.அட ராகவா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என் ராசி அப்படி! ஆனா, கல்யாணத்திற்கப்பறம் உல்டா...
நான் தான் கேட்டுண்டு இருக்கேன்..கோவை 2 தில்லி!
தலையை அபப்டியும் இப்படியும் ஆட்டியதில் சுளுக்கு வந்தது தான் பலன்!

ரிஷபன் said...

என்ன இருந்தாலும் கிரி கிரி தான்..அவன் மட்டுமல்ல..இப்ப இருக்கிற என் ஃப்ரெண்ட் சீனுவும் அப்படி தான்! கிரின்னா போய் ஈஷிப்ப்பான்..ஈஷி!

கிரியை பார்க்கணும் போல இருக்கு மூவார் முத்தே.. அப்படி என்ன தான் அவர்ட்ட இருக்குன்னு தெரிஞ்சுக்க..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்ன இருக்கு..ஃப்ரெண்ட்ஸ்னா ரொம்ப சந்தோஷமா இருப்பான்.. நட்புக்கு மரியாதை கொடுப்பான்.. நானும், அவனும் மார்க்கெட் சேர்ந்து போனா,எதிர்த்தாற்போல், என் நண்பன் சீனு வந்தால், நான் ஹலோ சொல்லிட்டு விட்டு விடுவேன்..கிரி விட மாட்டான் அப்படி..அவனுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருப்பான்.. நான் மட்டும் தனியாக வர வேண்டி இருக்கும்..இத்தனைக்கும் என் மூலமாய் தான் அவனுக்கு சீனு பழக்கம்..இந்த கூத்தைக் கேளுங்கள் ரிஷபன் சார்..அந்த சீனு வீட்டிற்கு ஒரு தரம் நான் போக, அந்த சீனு அவன் அம்மாவிடம் என்னை அறிமுகப் படுத்துகிறான்...” இவன் கிரியோட அண்ணாவென்று?”
இப்ப சொல்லுங்க, ஏன் ஈஷிக் கொள்ள மாட்டார்கள்?

வெங்கட் நாகராஜ் said...

அருமை.... வாண்டு... புத்தகம் உங்கள் வீட்டிற்கு முதல் தரம் வரும்போது ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை காண்பித்தீர்களே அதில் உங்கள் தம்பி கிரி வரைந்த ஓவியங்கள் எல்லாம் பார்த்த நினைவு இப்போதும்...

நல்ல பகிர்வு.. தொடர்ந்து அசத்துங்க...

RAMA RAVI (RAMVI) said...

மலைப்பாம்பு கதைக்கு குடுமி ஆடியதை படித்ததும்,சிரிக்க ஆரம்பித்ததுதான் இன்னும் நிறுத்தவில்லை.
நன்றாக கதை சொல்லரீங்களே!!

ரிஷபன் said...

அய்யோ பாவம்.. நீங்க.

இப்ப இன்னும் ஆர்வம் அதிகமாச்சு.. கிரியை பார்த்தே ஆகணும்..

நீங்க நகருங்க..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த புக் தான் வெங்கட்..அதை நாம் நம்ம ப்ளாக்கில் பப்ளிஷ் பண்ண முடியுமா,அதே வடிவில்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப நன்றி,ராம்வி! முப்பத்தைந்து வருடம் கழித்து இப்பவாவது விட்டது ’புருடா’ன்னு ஒத்துக்கறியே, உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று கலாய்த்தான், கல்யாணம் ஃபோனில்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன்: அய்யோ பாவம்.. நீங்க.
இப்ப இன்னும் ஆர்வம் அதிகமாச்சு.. கிரியை பார்த்தே ஆகணும்..

நான் : சரி!

வெங்கட் நாகராஜ் said...

அந்த புத்தகத்தை அப்படியே PDF ஆக ஸ்கேன் செய்து போட முடியும்...

அடுத்த முறை வரும்போது நான் செய்து தருகிறேன்... :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி,வெங்கட்!

ஹ ர ணி said...

தாகமெடுத்துத் தண்ணீர் அருந்துவதைப் போல இதமாகவும் சுவையாகவும் உங்கள் பதிவு. அதேசமயம் நடை பழையகாலத்துப் படைப்பாளிகளைத் தரிசிப்பதுபோல உணர்வைத் தருகிறது. ஒரு சான்று தேவனின் துப்பறியும் சாம்பு எளிமையாக இருக்கும். ஆனால் செய்திகள் நகர்ந்துகொண்டேயிருக்கும். அப்படித்தான் நல்ல இலகுவான தங்குத் தடையற்ற நடை. இந்த நடையைக் கொண்டு வேறு எதாவது தொடருங்களேன். நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றி ஹரிணி! தொடங்குகிறேன்..தொடருங்கள்!!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

நல்லதோர் அலப்பறையான பதிவு...வாழ்க மூவார் முத்து அவர்களின் ந்யூரான் பதிவுகள்...’கல்யாணராமன் கதைகள்’ என்றே எழுத சரக்கு நிறைய இருக்கும்போலிருக்கே....எழுதுங்கள்!!


//ஆனால், தஞ்சாவூரில் நடந்த கிரி கல்யாணத்திற்கு மட்டும் வந்திருந்தான்..என்ன இருந்தாலும் கிரி கிரி தான்..அவனுக்கு மட்டுமல்ல..இப்ப இருக்கிற என் ஃப்ரெண்ட் சீனுவும் அப்படி தான்! கிரின்னா போய் ஈஷிப்ப்பான்..ஈஷி!
என்ன செய்ய.. நாம வாங்கிண்டு வந்த வரம் அப்படி!!!//

கிரி தொலைந்து போன விபரம் உங்களில் யாருக்கும் தெரியாதா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாங்க எல்லன்..ரொம்ப நாளாச்சு நீங்க வந்து! இப்பத் தான் கல்யாணத்திடம் பேசினேன்..அவன் சொன்னான்..”இதை கிரி படிச்சா,அவனுக்கு தலை கால் புரியாம துள்ளிவான்னு...”
நீங்க என்னடான்னா, இப்படி சொல்றீங்க..அப்ப உஙக்ளுக்கு என் தம்பி கிரியைத் தெரியுமா?