Tuesday, December 7, 2010

மாதா,பிதா,குரு,கிரி!

ஆங்கரை ஷண்முகா பாடசாலையில், தேவசகாயம் வாத்யார், எங்களுக்கு மூணாம்ப்புக்கு.
விட்டார்னா, செவுனி ’ங்கோய்’னு அரை மணி நேரம் கேட்கும். வாய்பாடு தெரியாட்டா,
அப்படியே, அலாக்கா தூக்கி ஐயன் வாய்க்காலில் போட்டுடுவார்.ஆனா, ரொம்ப நல்ல வாத்யார். நல்லா
படிக்கிற பசங்களை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.
நாலாப்பு, செருப்பாலூர்..அஞ்சாப்பு கோதையாறு லோயர் கேம்ப் மிடில் ஸ்கூல்!
ஆறாம்ப்பு...மறுபடியும் ஆங்கரை!
இந்த ஸ்கூல் ஆங்கரையில் இல்ல..லால்குடி போர்டு ஐஸ்கூல். இரண்டு,மூன்று கிலோ
மீட்டர் நடந்து போகணும்.
எங்க ஊர் பசங்க எல்லாம் சேர்ந்து போவோம்.அப்ப அலுமினிய டிபன் பாக்ஸ் தான்.பாவம்,கிரி தேமேன்னு அதில டிபனை (டிபன் என்ன..தயிர்சாதம்,வடுமாங்கா தான்)எடுத்துண்டு வர,நான் அடம் பிடிச்சு,பார்சல் கட்டச் சொல்லி, அண்ணா பார்சல் கட்டித் தருவா..!ஊர்ல நிறைய பேருக்கு விதம்,விதமா பேரு..ஒருத்தம் பேரு சாம்பார் அம்பி..பட்டம்பி.. நான் டெய்லி பொட்டலம் கட்டிண்டு வரதுன்னால, எம் பேரு பொட்டலம் அம்பி!
எங்க சாப்பிடுவோம் தெரியுமா?
லால்குடி ஸ்கூல் போற வழியில சந்தைப் பேட்டை வரும்..அப்புறம் செருதூர்.
செருதூர் அக்ரஹாரத்தில டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் கோபால கிருஷ்ண மாமா வீடு!
அங்க தான், வரிசையா ஆங்கரை பசங்க எல்லாம் டிபன் பாக்ஸ் வைச்சிருப்போம்.
சாப்பிட்டுவிட்டு எச்சலிடுவது போல பாவ்லா பண்ணுவோம்.’ஆங்கரை குழந்தைகள் இவ்வளவு சமர்த்தா?’ என்று அந்த தாடிக் கார கோபாலகிருஷ்ண மாமா ஆச்சர்யப் படுவார்.
ஆங்கரையிலிருந்து எங்க ஸ்கூலுக்கு வர பஸ்ஸில் பத்து காசு தான். அந்த காசை மிச்சம்
பண்ணி,லால்குடி பூங்காவனத்துல சினிமா பார்ப்போம்..
’அம்மா..அம்மா சினிமா போய்ட்டு வரோம்மா.. ’
‘ பரிட்சை வந்தாச்சு..சினிமால்லாம் போகக் கூடாது..’
‘ அம்மா..வந்து படிக்கிறோம்மா..’
துணைக்கு தாத்தா வருவார்.’குழந்தைகள் தான் போய்ட்டு வரட்டுமேம்மா..ஒரு
ரிலாக்சேஷன் வேண்டாமா’ என்று சொல்ல, நான் கிரி சினிமாக்கு ஜுட்..சிவாஜி படம்
பேர் தெரியலே..ஆனா, அதில ஒரு பாட்டு வரும் ‘ யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா, போங்க..என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க..’
ரோடில சிரிச்சு பேசிண்டே போவோம்..அப்ப சிண்டிகேட், இண்டிகேட் வந்த புதிசு.
சினிமாக்கு போகவேண்டாம்னு சொன்ன அம்மா...இந்திரா காந்தி..பர்மிஷன் கொடுத்த தாத்தா மொரார்ஜி தேசாய் !!
இப்படித்தான் அபூர்வமா ’லட்சுமி கல்யாணம்’ சினிமா போக பர்மிஷன் கிடைச்சது.ஆனா, மழை கொட்டப் போறா மாதிரி இருந்தது.
நானும், கிரியும் விபூதியை குழைச்சு இட்டுண்டு ஸ்வாமி படம் முன்னால..
‘ததோயுத்த பரிஸ்ராந்தம்’னு ஆதித்ய ஹ்ருதயம் ஆரம்பித்தோம். அந்த ஸ்தோத்ரம் சொன்னா
மழை போய் வெயில் வந்துடும்னு நம்பிக்கை! அண்ணா எங்களுக்கு கோதையாறுல சொல்லிக் கொடுத்த ஸ்லோகம். அது ஒண்ணு தான் எனக்கு தெரியும், இன்னிக்கும்!
108 நெ. வீட்டுக்கு எதிர்த்தாற்போல், கண்ணன் என்று ஒரு ஆள்..எங்க சித்தப்பா வயசு இருக்கும்.எப்ப பார்த்தாலும் ‘டைட்ஸ்’பேண்ட் தான்! அதனால,அவருக்கு
ஒட்டடை குச்சி டைட்ஸ்னு பேர் வைச்சோம்.
அவங்க அப்பா, இப்ப போட்டுக்கிறா மாதிரி ஒரு முக்கால் ட்ராயர்ல் காட்சி தருவார்!
ரொம்ப நாள் பம்பாயில் இருந்துட்டு, இங்க வந்திருக்கா..அவங்க எங்கள வினோதமாய்
பார்க்கிறா மாதிரி நாங்களூம் அவங்களைப் பார்ப்போம்!மிருக காட்சி சாலைல,குரங்கு நம்மளப்
பார்க்குமே அது போல நாங்க பார்ப்போம், டைட்ஸை!
லீவ்ல குரு வருவான்..அதான் எங்க கிட்டு சித்தப்பா பையன். அவன் வந்தா ஜாலி தான்..கிரியை விட ஒரு வயசு சின்னவன்..
எங்க ஃபேமிலிக்கே மூத்த பேரன் நான் தான்.. நான் தான் முத்தண்ணா..
மூத்தவனாப் பொறந்த பாவத்தினால, இந்த கிரி,குரு,சசி,ரமா எல்லாரையும் ஊஞ்சல்ல
உட்கார்த்தி வைச்சு, நான் தான் காலம் பூரா ஊஞ்சலை ஆட்டிண்டு இருப்பேன்!
பெரிய மர டேபிள்..டிராயருக்கு கீழே, சாமான் வைக்கிறதுக்கு பெரிசா இடம் இருக்கும்..
அதே மாதிரி அந்த பக்கமும்!
எங்களுக்கு நாகர்கோவிலுக்கு ஸ்டேட் எக்ஸ்ப்ரஸ்ல போன ஞாபகம் வந்து விடும்..
நான்,கிரி,குரு எல்லாரும் அதில உட்கார்ந்துண்டு, ’டோரை’ சாத்தி விடுவோம்.
பஸ் போற மாதிரி சவுண்ட் விடுவான் கிரி..அந்த சவுண்ட் நின்னா, மதுரை வந்தாச்சுன்னுஅர்த்தம். அப்புறம் டின்னவேலி, நாங்குனேரி, நாகர்கோவில்னு வண்டி போகும்.
கடம்பூர் வந்தா போளி சாப்பிடறதா பாவ்லா !மதுரையில டிஃபன்!
பக்கத்து அகம் பாட்டி எங்க எல்லார் மேலும் ரொம்ப ப்ரியம்! வாய் அலுக்காம எப்ப
பார்த்தாலும்,கிரி ராஜா, குரு நாதா என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்..எங்கள் மீது
அவ்வளவு பாசம்..
நானும்,கிரியும் நவராத்திரி கொலுவுக்கு எல்லார் வீட்டிலும் போய் அழைப்போம்..ராம, லெக்‌ஷ்மண வேஷம் போட்டுக் கொண்டு அக்ரஹாரத்தில் நடந்தால்,அடையாளம் தெரியாமல் தெரு நாய் கூட குரைக்கும்!
அவ்வளவு தத்ரூபமாய் இருக்கும் வேஷம்!
லீவு வந்தால் ஜாலி தான்.
லவா..லவா..லக்கி ப்ரைஸ்!
பெரிய கார்ட்போர்டை எடுத்துக் கொள்வோம்.அதில் இரண்டாகப் பிரித்து, மேல் பாகத்தில்
கார் பொம்மை, பலூன்,ஒவ்ரங் உடாங் ஊசி பட்டாசு வெடிப்பது போன்ற படம், கரடி பொம்மை..எல்லாம் ஒட்டியிருக்கும். கீழ் பக்கம் பேப்பரை சுருட்டி ஒட்டி இருப்போம்.
ஒவ்வொன்றிலும் ஒரு நம்பர். ஒரு பேப்பர் கிழிக்க ஐந்து பைசா. அந்தந்த நம்பர் கிடைத்தால்,
அந்தந்த நம்பர்களுக்கு உரிய பரிசுப் பொருள் கிடைக்கும்!
ஆனால் எல்லா நம்பருக்கும் ஆரஞ்சு மிட்டாய் தான் போட்டிருக்கும் விஷயம் ஸ்ரீதராகிய
எனக்கும், கிரிக்கும் மட்டும் தான் தெரியும்!
எல்லாமே...போ..............................ச் !!!!!!!!!!!!!!!

31 comments:

raji said...

மலரும் நினைவுகள் என்றுமே சுகமானவைதான்

ஹ ர ணி said...

வாடாமலர் நினைவுகள்.

Chitra said...

குதூகலமான நினைவுகள் - இனிய பதிவு.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே . அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சின்ன வயது நினைவுகள் என்றுமே ”கமர்கட்” போல ருசியானவை தான்.

(தாங்கள் பள்ளி நாட்களில் கமர்கட், குச்சி ஐஸ், காரட் போல சீவப்பட்ட ஐஸை, ஒரு கெட்டித் துணியில் வைத்து, அதன் நடுவே கெட்டியான ஈர்க்குச்சி வைத்து கெட்டித்துணியை அப்படியே மடித்து, குச்சியுடன் ஒட்டியுள்ள அந்த பஞ்சு மிட்டாய் வடிவ ஐஸ் குவியலில், பல வித நிறங்களில் LR சர்பத் போன்ற ஏதேதோ தெளித்து தருவார்களே; முதல் உறுஞ்சில் மிகவும் தித்திப்பாக இருக்கும் - போகப்போக வெறும் ஜலம் தான் வரும் - கடைசியில் தொப்பொண்று வலுவிழந்து கீழே விழுந்து விடும் - இவையெல்லாம்
சாப்பிட்டதுண்டா? )

தங்கள் வருணனையில் காணோமே என்று கேட்டேன்.

அந்த சிவாஜி படத்தின் பெயர்: ”எங்க ஊரு ராஜா”
அந்தப் பாடலின் வரிகள் எல்லாமே நன்றாக கருத்துள்ளதாக இருக்கும். தென்னையப்பெத்தா இளநீரு...பிள்ளையப்பெத்தா கண்ணீரு....பெத்தவன் மனதே பித்தம்மா...பிள்ளை மனதே கல்லம்மா ... ஆடியிலே ... காத்தடிச்சா, ஐப்பசியில் ... மழைவரும்.

மோகன்ஜி said...

ஆஹா! வசந்தகால நினைவுகள்..என்றுமே அலுக்காத நிகழ்வுகள். லயித்து எழுதியிருக்கிறீர்கள். நானும் கூட உங்கள் பஸ்சில் வந்ததுபோல் உணர்வு. அருமை.

வயலூர் பதிவு ஒன்று போட்டிருக்கிறேன் பாருங்கள்

நிலாமகள் said...

நகைச்சுவை ததும்ப பகிர்ந்து இருக்கிறீர்கள்.

"பள்ளிப் பருவநிலை
பழைய கதை ஆவதில்லை
எண்ணச் சிறகுகளை
எவர் வெட்டிப் போட்டாலும்
கண்ணில் பழைய நிலா
கவிபேசத் தவறவில்லை..."

பள்ளிக் காலத்தில் படித்து நினைவில் அழியாத கவிதை. கவிஞர் பெயர் தான் மறந்து போச்....

வெங்கட் நாகராஜ் said...

அப்படியே எங்கள் எல்லோரையும் சிறுவயதிற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் சார். மிக்க நன்றி.

ADHI VENKAT said...

எல்லார்க்கும் பேர் பிரமாதம். ரயில் பயணமும் போளி சாப்பிடுவதும் கூடவே இருந்து ரசித்த மாதிரி உணர்வைத் தந்தது.

sury siva said...

ஆங்கரை என்ற ஒரு சொல் என்னை இங்கே இழுத்து வந்துவிட்டது.

நீங்களும் ஆங்கரையில் பிறந்தவரா !!
நானும் தான்!!
அறு பத்தி ஒன்பது வருஷங்களுக்கு முன்பாக,
அந்த அக்ரஹாரம் பெருமாள் கோவிலுக்கு மேல் சரகில்

சுப்பு ரத்தினம்.

ரிஷபன் said...

பதிவில் சின்ன வயசு நினைவுகள் அமர்க்களம். கோர்வையாய் சொல்லிப் போனதில் வெகு சுவாரசியம். உங்க வீட்டில் தலகாணி சண்டை உண்டா.. பஞ்சு காற்றில் பறக்க ஒவ்வொருத்தரும் விட்டெறிவோம். அப்பா ஆபீஸ்ல இருந்து வரார்னு தெரிஞ்சா சமர்த்தா ஒவ்வொரு மூலைல உக்கார்ந்துப்போம். ம்ம்.. அது ஒரு காலம்.

அப்பாதுரை said...

short and sweet (ஆரஞ்சு மிட்டாய்)
typewriting institute: இந்த ஜெனரேசன் இழந்த ஜாலிகளில் ஒன்று

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராஜி: மலரும் நினைவுகள் என்றுமே சுகமானவைதான்
நான் : அந்த கால நினைவுகள் சுகமானவையே..
ஏன் என்றால் உறவுகள் ஒரு சுஹமான அனுபவம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹரணி:மலரும் நினைவுகள் என்றுமே சுகமானவைதான்
நான் : வாங்க சார்..அத்தி பூத்தாற்போல் தான் வருகிறீர்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ரா:குதூகலமான நினைவுகள் - இனிய பதிவு
நான் : நன்றி மேம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வித்யா சுப்ரமணியம்:அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே . அருமை.
நான் : எனக்கு கோர்வையாக எல்லாம் எழுத வராது..ஏதோ பேத்துவேன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நான்: வை.கோ. சார்..எனக்கு எப்பவுமே கமர்கட்,எலந்த வடை,ஜிகர்தண்டா,குச்சி ஐஸ்,அரு நெல்லிக்காய்,சேப்பா, ஜவ்வா இழுத்துண்டு இருக்குமே அந்த மிட்டாய் மேல எல்லாம் பெரிசா ஈர்ப்பு கிடையாது.இருந்த கொஞ்ச, நஞ்ச ஆசையும் ஒரு இருபது வருஷம் முன்னால,ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில, க்ளாஸ் பேப்பர்ல பேக் பண்ணிய எலந்த வடை சாப்பிட்ட ஜோரில, போயிடுத்து!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மோஹன்:ஆஹா! வசந்தகால நினைவுகள்..என்றுமே அலுக்காத நிகழ்வுகள். லயித்து எழுதியிருக்கிறீர்கள். நானும் கூட உங்கள் பஸ்சில் வந்ததுபோல் உணர்வு. அருமை.

வயலூர் பதிவு ஒன்று போட்டிருக்கிறேன் பாருங்கள்
நான்: மிக்க நன்றி சார்..இதோ..இப்பவே ’வயலூர்’
போய் பார்க்கிறேன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நிலாமகள் மேம்க்கு: கவிதை அருமை!மிக்க நன்றி!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெங்கட்:அப்படியே எங்கள் எல்லோரையும் சிறுவயதிற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் சார். மிக்க நன்றி
நான் : மிக்க நன்றி, சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கோவை 2 டில்லி:எல்லார்க்கும் பேர் பிரமாதம். ரயில் பயணமும் போளி சாப்பிடுவதும் கூடவே இருந்து ரசித்த மாதிரி உணர்வைத் தந்தது.
நான் : கடம்பூர் போளி சாப்பிட்டிருக்கிறீர்களா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூரி சார்:ஆங்கரை என்ற ஒரு சொல் என்னை இங்கே இழுத்து வந்துவிட்டது.

நீங்களும் ஆங்கரையில் பிறந்தவரா !!
நானும் தான்!!
அறு பத்தி ஒன்பது வருஷங்களுக்கு முன்பாக,
அந்த அக்ரஹாரம் பெருமாள் கோவிலுக்கு மேல் சரகில்1
நான்: எங்கள் வீடும் பெருமாள் கோவில் மேற்கில் முதல் வீடு! எங்களுக்கு பூர்வீகம் அரியூர்.
தாத்தா: மோட்டார் ராமையா என்கிற அனந்தராம கனபாடிகள்!
அப்பா : ராஜம் என்கிற ராஜகோபாலன்!எங்கள் அப்பா தான் மூத்த பிள்ளை!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்களுக்குத் தெரியுமா, சூரி சார்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன்: பதிவில் சின்ன வயசு நினைவுகள் அமர்க்களம். கோர்வையாய் சொல்லிப் போனதில் வெகு சுவாரசியம். உங்க வீட்டில் தலகாணி சண்டை உண்டா.. பஞ்சு காற்றில் பறக்க ஒவ்வொருத்தரும் விட்டெறிவோம். அப்பா ஆபீஸ்ல இருந்து வரார்னு தெரிஞ்சா சமர்த்தா ஒவ்வொரு மூலைல உக்கார்ந்துப்போம். ம்ம்.. அது ஒரு காலம்!
நான் : சேச்சே! எங்கள் வீட்டில் தலைகாணி சண்டையெல்லாம் கிடையாது.ஆனா, பாய்க்கு அடிச்சுப்போம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பாதுரை:short and sweet (ஆரஞ்சு மிட்டாய்)
typewriting institute: இந்த ஜெனரேசன் இழந்த ஜாலிகளில் ஒன்று!
நான் : பாவம் இந்த கால வாண்டுகள் எல்லாவற்றையும் இழந்து விட்டதே, அப்பாதுரை சார்?

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

Nostalgia என்பது ஒரு சுகமான உணர்வு....நினைவுகள் எனும் சாக்லேட்டை மூடியிருக்கும் ஜிகினா பேப்பர் அது. நீங்கள் உங்கள் neuron பதிவுகளை ஜிகினா பேப்பர் மூலம் ஒரு அருமையான கதையாக படைத்திருந்தீர்கள். நன்றாக இருந்தது. இறுதியில் ' போச்..........' இல்லை அது ...போங்கு என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை சார்..அருமையான விமர்சனம் திரு LN

பத்மநாபன் said...

பள்ளியும் பால்யமும் சொர்க்கம் ...வெள்ளந்தியான பருவகால நினவுகளை அழகா சொல்லி எல்லோருக்கும் அவரவரது மலரும் நினவு தென்றலை தாலாட்ட வெச்சுட்டிங்க....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பத்மநாபன்: பள்ளியும் பால்யமும் சொர்க்கம் ...வெள்ளந்தியான பருவகால நினவுகளை அழகா சொல்லி எல்லோருக்கும் அவரவரது மலரும் நினவு தென்றலை தாலாட்ட வெச்சுட்டிங்க....
நான் : அந்த வசந்த கால நினவுகளை யாரால் தான் மறக்க இயலும்?

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சபாஷ் ராமமூர்த்தி ஸார்.

என் மனைவியின் பூர்வீகம் ஆங்கரையும் மணக்காலும்தான்.

ஆங்கரையில் ராமஸ்வாமி அய்யரைத் தெரியுமோ? அவரின் பெண் வயிற்றுப் பேத்திதான் என் மனைவி.

ஆனாலும் மணக்காலுடன்தான் என் பரிச்சயம் அதிகம்.அந்த வாய்க்காலில் குளித்திருக்கிறேன்.

அங்கே அக்ரஹாரத்தில் டால்மியா தர்மராஜன்தான் என் மனைவியின் பெரியப்பா.

உங்க நினைவுகளும் கிட்டத்தட்ட என் நினைவுகளுடன் ஒத்துபோயின. ஊர்தான் வேற வேற.(எனக்குத் திருநெல்வேலியில் கழிந்தது பால்யம்)

ஆனாலும் உங்கள் தலைப்பால் உயர்ந்து நிற்கிறீர்கள் சார்.

மாதா-பிதா-குரு-கிரி யென தம்பிக்குக் கடவுளின் இடத்தைத் தர பெரிய மனசு வேணும்.

உங்களிடம் அது இருக்கிறது.

வசந்தமுல்லை said...

மாதா,பிதா,அஹமது, அறவாழி, ஆறுமுகம், சிவகுமார்
என நானும் தலைப்பு வைக்கும் அளவுக்கு என் கல்லூரிக்கால நண்பர்களை ஞாபகம் படுத்திய உங்களை என்ன சொல்லிப் பாராட்ட ?
உங்களுக்கு ஏதேனும் மெடல் கொடுக்கணும்ன்னு தோணுது!!!
என்ன கொடுக்கலாம்னு யோசிச்சு வைக்கிறேன் !!!!!!!!!