Saturday, May 29, 2010

புரிந்தது.....


' ஹலோ நிஷா ஹியர்'
'எஸ்'
' நிஷா..நான் தான் நிரஞ்சன். சாயங்காலம் ஏதாவது 'ப்ரொக்ராம்' இருக்கா?'
'என்ன விஷயம்?'
'மெரினா போலாம்னு தான்...'
'இந்த நிரஞ்சனோட பெரிய 'இது'வா போயிடுத்து. ஆபீசுக்குப் போன் பண்ண வேண்டாம்னு, ஆயிரம் தடவை அடிச்சு சொன்னாலும் கேட்க மாட்டார். டெலிபோன் ஆபரேட்டர் ஜெயந்தி இதற்காகவென்றே இங்கே காதைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்.
'...............................'
'என்னடா பேசாம இருக்கே?'
'...............ம்..................'
'அப்ப வைச்சுடட்டுமா?'
இவளும் போனை வைத்தாள்.நிரஞ்சனுடன் பேசுவதென்றாலே அவளுக்கும் கொள்ளை ஆசை. இருந்தாலும்...
ஒரு நிமிஷம் முன் தான் அவனைப் பார்க்க வேண்டும் என நினைத்தாள். இதோ அவனே போன் பண்ணி விட்டான். என்ன ஒற்றுமை?
' நிஷா..டாக் ரொம்ப வேகமாப் போய்க்கிட்டு இருக்கே..'
கண்களை சிமிட்டிக் கொண்டு குறும்பாகக் கேட்ட ஜெயந்தியை எரித்து விடுவது போல் பார்த்தாள், நிஷா.
'லீவ் வேகன்ஸி' பார்க்கிறோம் என்ற நிதர்சனமான உண்மை மெலிதாய் உறைக்க,பதில் பேசாமல் வேலையில் ஆழ்ந்தாள்.

நிரஞ்சனை முதன்முதலில் தன்னுடைய சித்திப் பெண் கல்யாணத்தில் சந்தித்தாள்,நிஷா. இளைஞர்களிலே தனி ரகமாகத் தெரிந்தான்,அவன்.
நலங்கில் சித்திப் பெண்ணுக்குப் பிண்ணனி இவளைப் பாடச் சொன்னார்கள். இவளும் பாடினாள்.
சோபில்லு...
ஜகன்மோகினி ராகம்..
அதற்குப் போட்டியாக மாப்பிள்ளைத் தோழன் நிரஞ்சன் ஒரு பாட்டுப் பாடினான்.
அவன் பாடலுக்கு ஆளுக்கு ஆள் அப்ளாஸ் செய்தார்கள்.
தனிமையான சந்தர்ப்பம் ஒன்று அந்த கல்யாண சந்தடியில் அபூர்வமாகக் கிடைத்தது இருவருக்கும்.
'ரொம்ப நன்னாப் பாடினேள். சங்கீதம் கத்துண்டுருக்கேளா..' - நிரஞ்சன் அவள் வாயைக் கிண்டினான்.
ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள், நிஷா.
' எனக்குத் தெலுங்கு தெரியாது. கீர்த்தனைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சதுன்னா இன்னும் நல்லாப் பாடியிருக்கலாம் உங்களை மாதிரி..'
ஊடுருவது போல அவளைப் பார்த்தான்.
குறும்புக்காரன். எல்லா விபரமும் தெரிந்து வைத்திருக்கிறான் போலிருக்கிறது.
உதடுகளைக் குவித்து அவனுக்குப் பழிப்புக் காட்டினாள், நிஷா.
பத்து நாட்கள் கழித்து பஸ்ஸில் ஒரு பார்வை பரிமாற்றம். மற்றொரு நாள் பாண்டி பஜாரில் தெரிந்து கொண்ட பாவனையில் புன்சிரிப்பு. பிறகு அப்பப்ப மெரினாவில் சந்திப்பு!
அன்று!
' என்ன நிஷா, வேலை ஜாஸ்தியா?'
' ....ம்.....' நெற்றியை கர்ச்சீப்பினால் ஒற்றிக் கொண்டாள். நிரஞ்சன் சுண்டல் பொட்டலங்களை வாங்கினான்.
' நிஷா, உனக்கு எப்ப ஆர்டர் போடுவாங்களாம்?'
' யார் கண்டா? இன்னும் பத்து நாளில் சுதா வந்துடுவா? என்ன பண்றாங்களோ தெரியலே..'
' ஒரு நல்ல வரன் வந்திருக்கு; பொண்ணு பேங்க்கில வேலை செய்யறா..அம்மா,அப்பாக்கும் புடிச்சுப் போச்சு..எனக்கும் தான்...'
திக்கென்றிருந்தது,நிஷாவிற்கு. கிண்டல் பண்ணுகிறானோ....
முகத்தை கூர்ந்து கவனித்தாள். சீரியஸாகத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
'... அடச்சீ..சராசரி ஆண்களைப் போலத் தானா நீயும்?....'
' அப்ப பண்ணிக்க வேண்டியது தானே.'
' நிஷா...நீயா சொல்றே?'
ஆச்சர்யம் அவன் குரலில் கொப்பளித்தது.
' வெரி குட் கேர்ள். இதை நீ எப்படி எடுத்துக்கப் போறியோன்னு தான், நான் பயந்துண்டு இருந்தேன்....'
' இதிலென்ன பயம்?'
' அதான்..எனக்குப் பின்னால அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,தங்கைன்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. எல்லாத்தையும் உதறித் தள்ளி விட்டு துண்டை உதறித் தோளில் போட்டுண்டு என்னால உன்னுடன் வந்துட முடியாது..'
'..உம்..அப்புறம்..' - ஏதோ கதை கேட்கும் ஆவலில் கேட்டாள்,நிஷா.
குரல் ரொம்பவும் தாழ்ந்து போன நிலையில் அவன் சொன்னான்:
' கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் தன் வருங்கால மாமனார் கொஞ்சம் வசதியுள்ளவரா இருக்கணும்னு நினைக்கறது தப்பா நிஷா?'
'தப்பே இல்லை'
நிஷா, சொல்லும் போதே, ரிடையர்டான அப்பா..தனக்குப் பின்னால் திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் தங்கைகள், அவள் மனக் கண்ணில் நிழலாடினார்கள்.
' தியாகய்யர் கீர்த்தனைகளைக் கேட்க ரொம்ப சந்தோஷமாய் இருக்கே..அதனால வயிறு ரொம்புமோ.....'
'நிரம்பாது'
' ரொம்ப ப்ராடிக்கலா திங்க் பண்றே, நிஷா. உன்னோட 'வுட் பி' ரொம்ப கொடுத்து வைச்சவர். எனக்குத் தான் கொடுத்து வைக்கல..'
தொண்டைக் கமறலோடு சொன்னான், நிரஞ்சன்.
' நீ ஏதாவது மனசுக்குள்ள நினைச்சுண்டு ஏமாந்துடுவியோன்னு எனக்கு ரொம்பக் கவலையாய் இருந்தது. இவ்வளவு 'ஸ்போர்ட்டிவ்'வா எடுத்துண்டுட்டியே...எனக்குத் தான் நம்பிக்கைத் துரோகம் செஞ்சுட்டா மாதிரி ஒரு குடைச்சல்...'
'.....இதுக்குப் பேரு வேற என்னடா, மடையா....'
கொஞ்சம் விட்டால் அழுது விடுவாள் போல் இருந்தது. அவனுடன் முகம் கொடுத்துப் பசவே அவளுக்குப் பிடிக்கவில்லை. இந்த மாதிரி சமயத்தில் முகம் மட்டும் தொலைந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஒரு கணம்...
ஒரே கணம் தான்!
தன்னை சமாளித்துக் கொண்டாள்,நிஷா.
' நல்ல வேளை..நான் தப்பிச்சேன்'
' என்ன..நிஷா..'
' சும்மா விளையாட்டுக்குச் சொல்லலியே, நீங்க?'
' என்னப்பா, இப்படிக் கேக்கறே? ரொம்ப சீரியஸாத் தான் நான் பேசிக்கிட்டு இருக்கேன்....'
' அதுக்கில்லே...உங்க கிட்ட போனில் எப்படி சொல்றதுன்னு தான் நானும் தவிச்சுண்டு இருந்தேன். உங்களுக்கோ குறைச்ச சம்பளம்..நானும் வேலைக்குப் போனாத் தான் குடும்பம் மணக்கும். நான் பாக்கறதோ ஒரு இரண்டுங்கெட்டான் 'லீவ் வேகன்ஸி' எப்ப தூக்கி வெளியில போடுவான்னு சொல்ல முடியாது..சொற்ப சம்பளம் வாங்கற ஒரு க்ளார்க்கைக் கட்டிண்டு காலம் பூரா மாரடிக்கணுமேன்னு நானும், மனசுக்குள்ள ரொம்ப பயந்துண்டு இருந்தேன்..இதுல வேற பெரிய சம்சாரம்...எல்லாம் முடிஞ்சு, எனக்குன்னு மிஞ்சறது ஒரு முழம் மல்லிகைப் பூவோ..இல்ல அதுவும் இல்லையோ..நல்ல வேளை ஆண்டவன் எனக்கும் கண்ணை திறந்துட்டான்....'
' என்ன சொல்றே,நிஷா?'
' ஆமாம்..எனக்கும் இரண்டு நாளில நிச்சயம் பண்ணப் போறாங்க...அவர் பப்ளிக் செக்டார்ல பெரிய ஆஃபீசர்..வடக்கே அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் ஆகுமாம். அதனால வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க....'
சொல்லும் போதே, கல்யாணம் ஆகப் போகிற பெண்களுக்கு வரும் வெட்கமும்...நாணமும்...போட்டிப் போட்டுக் கொண்டு வரவில்லை.
குபுக்கென்று துக்கம் தான் நெஞ்சை அடைத்தது!
நிரஞ்சன் என்ற அந்த ஈனமான சந்தர்ப்ப வாதியிடம் ஏமாற அவளுக்கே உரித்தான அந்த உயரிய பெண்மை இடம் கொடுக்க வில்லை!
ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டு,
நிஷா எழுந்தாள்.
நிரஞ்சன் நடந்தான்.
ஆனால்,
இருவர் சென்ற பாதைகளும் வெவ்வேறு!!

பின்குறிப்பு : இந்த சிறுகதை டிசம்பர் 1985 ஓம் சக்தி இதழில் வெளி வந்தது.

8 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

அவளுக்குப் புரிந்தது.. அவனுக்குப் புரிவது எப்போது?!
நல்ல கருத்துள்ள கதை

பத்மா said...

என்ன இருந்தாலும் கஷ்டமா தான் இருக்கு

ஸ்ரீராம். said...

மனதை நெருடியது..நல்ல கதை.

வெங்கட் நாகராஜ் said...

கருத்துள்ள கதை. வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சோகமான முடிவு தான்!
இருப்பினும் நன்றாகவே எழுதி முடித்துள்ளீர்கள்

//ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டு,
நிஷா எழுந்தாள். நிரஞ்சன் நடந்தான்.
ஆனால், இருவர் சென்ற பாதைகளும் வெவ்வேறு//

பேஷ் பேஷ் .. ரொம்ப நல்லாயிருக்கு !

Thenammai Lakshmanan said...

இந்த மாதிரி சமயத்தில் முகம் மட்டும் தொலைந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஒரு கணம்...//

என்ன ஒரு ஆதங்கம்.. இந்த வார்த்தைகளில்..

Anonymous said...

//அவளுக்கே உரித்தான அந்த உயரிய பெண்மை//

நிஜம் தான்!

//ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டு//

அருமை!

//இந்த சிறுகதை டிசம்பர் 1985 ஓம் சக்தி இதழில் வெளி வந்தது//

நான் அப்போ பொறக்கவே இல்லை :)) நன்றி.