Saturday, July 1, 2017

திரும்பி பார்!

திரும்பி பார்க்கிறேன்..
*******************
போன வருடம் இந்த நாட்களில் US ல் இருந்தேன்..
பெண் வீடு!
எனக்கும்,சகதர்மணிக்கும் ஒரு ரூம்..எங்கள் சம்பந்திக்கு இன்னொரு ரூம்..
காலையில் ஆறரை மணி டு ஏழரை மணி வாக்கில் எழுந்திருக்க வேண்டியது..மாப்பிள்ளை ஐந்தரை மணிக்கே ஆபீஸ் போய் விடுவார்...பல் தேய்த்து காபி குடித்து விட்டு, நானும் எங்கள் சம்பந்தி சார் திரு Ramachandra Nagarajaan (He is my relative மட்டுமல்ல...ஒரு நல்ல நண்பரும் கூட!)
இருவரும் ஒரு ப்ரிஸ்க் வாக்கிங்..அந்த pleasant valley avenue வை இரண்டு தடவை சுற்றி வருவதற்குள்,அரை மணி நேரம் ஆகி விடும்...
பிறகு பெண் ஆபீஸ் கிளம்பல்...நாங்கள் டிபன் சாப்பிடுவது எல்லாம் முடிந்து டி.வி.யில் பழைய எம்.ஜி.ஆர்..சிவாஜி ..ரவிசந்திரன்..ஜெய் படம் என்று பார்க்க வேண்டியது..
ஒரு மூன்று மணி நேரம் ஓடி விடும்..பிறகு சாப்பாடு..
சின்னதாய் ஒரு தூக்கம்...மறுபடியும் காபி..சாயந்திரம் மாப்பிள்ளை ஐந்து ஐந்தரைக்கு வந்து விடுவார்...அரை மணி நேரம் கழித்து பெண் வருவாள்..அவர்களுக்கு காபி கொடுத்து விட்டு மறுபடியும் வாக்கிங்...இப்போது நானும் சகதர்மணியும்...அவர்களிருவருமாக வாக்கிங்..எங்கள் அகத்துக்கு பக்கத்திலேயே ஒரு பார்க்..அதில் நாங்கள் நாலு பேரும் கொஞ்சம் ரெஸ்ட்...பிறகு வீடு திரும்பல்..நியூஸ் பார்த்தல் ..டின்னர்..
அங்குள்ள தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவது..களை புடுங்குவது..என்ற அசைன்மெண்ட் 
சில நாட்களில்..
US ல் நிறையவே நடந்தோம்..
பொழுதும்  படு ஜாலியாக ஓடிக் கொண்டிருந்தது..
ஒரு நாள் கண் விழித்ததும் வழக்கம் போல ப்ரஷ் செய்ய பார்க்கிறேன்...முடியவில்லை..
ஏதோ unusual ஆக....
பற்களை தேடுகிறேன்...கிடைக்கவில்லை...
பதட்டத்துடன் கண்ணாடியில் பார்க்கிறேன்..
ஹா...என்ன ஒரு கோரம்..
முகம் தன் symmetrical stage லிருந்து கொஞ்சம்...(கொஞ்சமா?) விலகியிருந்தது..வலது கண்ணும்,வலது உதடும் கொஞ்சம் மேல்நோக்கி சென்றுபார்க்கவே விகாரமாக இருக்க..
பயத்துடன் கட்டிலுக்கு வந்து போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன்..
'..கடவுளே..கடவுளே..இது  கனவாக இருக்கக்கூடாதா?' என்கிற அசட்டு  நம்பிக்கையுடன் கண்ணாடியில் முகம் பார்க்க, முகம் மறுபடியும் அதே கோணலுடன் தான் இருந்தது..
வெட்கம் பிடுங்கி திங்க, ரூமுக்குள் அடைந்து கிடக்க..அப்புறம் எல்லோரும் வந்து பார்த்து தைர்யம் சொல்ல..
உடனே, பெண்ணும் மாப்பிள்ளையும் கார் எடுத்து டாக்டரைப் பார்க்கப் போனோம்..அதற்குள் மாப்பிள்ளை கூகுளில் சர்ச் செய்து வந்தது Bell's palsy என்று கண்டுபிடித்து விட்டார்..குளிரினாலோ..அல்லது ஏதாவது stress னாலோ அது வருமாம்...
'வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டு அனைவருக்கும் கஷ்டம் கொடுக்கிறோமே' என்கிற சங்கடம் எனக்குள்..
டாக்டர் கொடுத்த மரத்திரை, கண்ணுக்கு சொட்டு மருந்து,சின்ன சின்ன எக்ஸர்ஸைஸ் எல்லாம் செய்து முப்பது நாளில் சரியாகி விட்டது..
அந்த சமயம் முகவிகாரம் தெரியாமல் இருக்க நான் வளர்த்த தாடி!
அந்த முப்பது நாட்கள் ..
என் அனுபவம்..
உறவுகளின் அனுசரனை..எனக்கும் 'பாதுகாப்பாக நம் மனிதர்களுடன் இருக்கிறோம்' என்கிற ஜாக்கிரதை உணர்வு..
'உறவு என்பது ஒரு சுகமான அனுபவம்' என்று நீல பத்மனாபன் தான் எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார்?
எவ்வளவு சத்தியமான வார்த்தை?
குழந்தைகளின் ப்ரெண்ட்ஸ்களின் அன்பான  விசாரிப்பு..
டல்லாஸில் இருந்து அடிக்கடி வந்த இளைய மகள்..
மூன்று மாத லீவ் முடிந்ததால், நான் திருச்சிக்கு வர..
இங்குள்ளவர்களுக்கு ' சும்மா பல் வலி ..முகம் வீக்கம்..' என்று சமாளித்து, ஆபீஸ் வருகிறேன்..
அங்கு பெற்றோர்களையும்,உற்றோர்களையும் பல் வீக்கம் என்று சொன்னது இங்கு எடுபடவில்லை..
என்னைப் பார்த்தவுடன் கொல்லென்று என்னை சூழ்ந்து கொண்ட தோழமைகள்..
சும்மாவா...
எங்களுடையது, ஒரு முப்பத்தாறு வருட நெடிய ரயில் பயணமல்லவா?
ஆளாளுக்கு அக்கறையுடன் என்னை விசாரிக்க..
'எனக்கு இப்படித்தான் இருந்தது..ஒரு சின்ன எக்சர்சைஸ்..நம்ம ஆஸ்பிடல்ல மசாஜ் செஞ்சுக்கோ..சரியாயிடும் ..'
' இதெல்லாம் சகஜமா வரது தான்.....'
'பயப்படறதுக்கு ஒண்ணுமே இல்லையப்பா..'
' நம்ம அர்ஷத் நிச்சயத்துக்கு நாம எர்ணாகுளம் போறோம்..உனக்கும் சேர்த்து ரிசர்வ் பண்ணியாச்சு..'
நண்பர்களின் கனிவான விசாரிப்பு...
தென்னை மரம் ஏறும் போது,சறுக்கி, மாரில் தோல் வயண்டு போக,அதனால் ஏற்படும் எரிச்சலுக்கு, விளக்கெண்ணெய் தோய்த்து மயில் பீலியால் வருடும் சுகம் போல இருந்த ஆபீஸ் நண்பர்களின் அக்கறை..
அடாடா..
அன்பு சூழ் உலகு ஐயா, இது 
உண்மையிலேயே,
அன்பு சூழ் உலகு தான்!
...........



14 comments:

G.M Balasubramaniam said...

நமக்கு வேண்டியதும் அதுதானே இப்போது பழையநிலக்கு வந்தாயிற்றா நலம் அறிய ஆவல்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான், அன்புசூல் உலகு.

வை.கோபாலகிருஷ்ணன் said...


ஆஹா, மிகவும் வருந்தத்தக்க அனுபவமே. நல்லவேளையாக சரியானது கேட்க மகிழ்ச்சி.

//சும்மாவா...எங்களுடையது, ஒரு முப்பத்தாறு வருட நெடிய ரயில் பயணமல்லவா?ஆளாளுக்கு அக்கறையுடன் என்னை விசாரிக்க.//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அன்புடன் ஆளாளுக்கு ஒவ்வொரு வைத்தியம் சொல்லியிருப்பார்களே !!

நானும் இவ்வாறு சிலசமயங்களில் சிலவற்றைத் திரும்பிப்பார்ப்பது உண்டு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வந்து விட்டேன் GMB Sir!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
This comment has been removed by the author.
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சரியா போச்சு வைகோ சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹா...அருமை ஜம்புலிங்கம் சார்..
அன்பை சூலாய் கொண்ட உலகு இது!
அருமை!

Yaathoramani.blogspot.com said...

நான் தற்போது இங்கு
இங்குள்ளதில் உள்ள பிரச்சனையே
நோவு ஏது வந்துவிடக் கூடாதே
என்கிற கிலிதான்
இதுபோல் எனக்கும் வயிற்று வலி வந்து
செமக் கஷ்டம்
எப்படியோ சமாளித்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன்
விரிவாக அங்கு வந்தபின் எழுத வேண்டும்

middleclassmadhavi said...

அன்பான உறவுகளுக்கும் அக்கறையான நட்புகளுக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! அந்த விசாரிப்பை நல்ல முறையில் எடுத்துக் கொள்ள நல்ல மனமும் வேண்டும்! வாழ்த்துக்கள்!
என் சொந்தக்கார (?) பெண்மணி குடும்பத்தோடு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்; மகளின் ஒரு புருவம் காணோம் - என் மகன் என்ன ஆச்சு என்று விசாரித்தது தவறாம்! மகள் மனம் புண்பட்டு விட்டதாம் - வருஷங்கள் ஆன பின்னும் சொல்லி சொல்லி காண்பிக்கிறார்!! என் மகனை கரித்துக் கொட்டிக் கொண்டே இருக்கிறார்! என்ன செய்ய?!!

வை.கோபாலகிருஷ்ணன் said...



December 2014 இல், நான் இரண்டாம் முறையாக துபாய் சென்றிருந்த போது, எனக்கு உதட்டில் புண் வந்து, என்னால் மாடு கறக்க முடியாமல் போனதை, படங்களுடன் கொடுத்துள்ளேன்.

http://gopu1949.blogspot.in/2015/01/18.html

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாங்க ரமணி சார்..நம்மால் ஏதாவது அவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டிய நேரத்தில் நம்மால் அவர்களுக்கு உபத்திரவம் இருக்கக் கூடாது என்று நாம் நினைப்பது சரிதான்...
அதே அனுபவம் தான் எனக்கும்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவலைப்படாதீர்கள் middle class Madhavi madam..
காலம் கனியும் வரை காத்திருங்கள்...அவர்களே உணர்ந்து கொள்வார்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்கள் பதிவு படித்தேன் ரசித்தேன்..ஆனால் வாய் விட்டு சிரிக்க முடியவில்லை..
காரணம் எனக்கும் இப்போது உதட்டில் புண்..
ஆனால் மாடு கறக்கப்பட்ட முடிகிறது..
மரம் ஏறி தேங்காய் பறிக்க முடியவில்லை!

கரந்தை ஜெயக்குமார் said...

உறவும் நட்பும் சுகமான அனுபவம்தான் ஐயா