Monday, April 8, 2013

ஆரண்ய நிவாஸம் (2)

" உம் ..சொல்லுங்க "
ஒரு பெருமூச்சு என்னிடமிருந்து பதிலாகக் கிளம்பியது .....அதன் பின் ஒரு ஆழ்ந்த மெளனம் ...இனி மேல் பேசாமல் இருந்தால் அவ்வளவு மரியாதை இல்லை என்று தோன்றவே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச
ஆரம்பித்தேன்....
   "உங்களுக்கு களியக்காவிளை தெரியுமோ?"
   "கேரளாவா?"
   "கன்யாகுமரி  டிஸ்ட்ரிக்ட்..கேரளா பார்டர் !"
   "அந்த பக்கம் கொஞ்ச நாள் நான் இருந்தேன்"
   "அப்படியா?"
   "என் தம்பியும் அங்க மார்த்தாண்டத்தில இருந்தான்..."
   "ம்"
   "ஒரு இரண்டு நாள் சேர்ந்தாற்போல் லீவ் கிடைத்தது.. ஆபீஸ் ஜீப் எடுத்துண்டு பேச்சிப் பாறை ....பெருஞ்சாணி டேம்....திப்பரப்பு ஃபால்ஸ்...
திருவெட்டாறு என்று சுற்றினேன்...”
  இதிலென்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்பது போல் பார்த்தார் வரதன்.
   ”அப்புறம் மார்த்தாண்டத்தில் தம்பியைப் போய் பார்க்கலாமென்று தோன்றியது..  செல்ஃப் ட்ரைவிங் தான்!”
  “தம்பியைப் பார்த்தீங்களா?”
   “ அந்த பக்கமெல்லாம் ஏக வறட்சி...கோடை வெயில் வேற....எங்க பார்த்தாலும் பாலை வனம் போல பொட்டல் காடு...கொஞ்ச நேரம் முன்னால,
பசுமையா  நான் பார்த்த பச்சை பசேலென்ற வயல்வெளிகளும்..வெள்ளக் காடாய் சுழித்துக் கொண்டு ஓடும் ஆறும் எங்கேயோ காணாமல் போனது போல ஒரு பிரமை!...அட...ஒரே நாளில் இவ்வளவு வித்யாசமா என்று கோடையின் வெப்பம் தாளாமல் கண் எரிச்சலில் நான் ஜீப் ஓட்டிக் கொண்டு போகும் போது...”
    வரதன் பேசவில்லை...உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
    “ஒரே பொட்டல் காடா....தார் ரோடு தகதகவென மின்னியது...தார் எங்கே குழம்பாக உருகி விடுமோ என்ற பயம் வந்தது எனக்கு...எங்கு பார்த்தாலும்
வெட்ட வெளி...கொஞ்ச தூரத்தில் ஒரு குடிசை..எனக்குள் ஏதோ தோன்றியது..
அந்த குடிசை வாசலில் ஜீப்பை நிறுத்தினேன்..         
   உள்ளிருந்து தீனமாய் ஒரு குரல்...யாரோ உடம்பு முடியாமல் படுத்துக் கொண்டு, வலியின் வேதனை தாங்காமல் எழும் அழு குரல்...உள்ளேப் போய்ப்
பார்த்தேன்...ஒருவரும் இல்லை..ஆனால் சப்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது..
  வாசலுக்கு மறுபடியும் வந்தேன்..குடிசையின் வலது பக்கமிருந்து தான் அந்த சப்தம் வந்து கொண்டிருந்தது..போய் பார்த்தால் ஒரு வயோதிகர் அனத்திக் கொண்டிருந்தார்...”
“ம் அப்புறம்”
“ஜன நடமாட்டம் துளிக் கூட இல்லாத இடம்! அவருக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியும்? பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிட்டல் இருக்கா? காரில தான் வந்திருக்கேன்..உங்க சொந்தக் காரங்களைக் கூப்பிடணுமா என்று நான் கேட்ட ஆயிரம் கேள்விகளுக்கு ஒன்றே ஒன்று தான் அவர்  சொன்னார் ”
“கொஞ்சம் தண்ணீர் வேண்டும்”
   துரதிர்ஷ்டவசமாய் என்னுடைய வாட்டர் பாட்டிலில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது..அதை எடுத்துக் கொண்டு போய் கொடுத்தேன்..
ஆவலுடன் அந்த பாட்டிலை வாங்கினவர், தண்ணீரைக் குடிக்க  வாயருகே கொண்டு போனார்..பிறகு என்ன தோன்றியதோ..அந்த பாட்டிலில் இருந்த தண்ணீரின் பெரும் பகுதியை அவர் கட்டிலுக்கு கீழே வாடிக் கொண்டிருந்த வாழைக் கன்றுக்கு தெளித்தார்...இப்போது பாட்டிலில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது..அதை அவர் அருந்துவதற்க்குள் அவர் தலை சாய்ந்து விட்டது..”
   “ அடடா...”என்றார் வரதன்.
   “ அப்புறம் என்ன...பக்கத்து ஊருக்குப் போய் தகவல் சொல்லி சில ஆட்களைக் கூட்டி வந்து கோவிந்தாகொள்ளி போட்டு வந்து விட்டோம்..”
      அதற்கும் நாம் சாப்பிட்ட ஏத்தம் பழத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது போல பார்த்தார், வரதன்..
    “ வரதன்
... நீங்க சாப்பிட்டீங்களே..அந்த ஏத்தன் வாழைப் பழம் அன்னிக்கு அந்த களியக்கா விளைக்கும், மார்த்தாண்டத்திற்கும் நடுவில அந்த குடிசையில குற்றுயிராய் கிடந்த கிழவர், தன் தண்ணீர் தாகத்தை தியாகம் செய்து கீழே கிடந்த காய்ந்து போன வாழைக் கன்றுக்கு ஊற்றினாரே, அதனோட பொண்ணோட பொண்ணு தான் இந்த கன்னு!”
      .”.களியக்கா விளையில இருந்து ட்ரான்ஸ்பரில் வரும் போது அந்த வாழையோட கன்றையும் பிடிவாதமா நம்மூருக்கு கொண்டு வந்து நட்டேன்...எல்லாரும் கிண்டல் பண்ணினாங்க...  நம்மூரில அந்த வாழை வர்ரதுக்கு சான்சே இல்லைன்னு  அடிச்சுச் சொன்னாங்க..அது உண்மையும்  கூடத் தான்..ஆனா, அந்த புண்யாத்மாவோட கரம் பற்றிய நீரின் மகிமையோ என்னவோ இது அதிசயமா இங்கே நம்மூரில வளர ஆரம்பித்து விட்டது!”
      கீழே படிகளில் இறங்கி சற்று தள்ளி, குலைப் போட்ட தளதளவென இருந்த வாழை மரத்தை தடவிக் கொடுத்தேன் .....
      பக்கத்தில் வரதன்!

9 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை மிக அருமை. மனதைத்தொட்டகதை.
மிகவும் டச்சிங் ஆக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

எனக்கோர் ஏத்தம் பழம் தர முடியுமா?

அப்பாதுரை said...

படிச்சா இப்படி ஒரு கதை படிக்கணும். எழுதினா இதை எழுதணும்.
இருந்தா களியக்கா கிழவனின் மனம் வேண்டும்.

இராஜராஜேஸ்வரி said...

புண்யாத்மாவோட கரம் பற்றிய நீரின் மகிமையோ என்னவோ இது அதிசயமா இங்கே நம்மூரில வளர ஆரம்பித்து விட்டது ...

அருமையாக வளர்ந்து கனிகொடுத்த
வாழை நினைவில் நிறைந்தது ...

உஷா அன்பரசு said...

வாழையடி வாழையாக நினைவுகள் துளிர்க்கும்! நல்ல கதை!

கோமதி அரசு said...

தண்ணீரைக் குடிக்க வாயருகே கொண்டு போனார்..பிறகு என்ன தோன்றியதோ..அந்த பாட்டிலில் இருந்த தண்ணீரின் பெரும் பகுதியை அவர் கட்டிலுக்கு கீழே வாடிக் கொண்டிருந்த வாழைக் கன்றுக்கு தெளித்தார்...இப்போது பாட்டிலில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது..அதை அவர் அருந்துவதற்க்குள் அவர் தலை சாய்ந்து விட்டது..//

வாடியபயிரை கண்டபோது வாடிய வள்ளலார் போல இந்த களியக்கா.
நெஞ்சில் ஈரம் இன்னும் காயாத மனிதர்கள், அவர்களை வாழ்த்த தோன்றுகிறது.
நல்ல கதை அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

அந்த வயதானவரின் தியாகத்தால் முளைத்த மரம் அல்லவா! அதனால் தான் நன்றாக வளர்கிறது. அருமையான நடை...

ஹ ர ணி said...

அன்புள்ள...

மனதை இளக்கிவிட்ட கதை.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.. கருணை மழையை மனதில் பொழியும் கனிந்த பழம்.

G.M Balasubramaniam said...

நினைவலைகளில் நுன் உணர்வுகளைக் கிளரும் பதிவு. ரசித்தேன்.

நிலாமகள் said...

உயிர் போகும் தாகத்திலும் வைத்த கன்றுக்கு நீர் வார்த்த பெரியவர் சிலிர்க்கச் செய்கிறார் அவரின் ஆசிதான் வாழையடி வாழையாக உங்களுக்கு.

இவ்வுலகம் இனிது. மனிதர்கள் மிக இனியவர்கள் என அவ்வப்போது நினைவூட்டும் சம்பவங்கள்...