Friday, November 2, 2012

வேறென்ன கேட்பேன் ?

திருமோகன்ஜியும்,ரிஷபனும் என்னிடம் சொல்லும் போது
என்னுள் சின்னதாய் ஒரு அதிர்வு .
நம்மால் இது முடியுமா என்று வழக்கம்  போல ஒரு தயக்கம்
 என்னை  நீலம் போல்  தாக்க,நிலைகுலைந்தேன்.
பிறகு ஒரு வாறு சமாளித்துக் கொண்டு ஒத்துக் கொண்டேன்.
நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள கூப்பிடும் போது
ஒத்துழைப்பது தானே மரியாதை !)    
    
    சரி ... படிக்க ஆரம்பியுங்கள்...பிறகு தொடர்கிறேன் !
   ( இது திரு மோகன்ஜி பிலாக்கில் பிரசுரமான முதல் பகுதி .)
     http://vanavilmanithan.blogspot.in/2012/11/blog-post.html

உத்திஉத்தி கம்மங்கட்டு வூட்டப் பிரிச்சி கட்டு

காசுக்கு ரெண்டுகட்டு கருணைக் கிழங்குடா
தோல உரியடா தொண்டையில வையடா
வையடா வையடா வையடா....

சிவபாதம் பல்லைக் கடிச்சிக்கிட்டு உத்திஉத்தின்னு இறங்கினாப் போதும்..
நாலு பேரையாவது ஏறக் கட்டிட்டுத் தான் லைனையே தாண்டுவான். சடுகுடு ஆட்டந்தான்னு இல்லை, வாலிபால், கோக்கோ எதுவானாலும் அதில் அவன் சூரன் தான் சந்தேகமேயில்லை.
ஆனாலும் அவன் சகவாசம் கூடாது என ரொம்பவே ஆராமுது வீட்டில் கண்டிப்பு காண்பிப்பார்கள் .அவனும் அவன் மூஞ்சியும்..
மேலக் கவரைத் தெருவில் இன்று ஆராமுதுக்கு தெரிந்தவன் அவன் ஒருவன் தான். தெரிந்த மீதி பேரெல்லாம் எங்கெங்கோ.. அந்த விவரமெல்லாம் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் தெரியத்தானே போகிறது? சிவபாதத்தையே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

முப்பது வருஷம் தெரிஞ்சுக்காம இருந்தது ரெண்டு மணி நேரத்திலயா குடிமுழுகிப் போகும்.? ஏதோ கண்ணை மூடுமுன் தான் திரிந்த மண்ணை ஒரு தரம் பார்த்துடணும்னு ஒரு வெறி. அதுக்காக அதைப் பார்த்தப்பபின்னே ஆராமுது கண்ணை மூடிடுவான்னு நினைக்க வேண்டாம். ‘கிழட்டுப் பொணத்துக்கு பாம்பு காது,பானை வயிறு’ன்னு பங்கஜமே சர்டிபிகேட் இல்லே குடுத்திருக்கா? நோக்காடெல்லாம் இந்த குரங்கு மனசுக்குத்தான். உடம்பு துவஜஸ்தம்பம்தான் இன்னமும்.

ஆச்சு அணைக்கரை வந்தாச்சு.. பல்லாங்குழியாய் ரோடு எல்லாபுறமுமாய் பஸ்ஸோ ஆட்டி எடுத்தது.. செய்யறதையெல்லாம் செஞ்சி போட்டு தெகிரியமாய் இந்த ஊருக்கே வரையா படவான்னு உலுக்கிஉலுக்கிப் போட்டது ஆராமுதை..

என்னைப் பார்த்தா யாருக்கும் அடையாளம் தெரியுமா? ஆராமுதுக்கு வழியெங்கும் இந்தக் கேள்வி மாளாத யோசனையாய் நீண்டபடி வந்தது. இருபத்தினாலு வயசிருக்குமா அப்போ? தன் வயசுக்காரர்கள் ஆறேழு பேர் இருப்பமா? மீதியெல்லாம் இப்போ அமாவாசையானா எள்ளுஜலம் வாங்கிண்டு மாட்டின போட்டோலயோ, பேரபிள்ளையளோட பேருலயோ ஒட்டிண்டிருப்பா. அவாளுக்கெல்லாம் எள்ளுஜலம் ஒரு கேடு. ஒதிய மரத்துல தலைகீழா தொங்கட்டும்!

அப்படி யாரும் தன்னை தெரிஞ்சிண்டா தான் என்ன? அவமானப் படும்படி ஏதும் சொன்னாத்தான் என்ன? ஆம்படையாளும்,பிள்ளையும்,சொச்சத்துக்கு மருமகளும் செய்யாத அவமானமா? செத்திருக்கணும் அப்பவே செத்திருக்கணும்.. உசிரில்லே வெல்லக் கட்டி?

பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு. புழுதி பறக்க இருந்த பழைய பொட்டவெளியா? கட்டடமும், கடைகளும்,ஏ.டி.எம்முமா எல்லாமே மாறிப் போச்சு.. இன்னமும் அந்த மூத்திர நாத்தம் மட்டும் இல்லையின்னா அந்த இடம் பஸ் ஸ்டாண்டுன்னு தெரியாம போயிருக்கும். ஆராமுது ஆட்டோவைப் பிடித்துக் கொண்டார்.

“மேலக் கவரைத் தெருவுக்கு விடப்பா”.

ஏற இறங்க பார்த்த ஆட்டோக்காரன். ~அது என்னாதுங்க எனக்கு தெரியாத தெருவு. இந்த வெளங்காத ஊருல?

“பண்டாபீஸ் பக்கத்துல”.

“பண்டாபீஸா. அப்படின்னா?”

அங்கே போய்க் கொண்டிருந்த இன்னொரு பாம்புக் காதுக்கு இந்த சம்பாஷணம் விழுந்தது. “நம்ப மந்திரி தெருவத்தான் அப்போ மேலக் கவரைத் தெருன்னு சொல்லுவாங்க. சாரு அங்க யாரைப் பார்க்கணும்?” அருகில் வந்து நெற்றியில் உள்ளங்கையை சார்பாக்கி ஆட்டோவினுள் பார்த்தார்.

இவரண்டை சொல்லலாமா?..”சிவபாதம் சிவபாதம்னு’

அவருக்கு நீங்க என்னவாகனும்..

“கிட்டின சொந்தம்”

“நீங்க பார்த்தா பிராம்மணா போலிருக்கேளே?”

“அயல்லே கொண்டாங்கொடுத்தான்னு இருக்க முடியாதா?”

“அது சரி! நீ போப்பா” என்றவர் முனகிக்கொண்டே போனார்..’நல்ல கொண்டான் கொடுத்தான்’

தெருமுக்கிலேயே ஆராமுது இறங்கிக் கொண்டார். எல்லாமும் மாறிப் போச்சு.. எல்லாமுமே.. என் அவமானம் ஒண்ணைத் தவிர

ஓட்டு வீடுகள், தாயம்மாவின் குடிசை, தெருவின் ரெண்டு பக்கமும் இருந்த முனிகிபாலிட்டி தண்ணீர் குழாய்கள், வீடுகளை ஒட்டிக் கறுத்து தேங்கி நின்ற சாக்கடைகள் எதையும் காணோம். பிளாட்டுகள் வந்திருந்தன. சோடா பவுண்டன்.. நிலா பியூட்டி பார்லர்...

வந்தாச்சு . ரெண்டு மாடி வீடு . இதுவாய்த்தான் இருக்கணும். “சிவபாதம்!”

“யாருங்க அது.?” அவன் மனைவியாகத்தான் இருக்க வேணும்..

உள்ளே பேச்சுக் குரல்.. மீண்டும் பால்கனிக்கு அவள் வந்தாள். “மேல வாங்க. தைரியமா வாங்க.. இது கடிக்காது” என்றாள் நாயை வாஞ்சையோடு பார்த்தபடி.

கடிச்சாத்தான் கடிக்கட்டுமே என்று நினைத்துக் கொண்டார் ஆராமுது.

படுக்கையில் சாய்ந்திருந்த சிவபாதம் கண்களை சுருக்கிக் கொண்டார்.

“தெரியுதா?”

“வா ஆராமுது..” குரல் கம்மி கண்கள் கலங்கின சிவபாதத்துக்கு.

“எப்படி இவ்வளவு தூரம்?”

“அடடா! இவ்வளவு வருஷத்துக்கப்புறமும் என்னை அடையாளம் தெரிஞ்சுதா?”

“தெரியாம பின்னே? ஆறுமாசமா ரெண்டு பேருக்காய்த்தான் காத்திருக்கேன்.. அதுல நீ ஒண்ணு.. நீ வருவே நீ வருவேன்னு தாண்டா அந்தராத்மா அலறிக்கிட்டு கிடந்தது..” இருமலும் இரைப்புமாய் திணறியது சிவபாதத்தின் குரல். “இனிமே கவலை இல்லே. இன்னொருவன் தன்னால வந்துடுவான்”

“இன்னொருத்தானா? யாரது?” இளைத்த அவர் கரம்தொட நீண்டது ஆராமுதின் வலக்கை.

“தர்மராஜன்.. யம தர்மராஜன்..”

((தொடரும்)

இதன் அடுத்த பகுதியை பிரபல பதிவர் ரிஷபன்  வரும் புதனன்று அதாவது 07.11.2012 அன்று தொடர்வார்)

9 comments:

நிலாமகள் said...

த‌லைவாழை இலை விரித்தாயிற்று. முத‌ல் ப‌தார்த்த‌ம் ப‌ரிமாறிய‌ வேக‌த்தில் ப‌ற‌ந்த‌து வ‌யிற்றுள். பெரிய‌ இட‌த்து விருந்து. வேறென்ன‌ கேட்போம்?! வ‌ர‌வ‌ர‌ அனுப‌விக்க‌ வேண்டிய‌து தான்.

ஸ்ரீராம். said...

நல்ல ஐடியா. நல்ல உணர்வு முடிச்சு. தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல முயற்சி...

தொடர்கிறேன்... நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

மூன்று பேர் சேர்ந்து கதை எழுத நாங்கள் படிக்கத் தயார்....

சுவையாக ஆரம்பித்து இருக்கிறது. அடுத்த பகுதிகளைப் படிக்க ஆவலுடன்.

ADHI VENKAT said...

நிச்சயம் தொடர்கிறோம் சார்....ஜமாயுங்கள்.

அப்பாதுரை said...

ஒரே தலைப்பை பல இடங்களில் பார்த்தவுடன் என்னடா இது தமிழ்நாட்டுல நமக்குத் தெரியாம ஏதோ நடக்குது போலிருக்கேனு அதிர்ச்சி..

வித்தியாசமான முயற்சி. தொடரத் தூண்டுகிறது.

ஒரு சந்தேகம்: மூணு பதிவுலயும் பின்னூட்டம் போடணுமா இல்லே "நான் ஒரு தடவை சொன்னா மூணு தடவை சொன்ன மாதிரி"யா?

மோகன்ஜி said...

ஆஹா! என்ன அற்புதமான எழுத்து! கல்கண்டு பதிவு போங்கள்!

(சாரி! உங்கள் முந்தைய பதிவுக்கு போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கே தவறுதலாய் போட்டு விட்டேன்.. ஹி ஹி)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு புது முயற்சி.
வாழ்த்துகள்.

Anonymous said...

வணக்கம்,
ஆரணிய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி,(அண்ணா)

அழகான மொழிநடையில் நேர்த்தியான முறையில் கதைகரு பின்னப்பட்டுள்ளது,படிக்க அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள் பணியை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-