Friday, November 9, 2012

வேறென்ன கேட்பேன் .....(3)

மோகன்ஜி யின் கை வண்ணத்தில் முதல் சுற்று காண இங்கே சொடுக்கவும் :
http://vanavilmanithan.blogspot.in/2012/11/blog-post.html
ரிஷபனின் கை வண்ணத்தில் இரண்டாம் சுற்றுக்கு இங்கே சொடுக்கவும் :
http://rishaban57.blogspot.com/2012/11/2.html
இனி அடியேன் ............................................................
**********************************************
ஒடினார்.. ஓடிக் கொண்டே இருந்தார்..காலில் வலு இருக்கும் வரை ஓடினார்.


ஒடுகாலி என்று பெயர் கிடைத்தது..அது மட்டுமா? அத்துடன்….

அதை எப்படி சொல்வது?

முப்பது வருடம் ரணம் முள்கிரீடமாய் இவரை அழுத்த..

ஆராமுது என்றாலே………..

…………………………………………………………………………..ஆகி விட்டது..எல்லாமே போச்சு…யாரிடம் போய் என்ன கேட்பது? அப்படிக் கேட்டாலும் அந்த ஞானஸ்னானம் இவர் மீது

முப்பது வருடங்களாகப் படிந்த அந்த கறையை போக்கி விடுமா?

இங்கு வரவேண்டும் என்ற ஆவல் மனிதனை சுனாமியாக அலைக் கழித்தது..வந்தார்…இப்போது அதே மனமே ஏன் வந்தாய் என்று அவரைக் கேட்கிறது..

மேலும் பழைய புண்ணைக் கிளறிப் பார்ப்பதால் என்ன பயன் வந்து விடப் போகிறது? காலம் தான் காயத்தை ஆற்றும் என்று சொல்வது பொய் தானா?..

இல்லாவிட்டால் சீழ் பிடித்தது ரணமாகி இப்படி ஆகியிருக்குமா என்ன?

“ என்னப்பா... கனவா ?”

“ஒன்றுமில்லை” – இயலாமை ஒரு வெற்று சிரிப்பாய் வெளிப்பட்டது.

யார் பண்ணின தப்புக்கோ யாரோ ஒருவர் சிலுவை சுமப்பது இன்று நேற்றா நடக்கிறது?

எதற்காக இங்கு வந்தோம்?

ஏன் வந்தோம்?

ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டும் என்கிற ஆவலுடன் வந்தவருக்கு, வாய் ஏன் இப்படி மெளடீகம் பூண்டது?

ஒரு குற்றம் தெரிந்தோ தெரியாமலோ நடந்து விட்டது..குற்றம் நடந்தது முப்பது வருடங்கள் முன்பு…குற்றம் செய்தவரும், செய்யாத குற்றத்தை சூழ்நிலையால் ஏற்றுக் கொண்டவருமே இந்த முப்பது வருட முடிவின் எச்சம்!

தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட நீதி யன்றோ?

நான் தான் குற்றம் செய்தேன் என்று யாரிடம் காண்பிக்க வேண்டும் அல்லது வீண் பழியாய் என் மீது குற்றம் சுமத்தப் பட்டது என்று யாரிடம் நிரூபிக்க வேண்டும்?

இந்த முப்பது வருடங்கள் எல்லாவற்றையுமே முழுங்கி விட்டது..

எல்லாவற்றையுமே!

சிவபாதத்துடன் பேச வேண்டும் போல இருந்தது.

ஒன்றை கவனித்தார் ஆராமுதன்..சிவபாதத்திடம் பேசும் போது அவர் கண்கள் கொஞ்சம் குறுகிப் போய் தாழ்ந்திருந்தன.. இவர் கண்களை நேருக்கு நேராய் பார்க்க ஒரு கூச்சம்! அச்சம்!!

கட்டிலிலிருந்து எழுந்தார்.

“என்னப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்..”

“அதுக்கா அவ்ளவ் தூரத்திலிருந்து வந்தேன்..”

“அப்ப பேசு..” – சிவபாதம் எழுந்து உட்கார்ந்தார்..

“ பால்ய சினேகிதரைப் பார்த்ததும் இப்ப தாங்க எழுந்து உட்கார ஆரம்பித்திருக்கார்..” – சிவபாதம் மனைவி.

“அப்படியா “ – புன்னகைத்தார் ஆராமுதன்.

அந்த அம்மையார் முகத்திலும் முதலில் இருந்த கடுமை மறைந்து இதழ்க்கடையோரம் லேசாக புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது.

.” அந்த காலத்துல தமிழ் சொல்லித் தந்தாங்களே அந்த டீச்சர் பேர் என்ன?”

”துளசி டீச்சர்”

” இருக்காங்களா இன்னும்?”

“ உனக்கு ரொம்பவும் பேராசைப்பா..அவங்க நம்ம ஒண்ணாப்பு டீச்சர்..இன்னமும் உசிரோட இருப்பாங்களா என்ன?

நாமளே எப்படா போவோம்னு இருக்கோம்..அவங்க நம்மள விட இருபது வயசு ஜாஸ்தி..”

“ அந்த இங்க்லீஷ் வாத்தியார்..”

“ அடேங்கப்பா இன்னமும் ஞாபகம் இருக்கா உனக்கு?”

”இருக்காதா..அவரு சொன்னது இன்னமும் பசுமரத்தாணி போல மனசுல பதிஞ்சிகிட்டு இல்ல இருக்கு..க்ளாஸ் ரூம்ல பசங்கள க்ரூப்பா பிரிச்சி..”

“பிரிச்சி?”

“ஒருத்தன் சொல்லணும் RAMU IS A GOOD BOY னு. உடனே அடுத்தவன் ராமு NOUN ங்கணும்..உடனே டீச்சர் நெக்ஸ்ட் என்று சொல்ல அடுத்தவன் IS VERB என்று சொல்லணும்.அவன் முழிச்சா உடனே அடுத்தவன் அதை சொல்லணும்..அப்புறம் முழிச்சவன் சுவற்றோட சுவரா நாற்காலி மாதிரி நிற்க, சரியா சொன்னவன் அவன் தொடையில உட்காரணும்..ஒரு தடவை நீ தப்பா சொல்ல, நான் கூட உன் தொடைல உட்கார்ந்திருக்கேன்”

“அப்பவுமா?” – தன்னை மீறி வந்து விட்டது வார்த்தை  ஆராமுதனுக்கு.

கனத்த மெளனம்.

வார்த்தைகள் வீச்சரிவாளாகக் கிளம்பி இதயத்தை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டிருக்க வேண்டும்.

சிவபாதத்திற்கு முகம் செத்து விட்டது ஒரு கணம்.

ஒரு கணம் தான்..

அடுத்த கணம் ஆராமுதன் சூழ் நிலையை மாற்றி விட்டார்..

“ அத்த வுடுப்பா…அந்த ஜோக் ஞாபகம் இருக்கா..பாத்ரூம் போன ஹெச்.எம் ஐ ரூமைப் பூட்டி நாம ’கேரா’ பண்ணினோமே .

அன்னிக்கு கூடஸ்கூல் லீவ் விட்டாங்களே…”

சின்னஞ்சிறு குழந்தை போல விழுந்து,விழுந்து சிரிக்க ஆரம்பித்தார், சிவபாதம்.

சிரிப்பலைகள் பெருகி, சூழ் நிலை மிகமிக லேசாக, இப்போது ஆராமுதனும் விழுந்து, விழுந்து சிரிக்க…

”….இப்ப தாங்க இவரு முகத்துல முப்பது வருஷத்துக்குப்பறமா இப்படி ஒரு சிரிப்பு பார்க்கறேன்.. ”

கண்களில் நன்றியுடன் சிவபாதம் மனைவி..

அதற்கும் சிரித்தார் ஆராமுதன்…

தொடர்ந்து சிரித்தார் சிவபாதம்..

அந்த சிரிப்பு, கடந்த முப்பது வருடங்களாக அரித்துக் கொண்டிருந்த குற்ற உணர்ச்சியையும், அதற்கு பரிகாரம் தேட வந்தவரின் குற்றமற்ற உணர்ச்சியையும் ஒரு கணம் அந்த ஒரே கணத்தில் கரைத்து விட,

“ ஐயா, அடிக்கடி வாங்க… நீங்க வந்தா இவரு இன்னும் கொஞ்ச நா உயிரோட இருப்பாரு..’

கையெடுத்துக் கும்பிட்டார், சிவபாதம் மனைவி..

“ அட நீங்க வேற.. நாங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் இருப்போமாக்கும்…அதுவும் ஆரோக்யமா…”

சொல்லும் போதே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது ஆராமுதனுக்கு…அதன் தொடர்ச்சியாய் சிவபாதத்திற்கும் ஒட்டிக் கொள்ள…இப்போது சிரிப்பு என்ற ஒன்றை இத்தனை நாளும் மறந்திருந்த அவர் மனைவியும் லேசாய் சிரிக்க ஆரம்பிக்க..

நெடுங்காலமாய் நெஞ்சிலே கர்ப்பத்தை சுமந்தவர்களின்

அவஸ்தை நீங்கி, ஒரே நேர்க் கோட்டுப் பாதையில் இருவர் கண்களும் நேருக்கு நேராய் பாசத்துடன் பார்க்க ஆரம்பித்தன, அப்போது!

                                                                                                                       (தொடரும்)  

அடுத்துத் தொடர்பவர் திரு மோகன் ஜி ...... 

29 comments:

sury siva said...//யார் பண்ணின தப்புக்கோ யாரோ ஒருவர் சிலுவை சுமப்பது இன்று நேற்றா நடக்கிறது?//

ஒரு தத்துவ அல்லது தியாசஃபிகல் நோக்குடன் இந்த வாசகத்தை அணுகினால், யார் பண்ணின‌
தப்புக்குக்காகவும் நாமோ அல்லது யாரோ இன்னொருவர் சிலுவை சுமப்பதில்லை.

ஆத்யாத்மிகம்...ஆதி பௌதிகம் ஆதி தைவிதம்

செய்த வினையிருக்க தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்...

என்பதை நினைவு கொண்டால், இந்த ஜன்மத்தில் நாம் துன்பத்திற்குக் காரணம் என்று இன்னொருவர்
மேலே பழி சுமத்துவதில் பயன் இல்லை.

எல்லாமே ஜன்மாந்தர பிரதி பந்தம் என்று நமது கிராமத்திலே ஒரு வாசகம் சொல்வார்கள்.

அடுத்து என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று பார்த்தேன்.

//எதற்காக இங்கு வந்தோம்?//

//ஏன் வந்தோம்? //

இந்தக்கேள்விகள் தான் அதற்கு ஆன்ஸர்.

எந்த ஜன்மத்திலே வாங்கிய கடனோ ? ஓவர் டிராஃப்டோ ?
அதை இப்ப தீர்க்க வேண்டாமா ??

அதான்யா வந்திருக்கொம்

சுப்பு தாத்தா
ஆஙகரை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்களின் 'முத்தாய்ப்பான' முதல் வருகைக்கு நன்றி சார்.

'ஹூயூமரா' எழுதக் கூடாதுன்னு ஆளாளுக்கு மிரட்டியதால்

கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் போல் ஆயிற்று !

திண்டுக்கல் தனபாலன் said...

காலம் எல்லாவற்றையும் முழுங்கி விடுகிறது... உண்மை...

தொடர்கிறேன்...

ஜீவி said...

இப்பத் தான் தோண்றது. பழியை ஏற்ற ஆராமுதனை படுத்த படுக்கையாக ஆக்கிவிட்டு, குற்றம் புரிந்த சிவபாதம் அவரைப் பார்க்க வருபவராக ஆக்கியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்குமோ என்று...

ரிஷபன் said...

சூப்பர் ஐடியா.. ஜீவி.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

sury siva said...


//இப்பத் தான் தோண்றது. பழியை ஏற்ற ஆராமுதனை படுத்த படுக்கையாக ஆக்கிவிட்டு, குற்றம் புரிந்த சிவபாதம் அவரைப் பார்க்க வருபவராக ஆக்கியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்குமோ என்று... //

மோஹன் ஜீ !! ஜீவாவுக்கும் ஒரு சான்ஸ் தாங்களேன் ப்ளீஸ்..!!!

மீனாட்சி பாட்டி.

raji said...

தொடர் நல்லா போறது

ஜீவி சார்! உங்க கமெண்டுக்கு கீழ like option இருந்துருந்தா நான் அதை கிளிக் பண்ணிருப்பேன் :-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திண்டுக்கல் தனபாலனுக்கு..

ஆம் தனபாலன்! காலம் எல்லாவற்றையும் முழுங்கித் தான் விடுகிறது!அது ஒரு மாமருந்து நம் அனைத்து நோய்கட்கும்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஜீவி சாருக்கு..அட இப்படி ஒரு கோணம் இருக்கா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Well said Rishaban!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சுப்பு தாத்தா சொன்னா அப்பீலே இல்ல...சுப்ரீம் கோர்ட்ல சொன்னா மாதிரி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராஜி மேம்..பரவாயில்லையே..ஃபேஸ்புக் மாதிரி பிலாக்லேயும் ‘லைக் போட
யாராவது சொல்லித் தாருங்களேன்..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//ஹூயூமரா' எழுதக் கூடாதுன்னு ஆளாளுக்கு மிரட்டியதால்

கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் போல் ஆயிற்று!//

ஏன் சார் வருத்தப் படறீங்க?

//ஓடினார்.. ஓடிக் கொண்டே இருந்தார்..காலில் வலு இருக்கும் வரை ஓடினார்.

ஒடுகாலி என்று பெயர் கிடைத்தது.//

//அடுத்துத் தொடர்பவர் திரு மோகன் ஜி//

இந்த ரெண்டு வரி போறாதா மூவார் முத்து சார்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாணாம் சுந்தர்ஜி..எங்கிருந்தோ எதுக்கோ லிங்க் பண்றீங்களே....
வாணாம்... நா அளுதுடுவேன்!

அப்பாதுரை said...

brilliant ஜீவி!

Geetha Sambasivam said...

அருமையாகக் கொண்டு போயிருக்கீங்க. ஜீவி சாரின் கருத்தும் பிரமாதம். அடுத்து யார், ஜீவி சாரா? மோகன் ஜியா? காத்திருக்கேன். குற்றமே செய்யாத ஆராமுது படுக்கையில் கிடக்கிறாப்போல் காட்டி இருந்தால், அவர் மனைவி,மக்கள் அவரை வெறுப்பதற்கும் காரணம் காட்டி இருக்கலாம். அந்தச் சமயம் சிவபாதம் வந்து உண்மையை ஒப்புக்கொள்வதன் மூலம் இழந்த கெளரவம் மீண்டு வரலாம்.

ஆனால் யோசித்தால் கொஞ்சம் சினிமாத்தனமா இருக்கே! இல்லையா? :)))))))

meenakshi said...


/ஜீவி சாரின் கருத்தும் பிரமாதம். அடுத்து யார், ஜீவி சாரா? மோகன் ஜியா? காத்திருக்கேன்//

பேஷ் ! பேஷ் !! போற போக்கைப் பாத்தா ஜீவி சார் ஏர் டெல் சூபர் ஸ்டோரி டெல்லர் வைல்டு
கார்டுலே ஃபர்ஸ்ட் வந்துடுவார் போல இருக்கே !!!

என்ன இருந்தாலும், ஜீவி ஸாரே !!
அஜித் மாதிரி நீங்களும் அதிருஷ்ட சாலி தான்.

அது சரி. ஆராவமுது அப்படின்னு பேர வச்சுண்டு
ஆறாத ரணங்களை நெஞ்சிலே வச்சுக்கலாமோ !!

meenachi paatti

ஜீவி said...

//குற்றமே செய்யாத ஆராமுது //

குற்றமே செய்யாத ஆராமுது இல்லை; சந்தர்ப வசத்தால் குற்றத்தை சுமந்த ஆராமுது; சுமந்தும் நண்பனுக்காக வாய் மூடி மெளனியாக இருந்த ஆராமுது.

//ஆனால் யோசித்தால் கொஞ்சம் சினிமாத்தனமா இருக்கே! இல்லையா? :))))))) //

இல்லை; இது தான் யதார்த்தம்.
இப்படியான நல்லவர்கள் தாம்
நடப்பு வாழ்க்கையில் மேலும் மேலும் துன்பங்களைச் சுமப்பவர்களாக இருக்கிறார்கள். தங்களைப் போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று நம்புவதே அவர்களின் துன்பத்திற்குக் காரணம்.

வாழ்க்கை அவர்களின் நல்ல எண்ணங்களுக்கு அனுசரணையாக இல்லாமலிருப்பதும் சேர்ந்து போகவே அவர்களின் நல்ல செயல்கள் செல்லாக் காசாகி அலமந்து அவதிக்குள்ளாகிறார்கள். அந்த நேரத்தும் தங்களிடம் படிந்து சுபாவமாகவே போயிருக்கும் தன்மையை இழக்கத் தயாரில்லாமல் இருக்கிறார்கள்; அல்லது தெரியாமல் இருக்கிறார்கள்.

கேட்டால், "என்னம்மோம்மா, எங்காலம் இப்படியே போச்சு" என்பார்கள்.

"அதான்; அனுபவப்பட்டீங்கள்லே; அப்பனாச்சும் தெரிய வேண்டாமா?" என்றால், ஒரு அசட்டுச் சிரிப்புடன்,
"தெரிலியே! இப்படியே பட்டுப் பட்டுப் பழகிப் போயிடுச்சு. இனிமே பதுசாவா தெரிஞ்சிக்க முடியும்?" என்பார்கள்.

சுட்ட துன்பம் நெஞ்சில் எரிச்சல் கூட கொடுக்காதளவுக்கு பட்டுப் பட்டு சுரணையற்றுப் போய்விட்டது.

சத்யசோதனைகள், சோதனைக்கு ள்ளாகியிருக்கும் காலமிது.

உங்களுக்குத் தெரியாததில்லை, கீதாம்மா. இப்படி எத்தனை நல்ல ஆத்மாக்களைப் பார்த்திருப்பீர்கள்?..

சென்ற தலைமுறை, தன் அடையாளத்தின் எச்சங்களை இவர்களிடம் தான் வைத்திருக்கிறது.

ஒரு சின்ன டப்பாவில் அன்றைய காலணாக்களையும், பிந்தைய நயா பைசாக்களையும் போட்டு வைத்திருக்கிறேன்.

'சென்ற காலம் மீளாதினி' என்பார்கள். எப்பவாவது அவற்றை எடுத்துப் பார்க்கும் பொழுது மீளும் அதிசய உண்மையும் என்னில் நிகழும். அப்பா, தாத்தா கையெழுத்துப் போட்டு எழுதிய நைந்து போன கடிதங்களைப் பெட்டிப் பேழையிலிருந்து எடுத்துப் படிக்கிற மாதிரி..

Geetha Sambasivam said...

//வாழ்க்கை அவர்களின் நல்ல எண்ணங்களுக்கு அனுசரணையாக இல்லாமலிருப்பதும் சேர்ந்து போகவே அவர்களின் நல்ல செயல்கள் செல்லாக் காசாகி அலமந்து அவதிக்குள்ளாகிறார்கள். அந்த நேரத்தும் தங்களிடம் படிந்து சுபாவமாகவே போயிருக்கும் தன்மையை இழக்கத் தயாரில்லாமல் இருக்கிறார்கள்; அல்லது தெரியாமல் இருக்கிறார்கள்.

கேட்டால், "என்னம்மோம்மா, எங்காலம் இப்படியே போச்சு" என்பார்கள்.//

குட்டக் குட்டக் குனிந்தவர்களில் எங்க அம்மாவும் ஒருத்தி; ஒரு விதத்தில் நானும் அப்படி இருந்திருக்கேன். தெரியாமல்னு சொல்ல முடியாது. தெரிஞ்சே தான். அந்த அளவுக்குக் கீழே இறங்க மனம் ஒப்பாது. ஆனாலும் அது தப்பு தான். வாய் திறந்து சொல்ல வேண்டிய சமயத்தில் சொல்லியே ஆகணும்.

Matangi Mawley said...

Story turning out to be a very interesting one...!
Jeevi sir-- great take... :)

அப்பாதுரை said...

ஜீவி சார் தயவுல sidebar story ஒண்ணு ஓடுதே?

Geetha Sambasivam said...

கலக்குங்க அப்பாதுரை.

அப்பாதுரை said...

தொடரும்னு சொன்னீங்களே தவிர எப்போனு சொல்லாம.. செம கில்லாடி மூவார் நீங்க.

நிலாமகள் said...

'ஹூயூமரா' எழுதக் கூடாதுன்னு ஆளாளுக்கு மிரட்டியதால்

கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் போல் ஆயிற்று !

கட்டுப்'பாடு'?

கனத்துப் போய்க் கிடக்கும் மனசை சற்றே தளர்த்தி விடும் பணியை அபாரமாய் செய்திருக்கிறீர்கள்.

ஜீவி said...

@ரிஷபன்

//சூப்பர் ஐடியா.. ஜீவி.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..//

ரிஷபன் சார்! ரொம்ப பிடிச்சது சிறுகதையாய் 'கனவும் காட்சியும்' பெயரில் என் தளத்தில்.

@ 'ஆரண்யநிவாஸ்' ஆர்.ராமமூர்த்தி

//அட, இப்படி ஒரு கோணம் இருக்கா.//

அப்படியான கோணம் கதையாய்.

கதம்ப உணர்வுகள் said...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன் இராமமூர்த்தி சார்...

அருமையான தொடர்ச்சி சார்….. தொடக்கமும் மிக அருமை…. எவ்ளவு ஓடினாலும் நம்மைவிட்டு நாம் விலகமுடியாதே… நம் பழி அவமானங்கள் மட்டும் நம்முடனே காலம் வரை ஒட்டிக்கொண்டு… மனுஷ குணம் இருக்கே.. அது ரொம்ப நல்லதை, நல்லது செய்வோரை நினைவு வெச்சுக்கும் கொஞ்ச நாளைக்கு… அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி நாளாவட்டத்தில் காலப்போக்கில் மறந்தும் போகும்… ஆனா நமக்கு ஒரு கெடுதல் நடந்ததுன்னு வெச்சுக்கோங்கோ…. அது மட்டும் என்னிக்கும் நம்ம மனசுல ஜம்முனு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக்கும்… நம் அனுமதி இல்லாமலேயே நம்மை தொந்திரவு செய்துட்டே இருக்கும்.. இப்படி பண்ணிட்டானே பாவி என்று சபிச்சுக்கொட்டிட்டு இருக்கும்… அந்த எண்ணங்கள் எல்லாம் பந்து போல சுருண்டுக்கொண்டே இருக்கும் நெருப்பை உமிழ சந்தர்ப்பம் கிடைக்க காத்துக்கிட்டு இருக்கும்… வயசாகும்…. நடை தளரும்… உடல் ஆரோக்கியம் சீர்கெடும்… ஆனால் மனதில் இருக்கும் அவமான உணர்ச்சி மட்டும் நாளுக்கு நாள் புதுப்பெண் போல கலையாத உடைபோல தெளிந்த நீரா மனசுல தேங்கி நிக்கும்… ஆராமுது சாதாரண சராசரி மனுஷர் தானே… அவர் என்ன காந்தியா தனக்கு கிடைக்கும் அவப்பெயரும் அவமானத்தையும் சட்டுனு துடைச்சுப்போட்டுட்டு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்க? அதுக்கெல்லாம் மனசு ரொம்பவே பக்குவப்படனும்… அந்த பக்குவம் மனுஷாளுக்கு இல்லை என்பதால் தானோ என்னவோ காலம் அந்த பொறுப்பை எடுத்துக்கிட்டு மனிதனுக்கு அதை விட சிறப்புகளோ அல்லது அதை விட கேடுகளோ அதிகம் கொடுத்து அந்த அவமானத்தை மறைக்கவோ மறக்கவோ செய்கிறது…. ஆனால் ஆராமுது மனசுல காலம் செய்த எந்த தகிடுதத்தமும் பலிக்கல… இன்னமும் அந்த அவஸ்தைகளை நெருஞ்சிமுள்ளா மனசுல குத்திண்டு இருக்க இதற்கு மேலே நடந்த அவமானங்கள் (பிள்ளையும் மருமகளும் மனைவியும்) இந்த அவமானத்தை இடம்மாற்றலையே.. மறக்கவும் செய்யலையே… மாறா தேடிட்டு வர வெச்சதே….

கதம்ப உணர்வுகள் said...

அருமையான உவமை சார்… எந்த ஞானஸ்தானம் இவரோட முப்பது வருட கறையை நீக்கப்போறதா என்ன? இழப்பை தாங்கிக்கலாம். ஆனால் பழியை? செய்யாத குற்றத்திற்காக ஏற்கும் சிலுவையை? நாம என்ன ஏசுவா? மனிதர்கள் செய்யும் தவறுகளுக்காக தேவன் தான் சிலுவை சுமக்கமுடியும்… மனுஷா சுமக்கமுடியுமா இன்னொருத்தர் குற்றத்தை நாம சுமக்கமுடியுமா என்ன? ஆராமுது சுமந்திருக்காரே… அந்த சுமை அழுத்த அழுத்த அவர் மனதின் பாரம் முப்பது வருஷம் தாங்கிண்டு இருந்திருக்கே…. முப்பது வருஷம் கழிச்சு நியாயம் கேட்க வந்தாரா? இல்ல ஏண்டா இப்படி பண்ணிட்டேன்னு வெறியோடு சண்டை போட வந்தாரா? இது அவருக்கே தெரியல.. ஏதோ ஒரு உத்வேகத்துல கிளம்பி சிவபாதத்தை பார்க்க தேடிண்டு வந்தாலும்… நட்பு எத்தனை மகத்தான ஒன்னு பார்த்தீங்களா?? கஷ்டம் கொடுத்தவன் படுக்கையில…. என்னை இப்படி பண்ணிட்டியேடா நான் எத்தனை துன்பங்கள் பட்டேன்.. முப்பது வருஷமா இந்த அவமானத்தை சுமந்துக்கிட்டு திரிஞ்சேனே அப்டின்னு கேட்கத்தோணினாலும் கேட்க முன் வர்லையே… அதை விட உயர்வா தானே இந்த ஆராமுதுவோட நடவடிக்கைகள் அமைந்துவிட்டது?

மலரும் நினைவுகளா படிச்சப்ப நடந்ததை அசைபோட்டதை ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி சார் நீங்க உங்க சான்சை மிக அருமையா பயன்படுத்திக்கிட்டீங்க. எப்படின்னு சொல்லவா? உங்களுக்கு ஆசிரியர் பணி மிக பிடித்தமான ஒன்று… இந்த தொடர்ல பழைய நிகழ்வுகளை அசைபோடும்படி அமைக்கும்போது மிக அழகாக அட்டகாசமா துளசி டீச்சர்ப்பற்றி, இங்கிலீஷ் ஆசிரியர்ப்பற்றி அவர்கள் பாடம் நடத்திச்சென்றவிதம் பற்றி.. ராமு இஸ் எ குட் பாய்.. ராமு நௌன் அப்படின்னு சொல்லனும். தப்பா சொன்னால் அவன்மடில போய் உட்காரணும்.. ( மிக ரசித்தேன் சார் நான் பள்ளிக்கூட நிக்ழ்வுகளை இருவரும் அசைபோடுவது போல சிறப்பாக உங்க ஸ்டைல் வரிகளை அமைத்ததை) நானு கூட உட்கார்ந்தேனே… என்று சிவபாதம் சொல்ல….அப்பவுமா… இடைச்செருகலானா கத்திச்செருகும் ஆராமுதுவின் வார்த்தைகள் அருமை…. அந்த வார்த்தைகள் சட்டுனு சிவபாதத்தை சுடவே முகம் சுருங்கிப்போகவே அதைக்கூட காணப்பொறுக்காத நட்பு தன் அவமானத்தை எல்லாம் ஒரு பக்கம் தூக்கி போட்டுட்டு உடனே தன் நட்பை சிரிக்கவைக்க முயலுகிறது பாருங்கோ…இப்படி ஒரு நட்பு கிடைக்க என்ன தவம் செய்யனும்னு யோசிக்கத்தோணுது சார்….

கதம்ப உணர்வுகள் said...

தன் அவமானத்துக்கு காரணமானவனை கேள்வி கேட்க வந்த இடத்தில் அவமானம் செய்தவனா தன் நண்பனை காண இயலாமல் தன் நட்பையே காணும்படி அமைத்த கதை மிக சிறப்பு சார்….
முப்பது வருஷம் தேங்கிக்கிடந்த கனத்தை நிமிடத்தில் துரத்திவிட்டு அந்த க்ஷணத்தில் விஸ்வரூபம் எடுத்த விஷ்ணுவைப்போல ஆராமுதுவைக்காண முடிகிறது….
அவமானப்பட்டவன் பாதிக்கப்பட்டவன் அவமானப்படுத்தியவனை தன்னுடைய இந்நிலைக்கு காரணமானவனை அவன் மனதில் இருக்கும் குற்றத்தைக்களைய தானோ முப்பது வருடம் கழித்து வந்தானோ இந்த கண்ணபெருமான் போல?


சிவபாதத்தின் மனசுல இருந்த கசடு….
ஆராமுது மனசுல இருந்த வடு…
நட்பின் மேன்மையை புரிஞ்சுண்ட மண்டு (சிவபாதம் மனைவி)
எல்லோருமே அந்த நிமிடம் அங்கே மனபாரத்தை இறக்கிவைக்க… சூல் கொண்ட வயிற்றின் கனம் சட்டென இறக்கிவைத்த கனத்தின் சந்தோஷத்தை அனுபவிக்கும்போது வாசிக்கும் எங்களுக்கும் அட மனசு இத்தனை ரிலாக்ஸ் ஆகிறதே எப்படி அது?
ஹாஸ்யமாக எழுதி எல்லோரையும் சிரிக்கவைப்பது தான் என்னோட நோக்கம்னு வைராக்கியமா இருக்கும் மனிதரை இப்படிக்கூட எழுதி அழவைக்கமுடியுமான்னு யோசிக்கவெச்சுட்டீங்களே சார்….
எப்போதும் போல குற்றம் செய்தவன் தன் குற்றத்தைச்சொல்லி மன்னிப்பு கேட்க பழி சுமந்தவனைத்தேடி போவது போல அமைக்காமல் கதையை வித்தியாசமாக…. செய்யாத குற்றத்தை முப்பது வருடங்கள் சுமந்து அந்த வலியின் கனத்தை இறக்கிவைக்க வெறியோடு தேடி வருபவராக ஆராமுது கேரக்டர் அமைத்து…. வந்த இடத்தில் எத்தனை சௌந்தர்யமாக நட்பினை உயர்வுப்படுத்தும் விதமாக… எத்தனை துன்பங்கள் , எத்தனை அவமானங்கள், எத்தனை குற்றங்கள் செய்தவனாயினும்…… இவன் என் நண்பனாயிருந்தான் ஒரு காலத்தில் என்ற அந்த நினைவே…. குற்றம் செய்தவனின் மனதிலுள்ள குற்றத்தையும் கரையவைத்து….. அவமானத்தின் வலியை வடுவாய் சுமந்தவன் மூலமே இதற்கு ஒரு தீர்வினைச்சொல்லவைத்த வித்தியாசமான முயற்சி….
முதல் பாகத்தில் மோகன் ஜி பதறவைக்க….
இரண்டாம் பாகத்தில் ரிஷபன் துடிக்கவைத்த இதயத்தை சமாதானப்படுத்த…..
மூன்றாம் பாகத்தில் சமாதானப்படுத்திய இதயத்தில் பனியின் ஊற்றாய் கரையவைத்தது…. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மிக மிக அருமை… அட ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர் இல்லை என்று இப்படியா அசத்துவீங்கப்பா?
முதல் பகுதியில் தொடங்கி…. அதரகளப்படுத்திய மோகன் ஜீ யின் அத்தனை கேள்விகளையும் சரியான பதில் தருவார் ரிஷபன் என்று எல்லோரும் ஆர்வமுடன் காத்திருக்க… ரிஷபன் எளிய வரிகளில் எல்லோரையும் இப்படி இருக்குமா அப்படி இருக்குமான்னு நுணுக்கமாக விஷயங்களை புகுத்தி இன்னும் சஸ்பென்சை கூட்டி விட… ஹுஹும் வேற வழியே இல்ல நௌ பால் இஸ் இன் யுவர் கோர்ட்… அசத்திட்டீங்க ராமமூர்த்தி சார்… முதல் அடி சிக்ஸர் மோகன் ஜி அடிக்க… அதன் சுவாரஸ்யம் துளியும் குறைக்காது ரிஷபனும் தொடர… இனி என்ன செய்வாரோன்னு எல்லோரும் பரபரப்புடன் காத்திருக்கும்போது… அழகா வந்து தொடர் சிக்ஸர் அடிச்சுட்டீங்க ராமமூர்த்தி சார்….

ஏன் இவ்ளோ லேட்டா கமெண்ட் போட்டேன்னு கேட்டீங்கன்னா… வேலைப்பளு… அதோடு எல்லோரும் எழுதியப்பின்னர் கடைசில வந்து எழுதறதே இந்த லேட்கமர் மஞ்சுவோட பழக்கம் ஆகிவிட்டது. தாமதத்திற்கு மன்னியுங்கோப்பா…

அன்பு வாழ்த்துகள் ராமமூர்த்தி சார்…. ஹாஸ்யம் மட்டுமல்ல மனதை நெகிழவைக்கும்படியும் என்னால எழுதமுடியும்னு சாதிச்சுட்டீங்க….

கதம்ப உணர்வுகள் said...

ஏன் இவ்ளோ லேட்டா கமெண்ட் போட்டேன்னு கேட்டீங்கன்னா… வேலைப்பளு… அதோடு எல்லோரும் எழுதியப்பின்னர் கடைசில வந்து எழுதறதே இந்த லேட்கமர் மஞ்சுவோட பழக்கம் ஆகிவிட்டது. தாமதத்திற்கு மன்னியுங்கோப்பா…