Wednesday, May 2, 2012

ஆயிரம் பொற்காசுகள்......




“தருமி”
“யாரோ என்னை கூப்பிடறாங்க?”
“யாருமில்லை நான் தான்”
“நான் தான்னா?”
“நான் தான்னா நான் தான்”
“ஒண்ணும் தெரியலியே”
“இன்னுமா தெரியவில்லை..என்னைப் பார்”
“ஐயையோ..மறுபடியும் நீயா..வாணாம்பா ஆள வுடு”
“கவலைப் படாதே, தருமி..இந்த முறை எந்த ஏமாற்றமும் இல்லை..உனக்கு ஆயிரம்
பொற்காசுகள் வாங்கித் தருகிறேன்”
”யப்பா..ஆள வுடுப்பா.. நீ தானே..எனக்கு நல்லாத் தெரியுமே?”
“ உன்னை விடுவதாக இல்லை..உனக்கு ஆயிரம் காசு வாங்கித் தராமல் நான் ஓயப் போவதில்லை”
“ நீ ஓய மாட்டே...நான் ஓஞ்சுட்டேன்..உன்னை நான் ஏதாவது உதவி கேட்டேனா.. நீ யாக ஓடி வந்து எனக்கு ஏன் உபத்திரவம் தரே?”
“கவலைப் படாதே, தருமி..இந்த முறை யாம் ஏமாற மாட்டோம்..”
“ ஆமாம்..இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..ஆனா, கடைசீல, கழனிப் பானையில டொக்குன்னு கையை விட்டா மாதிரி நக்கீரனோ, பக்கீரனோ அவன்ட்ட நம்மள மாட்டி விட்டுடு..”
“தருமி, கவலைப் படாதே, நக்கீரன் ரிடயர்ட் ஆயிட்டான்..”
“அதனால, என்ன வேறோருத்தன்ட்ட என்னை மாட்டி விடப் போறே, அதானே?”
“எம்மை நம்பியவரை நட்டாற்றில் விடுவது நம் பழக்கம் அல்ல”
“ அப்ப பாழும் கிணற்றில் தள்ளித் தான், பழக்கம்..அப்படித்தானே? ஏன்யா வடிவேலுவை
பிடிச்ச பார்த்திபன் மாதிரி என்னை விடமாட்டேங்கிற? நான் என்ன பாவம் செய்தேன்”
“கவலைப் படாதே ..இம்முறை அந்த ஆயிரம் பொற்காசுகள் உனக்குத் தான்!”
”உன்ன..உன்ன நான் கேட்டேனா..ஏதோ காமா சோமான்னு குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன்..ஆள விடு அப்பனே”
“உன்னை விடுவதாக இல்ல..”
“அப்ப புடிச்சுக்கோ..?”
“இது மிகவும் எளிது..இந்த கல்வெட்டைப் பார்..இதில் ஐந்து..ஐந்தே வெண்பாக்கள் இருக்கின்றன..கேள்வி மிகவும் எளிது..அந்த ஐந்து வெண்பாக்களையும் யார் எழுதியது என்று சொன்னால் போதும்..ஆயிரம் பொற்காசுகள்..அதிலும் முதலில் வரும் நூறு நபர்களுக்கு முதல் பறவை ஊக்குவிப்புத் தொகையாக நூறு வெள்ளிக் குத்து விளக்குகள்..” பாண்டியன் பரிசு தருகிறான்..
“முதல் பறவை ஊக்குவிப்புத் தொகை..அப்படின்னா..”
“EARLY BIRD INCENTIVE”
”யப்பா..யப்பா போதும்பா..”
”பயப்படாதே, தருமி..அந்த கல்வெட்டில் உள்ள பாக்களைப் பார்..”
முதல் பாடல்
இச்சை பற்பல இனிது துய்ப்பினும்,
பச்சை மூங்கிலே பத்தியமாம், நெஞ்சே!
கச்சி ஏகம்ப நாதனைக் கண்டு கொண்டால்,
சொச்ச காலமும் சுகம் தரும் தானே!

”ஐயையோ முதல் பாடலே நெஞ்சைப் பொளக்குதே.. பட்டினத்தாரா..காளமேகமா...ஒரு எழவும் தெரியலேயே!”
”ஏய் கூச்சல் போடாதே, இரண்டாவது பாடலைப் பார்.”
இரண்டாவது பாடல்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின்,
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ,
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே..
”இதென்னடாது..இத்தனைக் குழப்பமா இருக்கு.. நம்ம டி. ராஜேந்தரோ அல்லது வலம்புரி ஜானோ தான் எழுதியிருக்கணும்”
“ தருமி, இதென்ன விளையாட்டு..அமைதியாக மூன்றாவது பாடலைப் பார்”
மூன்றாவது பாடல்
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்,
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறைந்த கோடியே..
“யப்பா..இந்த ஆட்டத்துக்கு நான் வல்லே..என்ன பாட்டு இது..அப்பப்பா.. நம்ம வாலி இல்ல
கண்ணதாசன் எழுதியிருப்பாரோ? அவரு தானே ஊர்...காய்..தேன் எல்லாம் வைச்சு பாட்டு எழுதறவரு”
“ பொறு தருமி.. நான்காம் பாடலைப் பார்”
நான்காவது பாடல்
மைத்தடங்கண் மார் தேவி வார் துகிலை யான் பிடிக்க
அற்று விழுந்த அருமணிகள் மற்றவற்றை
கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க்கே, என்னுயிரை
போக்கேனோ வெஞ்சமத்து புக்கு?”

”பாட புஸ்தகத்தில படிச்ச பாட்டு போல,இருக்கே..அரிச்சந்திர புராணமா இது?”
”உன் தலை! ஐந்தாம் பாடலைப் பார்”
ஐந்தாம் பாடல்
சண்டாளி தாடகை சூர்ப்பனகையைப் போல் வடிவு
கொண்டாளை பெண்டாகக் கொண்டாயே தொண்டா!
செருப்படி தான் உன் சேரன்ன செல்வம்..
நெருப்பில் வீழ்ந்திடுதல் நேர்.

”யப்பா..பாட்டுன்னா இது பாட்டு..எவனோ என்ன மாதிரி ஒருத்தன் அனுபவிச்சுப் பாடி இருக்கான்..அவன் நல்லா இருக்கணும்..”
” அப்ப தருமி...இந்த ஐந்து வெண்பாக்கள் எழுதியவர்களை நான் சொல்கிறேன்..போய் ஆயிரம் பொன் வாங்கிக் கொள், பாண்டியனிடமிருந்து”
“ யோவ்வ்...வ்வ்வ்வ்...... நான் உன்ன எதாவது கேட்டேனா..ஏன் என் வம்புக்கே வரே..ஆள விடுப்பா..வேண்டாம் பா..இந்த வெண்பா விளையாட்டுக்கு நான் வல்லேப்பா...”
” தருமி...தருமி..”
”என் பான்னு சொல்லி உன் பாவை காண்பித்து வாங்கிக் கட்டிக் கொண்டது போதும்பா..வேணடாமப்பா இப்ப வெண்பா”
கூப்பிட..கூப்பிட தருமி தலை தெறிக்க ஓடுகிறார்...
” அவன் போகட்டும்...சுடு பால் குடித்த பூனை அப்படித் தான் சுறுசுறுப்பாய் ஓடும்..உங்களுக்குத் தெரிந்தால், புலவர்களின் பெயர்களைச் சொல்லி, பாண்டியனிடம் ஆயிரம் பொற்காசுகள் வாங்கிக் கொள்ளுங்கள்..பகுள ப்ஞ்சமி அன்று
பொற்றாமரைக் குளத்துக்கு பாண்டியன் வருகிறான்..பரிசினை வெல்லுங்கள்..”

24 comments:

வெங்கட் நாகராஜ் said...

//ஏன்யா வடிவேலுவை
பிடிச்ச பார்த்திபன் மாதிரி//

என்ன ஒரு உதாரணம்... :)

வெண்பாக்கள் நன்று. ஆயிரம் பொற்காசுகள் எனக்கு வேண்டாம்.... :)))

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான நகைச்சுவை பகிர்வு. ;)

ரிஷபன் said...

5 ம் பாடல் ஔவையார்..

ரிஷபன் said...

இரண்டாவது பாடல் சிவ்வாக்கியர்..

அப்பாதுரை said...

4 பாரதியார்?

RAMA RAVI (RAMVI) said...

நல்லதொரு நகைச்சுவை பதிவு. படித்ததும் திருவிளையாடல் படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

vasan said...

ஐந்து க‌விதைக‌ளையும் ப‌ந்தியில் ப‌ரிமாறிய‌ வித‌ம் சூப்ப‌ர்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பாக்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இச்சை பற்பல இனிது துய்ப்பினும்,
பச்சை மூங்கிலே பத்தியமாம், நெஞ்சே!
கச்சி ஏகம்ப நாதனைக் கண்டு கொண்டால்,
சொச்ச காலமும் சுகம் தரும் தானே!

திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
தனிப்பாடல்

இராஜராஜேஸ்வரி said...

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின்,
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ,
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே..//

சிவவாக்கியர்

இராஜராஜேஸ்வரி said...

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்,
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறைந்த கோடியே..


சிவவாக்கியர் பாடல்

இராஜராஜேஸ்வரி said...

மைத்தடங்கண் மார் தேவி வார் துகிலை யான் பிடிக்க
அற்று விழுந்த அருமணிகள் மற்றவற்றை
கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க்கே, என்னுயிரை
போக்கேனோ வெஞ்சமத்து புக்கு?”//

மாணிக்கவாசகர் !

இராஜராஜேஸ்வரி said...

சண்டாளி தாடகை சூர்ப்பனகையைப் போல் வடிவு
கொண்டாளை பெண்டாகக் கொண்டாயே தொண்டா!
செருப்படி தான் உன் சேரன்ன செல்வம்..
நெருப்பில் வீழ்ந்திடுதல் நேர்.//

தமிழ் மூதாட்டி ஔவையார்,

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெங்கட் நாகராஜுக்கு:

இதை..இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்,ஸார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை.கோ.சாருக்கு:
மிக்க நன்றி ஐயா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபனுக்கு:
ரொம்ப சரி! பாக்கி பாடல்கள்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பாதுரைக்கு :

ஊஹூம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராம்விக்கு:

மிக்க நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாசன் சாருக்கு:

ரொம்ப நாளாச்சு சார், நீங்க வந்து!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராஜராஜேஸ்வரி மேடத்திற்கு,

1. தவறு.
2. சரி
3. சரி
4. தவறு
5 சரி

பாராட்டுக்கள்..ஐந்திற்கு மூன்று சரியான விடை அளித்துள்ளீர்கள்!

இராஜராஜேஸ்வரி said...

இச்சை பற்பல இனிது துய்ப்பினும்,
பச்சை மூங்கிலே பத்தியமாம், நெஞ்சே!
கச்சி ஏகம்ப நாதனைக் கண்டு கொண்டால்,
சொச்ச காலமும் சுகம் தரும் தானே!


பட்டினத்தார் ?????

இராஜராஜேஸ்வரி said...

4 ... பாரதி?????

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராஜ ராஜேஸ்வரி மேம்க்கு,
இரண்டுமே தவறு
இன்னும் கொஞ்சம் முயன்று தான் பாருங்களேன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சஸ்பென்ஸ் வேண்டாமா சரி .....போதும்!
மைத்தடங்கண் மாதேவி ...... பாடல் வில்லிபுத்துரார்
இச்சை பற்பல ...... அடியேன்