Tuesday, May 22, 2012

திருப்பராய்த்துறை விஜயம்!

திருப்பராய்த்துறை...எங்கள் வாழ்வோடு சம்பந்தப் பட்ட ஒரு கிராமம். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் மார்க்கத்தில் அடுத்த இருபத்தி இரண்டாம் கிலோ மீட்டரில் வந்து விடும் ஒரு அழகிய கிராமம். வழி நெடுக பச்சை பசேலென வயல்கள்..முத்தரச நல்லூர் என்ற ஊர் கடக்கும் போது, அந்த கால ஆட்களுக்கு ஆராதனா படம் ஞாபகம் வந்து விடும். அருகருகே ரயிலும், பஸ்ஸும் போகும் அழகே அழகு. ராஜேஸ் கன்னா மெளத் ஆர்கனில் ’மேர் ஸப்புனிக ஆயே கேது’ என்று காரில் கொட்டமடித்துக் கொண்டு உற்சாகம் கொப்பளிக்கப் பாடும் பாடல் இன்னமும் கண் முன்னே நிற்கிறது!
திருப்பளாத்துறை என்று தான் தாத்தா,பாட்டி, அம்மா,அம்பி மாமா எல்லாரும் அந்த ஊரை சொல்வார்கள்.அதனால் எங்களுக்கும் அது திருப்பளாத்துறை தான்.திருப்பளாத்துறை என்றவுடன்
தித்திப்பு ஞாபகம் வரும். அம்பி மாமா எப்போது எங்களைப் பார்க்க வந்தாலும், கையில் நிறைய மிட்டாய்களுடன் வருவார்.
கோடை விடுமுறை அன்று திருப்பளாத்துறை செல்வது என்றால் எங்களுக்கு மிகவும் இஷ்டம்.அம்மா தான் கூட்டிக் கொண்டு போவா. ஒரு தடவை இங்கு ஆங்கரையிலிருந்து போகும் போது, பஸ் கொள்ளிட ஆற்றைக் கடந்தது. அப்போது பஸ் பயணி ஒருவர் ‘ இந்த இடத்திற்கு கொள்ளிடம் என்று ஏன் பெயர் வந்தது எனக் கேட்க, நான்’ காவிரி பெருக்கெடுத்தால், கொள்ளும் இடம் கொள்ளிடம்’ என்று சொன்னேன்.அந்த கால கட்டத்தில் ‘கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை’ என்கிற பாடல் பிரபலம். அதில் ‘காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம்’ என்று ஒரு வரி வரும்.அதை டக்கென்று சொன்னதும் அவர் ‘பய கெட்டிக் காரன்’ என்று தட்டிக் கொடுத்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
ஆச்சு..அம்மாவுடன் திருப்பளாத்துறை வந்தாச்சு.அம்மா, பாட்டியுடன் கொஞ்ச நேரம் பேசி விட்டு சாயங்காலம் அண்ணா வந்து ஆங்கரைக்கு அம்மாவை கூட்டிக் கொண்டு போக, நானும் கிரியும் இங்கு இரண்டு நாள், சுந்தர பெரியம்மா அகத்தில் இரண்டு நாள் என்று இருந்தோம்.
இங்கு சாரதா நகரில், பாட்டி,அம்பி மாமா, ஜெயா சித்தி அங்கு சுந்தர பெரியப்பா, சுந்தர பெரியம்மா கிரிஜா அக்கா,ராமகிருஷ்ணன் .ஆங்கரை பாட்டி அளவுக்கு இந்த பாட்டி எங்களுக்கு பரிச்சயமில்லை.
அம்பி மாமா ஸ்கூல் ஹெச். எம். அந்த எலிமெண்ட்ரி ஸ்கூல் கோவில் உள்ளே இருக்கிறது.
சாரதா நகர் வீடு ரொம்ப சின்னது. வீடு முழுக்க ஈக்கள். கயிற்றில் வாத்தியார் படத்துக்கு க்யூவில் நிற்கும் ரசிகர்கள் போல், துணி உலர்த்தும் கயிற்றில் ஈக்கள் க்யூவில் நிற்கும்! எப்போதாவது ரயில் சத்தம் கேட்டால்,எங்களை பெரியவர்கள் தூக்கிக் கொள்வார்கள்.அந்த சின்ன சமையல் உள் ஜன்னல் வழியே ரயில் போவது ஜோராகத் தெரியும். மதியம் வெயில் தகிக்கும்.அப்போது நான் கொல்லைப் பக்கம் போய் அங்குள்ள வாழை மரத்தைக் கட்டிக் கொள்வேனாம்..எனக்கு ஞாபகம் இல்லை. எப்போதாவது மயிலும் வரும்.
ஆச்சு அடுத்த இரண்டு நாள் சுந்தர பெரியம்மா அகம். ராமகிருஷ்ணன் எங்களை விட ஐந்து வயது பெரியவன்..அப்புறம் அக்கா. இன்னமும் ஞாபகம் இருக்கிறது சிட......ர் (ஸ்ரீதர் என்பதை) என்று பெரியப்பா என்னை கூப்பிடுவது..இங்கிருந்து காவேரி பக்கம். அகண்ட காவேரி.போகும் போதே புளிய மரத்திலிருந்து புளியங்காய் அடித்து தின்போம். அப்புறம் பெரிய மாட்டுப் பண்ணை.
இவர்களகத்திலிருந்து சிவன் கோவில் பக்கம்.
சுந்தரப் பெரியம்மா வீட்டில் தான் கறைத்த மா தோசை என்பது உண்டு என்றே எங்களுக்கு தெரியும். அது வரை தோசை என்றால், மாவை அறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்..இது கொஞ்சம் பெரிய வீடு..வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை..
சாயங்காலம் ஆனால் கோவில் தான்.
என்ன அருமையான நாட்கள் அவை!
மறுபடியும் சின்னப் பையன்களாக மாறி விட மாட்டோமா?
அன்று ’டேய் ஸ்ரீதர்’ என்று ஆளுக்கு ஆள் கூப்பிடுவார்கள் செம எரிச்சலாய் இருக்கும். இன்று ’டேய் ஸ்ரீதர்’ என்று யாராவது நம்மை கூப்பிட மாட்டார்களா என்கிற ஏக்கம் ஜாஸ்தியாகி விட்டது. அப்படி வாத்சல்யத்துடன் கூப்பிடும் ஆட்கள் மிகமிகக் குறைவு..ஏனென்றால், இன்றைய கால கட்டத்தில், நாம் தான் பெரியவர்கள். நம்மை அப்படி யார் உரிமையுடன் ..ஆசையுடன் ..கூப்பிடப் போகிறார்கள் இனி?

19 comments:

ஜீவி said...

//எப்போதாவது ரயில் சத்தம் கேட்டால்,எங்களை பெரியவர்கள் தூக்கிக் கொள்வார்கள்.அந்த சின்ன சமையல் உள் ஜன்னல் வழியே ரயில் போவது ஜோராகத் தெரியும்.//

ஹையோ! எவ்வளவு கொள்ளை அழகான தூங்கும் நினைவுகள்!

cheena (சீனா) said...

அன்பின் ராமமூர்த்தி - மலரும் நினைவுகளா ..... அக்காலம் திரும்ப வராது ..... அவ்வப்போது அசை போட்டு ஆன்ந்திக்க வெண்டியது தான். அருமையான நேர்முக வர்ணனையாக - சுற்றுலா சென்று வந்த மாணவன் கவனத்துடன் எழுதும் கட்டுரையாக மலர்ந்தது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

பின் தொடர்பதற்காக இம்மறுமொழி

இராஜராஜேஸ்வரி said...

திருப்பளாத்துறை என்றவுடன்
தித்திப்பு ஞாபகம் வரும்

தித்திக்கும் மலரும் நினைவுகள்.. வாழ்த்துகள்..

கே. பி. ஜனா... said...

அந்தக் காலம் கண் முன் விரிகிறது! ஆசை போடுவதும் சுகமாய்த்தான் இருக்கிறது இல்லையா? ரசித்தேன்!

ஆராதனா பாடல்: 'மேரே சப்நே கி ராணி கப் ஆயேகி தூ?...' தமிழில் அப்படியே பாடுவதாக இருந்தால் 'என் சொப்பனத்தின் ராணி நீ எப்ப வருவே?' என்று அழகாய்ப் படலாம்.

கௌதமன் said...

//அன்று ’டேய் ஸ்ரீதர்’ என்று ஆளுக்கு ஆள் கூப்பிடுவார்கள் செம எரிச்சலாய் இருக்கும். இன்று ’டேய் ஸ்ரீதர்’ என்று யாராவது நம்மை கூப்பிட மாட்டார்களா என்கிற ஏக்கம் ஜாஸ்தியாகி விட்டது. அப்படி வாத்சல்யத்துடன் கூப்பிடும் ஆட்கள் மிகமிகக் குறைவு..ஏனென்றால், இன்றைய கால கட்டத்தில், நாம் தான் பெரியவர்கள். நம்மை அப்படி யார் உரிமையுடன் ..ஆசையுடன் ..கூப்பிடப் போகிறார்கள் இனி?//
உண்மை.

ரிஷபன் said...

’டேய் ஸ்ரீதர்’

ரிஷபன் said...

டக்கென்று சொன்னதும் அவர் ‘பய கெட்டிக் காரன்’ என்று தட்டிக் கொடுத்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

Yes.. You are smart

ரிஷபன் said...

வீடு முழுக்க ஈக்கள். கயிற்றில் வாத்தியார் படத்துக்கு க்யூவில் நிற்கும் ரசிகர்கள் போல், துணி உலர்த்தும் கயிற்றில் ஈக்கள் க்யூவில் நிற்கும்

Super observation

ரிஷபன் said...

மதியம் வெயில் தகிக்கும்.அப்போது நான் கொல்லைப் பக்கம் போய் அங்குள்ள வாழை மரத்தைக் கட்டிக் கொள்வேனாம்..எனக்கு ஞாபகம் இல்லை.

எப்போதாவது மயிலும் வரும்.

:)

பால கணேஷ் said...

நினைவுகளை பின்னோக்கிப் பார்த்து அசை போடுவதும் பகிர்ந்து கொள்வதும் வெகு ரஸமான விஷயம். திருப்பளாத்துறை நினைவுகள் அருமை. ஆராதனா பாடலையும் நினைவுபடுத்தியிருந்ததை ரசித்தேன்.

RVS said...

அசந்து போனேன்!! திருப்பராய்த்துறை பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று நினைக்கிறேன்.

ஈ எறும்புக்கும் வீட்டில் இடம் கொடுத்து வைத்த நாட்கள் அவை!!! :-)

வசந்தமுல்லை said...

சைக்கிள் கற்றுக்கொள்ள ஒரு கிழவியின் மேல் விழுந்து வாங்கி கட்டிக்கொண்ட திட்டுக்கள்!
வகுப்பில் பக்கத்து நண்பனிடம் பேசும்போது பறந்து வரும் வாத்தியாரின் சாக் பீஸ்!
போலீஸ் விளையாட்டு மைதான வேலியை சுற்றி வர பிடிக்காமல் சுவரில் உள்ள
ஒரு ஓட்டை வழியாக உள்ளே நுழையும்போது அந்தபக்கம் போலீசிடம்
மாட்டியது!!
ஆஹா !! இன்னும் என்னென்ன சொல்ல!!!!!!!!!

CS. Mohan Kumar said...

இந்த ஊர் பெயர் கேட்டாலே அங்கு நடந்த பஸ் விபத்தில் ரோடில் நின்ற ஏராள குழந்தைகள் இறந்த சம்பவம் தான் நினைவுக்கு வரும் :((

சிவகுமாரன் said...

அருமை.
முக்கொம்பு அருகிலேயே -- ராமகிருஷ்ண மடம், பசுமையான ஊர்கள் - அழகிய நினைவுகள்.
ஆனாலும் மோகன்குமார் சொல்லும் நிகழ்ச்சி மனதைப் பாடாய்ப் படுத்துகிறது

http://sivakumarankavithaikal.blogspot.in/2011/05/blog-post_19.html

நிலாமகள் said...

என்ன‌ சார் இப்ப‌டி வ‌ருத்த‌மாய் முடிச்சுட்டீங்க‌ ம‌ல‌ரும் நினைவுக‌ளின் சுக‌ந்த‌த்தை...? வ‌ரும் கால‌த்தில் பேர‌ப்பிள்ளைக‌ள் கூப்பிடுகையில் தான் பெய‌ர் வைத்த‌த‌ன் முழு தாத்ப‌ர்ய‌மே இனிக்கும்!உங்க‌ளை விட‌ பெரிய‌வா எல்லாம் குழ‌ந்தைக‌ளா உருமாறி வாய்நிறைய‌ கூப்பிட‌ காதுகுளிர‌ கேட்க‌த்தான் போறேள்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

எமது ஜன்மஸ்தலமான திருப்பராய்த்துறையைப் பற்றி அழகாய் எழுதியிருந்தீர்கள், ஐயா..நன்றி ! யாமும் சமீபத்தில்(எம் அண்ணனின் காரில்) அந்த ஊரைக் கடக்கநேர்ந்தபோது மெல்லியதாய் ஓர் அதிர்வு தோன்றியது...அருமையான ஊர்..இனிய எண்ணங்கள்...எனக்கும் அதைப் பற்றிய ஒரு பதிவு இடும் எண்ணம் உண்டு..

மோகன்ஜி said...

மூவார்! நான் திருச்சியில் பணிபுரிந்த சமயம் அடிக்கடி திருப்பராய்த்துறை கடந்து சென்றிருக்கிறேன். ஆராதனா காட்சியை நானும் நினைவு படுத்திக் கொள்வதுண்டு. அங்கு
ராமக்ரிஷ்ணாஸ்ரமம் போயிருக்கிறீர்களோ? அந்தஸ்தலத்து தேவாரம் ஞாபகம் இருக்கோ சாரே?

வெங்கட் நாகராஜ் said...

திருப்பராய்த்துறை - பராய்த்துறை நாதர் எழுந்தருளியிருக்கும் பாடல் பெற்ற சிவஸ்தலம். ஒவ்வொரு தமிழக வருகையின் போதும் அங்கே செல்வது எனக்கும் வழக்கம்... என்ன அருமையான, அமைதியான ஊர்....