Sunday, July 24, 2011

கர்ச்சீஃப் காதல்!!!!!!


மக்குப் பிளாஸ்திரிக்கு,
பக்கத்து வீட்டுப் பெண் பணிவுடன் எழுதிக் கொள்வது. நான் எங்கள் வீட்டுக் கொடியில் உலர்த்திய என்னுடைய கர்ச்சீஃப்பைக் காணவில்லை.உங்கள் வீட்டில் தான் யாரோ மறதியாக எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். திருப்பி அனுப்பவும்.
இப்படிக்கு,
அபீதா.
அன்புள்ள அபீத குஜாம்பா அவர்களுக்கு,
கர்ச்சீஃப்பா...யாரிடம் கேட்கிறீர்கள் கர்ச்சீஃப்.. பருத்தி பறித்து வந்தீரா? துணி நெய்து கொடுத்தீரா..?எதற்குக் கேட்கிறீர் கர்ச்சீஃப்? கப்சிப்!!
(பி.கு.: “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை செய்வதால் “மக்குப் பிளாஸ்த்திரி“ என்று என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ என்னைப் பற்றிய “பயோ டேட்டா”)
பெயர் : கணேஷ்.
உயரம் : ஆறு அடி ஒண்ணரை அங்குலம்.
தொழில் : மெடிக்கல் ரெப்.
சம்பளம் : கிட்டத் தட்ட ஆயிரத்து ஐநூறு!
( வாவ் என்று வாயைப் பிளக்காதீர்கள்!)
வயது : இருபத்தி எட்டு
குறிப்பு : இன்னும் திருமணம் ஆகவில்லை :(
அன்புடன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
உங்கள் காயலாங்கடை கட்டபொம்மன் வசனமெல்லாம் எனக்கு எதற்கு? நீங்கள் “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை பார்த்தால் எனக்கு என்ன? ”பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸி”ல் வேலை பார்த்தால் எனக்கு என்ன? எனக்கு தேவை என்னுடைய தொலைந்து போன கர்ச்சீஃப்! மரியாதையாய் கொடுத்து அனுப்பவும்!
பி.கு.: அபீதா என்று கெஜட்டில் பெயரை மாற்றி ஐந்து வருடங்களாகி விட்டது.இனியும் பழைய பெயரில் கூப்பிடாதீர்கள்...
விசும்பலுடன்,
அபீதா.
அன்பே அபீதா,
அழாதே! எனக்கு சத்தியமாக உன் பெயர் தெரியாது.உங்கள் வீட்டு வாண்டுப் பயல் தான் அவ்வாறு சொன்னான். நிற்க..எங்கள் வீட்டில் மேற்படி கர்ச்சீஃபை யாரும் மறந்து கூட எடுத்துக் கொண்டு வரவில்லை..திருட்டு குணம் எங்களுக்கு கிடையாது.
இப்படிக்கு,
கணேஷ்.
ஐயோ,
உங்களை யார் இப்போது திருடன் என்று சொன்னது? உங்கள் வீட்டில் எங்காவது தவறுதலாக விழுந்திருக்கும்..கொஞ்சம் தேடித் தான் பாருங்களேன்..ப்ளீஸ்..அன்பே..கின்பே என்று எழுதாதீர்கள்..அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..ஜாக்கிரதை!
எச்சரிக்கும்,
அபீதா.
நச்சரிக்கும் அபீதாவிற்கு,
உங்கள் கர்ச்சீஃப் எங்கு தொலைந்து போயிருக்கும் என்று எனக்குத் தெரியாது..எப்படியும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் (ஸாரி.. டாக்டர்களிடம் பழகி..
பழகி..எதற்கும் இருபத்தி நான்கு மணி நேரம் வாய்தா கொடுத்து பழக்கமாகி விட்டது!)கர்ச்சீஃபைத் தேடித் தருகிறேன். கவலை வேண்டாம்.அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..மன்னியிடம் சொல்லி விடுவேன் என்ற பயமுறுத்தல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.. நான் ஒன்றும் சின்ன பப்பா இல்லை!
வீரன்
கணேஷ்.
கணேஷ் என்ற வீரருக்கு,
உங்கள் பிரதாபத்தை எல்லாம் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்..எனக்கு என்னுடைய கர்ச்சீஃப் வந்தாக வேண்டும். அண்ணாவிடம் சொல்ல மாட்டேன்..சும்மா உங்களை பயமுறுத்தினேன்..அவ்வளவு தான்..
இப்படிக்கு,
அபீதா.
அபீதா அம்மையாருக்கு,
கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்....ச்சே!!! எப்பப் பார்த்தாலும் கர்ச்சீஃப் தானா? இவ்வளவு ’சீப்’பாக நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது. போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்துக் கொண்டு போனதில் மூக்கை சுவரில் இடித்துக் கொண்டு ரத்தம் வந்தது தான் மிச்சம்..ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்......சே!
இனி மருந்துக்குக் கூட உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்!
நஷ்ட ஈடு கோரும் நண்பன்,
கணேஷ்.
கணேஷ் ஸாருக்கு,
மூக்கிலிருந்து ரத்தம் வருகிறதா? சாரி..மன்னித்துக் கொள்ளுங்கள்..எவ்வளவு கஷ்டம்..ஏதாவது தொலைந்து போனால்,அது கிடைக்கும் வரை எனக்கு நிம்மதி இருக்காது.கடவாய் பல்லில் மாட்டிக் கொண்ட கடுகு துணுக்கை எடுக்க நாக்கு எவ்வளவு கஷ்டப் படுமோ, அப்படி மனம் கிடந்து அலை பாயும்...பாவம் என்னால் உங்களுக்குத் தான்
எவ்வளவு சிரமம்.
அழுது கொண்டே,
அபீதா.
அபீதா,
கண்டேன் கர்ச்சீஃப்பை! மறுபடியும் அழாதே.இதோ..இதோ...உன்னுடைய கர்ச்சீஃப்பினால் கண்ணை துடைத்துக் கொள்..இதெல்லாம் ஒரு சிரமமா? அது சரி..சார்..மோரெல்லாம் ஒரே தடபுடலா இருக்கு?
அன்பன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
கண்டு கொண்டேன் கர்ச்சீஃப்பை! ரொம்ப சந்தோஷம்..வேறு ஒன்று தொலைந்து போய் விட்டது. கண்டு பிடித்துத் தருகிறீர்களா?
குறும்புடன்,
அபீதா.
அம்மா பரதேவதை,
ஆளை விடு..வேறு வீட்டுக்கு குடி மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அப்பாவி கணேஷ்.
அப்பாவி கணேஷுக்கு,
ப்பூ...இது கூட தெரியவில்லையா..இத்துடன் என் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன்..
உங்கள் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு திருவானைக் காவல் ஜோஸ்யரிடம் போய்ப் பார்க்கவும். எல்லாம் நல்ல படியாக முடிந்தால், நீங்கள் வாடகையே கொடுக்க வேண்டாம், இனிமேல்!
வேறு வீட்டிற்கு குடி போகும் ஆசையை விட்டு விடுங்கள்..உங்கள் சம்பளம் முழுவதும் வாடகையாகவே எடுத்துக் கொண்டு விடுவார்கள்..ஜாக்கிரதை!
என்றும் உங்கள்,
அபீதா.
அபிதா கண்ணிற்கு,
கண்ணே! மக்கு பிளாஸ்திரி என்று மறுபடியும் சொல்லாமல் சொல்லி விட்டாய்..
பரவாயில்லை..ஜாதகம் கிடைத்தது.இதோ..இப்போதே ஜோஸ்யர் வீட்டிற்கு போய் விட்டு உன் அப்பாவைப் பார்க்கிறேன், என் அம்மாவோடு! வேறு வேலை?
கிளம்பி கொண்டேயிருக்கும்,
கணேஷ்.
( நான் எழுதிய அச்சில் வந்த முதல் சிறுகதை இது! நவம்பர் 1984 குங்குமம் இதழில் வெளி வந்தது)

17 comments:

இராஜராஜேஸ்வரி said...

மக்குப் பிளாஸ்திரியும், மடசாம்பிராணியும் இணைய வாழ்த்துக்கள்.

R. Gopi said...

நல்லா இருக்கு. கொஞ்சம் கொஞ்சம் எஸ் வி சேகர் நாடக பாணி

கௌதமன் said...

//அடடே..வாங்க..வாங்க...இந்த பதிவு எப்படி இருக்கு?//
நல்லா இருக்கு!

ஜீவி said...

படித்துக் கொண்டு வரும் பொழுதே, ஏதேது அந்தக் கால 'குமுதம்' கதை மாதிரி இருக்கிறதே என்று தோன்றியது. (இந்த மாதிரி கதைகளில் முறைப்புடன் விட்டேர்த்தியாக வெளிக்குக் காட்டிக் கொண்டு, ஞாபகமாக இன்னும் நெருங்குவதற்கு வேண்டிய தகவல்களை ஒருத்தொருக்கொருத்தர் தாராளமாக வழங்கிக் கொள்வதில் அக்கரை காட்டுவார்கள்) குறும்பும், கொட்டாட்டமும் இருக்குமிடத்தில் புன்முறுவலுக்கும் பஞ்சமில்லை. வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கர்சீஃப் காதல் கதை வேடிக்கையாக இருந்தது.
அச்சில் வந்த முதல்[இரவு]கதைக்குப்பாராட்டுக்கள்.

என் மீது ஏதோ பக்கத்துவீட்டு கர்ஃசீப்போ என்னவோ பறந்து வந்து விழுந்துள்ளது இப்போது. கடிதம் வருமா என்று தெரியவில்லை. வரட்டுமா!

Rekha raghavan said...

முதல் கதையே ஜெட் வேகத்தில். அருமை.

வெங்கட் நாகராஜ் said...

முதல் கதையே முத்தான கதையாக இருக்கு. சூப்பர்...

அப்பாதுரை said...

கடுகு சமாசாரம் அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும்.
ரசமான கதை.

நிலாமகள் said...

அந்தாதியும் அங்கதமுமாய் ஜோராய் தானிருக்கு உங்க முதல் கடித இலக்கியம்... மன்னிக்கவும் முதல் கதை! . கதையின் வளர்நிலை மிகத் துல்லியம். அதில் கையாண்ட சொற்பிரயோகங்களுக்கும் ஒரு சபாஷ்!

RAMA RAVI (RAMVI) said...

//அச்சில் வெளிவந்த முதல்சிறுகதை// மிகவும் அருமையாக இருக்கு சார்.

மோகன்ஜி said...

மூவார்! அச்சில் வந்ததை அச்சுவெல்லமாய் மெல்ல நாவில் தடவிய படியே கொஞ்ச நேரம்..அழகான சொல்ஜாலங்கள். நடத்துங்க தல!

ரிஷபன் said...

முதல் கதையிலேயே ஆரம்பிச்சாச்சா.. ரவுஸை..
இன்னமும் இளமை மாறாமல் இருக்கும் மனசுக்கு ஒரு சல்யூட்

கமலேஷ் said...

ரொம்ப நல்ல வந்திருக்கு நிவாஸ்..

வாழ்த்துக்கள்..

சிவகுமாரன் said...

அட அட அட
சும்மா ஜிவ்வுன்னு இருக்கு கதை.
அந்த கடைவாய்ப்பல் கடுகுத் துணுக்கு உதாரணம் அருமை.

R. Gopi said...

இந்தக் கதை பற்றி வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_12.html

Asiya Omar said...

கதை எழுதிய விதம் புதுமையாகவும்,ரசிக்கும் படியும் இருக்கிறதே! சூப்பர்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி, கோபி! என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதிற்கு...