Wednesday, April 28, 2010

பந்தம்..


அம்மா போய் விட்டாள்!
போயே விட்டாள்!!
ஏற்கனவே எதிர்பார்த்தது தான். போன வாரம், ராகவன் வெளியூர் டூர் போக வேண்டும். அம்மாவுக்கு ரொம்பவும் முடியாமல் போனதினால் டூரை 'கேன்சல்' செய்தான். என்ன ஒரு நீசத் தனமான எதிர்பார்ப்பு!
US ல் வேலை பார்ப்பவன் தான் லீவ் கிடைக்காது இந்த ட்ரிப்பே கிழம் போனால் தேவலை என்று தவித்துக் கொண்டிருப்பான் என்கிற காலமெல்லாம் இப்போது போய் விட்டது. உள்ளூர் காரனும் அப்படித் தான் இருக்கிறான்.
போன வாரம் தான் அண்ணா ஹைதராபாதிலிருந்து வந்து அம்மாவை பார்த்து விட்டுப் போனான்.'அடுத்த தடவை வரும்போது அம்மாவின் முகமுழி கிடைக்குமோ இல்லையோ என்று வேறு சொன்னான். அவனும் அதே எதிர்பார்ப்பில் தான் வந்திருக்க வேண்டும்!
'என்ன மனிதன் இவன்...' யோசித்துப் பார்த்ததில் 'இங்க மட்டும் என்ன வாழுதாம்' என்று தோன்றியது, ராகவனுக்கு.
பத்து மாத பந்தம்!
உலகிலேயே பிரதிபலன் எதிர்பாராமல் கிடைக்கும் ஒரே பொருள் தாயன்பு. அந்த அம்மாவிடம்...அந்த தெய்வத்திடம் ...நானும், அண்ணாவும் எவ்வளவு கேவலமாய் நடந்து கொண்டு விட்டோம்!
இவன் பெண்டாட்டி முணுமுணுத்தால் அண்ணாவிடம் அனுப்ப வேண்டியது..அவன் பெண்டாட்டி முணுமுணுத்தால், இவனிடம் அனுப்ப வேண்டியது.
என்ன ஒரு பந்தாட்டம்!
அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்து, காலை ஒடித்துக் கொண்ட போது எப்படி அவளை அவ்வளவு தூரம் அண்ணாவிடம் அனுப்ப போகிறோம் என்று தான் வருத்தப் பட்டான்.
கெட்டிக்காரன். நைசாய் நம்மிடம் தள்ளி விட்டானே என்று அவனிடம் ஆரம்பத்தில் ஆத்திரப்பட்டான். இரண்டு சம்பளக் காரன். குழந்தைகளை வளர்த்து ஆளாக்க அம்மாவின் உதவி தேவையாக இருந்தது. குழந்தைகள் வளர்ந்து பெரிசானதும் இவனிடம் அனுப்பி வைத்தான். இவன் பெண்டாட்டி பேச்சைக் கேட்டு, இரண்டு மாதம் கழித்து, அவனிடம் அனுப்பல். இப்படி சில காலம் பந்தாட்டம்.
இப்போது கடைசியில்..இவனிடம் அம்மா!
பழங்கதை எதற்கு? நேராகவே விஷயத்திற்கு வருவோம். சுபஸ்வீகரணம் வரை குறைந்தது பத்தாயிரம் ரூபாயாவது ஆகும். அம்மா இங்கே இருந்ததினால்...எல்லாவற்றையும் நம் தலையில் கட்டி விடுவானோ? அது சரி..அவன் தானே மூத்தவன். அவன் தான் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்யணும்? அது தானே முறை?
ஜாஸ்தி சம்பளக்காரனுக்கு ..கஞ்சத் தனமும் ஜாஸ்தியாக த்தான் இருக்கும் போல இருக்கு. அவ்வளவு தூரம்..ஹைதராபாதிலிருந்து வரானே ..எதாவது வாங்கிண்டு வந்தால் என்னவாம்? இப்பத் தான் சர்க்கரை வந்து பாடாய் படுத்தறது..புல்லா ரெட்டி ஸ்வீட் ஸ்டால்னு ஒண்ணு இருக்காமே.. அடச்சே..அம்மா இங்கே சவமாய் கிடக்க புள்ளைக்கு புல்லா ரெட்டி ஸ்வீட் கேட்குதோ?'
நினைவுகளை, பாழ் மனத்திலிருந்து விரட்டப் பார்த்தான். அது அவனை விடுவதாக இல்லை!..
'... இப்பத் தான் பசங்கள்ளாம் பெரிசாப் போய் காலேஜ் படிக்கிறான்கள்..அந்த நாளில் இருந்தே அண்ணா கை குறுகிண்டுடும். பசங்களுக்கு ஆசையாய் பெரியப்பா ட்ராயர்,சட்டை வாங்கிண்டு வந்தான்னா, எவ்வளவு சந்தோஷம்! நானே பண்ணினதுன்னு மன்னி முறுக்கு, தட்டை எதாவது கொண்டு வருவா..வாயில வைக்க வணங்காது அது!'
' என்னய்யா இது அநியாயமாய் இருக்கு. காட்டுக்கு தூக்கிட்டுப் போக நாப்பது ரூபாயா...நீ நகரு..நான் பாத்துக்கறேன்...' - அண்ணா கத்தினான்.
'ஒரு காஃபி கெட்ட கேடு..இரண்டு ரூபா விக்குது. ஏதேதுக்கோ அர்த்தம் இல்லாம செலவு பண்ணுவீங்க..எங்களுக்கு கொடுக்கணும்னா மட்டும் ஆயிரம் யோஜனை...ம்..எங்க நேரம்யா..'
'... காஃபியா குடிக்கப் போறான்? எந்த கண்றாவியையோ குடிச்சுட்டு வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாம..ரோட்டில உருளப் போறான்...பேச வந்துட்டான்..பாரேன்..'
' விட்டுத் தள்ளுங்கோ ஸார்..நாம செத்தா தான் அவன் பொழைக்கவே முடியும். அப்படி ஒரு பொழைப்பு அவனுக்கு..' சமாதானப் படுத்தினார், ஒருவர்.
அண்ணா முணுமுணுத்தவாறே நகர்ந்தான்.
' உசிரோட இருக்கிறதை விட செத்துப் போறது கொஞ்சம் 'காஸ்ட்லி' தான். எங்க தாத்தாவுக்கு 'மைல்டா ஹார்ட் அட்டாக்' னு கோட்டைக்கு டாக்ஸியில் போறோம். ஐம்பது ரூபா தான் கேட்டான், ஆஸ்பத்திரிக்கு. இரண்டு நாள்ள உசிர் போயிடுச்சு. ஊருக்குத் திரும்பி வர்ரதுக்கு நூத்தைம்பது ரூபாய் கொடுத்தேன். இப்ப சொல்லுங்கோ, உசிரோடு இருக்கிறது எவ்வளவு சீப்னு'
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் யார் யாரோ பேசிக் கொண்டே இருக்க...யார் பேசுவதும் மனதுக்கு ஒட்டவில்லை.அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான், ராகவன்.
சீக்கிரம் 'அதை' எடுத்துக் கொண்டு போனால் தேவலை. டிங்குவும்..டிட்டுவும் பசி பொறுக்க மாட்டான்கள்.....
அழுகை.....
சட்டென சுருக்கென்றது உள்ளே...
நம்மை ஆளாக்கி..பேங்க்கில் க்ளார்க் உத்யோகம்...கை நிறைய சம்பளம்...இந்த கை, கை நிறைய சம்பளம் வாங்க..அந்த கை எத்தனை பேர் வீட்டில்..அழுந்த..அழுந்த..பத்து தேய்த்திருக்கிறது!.... மான அவமானம் பாராமல்..எத்தனை பேர் வீட்டில் சமையல் வேலை செய்திருக்கிறது?


'சித்தப்பா..சித்தப்பா...'
' யாரது..யார் வேணும்...' - சித்தியின் குரல்.
'நான் தான் ராகவன் வந்திருக்கேன், சித்தி'
உள்ளே...கசமுச...சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு கதவு திறக்கப் படுகிறது.
' என்னடா ராகவா, இந்த நேரத்தில்..' கதவை ஒருக்களித்துக் கொண்டு,எங்கே இவன் வந்து விடப் போகிறானோ என்கிற பயத்தில்..சித்தப்பா....பக்கத்தில் சித்தி, கரடி பொம்மைக்கு 'கீ' கொடுப்பது போல...
' சித்தப்பா..சித்தப்பா..அப்பாக்கு கண் சொருகி..என்னமோ மாதிரி இருக்கு, சித்தப்பா..எங்களுக்கெல்லாம் ஒரே பயமாயிருக்கு...அம்மா உங்களை கையோடு...'
' ஓவரா போட்டிருப்பான். என்னடா இது...இப்படி கொட்டற மழையில..'
' இல்ல சித்தப்பா..அப்பா உசிரோட இருக்காளான்னே தெரியலே ...'
குலுங்கி..குலுங்கி அழுதான், ராகவன்.
' இருடா வரேன்...'
பரபரப்புடன் உள்ளே போய், சட்டையை மாட்டிக் கொண்டார், சித்தப்பா.
'க்கும்' - ஒரு கனைப்பு தான் கனைத்தாள்,சித்தி.
' உங்களுக்கோ 'இயாஸ்னோஃபோலியா' கொட்டற மழையில ...போனா..இங்க நானில்ல லோல் படணும்...'
உள்ளுக்குள் யாருக்கும் தெரியாமல்,ரொம்பவும் மங்கலாய் எரிந்துக் கொண்டிருந்த 'மனிதாபிமானம்' என்கிற அந்த 'ஜீரோ வாட்ஸ்' பல்பும் பட்டென்று அந்த வார்த்தையில்
ஃப்யூஸ் ஆகி விட்டது!
சித்தப்பா வரவில்லை!
அப்பா இறந்து போய்..உறவுக்காரர்கள் எல்லாரும் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று பயந்து...
வாழ்க்கை என்ற 'ரேஸி'ல், தனி ஒரு ஆளாய், இரண்டு இரண்டுங்கெட்டான் குழந்தைகளை சுமந்து கொண்டு...தள்ளாடி..தள்ளாடி..அம்மாவும் தன் இலக்கினை அடைந்து விட்டாள்!
...ராகவா ப்ளீஸ்டா..ராகவா..இன்னும் ஒரே ஒரு சான்ஸ்...இத்தனை நாள் அம்மாவை கவனிக்காமல் விட்டதற்காக பரிகாரம்...
அழுடா....குலுங்கி..குலுங்கி அழு...
ஆனால் சமயத்தில் அழுகை ..வருவேனா...என்கிறதே, சனியன்!
......சோகமான திரைப்படம்
...ஆஃபீஸ் பரிட்சையில் பெயில்
....காதல் தோல்வி
...ப்ரமோஷன் கட்....
ஊகும்...பாறாங்கல்லாய் ஆய் விட்டதோ? கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை!
அழுகை வருவது போல் முகத்தை வைத்துக் கொண்டான். ரொம்ப..ரொம்ப..செயற்கையாய் இருந்தது, அது!
மற்றவர்களுக்காக இல்லை..அவனுக்காக..அவனுடைய அம்மாவுக்காக ஒரு அழுகை...ஒரே ஒரு அழுகை...அழுடா..ராகவா அழு..
என்ன அவஸ்தையடா இது! இது சமயம்..அழ வேண்டும்...அழுகை அனிச்சையாக
வர வேண்டும்.. உம்மென்று...உறவிலிருந்து இவன் மட்டும் பிரிந்து தனியாக....ஆண்டவனே!
அட சட்...அம்மாவை தூக்கி விட்டார்கள்!
'....டேய் பசங்களா..இந்தாங்கடா ஆளுக்கு ஒரு நெய் பந்தம்...இந்தா டிட்டூ நீ பிடி...இந்தாடா அம்பி உனக்கு...'
' எல்லாரும் சொல்லுங்கோ ...தேவ..தேவ..மஹா தேவ...'
' தேவ தேவ ...மஹா தேவ....'
நகர ஆரம்பித்து விட்டாள், அம்மா!
ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்மாஆஆஆஹ்....ஹ்....ஹ்..'
நாபிக் கமலத்திலிருந்து தீப் பந்தம் ஒன்று பீறிட்டு எழ..அடி வயிற்றிலிருந்து..ஆங்காரமாய்...ஆக்ரோஷமாய்...

' ஐயோ..எங்க அம்மாவை தூக்கிண்டு போறாளே.. '
தூக்கிய நால்வரும் சம உயரம் இல்லாத காரணத்தினால்.. 'பேலன்ஸ்' கொஞ்சம் தடுமாற... 'அம்மா' தலை சற்று சாய..அம்மா அவனைப் பார்த்து
'அழாதேடா குழந்தே...' என்று சொல்வது போல் அது தோன்றவே,
குலுங்கி...குலுங்கி அழுதான், ராகவன்!
********
என்னுரை : இந்த சிறுகதை தமிழ் அரசி 17.10.1993 இதழில் வெளி வந்தது.

12 comments:

இராகவன் நைஜிரியா said...

ஒரு மகனின் மனக்குமறலை நன்றாக சொல்லியிருக்கின்றீர்கள்.

Chitra said...

மனதை பிழிய வைக்கும் கதை.
////இந்த சிறுகதை தமிழ் அரசி 17.10.1993 இதழில் வெளி வந்தது. /////
....... பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

அம்பிகா said...

கண்கலங்க வைத்து விட்டீர்கள்.
நல்ல எழுத்து நடை.

Rekha raghavan said...

வாவ் . அருமையான கதையைக் கொடுத்து அசத்திவிட்டீர்கள் சார். பாராட்டுகள்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

பத்மா said...

நல்லா இருக்கு கதை
சில சமயம் நம் சிந்தனைகளே நமக்கு அருவருப்பை தரும்.
ராகவன் இதில் நினைக்கறது போல.
மனது கொஞ்சம் கனத்து தான் போகிறது

aarvie88 said...

awesome way of writing. very touching story!!!!

Nithya.R.Iyer said...

A very touching story!!!!
I literally cried !!!!
Dad...Ur simply great!!!!

ரிஷபன் said...

ராகவா ப்ளீஸ்டா..ராகவா..இன்னும் ஒரே ஒரு சான்ஸ்...இத்தனை நாள் அம்மாவை கவனிக்காமல் விட்டதற்காக பரிகாரம்...
அழுடா....குலுங்கி..குலுங்கி அழு...
ஆனால் சமயத்தில் அழுகை ..வருவேனா...என்கிறதே, சனியன்!
நிஜமா சொல்லப் போனா அழுகை வர வேண்டிய நேரத்தில் வருவதில்லை.. அதன் பிறகு நினைத்து நினைத்து அழுத கணங்கள் தான் அதிகம்.. நாம் நிறைய உறவுகளை இருக்கும்போது மிஸ் பண்ணுகிறோம்.. போனதும் எப்போதோ ஒரு நேரம் உள்ளுக்குள் ஒன்று விழித்துக் கொண்டு தரிசனம் தந்து ஆட்டிவைக்கும்போது இழப்பின் கனம் அடி வயிற்றிலிருந்து பீரிட்டு அடிக்கும்..

வசந்தமுல்லை said...

அடேங்கப்பா !!!!!!!!!! அனுபவம் உணர்த்துகிறது

vasan said...

க‌தையில‌ `காபி விலை இர‌ண்டு ரூபாய்` வ‌ரும் போதெ
தெரிந்துவிட்ட‌து, இது ம‌று ஒளிப‌ர‌ப்புத்தானுட்டு.
ஆனாலும், அந்த‌ ஏக்க‌ம், அப்ப‌டியே, அப்ப‌ப்பிற‌ந்த‌
ப‌ச்சைப்பிள்ளை நெடியுட‌ன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

/// 'அம்மா' தலை சற்று சாய..அம்மா அவனைப் பார்த்து
'அழாதேடா குழந்தே...' என்று சொல்வது போல் அது தோன்றவே,///

இந்த அம்மாக்கள் எல்லோருமே இப்படித்தான். பெற்ற மனம் பித்து என்று உள்ளனர். பிள்ளை மனம் தான் கல் ஆச்சே, எப்படி எளிதில் அழுகை வரும்?

geethappriyan said...

அன்பின் ஆரன்யநிவாஸ் சார்

உங்கள் கதைகளில் உள்ள நான் லீனியர் நடை மிகவும் அருமை.கூகிலில் சிறுகதை என தேடிய போது கிடைத்தது,மிக மகிழ்ச்சி,தொடர்ந்து படிக்கிறேன்