Friday, April 9, 2010

காரும்...பேரும்.....


சூரியன் உச்சித் தலைக்கு சரியாக வரும் வேளையில், ஒரு 'போலீஸ் ப்யூகில்' ஓசை என் கவனத்தை கலைக்க, வண்டியை பிரேக் அடித்து நிறுத்தச் சொன்னேன்.
ஒரு போலீஸ் காரர் வந்தார்.
' சார்...கார் பெல்ட் என்னாச்சு..'
என் கார் ரோடில் போகும் ஆயிரக்கணக்கான கார்களில் வேறு பட்டது. அதன் பாரம்பரியமே தனி. ஆனந்த ரங்கம் பிள்ளை தனது டைரியில் இதைப் பதிவு செய்திருக்கிறார். கி.பி. 1782 ல் டூப்ளே யினால் பிள்ளையவர்களின் இருபதாவது வயதிற்குப் பரிசளிக்கப் பட்ட கார் இது!
இவரிடம் இது எடுபடுமா? யோசித்தேன், நான்.
' சார்... உங்க பெயர்?'
அவர் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டார்.
' எதுக்குக் கேக்கறீங்க?'
' புக் பண்ணத் தான்'
மனதுக்குள் சட்டென்று ஒரு ஃப்ளாஷ்!
அடடா.. மாசக் கடைசி...என் கையிலும் காசு இல்லை...அவர் கையிலும் காசு இல்லை...
என் முகத்தை பார்த்தார். அதில் ஒரு எழவும் இல்லை. அது அவருக்கு பெரிய ஏமாற்றமாய் போய் விட்டது.
இருந்தாலும் லேசில் விட்டு விட மனம் இல்லை.
' உங்க பேரை சொல்லுங்க?'
' அகில உலக ப்ளாக் புகழ், நகைச்சுவைத் தென்றல், சிலேடை செம்மல், ஹாஸ்ய சக்ரவர்த்தி ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி என்று அடியேனை சுருக்கமாக அழைப்பார்கள்'
' சுருக்கமா இது?' - தலையில் அடித்துக் கொண்டார், அவர்.
' யாரும் இதையெல்லாம் போட மாட்டேங்கறாங்க..அட்லீஸ்ட் போலீஸ் ரிகார்டிலாவது ஏறட்டுமேன்னுதான்...'
'நான் தான் கிடைத்தேனா' என்பது போல் பார்த்தார், அவர்!
'அட்ரஸ்?'
'சுடலை நகர், கண்ணாம்பா பேட்டை'
' என்ன ஸார், விளையாடறீங்களா?'
' விளையாட்டு இல்ல சார், கடைசீல அங்க தானே போகப் போறேன்!'
'பார்த்தா டீஸண்டா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க!'
' அதையும் போட்டுக்குங்க..MA(TAMIL) MA (ENGLISH) M.COM.,MBA., MCA., MCS.,BGL,ACS, AICWA .. முன்னாடி சொன்னதெல்லாம் படிச்சது..கடைசி இரண்டும் படிக்க ஆசைப் பட்டது. படிச்சதெல்லாம் போதும் எனக்கு உதவியா இருன்னு அப்பா சொன்னதால படிக்க முடியாம போயிடுச்சு..'
' அப்பா என்ன பண்றாரு'
' சும்மாத் தான் இருக்காரு'
' இதையும் எழுதுங்க..'
' எதை'
' நான் பார்க்கும் போது டிரைவர் பெல்ட் போட்டுக்கிட்டு இருந்தார். சார் பின்னாடி தான் இருந்தார். சாருக்கு கார்னு எழுதத் தான் தெரியும்.ஓட்டத் தெரியாதுன்னு'
'என்ன உளர்றீங்க?'
' உளரலே..உண்மையைத் தான் சொல்றேன்'
' ஸார்..கார் நம்பரையாவது சொல்லுங்க ஸார்?'
' எதுக்கு?'
' எங்கியாவது தப்பித் தவறி பார்த்தா ரிவர்ஸில 100 கிலோ மீட்டர் வேகத்தில் தலை தெறிக்க ஓடத் தான் !!!'

8 comments:

கே. பி. ஜனா... said...

இயல்பான நகைச்சுவை! பாராட்டுக்கள்!

Unknown said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

Chitra said...

படிப்படியாக, நகைச்சுவையில் சுவை கூடி கொண்டே போகும் பதிவு. நன்றி.

ரிஷபன் said...

செமை கலாட்டா.. நகைச்சுவை தென்றலே.. வாழ்க

வை.கோபாலகிருஷ்ணன் said...

அகில உலக ப்ளாக் புகழ், நகைச்சுவைத் தென்றல், சிலேடை செம்மல், ஹாஸ்ய சக்ரவர்த்தி ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி MA(TAMIL) MA (ENGLISH) M.COM.,MBA., MCA., MCS.,BGL,ACS, AICWA .. அவர்களே,
தங்களின் காரும்..பேரும்.. அருமையோ அருமை.
(தங்களின் மனக்குறையை ஓரளவுக்காவது அடியேன் தீர்த்திருப்பேன் என்று நம்புகிறேன்.)

Rekha raghavan said...

போலீஸ்காரனைப் பார்த்தாலே குலைநடுங்கும் சில பேருக்கு. அவரையே கலாய்க்க செம தில் இருக்கணும். அது உங்களுக்கு இருக்கு சார்.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

வெங்கட் நாகராஜ் said...

வாழ்நாள் பூரா அந்த போலீஸ்காரர் யாரையும் தொந்தரவு பண்ண மாட்டார். நல்ல நகைச்சுவை.

வெங்கட் நாகராஜ்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிரிப்பு போலீஸ் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் அதை வெறுப்பு போலீஸ் என்று மாற்றி விடுவீர்கள்
என்று எண்ணுகிறேன்.