குறிஞ்சி....
மலையும்...மலை சார்ந்த
நிசப்தமான இடம்....
எப்போதாவது பறவைகள் கத்தும்..
சுற்றிலும் குன்றுகள் ....மூலிகைசெடிகள், கொடிகள் ..
அதனால் திக்கெட்டும் கமழ கமழ மூலிகை மணம்!
இயற்கை தன் அழகு அனைத்தையும்,அங்கே கொட்டினார்போன்ற அற்புதமான ஆரண்யம்..
அங்கு கோலோச்சிக் கொண்டிருந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு கணீரென்று ஒரு குரல்!
ஆ....கோலூன்றிக் கொண்டிருந்த அந்த கிழவி தான் பாடிக் கொண்டிருக்கிறாள்..
அதோ...அந்த குன்றின் மீது ஒரு சிறுவன், அரை யணிந்து!
ஆஹா...அவன் முகத்தில் தான் என்ன ஒரு தெய்வீக களை!
அங்கு என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது?
வாருங்களேன்...
போய் பார்ப்போமா?
ஒரு நிமிஷம்...
அதற்கு முன், இதனுடன் தொடர்புடைய சம்பவம் ஒன்று திருக்கைலாயத்தில் நடக்கப் போகிறதாம்...
முதலில் அங்கு செல்வோம்,நாம்!
----------------
திருக்கைலாயம்...
"நாராயண...நாராயண"
என்னது, திருக்கைலாயத்தில் நாராயண நாமமா?
ஆம்...
நாரதர் தான், விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருக்கிறார்...
இறையனாரின் தவம் அந்த நாராயண ஸ்ம்ருதியில் கலைய,கண்களை திறந்து பார்த்தார்..
"வா, நாரதா!"
கனிவு த்தும்பும் குரலில் வரவேற்றார், எமை ஆளும் ஈசன்!
பரஸ்பர குசல உபசாரங்கள் முடிந்ததும், நாரதர் தம் ஜோல்னா பையிலிருந்து எதையோ எடுத்து,பரமசிவனிடம் பணிவுடன் நீட்ட, உடனே அதை சிவ பெருமான் தன் புதல்வர்கள் இருவரையும் கூப்பிட்டு கொடுக்க, மூஷிகத்தில் முழு முதற் கடவுளாம் வினாயகன் செல்ல, அதற்கு சற்றேறக்குறைய அரை நிமிஷ நேர மட்டில் எம்பெருமான் இளங்கோ தன் மயில் வாகனத்தில் விருட்டென்று வேகமாக செல்ல.....அவ்வாறு அவர்கள் சென்றது தான் நம் ஊனக் கண்களுக்கு தெரிந்ததே தவிர, அவர்களுக்குள் அங்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை..
அதனாலென்ன...பரவாயில்லை..
தொடர்ந்து அருகில் சென்று அங்கு நடப்பதை கவனிப்போம்,வாருங்கள்..
இப்போது, நம் கண்களுக்கு திருக்கைலாயம் மட்டுமல்ல..வினாயகப் பெருமானும்,ஆறுமுகப் பெருமானும் தெளிவாகத் தெரிகிறார்கள்..
வினாயகப் பெருமான் நிதானமாக அந்த கட்டிடத்திற்கு செல்கிறார்...
ஆ..இதென்ன ...வினாயகப் பெருமானை விட இளவலிடம் துடிப்பு அதிகமாக இருக்கிறதே!..
மயிலிலிருந்து மயிலையில், சர்ரென்று இறங்கிய முருகன் அங்குள்ள பேங்குக்குச் செல்ல,அங்கு அனுமார் வாலை விடப் பெரிய கூட்டம்...
இவர் முறை வர, அரை நாள் ஆகி விட அங்குள்ள கேஷியர் இவரிடம் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார்.
"முருகப் பெருமானே..முதலில் தங்களிடமுள்ள ...நாரத முனி தங்கள் தந்தையிடம் கொடுத்த அந்த ஆயிரம் ரூபாயை டெப்பாசிட் செய்யுங்கள்..நாளைக்கு அதை நூறு ரூபாயாக நீங்கள் 'ட்ரா' பண்ணிக் கொள்ளலாம்...இந்தாருங்கள்..pay in slip பிடியுங்கள் இதை fill up செய்து கொண்டு அந்த கவுண்டரில், டெப்பாசிட் செய்து விட்டு நாளைவாருங்கள்...OK.., next?"
என்று, அடுத்த ஆளை அட்டெண்ட் பண்ண ஆரம்பித்தார்,அவர்!
கொடுத்த Pay in Slip ஐ தப்பும், தவறுமாய் fill up செய்து கொண்டு அவர் சொன்ன கவுண்டர் போய் பார்த்தார், திருமுருகன்.
"முருகா, தங்கள் PAN number?"
"PAN நம்பரா?"
"Permanent Account Number, முருகா!"
"அப்படி என்றால்?"
க்யூவில் பின்னால் நின்றிருந்தவர் முருகனின் தோளை தட்டி சொன்னார்...
"ஐயா, தமிள் கடவுளே, இங்கிருந்து, ஆறு கடை தள்ளி, ஆறுமுகம் அண்ட் கோ ன்னு ஒரு கம்பெனி இருக்கு..அங்ஙன போயி ஒங்க details ஐ கொடுத்தீங்கன்னா, ஆன்லைனில் ஒடனே அவிங்க அப்ளை பண்ணிட்டு ... ஒங்களுக்கு PAN Number அங்ஙனயே
தருவாங்க...அதை வாங்கி கிட்டுத் தான் இங்ஙன நீங்க வரணும், போங்க,போயிட்டு வாங்க!"
அவர் அதிர்ஷ்டம்... PAN Number அடுத்த நாள் தான் கிடைத்தது.
இன்று க்யூ கொஞ்சம் தான், பரவாயில்லை...
தந்தை கொடுத்த அந்த ஆயிரம் ரூபாயை டெப்பாசிட் செய்தார்.
அதற்கு அடுத்த நாள் ஆதிசேஷன் போல நீ.......ளமாக இருந்த க்யூவில் கால் கடுக்க நின்று, பத்து பழைய நூறு ரூபாய் நோட்டுகள் வாங்கி,மயில் வாகனத்தில் மங்கள்யான் ஸ்பீடில் முருகன் கைலாயம் சென்றால்,
அங்கு இறையனார் சரக், சரக்கென்று புத்தம் புது பத்து நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்..
நாக்கில் நுரை தள்ள வியர்த்து, விறுவிறுக்க வந்த முருகனைப் பார்த்து,
" வா....முருகா, வா...நீ வேகமானவன்..பேங்குக்கு சென்று மாற்றிக் கொண்டு வருகிறாய்...ஆனால் உன் அண்ணன் வினாயகன் இருக்கிறானே, அவன் உன்னை விட விவேகமானவன்..அவன், வெகு சுலபமாய் என் பெயருக்கு அவனிடம் கொடுத்த ஆயிரம் ரூபாயை இங்கு பக்கத்தில் உள்ள கைலாசபுரம் போஸ்ட் ஆஃபீசில் மணி ஆர்டர் செய்து விட்டு, முந்தா நாளே தன் வேலையைப் பார்க்க போய் விட்டான்..அவன், M.O. அனுப்பிய அந்த ஆயிரம் ரூபாயை போஸ்ட் மேன் இப்போது தான் பத்து புத்தம் புதிய தாள்களாக, என்னிடம் கொடுத்து விட்டுச் செல்ல, அதைத் தான், எண்ணிக் கொண்டிருக்கிறேன்...நீயானால், சுத்தமாக இரண்டு முழு நாட்களை வேஸ்ட் செய்து விட்டு வருகிறாய்...."
பரமன் சிரித்துக் கொண்டே சொல்ல,
முருகனுக்கு ரோஷமான ரோஷம்!
கண்கள் இரண்டும் ஜிவ்வென்று சிவக்க...
கோபத்துடன், அரையில் வெறும் கோமணத்துடன்,
மலை மேல் ஏறி விட்டான், குழந்தை!
எவ்வளவு நாள் பசியும், பட்டினிமாக அங்கு கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறானோ?
..........
இதோ...
முதலில் நாம் கண்ட அதே காட்சி!
அமுதினைத் தோற்கடிக்கும் தீந்தமிழில் கணீரென்று ஔவை பாடிக் கொண்டு இருக்கிறாள்..
ஔவை தந்த தமிழினால் கோபம் மறைந்து,சற்றே கண் திறக்கிறான் முருகன்!
அன்பு மணம் கமழும் ஔவை முகத்தை பார்க்க பார்க்க.. அந்த அறுபடை வீடு கொண்டவனின் அழகு முகமும் கொஞ்ச நேரத்தில்,சாந்த ஸ்வரூபம் ஆயிற்று...
இதோ..ஔவை பாடிய அப் பாடல், மலையில் மோதி எதிரொலிக்கிறது...
"பணம் நீ அப்பா!
ஞான பணம் நீ அப்பா!!
தமிழ் ஞான பணம் நீ அப்ப்ப்..........பாஆஆஆஆ!"
.......சுபம்............
3 comments:
தலைப்பும்,
நகைச்சுவையும்,
கற்பனையும்
மிகவும் அருமை.
பாராட்டுகள்.
யதார்த்த நிலையை அப்படியே படம் புடிச்சிட்டீங்க!
பணம் மாற்ற இப்படியும் ஒரு வழியா
Post a Comment