Wednesday, September 2, 2015

அத்தாணி மண்டபத்தில் ...

அது ஒரு அத்தாணி மண்டபம்..பக்கத்தில் பெரிய, தாமரை பூத்த தடாகம் ஏதோ விசேடம் போலும்! மக்கள் அங்குமிங்கும் பரபரப்பாய் போய்க் கொண்டிருக்க,
வாசலில் அருமையான இன்னிசை..லவ,குசர்களைப் போல் இரு சிறார்கள்
ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள்..
          உள்ளே கமகமவென சமையல் மணம்..அந்த தவசிப் பிள்ளையைப் பார்த்தால், ராஜகுமாரிக்கு எங்கோ பார்த்த ஞாபகம்! தன் செல்வங்களான அந்த ‘லவ,குசர்களை’ சமையல் கட்டில் கொண்டு போகச் சொல்கிறாள், மந்திரியிடம்..அவனும் அச்சிறார்களை அங்கு கொண்டு போய் விடுகிறான்..சமையல் செய்யும் அந்த தலைமை சமையல் காரனுக்கு இச்சிறார்களைப் பார்த்ததும் என்னவோ தெரியவில்லை..அவர்களுடன் பாசத்துடன் பேச விழைகிறான்..அவன் ஏதோ சொல்ல, அவர்கள் அதற்கு தங்கள் குஞ்சு கைகளை ஆட்டிக் கொண்டு....
         என்ன தான் நடக்கிறது..போய்ப் பார்ப்போமா?
         அந்த தவசிப் பிள்ளை சொல்கிறான்,’ மக்காள் நீவிர் என் மக்கள் போல்கின்றீர் .. நீர் யார் மக்கள் ?”
           குழந்தைகளுக்கோ படு கோபம்! இவன் யார் இவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டு இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறான்..இந்த சமையல் தொழில் செய்பவனின் பிள்ளைகள் போலவா நாம் இருக்கிறோம்? தாத்தா பெரிய சாம்ராஜயபதி..வீம மகராசன்..தாய் ராஜகுமாரி.. நாம்  நள மகராஜன் பெற்றெடுத்த செல்வங்கள்... நம் தந்தை நம்மிடம் இருந்தால், இவன் இப்படி ஒரு கேள்வி கேட்கத் துணிவானா?’ என்று ஏங்கின அந்த பிஞ்சு நெஞ்சங்கள்..
அது ஒரு பாடலாக உருவெடுக்க..
        அந்த காட்சியை கவிஞர் நம் கண் முன்னே நிறுத்துகிறார் பாருங்கள்..
        யாராலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை!
        அந்த வெண்பா இதோ!
        நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லோ
        தஞ்சாரோ மன்னர்...அடு மடையா....
        எஞ்சாது தீமையே கொண்ட சிறு தொழிலாய்,
        எம் கோமான் வாய்மையே கண்டாய் வலி!
        அதைக் கேட்ட அந்த தவசிப் பிள்ளையின் கண்களில் தான் என்ன ஒரு கண்ணீர்..மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த தமயந்தியின் நெஞ்சம் வெடித்து விடுமோ என்று ஒரு சோகம்..
          நளனிடமே நாங்கள் நளனின் குழந்தைகள் என்று சொல்லும் அந்த உணர்வு பூர்வமான காட்சியை ஒரு யுட்யூபில் பார்ப்பது போல உள்ளதா?
புகழேந்தி ஒருவரால் தான் இவ்வாறு காட்சியை வடிவமைக்க முடியும் ஒரு வெண்பாவில்!

5 comments:

அப்பாதுரை said...

அற்புதம்!

புராணத்தில் இது போல் இன்னொரு காட்சியும் உண்டு. கம்பன் எழுதாமல் போன உணர்வு.

Nagendra Bharathi said...

அருமை

தி.தமிழ் இளங்கோ said...

வெண்பாவிற்கு புகழேந்தி என்பார்கள். அந்த நளவெண்பாவிலிருந்து மனதைத் தொடும் ஒரு காட்சியை சொற் சித்திரமாக தீட்டி இருக்கிறீர்கள். அரிச்சந்திர புராணத்திலும் மயான காண்டத்தில் இதே போல ஒரு காட்சி உண்டு. ( பாடலைத் தனியே ஒரு பத்தியாக பிரித்துக் காட்டவும்.)

நிலாமகள் said...

காட்சி அருமை. வாசித்தவுடன் கலவையான உணர்வுக் குவியல்.

தனிமரம் said...

வெண்பாவுக்கு புகழேந்தி என்பதை பறைசாற்றும் வெண்பா பகிர்வுக்கு நன்றிகள்.