Monday, September 2, 2013

வீடு வரை போலீஸ்!

”என்னங்க... நம்ம வூட்டுக்கு போலீஸ் வந்துச்சாம்” “எதுக்கு?..எப்படி உனக்குத் தெரியும்?” கேள்விக் கணைகளை அடுக்கினேன்.. வீட்டுக்குள் வரும்போதே தெரு வாசலில் நாராயண ராவ் துக்கம் விசாரிப்பது போல் இதை கேட்டு விட்டார்.. அதாவது பரவாயில்ல..”உங்கவூட்டுக்கு போலிஸ் காரங்க வந்தா சொல்லுங்க நானும் பார்க்கணும்?” என்று ஒரு வேண்டு கோள் வேற! அது சரி..கமலாவிற்கு எப்படி இது தெரியும்? அவளும் என்னை மாதிரி OFFICE GOER. ”பக்கத்து வீட்டு பரிமளா சொல்லிச்சு” ஐயோ...என்று வாய் வந்த வார்த்தைகளை கஷ்டப் பட்டு அடக்கி கொண்டேன். பரிமளா என் எழுத்துக்களின் ரசிகை..அவளைப் பார்ப்பதற்கு முன், மூணு இஞ்ச் பவுடரை நான் கொட்டிக் கொள்வதும், இரண்டு அவுன்ஸ் செண்ட் பாட்டிலை விரயம் செய்வதும், முன் வழுக்கையை மறைக்க பின்னால் உள்ள மூணு முடிகளை முன்னுக்கு கொண்டு வர நான் பாடு படுவதும்..... எத்தனையோ ‘.....தும்,........ தும்’ ”பரிமளா என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? அவள் முன் போலீஸ் என் கைகளில் விலங்கு மாட்டிக் கொண்டு போவதென்றால்.. சேச்சே முகத்தை கர்ச்சீப்பினால் மூடிக் கொண்டு போக வேண்டியது தான்..” ஹிண்டுவில் அப்படித் தானே கிரிமினல்ஸ் முகத்தை மூடிக்கிறாங்க.. ” என்னங்க.. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீங்க பேசாம இருக்கீங்க?” நிகழ்வுலகத்திற்கு சட்டென வந்தேன். ”ஆமாம்..என்ன கேட்டே?” “என்ன தப்பு பண்ணினீங்க..லஞ்சம் வாங்கினீங்களா?..அது சரி இந்த மூஞ்சிக்கு எவன் லஞ்சம் குடுப்பான்? என்ன பண்ணினீங்க நீங்களே சொல்லுங்க?” “அதான் .. நீயே சொல்லிட்டியே..எனக்கு எவன் லஞ்சம் கொடுப்பான்?” “அப்ப வேற என்ன பண்ணினீங்க?” “ட்ராஃபிக்ல சிக்னலை மதிக்காம போனீங்களா?” “நான் ஆபீஸ் போற பாதையில சிக்னலே இல்ல..” “பின்ன...வேற என்ன தப்பு பண்ணினீங்க?” ”கமலா..இன்னுமா நீ என்னை புரிஞ்சிக்கலை.. தப்பு,தண்டாக்கலாம் போறதுக்கு ரொம்ப தைர்யம் வேணும்..எனக்கு அது கிடையாதுங்கிறது தான் உனக்குத் தெரியுமே?” ” அதெல்லாம் சரி தான்.. எதுக்கு போலீஸ் உங்களைத் தேடணும்?” “அது தான் எனக்கும் தெரியலையே கமலா” டாலருடன் நடக்கும் போட்டியில் தேய்ந்து போன ரூபாய் போன்று என் குரலும் தேய்ந்து போனது..... வாசலில் சத்தம்..”சார்..சார்” கதவைத் திறந்தேன்...கவுண்டமணி ஜாடையில் முகமும், செந்தில் தொப்பையாடும் ஒரு போலீஸ் காரர்! சொரேர் என்று வயிற்றுக்குள் கமலா காலையில் செய்த எலுமிச்சம்பழ ரசம் ஹைட்ரோக்ளோரிக் ஆஸிட் ஆக சுரக்க.. ..இருந்தாலும் சமாளித்துக் கொண்டு உளறினேன்.. ”வாங்க சார் வாங்க ...கமலா இங்க வந்து யார் வந்திருக்காங்கன்னு பாரு?’ “டீ சாப்டறீங்களா..இல்ல காஃபி...” அவர் எனக்கு ஏதாவது தண்டனை கொடுப்பதற்கு முன் நாம அவருக்கு ஏதாவது கொடுத்து விட வேண்டும் என்கிற அவசரம் எனக்கு! “அதெல்லாம் வாணாமுங்க..” சட்டென்று அவர் கையைப் பார்த்தேன்..கைகளில் விலங்கு ஒன்றும் இல்லை.. அப்பத் தான் எனக்கு உயிரே வந்தது. ஒரு நிமிடம் மெளனம்.. அதை அந்த போலீஸ் காரரே உடைத்தார்.. “ நீங்க நல்லா கதை எளுதுவீங்களாமே நம்ம ரைட்டர் ரகு தான் சொன்னாரு..எங்க ரிக்ரியேஷன் க்ளப்புக்கு ஒரு நல்ல நாடகமா எளுதித் தாங்க..ரகு தான் இங்க அனுப்பிச்சாரு” வந்தவர் போய் விட்டார்! ஆனால், சிரியாவை அமெரிக்கா ’லபக்’காகி விடுமோ என்கிற ஆவலில் வாசல் வரை வந்து ஒட்டு கேட்ட நாராயண ராவின் முகம் தான் பேஸ்து அடித்தது போல ஆகி விட்டது!

5 comments:

கோமதி அரசு said...

” டாலருடன் நடக்கும் போட்டியில் தேய்ந்து போன ரூபாய் போன்று என் குரலும் தேய்ந்து போனது..... //

நடப்பு விவரத்தை அழகாய் பதிவுக்குள் கொண்டு வந்த நேர்த்தி அருமை.

நிலாமகள் said...

டாலருடன் நடக்கும் போட்டியில் தேய்ந்து போன ரூபாய்//

தொப்பையாடும் ஒரு போலீஸ் காரர்//

எலுமிச்சம்பழ ரசம் ஹைட்ரோக்ளோரிக் ஆஸிட் ஆக சுரக்க.//

எனக்கு ஏதாவது தண்டனை கொடுப்பதற்கு முன் நாம அவருக்கு ஏதாவது கொடுத்து விட வேண்டும்//

சிரியாவை அமெரிக்கா ’லபக்’காகி விடுமோ//

என்னவொரு டைமிங்...!

ஸ்ரீராம். said...

இயல்பான ஒரு பொதுஜனத்தின் பயம்!

ரிஷபன் said...

“டீ சாப்டறீங்களா..இல்ல காஃபி...” அவர் எனக்கு ஏதாவது தண்டனை கொடுப்பதற்கு முன் நாம அவருக்கு ஏதாவது கொடுத்து விட வேண்டும் என்கிற அவசரம் எனக்கு!

அருமை.

manichudar blogspot.com said...

வணக்கம்.நடப்பு விசயங்களை நகைச்சுவையோடு நல்ல பதிவு.