Monday, September 3, 2012

கருணையினால் அல்ல!

ஸ்ரீதருக்கு ஜாலி மூட் வந்து விட்டால், சுந்துவை அப்படியே தூக்கிக் கொண்டு போய் விடுவான், கடை வீதிக்கு..’அப்பா நான் பெரிசா ஆய்ட்டேன்..உன்னோட
நடந்து வரேன்’ என்றாலும் கேட்க மாட்டான். அன்று ஆஃபீஸில் மேனேஜர் அவன் செய்த காரியத்தை புகழ்ந்து பேச, உச்சிக் குளிர்ந்த ஸ்ரீதர்
இதோ கடைவீதியில், சுந்துப் பயலைத் தூக்கிக் கொண்டு!
“ அப்பா நாக்கு பஞ்சு மிட்டாய் வேணும்”
“இந்தாடா கண்ணா?”
“ரெண்டா..  நேக்கே... நேக்கா?”
“ஆமாண்டா கண்ணா, ரெண்டுமே நோக்கு தான்”
    அவனுடைய குஞ்சு கரங்களில் அந்த பஞ்சு மிட்டாய்களைத் திணித்தான், ஸ்ரீதர்.
  காய்கறிகள் வாங்கிக் கொண்டு திரும்பும் போது, ஒரு பிச்சைக் காரன்!
  அவனுக்கு சில்லறை இருக்கும் போது போடுவான், ஸ்ரீதர்..இப்போது ரூபாயாகத் தான் இருக்கிறது..பத்து ரூபாயைப் போட மனம் இல்லை..
மெள்ள அவனைக் கண்டும் காணாமல  கிளம்பினான்.ஸ்ரீதர்.....
 “சாமீ....ஏதாவது சில்லறை போடு சாமீ”
“சில்லறை  இல்லப்பா..போய்ட்டு வா..”
“சாமீ..சாமீ..”
விட மாட்டான் போல இருக்கிறது..சீக்கிரமாய் இந்த இடத்தை விட்டுக் கிளம்ப வேண்டும்..சில்லறை கொடுத்து அவனைப் பழக்கியது எவ்வளவு கெடுதலாய்ப் போய் விட்டது..இனி மேல் இந்த ராஸ்கலுக்கு எதுவும் போடக் கூடாது..
  “சாமீ..சாமீ..” - அந்த ஆள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்..
 ஸ்ரீதருக்கு கொஞ்ச நஞ்சமில்லை கோபம்..சூடாக ஏதாவது சொல்லி விட வேண்டும்..
“என்ன?”
  ஒரு வெட்டு வெட்டுவது போலத் திரும்பினான்,ஸ்ரீதர்.
“சாமீ கோச்சுக்க கூடாது....இந்தாங்க உங்க பர்ஸ்.. நீங்க வேகமாக வரும் போது கீழே விழுந்து விட்டது..”
  என்ன சொல்வதென்று தெரியவில்லை.. சட்டென்று சுடர் விட்டு எரியும் தீயில், ஜில்லென  தண்ணீர் பட்டது போல..
நன்றியுடன் பர்சை வாங்கி அதிலிருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை நீட்டினான்,ஸ்ரீதர்..
“வாணாம் சாமி...சில்லறையா இருக்கும் போது தா..இது வாணாம்..”
    ”இந்தா இதை வைச்சுக்கோ அங்க்கிள்”
          சுந்து தன்னுடைய இரண்டு  பஞ்சு மிட்டாய்களையும்  அவனுக்கு தாரளமாகக் கொடுக்க, தனக்கே பஞ்ச் கிடைத்தது போல இருந்தது ஸ்ரீதருக்கு.!.


9 comments:

நிலாமகள் said...

ப‌ஞ்ச்!

Rekha raghavan said...

சுருக்கமாக சொல்லி நச்சுன்னு முடித்த கதை. அருமை.

ரேகா ராகவன்.

வெங்கட் நாகராஜ் said...

பஞ்சு மிட்டாய் தந்து பஞ்ச் கொடுத்துவிட்டார்....

சரியான பஞ்ச் தான்!

கிருஷ்ணப்ரியா said...

அட, எதிர்பாராத திருப்பம்.

பல சமயங்களில் குழந்தைகள் நமக்கு எத்தனையோ கற்றுத் தருகிறார்கள்...

அருமை அய்யா

வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பர் பஞ்ச் ! ;)

அப்பாதுரை said...

சமீபத்தில் எனக்கு இது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டது. அவசரத்தில் பண்பிழக்கும் போது படிப்பினை வெட்கத்திலும் கேடாக அமைந்து விடுகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பஞ்ச்...

ஸ்ரீராம். said...

எனக்கும் வேறு வகையில் இது போன்றதொரு அனுபவம் நேர்ந்திருக்கிறது. வங்கிப் பணம் என்று அதைக் கதையாக்கியிருந்தேன்! கருணையினால் அல்ல..... அருமையான ஜெயகாந்தன் தலைப்பு!

மோகன்ஜி said...

மூவார் ! பண்பு பிச்சைக்காரனிடம் கூட இருக்கத்தான் செய்கிறது.. கதை சொல்வது ஒரு சிரமமான கலை. அதையும் எளிமையாய் சொல்வது இன்னமும் கடினம். என் எளிமையான பாராட்டுக்களை ஏற்றுக் கொள்ளும்!