(முன் குறிப்பு: திருக்குறள் கதைகள் என்று அந்த காலத்தில் ஆனந்த விகடனில் வந்தது, உங்களுக்கு நினைவிருக்கலாம்.இது அது போல் அல்ல! ஆனால், இதற்கு நீங்கள்ஆதரவு அளித்தால், தொடர்வேன் நிச்சயமாய்)
* * * * * * * * * * * *
ஒரு சந்தோஷ சமாச்சாரம்!
ஆனாலும் சுணங்கியே கிடந்தான், சுந்தர்.
ஆஃபீஸில் உள்ள அனைவருமே அவனைப் பாராட்டினார்கள். கொடுத்த ஸ்வீட்டுக்கு நன்றி கூறினார்கள்.இருந்தாலும் எதையோ பறி கொடுத்தவனைப் போல் இருந்தான், சுந்தர்.
”என்ன சுந்தர்..கங்க்ராட்ஸ்.. அந்த காலேஜ்ல பையனைச் சேர்த்தியே...அங்க தான் நிறைய கம்பெனிங்க காம்பஸ் இண்டர்வ்யூக்கு வருவாங்களாம்...வேலையைப் பற்றி கவலை இல்லையாம்”
”.....ம்...”
“ என்னப்பா, ஜாலியா இருக்க வேண்டிய நேரத்தில சோகமா இருக்கே? சிஸ்டர்க்கு உடம்பு சரியில்லையா?”
“ அதெல்லாமில்லப்பா”
“ அப்ப சொல்லு, உம் பிரச்னை தான், என்ன?”
” ஐந்து லட்சம் கேப்பிடேஷன் கேட்டாங்க..”
“ கொடுத்துட்டே இல்ல..”
“ இல்லப்பா..ஒரு பத்து உதைக்குது..என்ன பண்றதுன்னு தெரியலே!”
“ இப்ப யார்ட்டப்பா இருக்கும்..எல்லாரும் அட்மிஷன்ல இருப்பாங்க..அதுலேயும் மாசக்
கடைசி வேற..”
” என் கிட்ட இல்லப்பா..”
“ ஸாரிடா..கண்ணு...”
“ ஸாரிடா ராஜா..சிஸ்டர் கல்யாணத்துக்கு இப்பத் தான் பிஃப்லேர்ந்து எடுத்துட்டேன்”
அவனை ஒத்தவர்கள்..அவனை விட நிறைய சம்பளம் வாங்குபவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய் கழன்று கொள்ள.....
மிஞ்சியவர்கள் அவனும், கணேசனும் தான்!
கணேசன் ஒரு அட்டெண்டர்..குறைச்ச சம்பளக் காரன்!
” கவலையேப் படாதே, சுந்தர்..பத்து ரூபாய் தானே..ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணு. நான் தரேன் உனக்கு”
சொன்னார்போல் அடுத்த அரை மணியில் பத்தாயிரம் ரூபாய் பணத்துடன் வந்தான், கணேசன்.
ஆனால், அவன் காதில் உள்ள கடுக்கன்கள் மிஸ்ஸிங்!
சுந்தர் பரிதாபமாய் அவன் வெற்றுக் காதுகளைப் பார்க்க, கணேசன் சொன்னான்..
“ கடுக்கனை அடகு வைச்சேன்..பையனைப் போய் சேர்த்துட்டு வா, ராஜா..இப்ப இதுவா முக்கியம்..இரண்டு மாசம் கழிச்சு நீ காசு தந்தா, மீட்டுட்டுப் போறேன்”
அவன் கைகளை அப்படியே எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டான், சுந்தர்.
குறள் : உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே,
கடுக்கன் களைவதாம் நட்பு!