
ரொட்டீனாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் முதலில் பல் வலி வரும்..அதை rupar, அல்லது zupar போட்டு ஓரளவு சமாளிப்பேன்.மாத்திரை ஜாஸ்தி வாங்க மாட்டேன்..மூன்று தான் வாங்குவேன்..அதற்கு முடியாமல் போனால் தான், டாக்டரிடம் போவேன்..இந்த மாத்திரை ப்ளஸ் கார்கில் (அதாவது உப்பு வென்னீர் போட்டு கொப்பளிப்பது) செய்து சமாளித்து விடுவேன்.
அதிலிருந்து தப்பித்து விட்டால்,அடுத்து வருவது வயிற்று வலி! முன்னே மாதிரி காரம் எல்லாம் சாப்பிட முடிவதில்லை..ஆந்திரத்து சகோதரர்களுடன் ஊறுகாயை பச்சிடி என்று செல்லப் பேரிட்டு கபளீகரம் பண்ணிய நாட்களெல்லாம் GONE! ஹோட்டலுக்குச் சென்றால், சர்வருக்கு போதுமான டிப்ஸ் கொடுத்து, எங்கள் டேபிளில் சாம்பாரை வாளியுடன் பக்கத்தில் வைத்துக் கொள்வோம். நாங்கள்....இப்போது எல்லாம் போய் விட்டது..வயிற்றை கடபுடா பண்ணினால் கை வைத்தியம் தான்.கொஞ்சம் ஜீரகத்தை மெல்வேன்.அது அகத்தை(வயிறை!) சீராக்கி விடும்! இருக்கவே இருக்கிறது இஞ்சிச் சாறு..அல்லது சுண்டைக் காய் சூரணம்!அன்று மெனுவே தயிர்சாதமும், நார்த்தங்காய் ஊறுகாயும் தான்.வயிறு ஆட்டோமேட்டிக்காக சரியாய் போய் விடும்..டாகடரிடம் இதற்காக போய் அவருக்கு அனாவஸ்யமாக எல்லாம் தொந்தரவு கொடுக்க மாட்டேன்!
எனக்கு டாக்டர் என்றாலே அலர்ஜி!அதை விட அலர்ஜி இந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக் காரர்கள்! டாக்டரிடம் சாதாரண தலைவலிக்குப் போனால், உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று தான் ஆரம்பிப்பார்கள்!(எனது followers யாராவது டாக்டராக இருந்தால் மன்னிக்கவும்! நான் சொல்வது எதுவும் உங்களுக்குப் பொருந்தாது.அது கண்டிப்பாக உங்களைத் தவிர்த்துத் தான்!!)ஆனால் இந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக் காரர்கள் இருக்கிறார்களே அவர்கள் ... அப்பப்பா..எடுத்த உடனேயே”..ஸார்...உங்களுக்கு ஏதாவது திடீரென்று..”என்று தான் அபசகுனமாக ஆரம்பித்துத் தொலைப்பார்கள்! இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்காரர்களைப் பார்க்கும் போது அந்த எமன் கூட தேவலாம் போல இருக்கிறது! அவன் ஒரு தடவை தான் உயிரை எடுப்பான்!
சரி..சரி..விஷயத்துக்கு வருவோம்..இந்த பல் வலி..வயிற்று வலி..இது ரெண்டும் போய்ச் சேர்ந்த சில நாட்களில் வாழ்க்கையே போரடித்துப் போனால் என்ன செய்வது? அதற்குத் தான் இருக்கவே இருக்கிறது மூட்டு வலி! .வாராது வந்த மாமணி போல் சமயத்தில் வரும்!மூட்டு வலியை அவ்வளவாய் நான் பொருட்படுத்துவதே இல்லை..காரணம் கை வைத்தியத்தாலே காலை சரிப் படுத்திக் கொண்டு விடுவேன்...தினம்..தினம் கால் மூட்டுகளில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் மூட்டு வலி போய் விடுமாம்..யாரால் முடிகிறது, அந்த காரியம்!அதை சட்டை பண்ணாமல் விட்டு விட,அது அவ்வப்போது வந்து நானும் இருக்கிறேன் என்று சொல்கிறது..அதுவும் பல் வலி போல் தான்! முடியாமல் போனால் தான் டாக்டரிடம் போவேன்..டாக்டரும் ரொம்பவும் பக்கத்தில்... கால் கோடியில் தான் இருக்கிறார்!
அது சரி..தலைப்புக்கும் உன் வலிகளுக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்பீர்கள்..அதை கடைசியில் சொல்லலாம் என்றால் அதைச் சொல்ல முடியாமல் போய் விடுமோ என்கிற பயத்தில் இப்போதே சொல்லி விடுகிறேன்...மும்தாஜும் என்னைப் போல் மூட்டு வலியால் ரொம்பவும் சிரமப் பட்டவளாம்.மஹாராஜா ஷாஜஹானுக்கு எவ்வளவு கருணை உள்ளம் பாருங்கள்..அந்த அழகு ராணி கஷ்டப் படக் கூடாது என்று தான் தாஜ்மஹாலில் குறுகலாய் படிகள் வைத்தானாம் என்று ஒரு செவி வழிச் செய்தி!
இப்படித் தான் ஒரு நாள் என் கை வைத்தியத்திற்கு கேட்காமல் போகவே, டாக்டரிடம் போனேன்!
மூன்றாவது டோக்கன் தான்....முப்பது நிமிஷங்களில் டாக்டர் ரூமில் நான்!
டாக்டர்: முன்னாடியே வந்திருக்கீங்களா?
நான் : மூன்று மாசம் முன்னாடி வந்திருக்கேன்.
( லாப்டாப்பில் ஏதோ பார்க்கிறார்...இப்போதெல்லாம் எந்த டாக்டர் ஸ்டெத் வைத்துக் கொள்கிறார்? எல்லாமே லாப்டாப் தான்!)
டாகடர் : ( தலையை தூக்கி) என்ன பண்றது?
நான் : மூட்டு வலி டாக்டர்.
டாக்டர் : எத்தனை நாள்?
நான் : ஒரு வாரமா..
டாக்டர் : வெயிட் பார்க்கலாமா?
( பார்த்தார்...எழுபத்தி நான்கு கிலோ!)
டாக்டர் : வெயிட் கொஞ்சம் குறைக்கணும்..இது ஓவர் வெயிட்..இன்னும் ஐந்து கிலோ கூடினால் ‘ஒபிசிடி’ ஆயிடும். அதனால...
நான் : அதனால?????
டாக்டர் : பால் சேர்த்துக்கக் கூடாது.....
நான் : சரி டாக்டர்..
டாக்டர் ; அரிசி சாதத்தை குறைக்கணும்..கோதுமை சேர்த்துக்கலாம்.. நைட் சப்பாத்தி எடுத்துக்குங்க...எல்லாம் அளவு குறைச்சலா இருக்கணும்..
நான் : சரி..சப்பாத்திக்கு உருளைகிழங்கு மஸால் தொட்டுக்கலாமா?
டாக்டர் : கூடவே..கூடாது..உருளைக்கிழங்கை அடியோட மறந்துடணும்..டால் சைட் டிஷ்ஷா சேர்த்துக்கலாம்..
நான் : (மனத்துள்>>உருளைகிழங்கு மேல் உயிரையே வைச்சிருக்கேன்..இப்படி தொடவேக் கூடாதுங்கறாரே..) சரி டாக்டர்...
டாக்டர் : அப்புறம் அந்த வாழைக்காய்...
நான் : போச்சுடா?
டாக்டர் : எண்ணெய்யில் பொரிச்சது எதையும் தொட்டுக் கூட பார்க்காதீங்க..கரு வடாத்தையெல்லாம் கட்டோட மறந்துடணும்..
நான் : அடக் கண்றாவியே!
டாக்டர் : இந்த மாத்திரையை எழுதித் தரேன்..இரண்டு நாளைக்குப் போட்டுக்குங்க..
அப்புறம் இரண்டு நா கழிச்சு வாங்க..சில எக்ஸர்ஸைஸ் சொல்லித் தரேன்..
நான் : வரேன், டாக்டர்.
நான் ஏன் அங்கு போறேன்? மூட்டு வலியே தேவலை என்ற முடிவுக்கு வந்து மூன்று நாட்களாகிறது!!!!!