Saturday, April 30, 2011

ஆங்கரை டேஸ்!!!!!!

மீண்டும் ஆங்கரையின் ஒரு அழகிய அனுபவம்....

அப்போது நாங்கள் அக்ரஹாரத்தில் கிழக்கால இருந்தோம். நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஹரன்,குமார்,கட்ல இந்த மூன்று பேரும் ஃப்ரெண்ட்ஸ்..
இப்போது யார்..யார்...எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை..
இதில் ஹரன் எங்களுள் வசதியானவன். அப்பா இல்லை..அவன் தாத்தா தான் எல்லாமே! அவர் பெயர் ராமசர்மா! ஹரன் கொழுக்கு மொழுக்காக அமுல் பேபி கணக்காய் இருப்பான்.அவன் எழுத்தும் அழகாக குண்டு,குண்டாய் இருக்கும். அந்த காலக் கட்டத்தில். பேனா ஒருத்தன் வைத்திருந்தால் அவன் பெரிய ஆள் என்று அர்த்தம்.சிகரெட் குச்சி மாதிரி ஃபேஷனா ஒரு பேனா..அதை ஹரன் வைத்திருந்தான். எனக்கும், அவனுக்கும் ஒரு தடவை சண்டை வந்து,தெருவில் கட்டிப் புரண்டோம்.இந்த பேனா விஷயம் தான் என்று நினைக்கிறேன்.அதிர்ஷ்ட வசமாய் நான் ஜெயித்தேன்.(எப்போதும் நான் தான் அவனிடம் அடி வாங்குவது வழக்கம்)
தோத்துப் போன ஹரனுக்குப் ப்ரமாதமான ஆத்திரம்! அவன் அம்மா அப்போது வாசலுக்கு வரவே, என்னைப் பற்றி கோள் மூட்டி விட, நான் ஓடி வந்து விட்டேன்..
கொஞ்ச நேரத்தில் அவன் அம்மா எங்கள் வீட்டு வாசலில்!
“.. நான் வர வம்புக்கும் போக மாட்டேன்..வந்த வம்பையும் விட மாட்டேன்”
இந்த அற்புதமான வசனத்துக்கு எங்க அம்மா என்ன சொல்வார்களோ என்று ஆவலோடு நான் பார்க்க,
அம்மாவிற்கு இதற்கு “counter" போட தெரியாமல், நானும் அப்படித் தான் என்றூ சொல்ல சுவாரஸ்யமில்லாமல் போய் விட்டது. விஷயம் கேள்வி பட்டு, அம்மாவிடம் நான் வாங்கிய அடி இருக்கிறதே...
இதற்கு பேசாமல் ஹரனிடமே வாங்கியிருக்கலாம்!
(அடுத்த இரண்டாம் நாளில், நானும் ஹரனும் பேசி விட்டோம். ஆனால், எங்களால்,
ஜெய்யு மாமியுடன் அம்மாவுடனான நட்பு போய் விட்டது!)
குமாரோட அப்பா கணபதி மாமா வீட்டுப் பின்னால், ஹோட்டல் வைத்திருந்தார்.ஹோட்டல் காரரின் பையன் அநியாயத்திற்கு ஒல்லியாய் இருந்தான். அடுத்தவன் கட்ல..அவன் இயற் பெயர் நாகராஜன். படுத்துக் கொள்ளும் போது, வீட்டுக் கூரையிலிருந்து, கட்டு விரியன் குட்டி ஒன்று, அவன் மார்பில் விழ, அவன் குய்யோ, முறையோ என்று அலற, அன்று முதல் கட்ல ஆனான், அவன்!
சில பேரெல்லாம் வினோதமாய் இருக்கும்..
புலிக்குட்டி வைத்தி, ஆன்னிய வைத்தி, அன்பில் வைத்தி..இதெல்லாம் பெரியவர்கள் எங்கள் அளவில், லோலோ பாட்டி, வாத்தார், சிவன் கோவில் காக்கையன்..மீசை கிட்டு..அர்ஜுன மாமா...
சுந்தரம் என்கிற பெயரிலேயே நான்கு பேர் இருக்க, எங்கள் தாத்தா அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க ஒரு பாட்டு எட்டு கட்டினார்...

... மேலத்தெரு சுந்தரம், கீழத் தெரு சுந்தரம்,
நடுத்தெருவு சுந்தரம், குளத்து ராம சுந்தரம்....

எங்கள் நண்பர் குழாத்தில் கட்லையுடன், நாங்கள் ஜாஸ்தி வைத்துக் கொள்ள மாட்டோம்.அவனுக்கு எங்களை விட பலம் ஜாஸ்தி! பழயது ப்ளஸ் எருமைத் தயிரில் வளர்ந்த உடம்பு..அடித்தால், ’ங்கோய்’ என்று காது இரண்டு நாளுக்கு கேட்கும். யானை எப்படி எறும்பை விட்டு விடுமோ, அப்படி எங்களை மன்னித்து விடுவான்,கட்லை நாங்கள்
மறந்து போய் ஏதாவது குறும்பு செய்தால்......
அப்புறம்....
மணி மாமா!
தீபாவளி சமயம் எங்களுக்கெல்லாம் கந்தகம் சப்ளை செய்பவர்..ஒரு இரும்புக் குழாயில் அந்த கந்தகத் தூளைப் போட்டு, அதை திண்ணையில்( பக்கத்து வீடு) அடித்தால், எட்டு லக்ஷ்மி வெடி சத்தம்!
அவருக்கு ஒரு தம்பி!
கந்தன்!
கந்தன் எங்களுக்கெல்லாம் ட்ரீமர் மாதிரி..எங்களுக்கு பட்டம் செய்து கொடுப்பது...லால்குடியில் போய் கொக்கு குண்டு(கோலிக் குண்டை விட பெரியது)வாங்கித் தருவது, சிகரெட் அட்டை..அப்புறம் அந்த தீபாவளி பட்டாஸ் கட்டில் உள்ள வண்ண மிகு அவ்ரங் உட்டாங் படம் என்று ரொம்பவும் அட்டாச்டு!
பாவம் ஓரு நாள் சித்த சுவாதீனம் ஆகி, மேற்கால, கிழக்கால என்று தரதரவென்று ஓடி,,,அவனைப் பிடித்து, கட்டிப் போட்டு, குடம்..குடமாய் தலையில் ஜலம் ஊற்றி..
சின்னப் பசங்கள் எங்கள் எல்லாருக்கும் கந்தனைப் பார்த்து, ஓவென்று அழுகை வர..
அந்த கந்தன் .......
ஒரு நாள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிப் போய் விட,
இப்பாது கந்தனை நினைத்தாலும், மனதை என்னவே செய்யும்...
பாவம்...எல்லாருக்கும் உபகாரம் பண்ணும் ஜீவன்...
சித்த ப்ரமை தெளிந்து நன்றாக இருக்க, ப்ரார்த்தனை செய்வோம்!!!!!!

15 comments:

iniyavan said...

சார்,

நான் லால்குடி? நீங்க ஆங்கரையில எங்க சார்?

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆங்கரை டேஸ் அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//யானை எப்படி எறும்பை விட்டு விடுமோ, அப்படி எங்களை மன்னித்து விடுவான்,கட்லை நாங்கள்
மறந்து போய் ஏதாவது குறும்பு செய்தால்//

இந்த இடத்தில் கடக்க ரொம்பவும் சிரமப்பட்டேன் ஆர்.ஆர்.ஆர்.

அழிக்கமுடியாத நினைவுகளும் மனிதர்களும் ஆங்கரை டேஸை இன்னும் வேண்டும் என்று கேட்க வைக்கின்றன.

எழுதுங்கள் ப்ளீஸ்.

ரிஷபன் said...

அடுத்த இரண்டாம் நாளில், நானும் ஹரனும் பேசி விட்டோம். ஆனால், எங்களால்,
ஜெய்யு மாமியுடன் அம்மாவுடனான நட்பு போய் விட்டது!
இப்படித்தான் ஆகிவிடும்.. சின்னவர்கள் சண்டையில் பெரியவர்கள் தலையிட்டால்..
ஆங்கரை டேய்ஸ் ஒரு புத்தகமாய் வெளிவர என் ஆசை

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

அசத்தலான ’ஆங்கரை டேஸ்’...இதுவும் ’ஆர்.கே.என்’னின் ’மால்குடி டேஸ்’ போல் புகழ் பெற வாழ்த்துகள்.(ஞானும் ஆங்கரைக்காரன்தான்)

வசந்தமுல்லை said...

தீபாவளி சமயம் எங்களுக்கெல்லாம் கந்தகம் தயார் சப்ளை செய்பவர்..ஒரு இரும்புக் குழாயில் அந்த கந்தகத் தூளைப் போட்டு, அதை திண்ணையில்( பக்கத்து வீடு) அடித்தால், எட்டு லக்ஷ்மி வெடி சத்தம்

என் சிறு வயது குறும்புகளும் இப்படிதான் . நான் என் சிறு வயதுக்கே சென்று விட்டேன். அருமை !!!!!

sury siva said...

அடியேனும் ஆங்கரையில்
அறுபத்தி ஒன்பது வருடங்கள் முன்னே
அதிகாலை ஓன்றில்
அவசர அவசரமாக பிறந்து விட்டதாக‌
அம்மா சொல்லி அவளும் போய்
அஞ்சு வருடங்கள் ஆகிப்போய்விட்டது.

ஆங்கரையார் முன்னேற்ற கழகம் என்று நாம் ஒன்று ஆரம்பிக்கலாமா ?
அதற்கு தலைவராக, உங்களை நான் முன்மொழிகிறேன்.

சுப்பு தாத்தா.
http://pureaanmeekam.blogspot.com
http://Sury-healthiswealth.blogspot.com

middleclassmadhavi said...

//எல்லாருக்கும் உபகாரம் பண்ணும் ஜீவன்...
சித்த ப்ரமை தெளிந்து நன்றாக இருக்க, ப்ரார்த்தனை செய்வோம்!!!!!! // செய்வோம்.
ஆங்கரை தாண்டி அருகில் உள்ள ஊருக்கு சிறு வயதில் அடிக்கடி சென்றிருக்கிறேன் - ஆங்கரை டேஸ் தொடர வாழ்த்துக்கள்!

சிவகுமாரன் said...

நான் இலால்குடி காட்டூர் சர்க்கரை ஆலையில் 13 வருடம் 2008 வரை இருந்தேன். இலால்குடி, ஆங்கரை . மற்றும் மாந்துறை சிவன் கோயில்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஆங்கரையில் நல்லா சுளுக்கு எடுப்பாக . ( நெசமாலுமே சார் )

Chitra said...

கண் முன்னே அந்த பாத்திரங்களை கொண்டு வரும் எழுத்து நடை. பசுமையான நாட்களை - தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பசுமை நிறைந்த நினவுகள். வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

அருமையான நடை, அனைவரையும் வசீகரிக்கும்.

Yaathoramani.blogspot.com said...

படிப்பவர்கள் அனைவரின் சிறுவயது நினைவுகளை
கிளறிச் செல்லும் பதிவு
நடை மிக அருமை
எதிர் நின்று பேசுவது போல் உள்ளது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Tamilshruthi said...

அய்யா நானும் ஆங்கரை தான். வயது 26. என் தாத்தாவின் பெயர் கீழ தெரு வடமலை. உங்களுக்கு அவரை தெரியுங்கள? உங்களுக்கு எங்கள் ஊரில் (ஆங்கரை) யாதேனும் உதவி தேவை பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு உதவி செய்வதை பெரிதாக எண்ணுவேன். நன்றி.

Email id:- laltamil@yahoo.co.in
thitamil@gmail.com

mobile :- +91 9943945325

+91 7373738969