Tuesday, February 22, 2011

ஸார் வாள்!!!

கச்சலாய் .. நெற்றியில் ஸ்ரீ சூர்ணம்..பற்கள் கணிசமான அளவில் போயிருக்க வேண்டும் போல இருக்கிறது. பற்கள் இல்லாததை அந்த டொக்கு விழுந்த கன்னம் காண்பித்துக் கொடுத்தது.உற்சாகமான முகம். வாய் எப்போது பார்த்தாலும் ஏதோ கீர்த்தனை ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு இருக்க...
” ஸார் வாள் உங்க ஆஃபீஸா?”
என் நண்பன், கல்யாணமொன்றில் அவரை அறிமுகப் படுத்தி வைக்க, அவர் கேட்டது இது!
திருநெல்வேலி பக்கம் போல இருக்கிறது. அங்கு தான் இப்படி “ஸார் வாள்’ என்று கூப்பிடுவார்கள்.
அவர் பக்கத்தில் அமர்ந்து உண்ணும் சந்த்ர்ப்பம் கிடைத்தது. மனுஷர் விடவில்லையே..எல்லா ஐட்டங்களையும் இரண்டு தடவை..மூன்று தடவைக் கேட்டு வாங்கி சாப்பிட்டார்! துளிக் கூட லஜ்ஜை படாமல்!
ஷுகர்,அல்சர்,ப்ரஷர் என்று ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டையே உடம்பில் வைத்திருந்த எனக்கு அது ஒரு அதிசயமாக இருந்தது!எங்கு சாப்பிட சென்றாலும் கூடவே பயம் வந்து விடும்! எல்லாமே ரொம்ப ’லிமிட்’டாகத் தான் சாப்பிடுவேன் நான்.அவர் சாப்பிடுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து,பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவி சொன்னாள்: ‘இப்படி சாப்பிடுவது கூட ஒரு வித வியாதி என்று!’ நண்பன் சொன்னான் ’அவர் நல்ல வேலையில் இருந்தவராம். பிள்ளைகள் எல்லாவற்றையும் நன்றாகப் படிக்க வைத்து நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்ததில் எல்லா ‘ஐவேஜும்’ கரைந்து விட்டது! மனைவியும் கண்ணை மூடி விட தனியராகிப் போனார். அப்பாவிடம் ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், பசங்களும் கை கழுவி விட, இப்போது சாப்பாட்டுக்கே கஷ்டமாம்!பென்ஷன் எதோ ஆயிரத்து ஐநூறு வருமாம்! அவருடைய ரேஞ்ச்க்கு அது ஒரு வார சாப்பாட்டிற்கே பத்தாது. நல்ல வேளையாய் மனுஷனுக்கு நெருப்பு பெட்டி போல வீடு ஒன்று இருந்ததோ, பிழைத்தார்.’
எனக்கு அவரை ரொம்பப் பிடித்து விட்டது. ரொம்பவும் விதூஷகமாய் பேசுவார்.ஏதோ சில பேரைப் பார்த்தாலே (அவர்களை முன்னே..பின்னே கூடப் பார்த்திருக்க மாட்டோம்)அப்படியே அப்பிக் கொண்டு விட வேண்டும், நாள் பூராய் பேசிக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு பாசம்...ஆசை. சில பேரைப் பார்த்தால் காரணமில்லாமலே கோபம்..எரிச்சல் எல்லாம்.. .முன் ஜென்ம பந்தம் தொடர்கிறதோ? என்னவோ?
”ஸார் வாள் என்ன பார்க்கிறேள்..என்னது இது இப்படி சாப்பிடறானேன்னு பார்க்கிறேளா?
பாழும் வயிறு இருக்கே..என்ன பண்றது சொல்லுங்கோ?”
திகைப்பூண்டை மிதித்தாற் போல துடித்துப் போய் விட்டேன்...”ஸாரி..ஸார்..ஸாரி ஸார்” என்று ஏனோ நாக்கு குழறியது ஏகத்துக்காய்!
“அதுக்குப் போய் எதுக்கு ஸாரி சொல்றேள்?, அம்பி கொஞ்சம் ரஸம் இந்த தொன்னையிலே விடேன்’ என்று தன் வேலையைக் கவனிக்க ஆரம்பிக்க, நான் கை கழுவிக்
கொண்டேன்.
இது நடந்து ஒரு பத்து நாள் இருக்கும். ஏதோ வேலையாய் ராமனாதன் ஆஸ்பிட்டல் பக்கம் போய்க் கொண்டிருந்தேன். எதிர்த்தார்போல் ஸார் வாள்!
அவருக்கு நான் ஸார்வாள்! எனக்கு அவர் ஸார்வாள்!
“ அடேடே..ஸார்வாளா, செளக்யமா?”
“ செளக்யம் ஸார்.. நீங்க இங்க எப்படி?” எனக்கும் அவரைப் பார்த்ததில் பரம சந்தோஷம்!
” எங்க வேணா இருப்பேன் சார், நான்” என்று சொன்னவர் “ ஸார் ஒரு காஃபி சாப்பிடலாமா” என்றார்.
எனக்கு அவருடன் பேச வேண்டும் என்று கொள்ளை ஆசை.
“ காஃபி என்ன ..டிபனே சாப்பிடலாம்”
பக்கத்தில் மணீஸ் கஃபேக்குள் நுழைந்தோம்.
“ என்ன சார் வேணும்?” என்றார் சர்வர்.
“ சார் நீங்க” என்றார் சார்வாள்.
“ சார் நீங்க சொல்லுங்கோ.. நீங்க தான் என் கெஸ்ட்” என்றேன் பெருமையுடன்!
“ அப்பா..ரெண்டு இட்லி..மஸால் தோசை..ஆனியன் ஊத்தப்பம் ரெண்டு..பொங்கல் வடை...” மனுஷர் சொல்லிக் கொண்டே போனார். நல்லவேளை அப்போது தான் பேங்குக்கு போய் விட்டு வந்திருந்தேன்..கையில் வேணும்கிற அளவுக்கு பணம் இருந்தது!
என்னை துளிக் கூட ஏறெடுத்தும் பார்க்காமல் மனுஷன் சாப்பிட்டார். எனக்கு ஒரு லோட்டா ஷுகர்லெஸ் காஃபி மட்டும்!
கிட்டத் தட்ட பில் முன்னூறு ரூபாய்க்கு பழுத்து விட்டது! எவ்வளவு சார் ஆச்சு என்று ஒப்புக்குக் கூட கேட்கவில்லை மனுஷன்! எனக்கு அது விகல்பமாயும் தெரியவில்லை! ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்தால் தானே ஏமாற்றம்!
மனம் மிக மிக திருப்தியாய் இருந்தது எனக்கு!
அடுத்த நான்காவது நாள் கரந்தையில்!
பத்தாவது நாள் சாந்தப் பிள்ளை கேட்!!
பதினைந்து நாள கழித்து, பழைய பஸ் ஸ்டாண்ட்!!
இப்போது எனக்கு நிஜமாகவே எரிச்சல் வந்து விட்டது. கையில் காசு இல்லை.பக்கத்தில் ஏ.டி.எம் . இருந்ததால், பிழைத்தேன்!
” என்ன மனுஷர் இவர்...கொஞ்சம் கூட வெட்கப் படாமல்? இப்படி இருந்தால் எந்த பிள்ளை தான் வைத்துக் கொள்வான்?”
நான் செய்த புண்ணியம் கொஞ்ச நாள் மனுஷர் கண்ணில் படவில்லை!
காய்கறி வாங்க மார்க்கெட் பக்கம் நான்!
எதிர்த்தாற் போல ஸார் வாள்!
”அடேடே ஸார் வாள்..” உத்ஸாகமாய் அவர் என்னைப் பார்த்து வர, எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை..வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, நடையைக் கட்டினேன்.
“ஸார் வாள்..ஸார் வாள்...ஸார்.... ஸார்..”
குரல் தேய்ந்து கொண்டே வந்தது..
நான் ஏன் திரும்பிப் பார்க்கிறேன்? என்ன ஒரு ஈன ஜன்மமோ?
ஆனால் இரவு எனக்கு தூக்கம் வரவில்லை! ஏதோ தப்பு செய்தது போல் ஃபீலிங்! முதலில் அவரை எண்டெர்டெயின் பண்ணினது நான் தானே..ஒரு சகோதரன் போல
உரிமையில் தானே சாப்பிட்டார்..
எனக்கு இதற்கு என் செயலுக்கு ஒரு ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும் என்கிற ஆசை...அது சூரிய உதயத்தில் வெறியாகிப் போக...
அவர் இருந்த இடமெல்லாம் தேடினேன்.
ஊஹூம்..அவரைக் கண்ட பாடில்லை!
“ என்ன சார் பார்க்கிறீங்க..அவருக்கு ஆக்ஸிடெண்ட்.. நேற்று ராத்திரி லாரிக் காரன் ஒர்த்தன் அடிச்சுட்டுப் போய்ட்டான்.ஆள் ஸ்பாட்டிலேயே அவுட்!”
”ஐயையோ...”
ஒடுங்கிப் போய் விட்டேன், ஒடுங்கி!
ஒருவாறு சமாளித்துக் கொண்டு, பக்கத்து ஐயர் கடையில் பொங்கல் பொட்டலம் ஒன்று வாங்கி, என் வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் வைத்து விட்டுக் காத்துக் கொண்டிருந்தேன்.
” கா..கா...க்கா...”
நாபியிலிருந்து என்னை அறியாமல் கத்தி...கதறிக் கொண்டிருந்தேன். ஒரு காகம் சடாரென வந்து, அந்த பொட்டலத்தை காலால் தட்டி விட்டுச் சென்றது!
“ ஸார் வாளுக்கு எம் மேல இன்னுமா கோபம் தீரலே”
என் கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர்!

37 comments:

சிவகுமாரன் said...

இப்படித்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். நாமாகவே வலிந்து சென்று மாட்டிக் கொள்வது, பிறகு விலக முடியாமல் அவதிப்படுவது என்று. சார் வாள் மாதிரியான கேரக்டர் ஒருவர் எங்கள் ஊரில் இருந்தார். இனிக்க இனிக்க பேசுவார். மாட்டினால் தொலைந்தோம்.
மனித மனங்களைப் படிப்பதில் வல்லவராய் இருக்கிறீர்கள்.

sriram said...

ராம், அருமை.
கதையா, அனுபவமான்னு தெரியல, எதுவானாலும் நல்லா இருக்கு. மனதை கனக்க வைத்த எழுத்து

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மதுரை சரவணன் said...

உண்மைக் கதை மாதிரி இருக்கு.. அருமை..வாழ்த்துக்கள்

நிலாமகள் said...

நெகிழ்த்திட்டீங்க சார்... முடியும் போது எங்களுக்கும் நாவரண்டு தொண்டை அடைத்தது. ஒரு ஜாண் வயிறு படுத்தும் பாடிருக்கிறதே... அப்பப்பா....

குறையொன்றுமில்லை. said...

நான்கூட இதுபோல சார்வாள்களை பாத்திருக்கேன். முடிவு கலக்கிடுத்து. மனதை தொட்டகதை.

MANO நாஞ்சில் மனோ said...

மனசை பாரபடுத்திட்டீங்க சார்வாள்....

aarvie88 said...

really touching!!!!!!

RVS said...

ஸார் வாள் அசத்திட்டேள்!!! ;-)

bandhu said...

மிக நன்றாக வந்திருக்கிறது கதை!

Chitra said...

சார் வாளை மறக்க முடியாத படி செய்துட்டேளே! a touching story.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஸார்வாள் மாதிரி எனக்கும் நண்பன் ஒருவன் இருந்தான்.பைசா கொடுக்கும்போது கண்டுக்கக்கூட மாட்டேங்கறானேன்னு ஒரு எரிச்சல் வரும்.தூங்கி எழுந்தாக் காரணமே இல்லாம அவனைத் திரும்பவும் தேடும்.இதை என்னன்னு சொல்றது ஸார்வாள்?

ADHI VENKAT said...

அருமை. மனம் கனத்தது.!

அப்பாதுரை said...

சின்ன விஷயத்தை சுவையாகத் திரித்திருக்கும் ஓட்டமும் நடையும் அருமை (கதையைச் சொன்னேன்).

வை.கோபாலகிருஷ்ணன் said...

எனக்கும் இதுபோல நிறைய சார்வாள்களுடன் அனுபவம் உண்டு. சமயத்தில் பாவமாகவும் இருக்கும். வயிற்றுக்குத்தானே போனால் போகிறது. போகட்டும் என்று விட்டு விடுவேன். ஏதோவொரு பாசம் வேறு அவ்வப்போது ஒட்டிக்கொள்ளும் (நம் தந்தையைப்போல, தனயனைப்போல, பாட்டனைப்போல ... வயசானவர் என்று). அதனால் அவர்களை ஒரேயடியாக வெட்டிக் கொள்ளவும் முடியாது.

இந்தப் பதிவு மிகவும் அருமையாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு சார்வாள் இருக்கத் தான் செய்கிறார்..என்ன செய்ய சிவா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பாடா...இப்பவாவது வழி தெரிஞ்சதே, ஸ்ரீராம்க்கு!
ரொம்ப..ரொம்ப சந்தோஷம்..இது வெறும் கற்பனை தான்,ஸ்ரீ ராம்.ரொம்ப நாளா ப்ரசுரமான கதைகளையே போட்டுக் கொண்டிருக்கிறோமே..இப்ப சத்தியா எழுதவேயில்லையே என்கிற உணர்வில் ஐந்து நிமிஷத்தில் உருவான கதை இது!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி சரவணன். தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களும், விமர்சனங்களையும் மிகமிக உயர்வாய் நான் மதிக்கிறேன், சரவணன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்ன செய்வது மேடம்.. நமது பொருளாதாரத் திட்டங்கள் நிறைய ஸார்வாள்களை உற்பத்தி செய்துள்ளது.THE GAP BETWEEN HAVES AND HAVENOTS IS WIDENING DAY BY DAY இல்லையா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி லக்‌ஷ்மி மேடம்! அடிக்கடி நம் வலை தளத்துக்கு வருகை தாருங்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட வாங்க நாஞ்சில் மனோ!கொஞ்சம் variety ஆக எழுத வேண்டும் என்கிற ஆசை தான், இந்த கதை!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாங்க வந்தனா மேடம்..புதிதாக எம் வலை தளத்துக்கு வருகை தந்துள்ளீர்கள், நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

RVS உம்ம ’மன்னார்குடி டேஸ்’ மாதிரி எழுதணும்னு ஆசை..அது சரி நம்ம ப்ரோக்ராம் என்ன ஆச்சு?
கோவில்கள் தானா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி சித்ரா மேம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சுந்தர்ஜி பணம் செலவாயிற்று என்று கவலையே படாதீர்கள்..பணம் இன்று போகும்.. நாளை வரும் ..
உறவையும், நட்பையும் வெறும் பணம் காசுக்காக
காவு கொடுத்து விடாதீர்கள். கோடி ரூபாய் கொடுத்தால் கூட இந்த கதை ஸார் வாள் வர மாட்டார்! இல்லையா,சுந்தர்ஜி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்கள் வருகைக்கு நன்றி கோவை 2 டெல்லி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..அப்பாதுரை ஸார்வாள் நான் ஆஃபீசுக்கு ஓட்டமும்.. நடையுமாய் ஓடுவதை எங்கேயோ பார்த்திருக்கிறார் போல இருக்கிறதே?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி திரு வை.கோ.தங்கள் உத்ஸாகமூட்டும் விமர்சனம் என்னை இன்னும் எழுதத் தூண்டும்!

Thenammai Lakshmanan said...

மனம் கனத்துவிட்டது ஆர் ஆர் ஆர்

மோகன்ஜி said...

மூவார் முத்தே! சார்வால் நெகிழ்த்திவிட்டார். முடிவு ஒரு மனோத்தத்துவ நீட்சியில் மலர்ந்திருக்கிறது.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

’சார்வாள்’ல...கொன்னுட்டீங்க சார்...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

ஆர்.ஆர்.ஆர் சார்...உங்கள் வலைப்பூவில் இருந்த கிராஃபிக்ஸ் பூக்கள் எங்கே போயின? (அவை இல்லாததால் என் ஹைதர் காலத்து சிஸ்டம் கொஞசம் வேகமாகவே வேலை செய்கிறது...மிக்க நன்றி..சார்வாள்)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எழுதும் போது எனக்கும் அப்படித் தான் இருந்தது! அனாவசியமாய் ’அவரை சாகடித்திருக்க வேண்டாமே’ என்று நினைத்தேன். ஆனால், அந்த இறப்பில் தான் கதியின் ஜீவனே இருக்கிறது. நான் என் செய்வேன்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது, மோஹன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எல்லன் ஸார்..அந்த க்ராபிக்ஸ் பூக்கள் தானே?
காக்கா உஷ்.....!

ரிஷபன் said...

கதையல்ல நிஜம் என்றே தோன்றும் எழுத்து. முடிவில் மனசு கனத்துப் போனது. அந்த நேரத்தில் உதாசீனம் செய்தாலும் பின்னர் மனசுக்குள் அந்த நபரைத் தேடும் புத்தி.. நாம் சுபாவத்தில் ஏமாறுவதை ரசிக்கிறோம் உள் மனதில். அழகான பதிவு

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றி ரிஷபன்..ஆஹா..சுந்தர்ஜிக்கு இது வல்லவோ சூப்பர் பதில்! நம் ஆழ் நிலை மனது நாம் ஏமாறுவதை ரசிக்கிறது..மறு நாள் பொழுது புலரந்ததும், அந்த பாழும் மனம் பழசை வெகு சுலபமாய் மறந்து விட்டு
நம்மால் உதாசீனப் படுத்தப் பட்ட ....காயப் படுத்தப் பட்ட அந்த நட்புக்கு ஏங்குகிறது, சிறு குழந்தை போல்!
மனம் ஒரு குரங்கு தான், really!

aarvie88 said...

@ Aaranyanivas: I ve been visiting and reading ur blogs for a long tym now!!!! n ofcourse I ve been reading ur stories for even a longer tym being your daughter!!!!