Tuesday, February 8, 2011

இழக்கக் கூடாதது!

".... புல்லாக்குழலை எடுத்து வாசிப்பது தேவ குணம்..வாசிக்கத் தெரியாவிட்டால் பெட்டியில் வைப்பது மனித குணம்.அதை வைத்து அடுப்பு ஊதுவது..?"

* * * * *
கடிதத்தைப் பிரித்தான் பார்த்திபன்.
முத்துமுத்தான கையெழுத்து, அவனுக்கு இனம் காட்டியது. காயத்ரி!
' சஹ ஹ்ருதயருக்கு.."
என்று ஆரம்பித்தது அந்தக் கடிதம்!
மேலும் படித்தான்.
' காயத்ரி எழுதுவது. இங்கு வந்து ஆறு மாதங்களாகி விட்டது. இன்னமும், உங்களிடமிருந்து ஒரு லெட்டர்..கேவலம் ஒரு கார்டு கூட வராத நிலையில் எழுதுகிறேன். இது பரிதவிப்போ..ஆசையோ..உங்கள் மீது கரிசனமோ..அல்லது என் இயலாமையின் வெளிப்பாடோ.. இல்லை!
..கடிதம் என்றவுடன் ஞாபகம் வருகிறது. திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் என் அப்பா லெட்டர் போட்டிருந்தார். ' யார் உனக்கு லெட்டர் எழுதியது' என்று துருவி,துருவி நீங்கள்
கேட்டது எனக்கு விழுந்த முதல் அடி!
' என் அப்பா' என்று நான் சொன்னதுக்கு அதை நம்பாமல் கல்யாணப் பத்திரிகை எடுத்து பெயரை...இனிஷியலை verify செய்தீர்களே?
இது எனக்கு கிடைத்த இரண்டாவது அடி!
(... என்னடா பெரிய இழவாப் போச்சு! புருஷங்காரன் பொண்டாட்டிக்கு லெட்டர் வந்தா, என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டானா?)
மேற்கொண்டு படித்தான், பார்த்திபன்.
' போகட்டும்..கல்யாணமாகி இரண்டு வருடங்களாகிறதே..எங்காவது வெளியில் ஒரு சினிமா..ட்ராமா..என்று கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று தோன்றியதா உங்களுக்கு ? வெட்கத்தை விட்டுக் கேட்டால், கல்யாணத்துக்கு முன்பு கண்டவனுடன் வெளியில் சுற்றியிருப்பாய்..அதெல்லாம் இங்கு நடக்காது என்று சம்பந்தா,சம்பந்தமில்லாமல் பேசினீர்களே..தெருவிலே என்னைப் பார்ப்பது அபூர்வம் என்று என் தோழியரே சொல்லிக் கேடிருக்கிறேன்...எனக்கு இந்த பேச்சு தேவை தானா? ஒரு படித்த, பண்புள்ள ஆண்மகன் பேசும் பேச்சா இது?'
( ஆமாம்..அப்படித் தான் பேசுவேன்..கோபத்தினால் பற்களை நற நறவென கடித்தான். நெற்றிப் பொட்டு இலேசாக துடிக்க ஆரம்பித்தது.)
'..ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு. நம் 'மேரேஜ் டே' அன்று புதுப் புடவை கட்டிக் கொண்டு, உங்களை வரவேற்க ஆவலுடன் வாசலில் காத்து இருந்தேன். அன்று கூட ' எவன் இன்று வருகிறான்/' என்று நக்கலாய் கேட்டீர்கள்.பொறுக்க முடியாத எரிச்சலில் ' இப்ப எம்புருஷன் வர்ர நேரம். அவனை நாளைக்கு வரச் சொல்லத் தான் காத்துக் கிட்டு இருக்கேன்' என்று நான் சொன்னதுக்கு, பழுக்க பழுக்க இரும்புக் கரண்டி கொண்டு காய்ச்சி இழுத்தீர்களே, பாவி...'
( என்னடி மரியாதை குறையுது? ஆயிரம் மைல் தள்ளி நின்னா, என்னவேணாலும் எழுதலாங்கிற தைரியமா? இங்க தானே வந்தாகணும்.....உன்னை..கழுத்திலுள்ள பச்சை நரம்பு புடைத்து, கைகளை ஒரு விதமாக முறுக்கிக் கொண்டான், பார்த்திபன்)
கடிதம் மேலும் தொடர்ந்தது.
'...அப்பப்பா...என்ன அவஸ்தை? உங்களுடன் குப்பைக் கொட்டிய அந்த நரக நாட்களை இப்போது நினைத்தாலும் போதும்..உடம்பு முழுவதும் நூறு கரப்பான் பூச்சிகள் ஊர்வது போல் ஒரு அருவெறுப்பு!
தன்னம்பிக்கை குறைந்து..எனக்கு நானே பேசிக் கொண்டு..என்ன அவஸ்தை இது? சமயத்தில் குறை உங்கள் மீதா..அல்லது என் மீதாஎன்று எனக்கே சந்தேகம் வந்து விடும்? அவ்வப்போது ஜன்னல் வழியே ( வாசல் கதவைத் திறக்க முடியாது.பூட்டி விட்டு சாவியை ஆஃபீசுக்கு எடுத்துக் கொண்டு சென்று விடுவீர்களே!) தெருவில் போகும் மனிதர்களைப் பார்த்து, குறை என் மீது இல்லை என்று எனக்கு நானே சமாதானப் படுத்திக் கொள்வேன்.
புல்லாங்குழலை எடுத்து வாசிப்பது தேவ குணம். வாசிக்கத் தெரியாவிட்டால், அதற்கு உரிய மரியாதை கொடுத்து, உள்ளே பெட்டியில் வைப்பது மனித குணம். அதை வைத்து அடுப்பூதுவது அரக்க குணம்.ஆனால் அந்த புல்லாங்குழலையே நெருப்பில் போட்டு பொசுக்குவதை என்னவென்று சொல்வது?
வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண்..கேட்டதெல்லாம் கிடைப்பதால், செல்லம் கொடுத்து, வளர்க்கப் பட்ட பெண்களுக்கே உரித்தான திமிரும்..பிடிவாதமும் இல்லாத நற்குணம்...பெண் விடுதலைப் பற்றி கல்லூரி பேச்சுப் போட்டிகளில் பரிசு வாங்கிய திறமை..படிப்பில் முதல் மூன்று ரேங்க்குக்குள் வரும் புத்திசாலித்தனம்...
எல்லாமே உங்களிடம் வந்து இப்படி பஸ்மமாகிப் போய் விட்டதே!
இந்த கடிததின் ஆரம்பத்தில் சஹ ஹ்ருதயரே என்கிற 'ஸல்யூட்டேஷன்' கூடஒரு சராசரி இந்தியப் பெண்ணின் மேன்மையை தன் பதி பற்றி குறிப்பதற்காகத் தான்!
(கடிதத்தை மேலும் தொடர்ந்தான், பார்த்திபன்.)
கடைசியாக ஒன்றே ஒன்று.
உங்களிடம் இத்தனை வருடம் குடித்தனம் நடத்தியதில் இழக்கக் கூடாத ஒன்றை இழந்து விட்டேனோ என்று தோன்றுகிறது.
தாலி கட்டிய கணவனிடமே ஒரு பெண் தான் சோரம் போய் விட்டதாகக் கருதினால் அது எவ்வளவு பெரிய சோகம் என்பது தங்களுக்குப் புரிகிறதா, மிஸ்டர் பார்த்திபன்!?'

இந்நேரம் கடிதத்தைப் படித்துக் கொண்டிருப்பானோ என்கிற நினைப்பு வர,
மனம் குமைந்து குலுங்கி,குலுங்கி காயத்ரி அழுதுக் கொண்டிருக்க.....
அதே சமயம், அந்த கடிதத்தை சுக்கு நூறாய் கிழித்துக் கொண்டிருந்தான், பார்த்திபன்!
(பின் குறிப்பு: இந்த சிறுகதை ராஜம் ஆகஸ்ட் 1993 இதழில் வந்தது)

14 comments:

Chitra said...

நல்லா இருக்குதுங்க... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

R. Gopi said...

புல்லாங்குழலை அடுப்பில் போட்டால் எரிந்து போவது அந்தக் காலம். அவை புனர்ஜென்மம் எடுப்பது இந்தக் காலம். எ(ரி)றிந்த குழலையும் அடையாளம் கண்டு நன்கு ஊதத் தெரிந்தவர்கள் உண்டு இப்போது.

அருமையான கதை சார்.

Thenammai Lakshmanan said...

மிக அதிரடியான கதை.ஆர் ஆர் ஆர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

இவ்வளவு வக்கிரமான ஆண்களும், இவ்வளவு பொறுமையான பெண்களும், உங்கள் கதை வெளியான 1993 க்கு முன்பு இருந்திருப்பார்களோ என்னவோ. கதையைப் படிக்கும் போதே மிகவும் மன்துக்கு சங்கடமாக உள்ளது.

இன்றைய டீ.வி. சீரியல் பார்க்கும் பெண்கள் எதற்குமே பயப்பட மாட்டார்கள். டீ.வி. சீரியலில் நிறைய வில்லிகள் வருகிறார்கள். சதித்திட்டம் தீட்டுகிறார்கள். புருஷனையே அடியாட்களை ஏவி, செம்மையாக அடிக்கச் சொல்லுகிறார்கள். நீங்கள் சொல்லுவது போல இங்கொன்றும் அங்கொன்றுமாக இன்றும் சில இடங்களில் நடைபெறலாம்.

ஆனால் பெரும்பாலும் அப்படியில்லை. இன்று அனைவரும் கல்வி அறிவு பெற்று, வேலை வாய்ப்புகள் பெற்று, உயர் பதவிகளில் சாதனைப் பெண்களாக திகழ்ந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

புல்லாங்குழல் உதாரணம் இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமே; அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

raji said...

எனக்கு பிடித்த வரிகள்:

//புல்லாங்குழலை எடுத்து வாசிப்பது தேவ குணம். வாசிக்கத் தெரியாவிட்டால், அதற்கு உரிய மரியாதை கொடுத்து, உள்ளே பெட்டியில் வைப்பது மனித குணம். அதை வைத்து அடுப்பூதுவது அரக்க குணம்.ஆனால் அந்த புல்லாங்குழலையே நெருப்பில் போட்டு பொசுக்குவதை என்னவென்று சொல்வது?//

கதையின் நடை நன்றாக உள்ளது.
ஆனால் இப்பொழுதுள்ள பெண்கள் புல்லாங்குழலாக தான்
இருக்க வேண்டும் என்றோ தன்னை ஒருவர் ஆராதிக்க வேண்டுமென்றோ
எதிர்பார்த்து நிற்பதில்லை என்பதுதான் உண்மை

அப்பாதுரை said...

பிரமாதம். நாலஞ்சு தடவை படிச்சேன். இந்த வரியென்றில்லாமல் நிறைய இடங்கள் அருமை. கொஞ்சம் கொஞ்சமா தோண்டி கடைசியில ஆளே உள்ள விழுந்த உணர்வு. மனமார்ந்த பாராட்டுக்கள்.

நிலாமகள் said...

//தாலி கட்டிய கணவனிடமே ஒரு பெண் தான் சோரம் போய் விட்டதாகக் கருதினால் அது எவ்வளவு பெரிய சோகம் //

தங்கள் வழக்கமான குறும்புகள் இல்லையென்றாலும் (அடைப்புக் குறிக்குள் இருப்பன பார்த்திபன் பாத்திரப் படைப்பை தெளிவாக்கவே... ரசிக்கும் குறும்பு அல்ல) அழுத்தமான கதை. பாராட்டுக்கள். இன்னும் நூறாண்டுகள் கழிந்தும் இப்படியும் சிலர் கட்டாயமிருப்பர்....கல்வியும், கால் சென்டர் வேலையும் தாண்டி கற்பிதங்கள் சூழ் மனித மனம் சுமக்கும் உடல்கள் ஊடே.

குறையொன்றுமில்லை. said...

கதை நல்லாவே இருக்கு. தற்போது நல்ல மாற்றம் வந்துதானிருக்கு.

Nagasubramanian said...

very nice !

ADHI VENKAT said...

கதை நல்லா இருக்கு சார். புல்லாங்குழல் பற்றிய வரிகள் அருமை.

RVS said...

சஹ ஹ்ருதையர் என்று ஆரம்பித்து இருதயத்தை நொறுங்கச் செய்யும் செயல்களை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள். பிரமாதமான கதை. 1993 லேயேவா? ;-)

வசந்தமுல்லை said...

பழைய கதை இன்றைய நடை முறைக்கு வராது. ஆனாலும் உம்ம நடைக்காக ஆவலாக இருக்கிறது படிக்க!!!!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

என்னதான் பெண் விடுதலை, மறுமலர்ச்சி என்று கூவினாலும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு காயத்ரி குமுறிக்கொண்டுதான் இருக்கிறாள்....பார்த்திபன்கள் படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.நல்ல கதை.

ப.கந்தசாமி said...

நல்ல சிறுகதை.ஆனால் மனதை வேதனைப் படுத்துகிறது.