Friday, November 12, 2010

மசால் தோசையும்...'மைசூர் கேஃப்'பும்...........

ஏற்கனவே கோதையாறு லோயர் கேம்ப் பற்றி
சொல்லி இருக்கிறேன். நாகர் கோவிலில் இருந்து அம்பாடி எஸ்டேட் வழியாகப் போக வேண்டும். 'கர்ரூஸ்' மாதிரி வீடுகள்..ஒரு அடுக்கில் ஐந்து வீடுகள்..அதற்குப் பிறகு பத்து
படி மேல் ஏறினால், அடுத்த அடுக்கு. இப்படியே
போய்க் கொண்டிருக்கும்.
கொஞ்சம் மேலே சென்றால், அங்கு ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷெட். மேலே புகை போக்கியில் இருந்து எப்போதும் புகை வந்து கொண்டிருக்கும்.விடாமல் பாட்டு தான்.
அப்போது ஃபேமஸாய் இருந்த 'முத்துச்
சிப்பி மெல்ல, மெல்ல நடந்து வரும் ' என்ற
சினிமா பாட்டு..அது விட்டால் ஒரு கிறிஸ்டியன் கரோல்..' ஸர்வ லோகாதிப நமஸ்காரம்..' என்று..அதை விட்டால் ' தேவாதி தேவனே வா..கார்த்திகேயனே வா..எந்தன் உள்ளம் அழைக்குதிங்கு வாராய்' என்ற பாடல்..
அது தான் எங்கள் மைசூர் கேஃப் !
அண்ணா முதல் தடவையாய் அங்கு எங்களுக்கு டிஃபன் வாங்கி தந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அண்ணா ப்ராஜக்ட்டில் அட்மினிஸ்ட்ரேஷன் பார்த்ததினால் ஏக மரியாதை!
" ஸார்...உங்க பசங்களா? "
" தம்பி என்ன படிக்கிறீங்க.."
" தம்பி நீங்க.."
என்று பொடியன்களான எங்களுக்கும்
மரியாதை. ஆலையில்லா ஊருக்கு அது ஒன்று தான் இலுப்பப் பூ என்பதால் எப்போது பார்த்தாலும் செம கூட்டம் இருக்கும்.
அந்த சமயத்தில் தான், நாங்கள் ராணி படிக்க ஆரம்பித்தோம்..தினத்தந்தியில் 'கன்னித் தீவு' படிக்க ஆரம்பித்தோம். ராணியில் உள்ள
படங்களைப் பார்த்து, படம் வரைய பழகினோம். இன்னமும் ராணியில் வந்த அந்த 'குரங்கு குசலா'
கார்ட்டூன் ஞாபகம் இருக்கிறது.
ஆஹா..அந்த மைசூர் கேஃப் ஐ அம்போ என்று விட்டு விட்டோமா? இல்லை..இல்லை..இதோ, விஷயத்துக்கு வருகிறேன்
அந்த ப்ராஜக்டின் ஹெட் ஒரு 'எக்ஸிக் யூட்டிவ் எஞ்சினீர்'. அவர் ஒரு நாள் 'ரவுண்ட்ஸ்'
போகும் போது, பசித்தது போல இருந்தது. ' வாய்யா' என்று அண்ணாவையும் கூப்பிட்டுக் கொண்டு 'மைசூர் கேஃப்' சென்றார்.
சூடாக மசால் தோசை ஆர்டர் செய்து இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, அந்த 'எக்ஸிக் யூட்டிவ் எஞ்சினீர்' வினோதமாய் ஒரு காரியம் செய்தார். அவர் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் போண்டா வைத்திருந்த பேப்பரை யாரும் பார்க்காத போது 'லபக்' செய்தார். அண்ணா பார்த்தவுடன் 'உஸ்'என்று சைகை காண்பித்து, 'ஆஃபீசுக்கு வா சொல்றேன்' என்றார் மெதுவாக.
அண்ணாவிற்கு ஒரே குழப்பம்!
ஆஃபீஸ் போனதும் முதல் வேலையாய்
அந்த EE , ப்யூனைக் கூப்பிட்டு STORE KEEPER ட்ட, நான் கேட்டதா இந்த STORE RECEIPT VOUCHER ஐ வாங்கிண்டு வா' என்றவர், அண்ணாவைப் பார்த்து 'இப்ப கூத்தை பாரு' என்று சிரித்தார்.
கொஞ்ச நேரத்தில அந்த 'எஸ்.கே' 'துண்டைக் காணோம்..துணியைக் காணோம்'
என்று ஓடி வந்தார்.
' ஸார்..அந்த வவுச்சர் இல்லியே ஸார்..உங்க கிட்ட கையெழுத்துக்கு வைச்சிருக்கேனோ'
' எனக்கு பார்த்த ஞாபகம் இல்லியே,
நீயே பாரு என் டேபிள்ள..'
' ஸார்...இல்லியே..ஸார்..'
' எங்கே போச்சு, அது?'
'எஸ்.கே' யின் முகம் பரிதாபமாக இருந்தது.
கொஞ்ச நேரம் அவரை தவிக்க விட்டு, அந்த EE 'இதுவா, பாரு' என்று பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர் எடுத்தார்.
அது மைசூர் கேஃபில் பக்கத்து நபர் போண்டா சாப்பிட்டு போட்ட பேப்பர்..
அந்த SRV !
' என்னய்யா ஆஃபீஸ் நடத்திறீங்க..இதோ இப்பவே உனக்கு ஒரு 'மெமோ' கொடுக்கப் போறேன்..'
ஒரு 'மெமோ'வில் ஆரம்பித்து கொஞ்சம் அடங்கி, ஒரு 'வார்னிங் லெட்டர்' குடுக்கலாம்னு, தீர்மானிச்சு, கடைசியில ஒரு காட்டுக் கத்தலோட விஷயம் முடிஞ்சது!
அன்னி ராத்திரி அண்ணா இந்த விஷயம் சொல்லிட்டு ஒன்று சொன்னது, இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
' ஆஃபீஸர்ங்கிறவன் சீறலாம்..ஆனா கடிக்கக் கூடாது ! '

17 comments:

R. Gopi said...

நல்லா இருக்கு

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள். குரங்கு குசலா பற்றி நேற்று தான் என் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். பகிர்வுக்கு நன்றி சார்.

ஸ்வர்ணரேக்கா said...

//காட்டுக் கத்தலோட விஷயம் முடிஞ்சது!//

//ஆஃபீஸர்ங்கிறவன் சீறலாம்..ஆனா கடிக்கக் கூடாது//

கரெக்ட்ங்க....

RVS said...

//ஆஃபீஸர்ங்கிறவன் சீறலாம்..ஆனா கடிக்கக் கூடாது//
நிதர்சனமான உண்மை அது. நல்ல பகிர்வு சார்!

கே. பி. ஜனா... said...

வடை போச்சே! இல்லை, வடை வெச்சிருந்த பேப்பர் போச்சே!

Anonymous said...

//ஆஃபீஸர்ங்கிறவன் சீறலாம்..ஆனா கடிக்கக் கூடாது ! //

புது தத்துவம் :)

ADHI VENKAT said...

அருமையான நினைவுகள். நீங்கள் சொல்லிய பாங்கும் அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

SRV எப்படியோ ஹோட்டலுக்கு வந்ததுள்ளது. அதன் மேல் போண்டோவும் பறிமாறப்பட்டுள்ளது. அண்ணாவுடன் வந்த EE ஏதோ வந்தோமா, சூடான மஸால் தோசையை முறித்துப்போட்டோமா என்றில்லாமல், பக்கத்து சீட்டில் போண்டோ வைத்துக்கொடுத்த பேப்பரை லபக்கியதோடு அல்லாமல், ஸ்டோர்கீப்பரிடம் அதே SRV ஐ, எடுத்துவருமாறி கூறியதும், மேமோவில் ஆரம்பித்து, வார்னிங் லெட்ட்ருக்கு இறங்கி வந்து பின் காட்டுக்கத்தலுடன் அவரை கதி கலங்கச்செய்ததும், கவனக்குறைவாக இருந்த ஸ்டோர் கீப்பரின் போதாதகாலம் தான். அந்த ஸ்டோர் கீப்பரின் முகம் ‘குரங்கு குசலா’ கார்ட்டூன் போல ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ரிஷபன் said...

பொட்டலம் கட்டி வரும் பேப்பரில் பல சுவாரசியமான விஷயங்கள் படித்திருக்கிறேன்.. ஆனால் ஆபீஸ் டாகுமெண்ட்டில் பொட்டலம் இதுதான் முதல் தடவை..

பத்மநாபன் said...

அரசாங்க அலுவலகத்தின் அலட்சிய போக்கையும்...அதிலும் வேலையே குறியாக இருப்பாரையும் இந்த நிகழ்வு கதை கொண்டுவந்த்துள்ளது.

அப்பாதுரை said...

superb!
என் மனதில் நாற்பது வருடங்கள் தொலைந்து போயின
>>குரங்கு குசலா, கன்னித்தீவு

கடைசி வரி அருமை.

vasan said...

/' ஆஃபீஸர்ங்கிறவன் சீறலாம்..ஆனா கடிக்கக் கூடாது ! '/ இது பிராக்டிக‌லி எ சூப்ப‌ர் பாலிசி.
க‌ன்னித்தீவு இன்னும் த‌ந்தியில் தொட‌ர்கிற‌து, ஆனால் ப‌ட‌ங்க‌ள் மிக‌ச் சாத‌ர‌ண‌மாய்.
'குர‌ங்கு குசால‌',தான், அர‌சிய‌ல் கார்ட்டூனாய் தொட‌ர்கிற‌துன்னு நின‌க்கிறேன்.

Muruganandan M.K. said...

"..அது மைசூர் கேஃபில் பக்கத்து நபர் போண்டா சாப்பிட்டு போட்ட பேப்பர்...." சூப்பர்.
என்னையும் எனது நினைவுகளுக்குள் ஆழ வைத்தது உங்கள் பதிவு.

Muttuvancheri S.Natarajan said...

நல்ல கதைங்க ... ஆனா தீர்ப்பு வேறங்க..
" போண்டா திங்க போனாலும் போகாதீங்க ஆபீசர் கூட "

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

இப்போதெல்லாம் நம்மோட ஷாபிங் போது பிளாஸ்டிக் கவர்ல பேக் பண்ணி வாங்கிட்டு வர்றோம். அந்த காலத்துல பேப்பர்ல பொட்டலமா மடிச்சுக் கொடுப்பாங்க. வீட்டுக்கு வந்து அந்த பொட்டலப் பேப்பரப் படிக்கறச்சே உண்டாகற இன்பமே அலாதி. நல்ல பதிவு சார் ! பாம்புதான் சீறலாம்... கடிக்கப்படாது -ன்னு சொல்வாங்க. 'அதிகாரிகளுமா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த இடுகைக்கு விமர்சனம் தந்த அனைவருக்கும் நன்றி!
தங்கள் மேலான வருகைக்கும் நன்றி! ( நல்ல வேளை
ஃபிமேல் ப்லாக்கர்ஸ் யாரும் விமர்சனம்
எழுதவில்லை!!)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா...ஸ்வர்ணரேகா...கோவை 2 டில்லி இருக்காங்கப்பா.....

தங்கள் வருகைக்கும் நன்றி!!!