கச்சலாய் .. நெற்றியில் ஸ்ரீ சூர்ணம்..பற்கள் கணிசமான அளவில் போயிருக்க வேண்டும் போல இருக்கிறது. பற்கள் இல்லாததை அந்த டொக்கு விழுந்த கன்னம் காண்பித்துக் கொடுத்தது.உற்சாகமான முகம். வாய் எப்போது பார்த்தாலும் ஏதோ கீர்த்தனை ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு இருக்க...
” ஸார் வாள் உங்க ஆஃபீஸா?”
என் நண்பன், கல்யாணமொன்றில் அவரை அறிமுகப் படுத்தி வைக்க, அவர் கேட்டது இது!
திருநெல்வேலி பக்கம் போல இருக்கிறது. அங்கு தான் இப்படி “ஸார் வாள்’ என்று கூப்பிடுவார்கள்.
அவர் பக்கத்தில் அமர்ந்து உண்ணும் சந்த்ர்ப்பம் கிடைத்தது. மனுஷர் விடவில்லையே..எல்லா ஐட்டங்களையும் இரண்டு தடவை..மூன்று தடவைக் கேட்டு வாங்கி சாப்பிட்டார்! துளிக் கூட லஜ்ஜை படாமல்!
ஷுகர்,அல்சர்,ப்ரஷர் என்று ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டையே உடம்பில் வைத்திருந்த எனக்கு அது ஒரு அதிசயமாக இருந்தது!எங்கு சாப்பிட சென்றாலும் கூடவே பயம் வந்து விடும்! எல்லாமே ரொம்ப ’லிமிட்’டாகத் தான் சாப்பிடுவேன் நான்.அவர் சாப்பிடுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து,பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவி சொன்னாள்: ‘இப்படி சாப்பிடுவது கூட ஒரு வித வியாதி என்று!’ நண்பன் சொன்னான் ’அவர் நல்ல வேலையில் இருந்தவராம். பிள்ளைகள் எல்லாவற்றையும் நன்றாகப் படிக்க வைத்து நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்ததில் எல்லா ‘ஐவேஜும்’ கரைந்து விட்டது! மனைவியும் கண்ணை மூடி விட தனியராகிப் போனார். அப்பாவிடம் ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், பசங்களும் கை கழுவி விட, இப்போது சாப்பாட்டுக்கே கஷ்டமாம்!பென்ஷன் எதோ ஆயிரத்து ஐநூறு வருமாம்! அவருடைய ரேஞ்ச்க்கு அது ஒரு வார சாப்பாட்டிற்கே பத்தாது. நல்ல வேளையாய் மனுஷனுக்கு நெருப்பு பெட்டி போல வீடு ஒன்று இருந்ததோ, பிழைத்தார்.’
எனக்கு அவரை ரொம்பப் பிடித்து விட்டது. ரொம்பவும் விதூஷகமாய் பேசுவார்.ஏதோ சில பேரைப் பார்த்தாலே (அவர்களை முன்னே..பின்னே கூடப் பார்த்திருக்க மாட்டோம்)அப்படியே அப்பிக் கொண்டு விட வேண்டும், நாள் பூராய் பேசிக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு பாசம்...ஆசை. சில பேரைப் பார்த்தால் காரணமில்லாமலே கோபம்..எரிச்சல் எல்லாம்.. .முன் ஜென்ம பந்தம் தொடர்கிறதோ? என்னவோ?
”ஸார் வாள் என்ன பார்க்கிறேள்..என்னது இது இப்படி சாப்பிடறானேன்னு பார்க்கிறேளா?
பாழும் வயிறு இருக்கே..என்ன பண்றது சொல்லுங்கோ?”
திகைப்பூண்டை மிதித்தாற் போல துடித்துப் போய் விட்டேன்...”ஸாரி..ஸார்..ஸாரி ஸார்” என்று ஏனோ நாக்கு குழறியது ஏகத்துக்காய்!
“அதுக்குப் போய் எதுக்கு ஸாரி சொல்றேள்?, அம்பி கொஞ்சம் ரஸம் இந்த தொன்னையிலே விடேன்’ என்று தன் வேலையைக் கவனிக்க ஆரம்பிக்க, நான் கை கழுவிக்
கொண்டேன்.
இது நடந்து ஒரு பத்து நாள் இருக்கும். ஏதோ வேலையாய் ராமனாதன் ஆஸ்பிட்டல் பக்கம் போய்க் கொண்டிருந்தேன். எதிர்த்தார்போல் ஸார் வாள்!
அவருக்கு நான் ஸார்வாள்! எனக்கு அவர் ஸார்வாள்!
“ அடேடே..ஸார்வாளா, செளக்யமா?”
“ செளக்யம் ஸார்.. நீங்க இங்க எப்படி?” எனக்கும் அவரைப் பார்த்ததில் பரம சந்தோஷம்!
” எங்க வேணா இருப்பேன் சார், நான்” என்று சொன்னவர் “ ஸார் ஒரு காஃபி சாப்பிடலாமா” என்றார்.
எனக்கு அவருடன் பேச வேண்டும் என்று கொள்ளை ஆசை.
“ காஃபி என்ன ..டிபனே சாப்பிடலாம்”
பக்கத்தில் மணீஸ் கஃபேக்குள் நுழைந்தோம்.
“ என்ன சார் வேணும்?” என்றார் சர்வர்.
“ சார் நீங்க” என்றார் சார்வாள்.
“ சார் நீங்க சொல்லுங்கோ.. நீங்க தான் என் கெஸ்ட்” என்றேன் பெருமையுடன்!
“ அப்பா..ரெண்டு இட்லி..மஸால் தோசை..ஆனியன் ஊத்தப்பம் ரெண்டு..பொங்கல் வடை...” மனுஷர் சொல்லிக் கொண்டே போனார். நல்லவேளை அப்போது தான் பேங்குக்கு போய் விட்டு வந்திருந்தேன்..கையில் வேணும்கிற அளவுக்கு பணம் இருந்தது!
என்னை துளிக் கூட ஏறெடுத்தும் பார்க்காமல் மனுஷன் சாப்பிட்டார். எனக்கு ஒரு லோட்டா ஷுகர்லெஸ் காஃபி மட்டும்!
கிட்டத் தட்ட பில் முன்னூறு ரூபாய்க்கு பழுத்து விட்டது! எவ்வளவு சார் ஆச்சு என்று ஒப்புக்குக் கூட கேட்கவில்லை மனுஷன்! எனக்கு அது விகல்பமாயும் தெரியவில்லை! ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்தால் தானே ஏமாற்றம்!
மனம் மிக மிக திருப்தியாய் இருந்தது எனக்கு!
அடுத்த நான்காவது நாள் கரந்தையில்!
பத்தாவது நாள் சாந்தப் பிள்ளை கேட்!!
பதினைந்து நாள கழித்து, பழைய பஸ் ஸ்டாண்ட்!!
இப்போது எனக்கு நிஜமாகவே எரிச்சல் வந்து விட்டது. கையில் காசு இல்லை.பக்கத்தில் ஏ.டி.எம் . இருந்ததால், பிழைத்தேன்!
” என்ன மனுஷர் இவர்...கொஞ்சம் கூட வெட்கப் படாமல்? இப்படி இருந்தால் எந்த பிள்ளை தான் வைத்துக் கொள்வான்?”
நான் செய்த புண்ணியம் கொஞ்ச நாள் மனுஷர் கண்ணில் படவில்லை!
காய்கறி வாங்க மார்க்கெட் பக்கம் நான்!
எதிர்த்தாற் போல ஸார் வாள்!
”அடேடே ஸார் வாள்..” உத்ஸாகமாய் அவர் என்னைப் பார்த்து வர, எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை..வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, நடையைக் கட்டினேன்.
“ஸார் வாள்..ஸார் வாள்...ஸார்.... ஸார்..”
குரல் தேய்ந்து கொண்டே வந்தது..
நான் ஏன் திரும்பிப் பார்க்கிறேன்? என்ன ஒரு ஈன ஜன்மமோ?
ஆனால் இரவு எனக்கு தூக்கம் வரவில்லை! ஏதோ தப்பு செய்தது போல் ஃபீலிங்! முதலில் அவரை எண்டெர்டெயின் பண்ணினது நான் தானே..ஒரு சகோதரன் போல
உரிமையில் தானே சாப்பிட்டார்..
எனக்கு இதற்கு என் செயலுக்கு ஒரு ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும் என்கிற ஆசை...அது சூரிய உதயத்தில் வெறியாகிப் போக...
அவர் இருந்த இடமெல்லாம் தேடினேன்.
ஊஹூம்..அவரைக் கண்ட பாடில்லை!
“ என்ன சார் பார்க்கிறீங்க..அவருக்கு ஆக்ஸிடெண்ட்.. நேற்று ராத்திரி லாரிக் காரன் ஒர்த்தன் அடிச்சுட்டுப் போய்ட்டான்.ஆள் ஸ்பாட்டிலேயே அவுட்!”
”ஐயையோ...”
ஒடுங்கிப் போய் விட்டேன், ஒடுங்கி!
ஒருவாறு சமாளித்துக் கொண்டு, பக்கத்து ஐயர் கடையில் பொங்கல் பொட்டலம் ஒன்று வாங்கி, என் வீட்டு காம்பவுண்ட் சுவற்றில் வைத்து விட்டுக் காத்துக் கொண்டிருந்தேன்.
” கா..கா...க்கா...”
நாபியிலிருந்து என்னை அறியாமல் கத்தி...கதறிக் கொண்டிருந்தேன். ஒரு காகம் சடாரென வந்து, அந்த பொட்டலத்தை காலால் தட்டி விட்டுச் சென்றது!
“ ஸார் வாளுக்கு எம் மேல இன்னுமா கோபம் தீரலே”
என் கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர்!