Friday, November 23, 2012

பிறப்பும் ...இறப்பும்.... !


பிறப்பு எப்படி இன்றியமையாததோ அது போல் தான் இறப்பும்.
பிறப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது.. இறப்பு துக்கத்தைக்
கொடுக்கிறது.
ஆசைக்கு ஒரு பெண் ..ஆஸ்திக்கு ஒரு பிள்ளை ...என்று ஒரு புதிய வரவை எல்லாரும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.நம் எல்லா மக்களுக்கும் தம் பாரம்பர்யத்தைப் பற்றி ஒருபெருமை இருக்கத் தான் செய்கிறது. எனது நண்பன் ஒருவன் ரொம்ப பெருமையாகச் சொல்வான்.'..அப்பைய்ய
தீக்ஷ்தர் பரம்பரையில் வந்தவனாக்கும் நான் !' என்று !
   அதைப் போல 'எங்கள் வம்சத்தின் காய்ந்த தீக்கட்டை நான் அல்ல...வம்சம் துளிர்த்து விட்டது .எனக்கு ஒரு வாரிசு உருவாகி விட்டது .. எங்கள் பாரம்பர்யம் என்னுடன்  முடிந்து விடவில்லை ..என்கிற சந்தோஷம் மனிதனுக்கு மட்டுமல்ல ..எல்லா ஜீவராசிகளுக்கும்
இருக்கிறது..  
அதனைப் போல் மூத்த குழந்தை தாய்க்கும், கடைசி குழந்தை தந்தைக்கும் ப்ரிதியானவர்கள் என்பதும்  மறுக்க முடியாத உண்மை. தன்னை மலடி என்ற அவச்சொல்லிலிருந்து மீட்டவன் இவன் என்கிற சந்தோஷம் தாய்க்கும்,இன்னமும் தன்னால்  வம்ச விருத்தி செய்ய முடியும் என்கிற சந்தோஷத்தை..நம்பிக்கையை .. கொடுத்தவன் இவன் என்பது
தந்தைக்கும் இருக்கும். 103 வயதில் குழந்தையைப பெற்ற தந்தை நம் பஞ்சாபில் இருக்கிறார் !    
அடுத்து  இறப்பினைப் பார்ப்போம் !
     நம் சமுதாயத்தில் இறப்பு பெரும்பாலும் பணத்தினைச் சார்ந்து தான் இருக்கிறது .இழப்பின் வலி பெரிதாகத் தெரியாத வீட்டில் இறப்பு அவ்வளவாய் தாக்கம் ஏற்படுத்துவதில்லை. ஒரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில்   ஒரு
SEND OFF PARTY போல் தான்   இருக்கிறது .  அந்த மின் மயானத்தில்
அந்த   DEAD BODY TURN வரும் வரை சிகரெட் குடித்துக் கொண்டும், காபி
குடித்துக் கொண்டும் பொழுதைக் கழிக்கிறார்கள். BODY TAKE OFF ஆனதும்
அந்த இடத்தை காலி செய்கிறார்கள். இதற்காகவே காத்துக் கொண்டு இருப்பது போல் அந்த இடத்தை அடுத்துவருபவர்கள் OCCUPY செய்கிறார்கள். இதற்கும் AIR PORT TAKE OFF க்கும் உள்ள ஒரே வித்யாசம் என்னவென்றால், இதில் யாருக்கும் SAFELY REACHED என்று செல்லில் மெசேஜ் வருவதில்லை !

     ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாத 'அரிஸ்டோக்ராட்' வீட்டில் இறப்பு
என்பது  டிஷ்யூ பேப்பரால் கன்னத்தில் வழியும் கண்ணீரை  நாசுக்காக 
துடைப்பது போல் நாகரீகமாய்   வெளியேச்  செல்ல, வறியவர்கள் வீட்டில், அதுவே  மாரில் அடித்துக் கொண்டு அழுகையாய்..ஒப்பாரியாய்...சங்கு ஊதி இருப்பைக் காட்டிக் கொண்டு... டம் டமார் என்று பட்டாசு சத்தங்களோடு... குடியோடு ....பாசங்களும், உரிமைகளும்  தம்தம் முகத் திரையை கிழிக்கும்  சண்டை சச்சரவுகளோடு ..சகலவிதமான ஆர்ப்பாட்டங்களோடு வெளியே
செல்கிறது !
   இன்றைய கால கட்டத்தில் இறப்பு, பிறப்பு என்கிற இயற்கை நிகழ்வுகள்
இரண்டுமே  பொருளாதாரச் சூழலில் சிக்கித் திணறிக் கொண்டு தான் இருக்கின்றன போலும்  !!  
   
  

        

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//103 வயதில் குழந்தையைப பெற்ற தந்தை நம் பஞ்சாபில் இருக்கிறார் ! //

பேரெழுச்சி மிக்க இளைஞர் ;)))))

//இதற்கும் AIR PORT TAKE OFF க்கும் உள்ள ஒரே வித்யாசம் என்னவென்றால், இதில் யாருக்கும் SAFELY REACHED என்று செல்லில் மெசேஜ் வருவதில்லை !//

உண்மை தான். ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதில் யாருக்கும் SAFELY REACHED என்று செல்லில் மெசேஜ் வருவதில்லை !//

அவருடைய உடல் செல்கள் தீக்கிரையாகிவிட்டதனால்
இருக்குமோ?

sury siva said...



சூஃபி கவியான கபீரின் பாடல் ஒன்று சொல்லும்:
இப்புவியில் வாழும் அனைத்தோருக்குமான பாடலது.

நீ பிறக்கும்பொழுது நீ அழுதாய், உன்னைச் சுற்றி இருந்தவர் ( பெற்றோர் உறவினர்) சிரித்தனர். ( புளகாங்கிதமாயினர்.)
நீ இறக்கும்பொழுது நீ சிரிக்கவேண்டும், மற்றவர்கள் அழவேண்டும்
அப்படி ஒரு வாழ்வு நீ வாழவேண்டும் ...

பலர் இறந்து போகும்பொழுது, குடும்பங்கள் பல்வேறு சூழல்களில் இருக்கிறது.

இவர் படும் வேதனையைப் பார்த்தால் இவர் இறப்பது தான் இவருக்கே அமைதி தரும் என்பது ஒன்று.
இவர் தரும் துன்பங்களைப் பார்க்கும்பொழுது இவர் இறந்தால் தான் மற்றவருக்கு அமைதி வரும் என்பது இன்னொன்று.

இந்த இரண்டு சூழலுமே பொருளாதாரத்தைப் பொறுத்தவை அல்ல.

இன்னொன்று வேதனை அதனால் பொங்கி வரும் கண்ணீர் எல்லா இடங்களிலும் உள்ளத்தால் நெருங்கியவரிடம்
இருக்கத்தான் செய்யும். இருப்பினும், இது ஏதோ ஒரு நாள் நடக்கத்தான் செய்யும் என அதற்குத் தன்னை, தமை
ஆயத்தமாக்கிக்கொண்டவரிடம் அழுகையோ, ஆர்ப்பாட்டமோ அதிகம் காணப்படுவதில்லை.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்றும் சொல்வார்கள். உள்ளத்து வேதனையை அடக்கத்தெரிந்தவர்கள்,
இவர்கள். ஒரு இறப்பினால், ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே ஒரே விதமான பாதிப்புக்கு உள்ளாவது இல்லை.
அதில் அதிக பாதிப்புக்கு உள்ளானவரை மற்றவர் தேற்றுவது என்பது தாம் முதலில் தேற்றிக்கொள்ளவேண்டும் என்பது தான்.

ஆண்டார் தெருவில் என் வீட்டு எதிர் வீட்டில் எனது நண்பர் தனது 34 வது வயதில் அகால மரணமடைந்தார். அவரது
மனைவி ஒரு டாக்டர். இறந்த என் நண்பர் எஞ்சினீரிங்க் கல்லூரியில் பேராசிரியர். அவரது தந்தை செல்வம் மிகுந்தவர்.
செல்வாக்கானவர். செல்வத்தை விட அவரது சிறப்பு அவரது பண்பு. சமூகத்தில் அந்தக்குடும்பத்தின் மேல் உள்ள மதிப்பு.

நான் தஞ்சையிலிருந்து செய்தி கேட்டு ஓடி வந்தேன். துக்கத்தைத் தாங்க இயலாது , இறந்த நண்பரின் அன்னை மயக்கமாகி
இருக்கிறார். இளம் டாக்டர் மனைவி கதறுகிறார். சின்னக்குழந்தை விவரம் புரியாமல் ஓடுகிறது. நண்பரின் தந்தை
அமைதியுடன் சூழ் நிலையை எதிர் கொள்ளுகிறார்.

இன்னும் சொல்லலாம்.... இடமில்லை.

சுப்பு ரத்தினம்.
ஆங்கரை.







வெங்கட் நாகராஜ் said...

//இதில் யாருக்கும் SAFELY REACHED என்று செல்லில் மெசேஜ் வருவதில்லை !//

உண்மை.....

பிறப்பும் இறப்பும்... நல்ல சிந்தனை!

இராஜராஜேஸ்வரி said...

பொருளாதாரமே அனைத்துக்கும் ஆதாரமாகிப்போனது ...

திண்டுக்கல் தனபாலன் said...

பணத்திற்கேற்றவாறு கூட்டம், ஏன் மயானம் கூட (மின்சார சுடுகாடு அல்லது வேறு)

முனைவர் இரா.குணசீலன் said...

இயற்கையின் தத்துவத்தை புரியும்விதமாகச் சொன்னீர்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

பிறப்பு – இறப்பு. இடையில் இந்த வாழ்க்கை! மின் மயானத்தில் நடக்கும் இறுதி காட்சி நல்ல எடுத்துக் காட்டு. உடலில் உயிர் இருக்கும் வரைதான் (அதுவும் அடுத்தவர்களுக்கு சுமையாக இல்லாத வரைதான்) நமது உடலுக்கு மதிப்பு! உயிர் பற்றிய சிந்தனையை தூண்டியமைக்கு நன்றி!

ADHI VENKAT said...

நல்லதொரு சிந்தனைக்கான பகிர்வு.

selva said...

இறந்தன பிறக்கும்
பிறந்தன இறக்கும்....

G.M Balasubramaniam said...


தினம் தினம் பிறந்து தினம் தினம் இறக்கிறோம்.( அது பற்றிச் சிறிதும் சிந்திக்காமலேயே). வெட்ட வெட்டத் துளிர்விடும் மரம்போல் இறக்க இறக்க மனிதன் பிறந்து கொண்டுதான் இருக்கிறான். யாருக்கும் இறக்க மனமில்லை. பல நேரங்களில் நான் சிந்திப்பதுண்டு. யாருக்கும் பலனில்லாத உயிர் இருந்தென்ன இறந்தென்ன. ஆனால் பிச்சை எடுப்பவர் முதல் ஓரடி அசையவும் பிறர் உதவி தேவை என்ப்வர்வரை எல்லோருக்கும் உயிர் வாழ ஆசை. மற்றபடி பிறந்தால் மகிழ்ச்சி ,இறந்தால் துக்கம் என்பதெல்லாம் ரிலேடிவ் டேர்ம்ஸ். மகிழ்ச்சியும் துக்கமும் பொருளாதாரம் குறித்தது என்பதில் ஓரளவுக்கே உடன்பாடு. எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பதே புரியாத நிலையில் இருக்கும்போது நல்லது எண்ணி, நல்லவினைகள் செய்து நல்லவராக வாழ முயற்சி காலங்கடந்தாவது தெரியுமா.?சிந்திக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

பிறப்பு எப்படி இன்றியமையாததோ அது போல் தான் இறப்பும்.
பிறப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது.. இறப்பு துக்கத்தைக்
கொடுக்கிறது.//

மிக மிக உண்மை.

நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு.

எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பதே புரியாத நிலையில் இருக்கும்போது நல்லது எண்ணி, நல்லவினைகள் செய்து நல்லவராக வாழ முயற்சி காலங்கடந்தாவது தெரியுமா.?சிந்திக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்.//

பாலசுப்பிரமணியன் சார் சொன்னது நல்ல கருத்து.

Ranjani Narayanan said...

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை - என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு.
உங்கள் பதிவைப் படித்ததும் நினைவுக்கு வந்த குறள் இது.
திரு சூரி சிவாவின் கருத்தும் நன்றாக இருக்கிறது.