இது மோகன் ஜி !
“சரிடா! நான் மதியம் கிளம்பறேன்.. கலியபெருமாள் கோயிலுக்கு போயிட்டு அப்படியே ஊருக்குத் திரும்பணும்... சாவகாசமா இன்னொரு முறை வறேன்.. சரிதானே?” என்றார் ஆராமுது.
சிவபாதம் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டார். துருத்தியின் உறுமலாய் பெருமூச்சு வாங்கியது.. ஆராவமுதன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்... கண்கள் பொங்கிக் கொண்டு வந்தது..
‘”ஆராமுது.. என்னை நாலு அறை அறைய மாட்டியா? தோளில் போட்டிருக்கும் சவுக்கத்தால் என் கழுத்தை இறுக்கி கொன்னு போடுடா.. இங்கே நீ வந்தது முதல் எதுவுமே கேட்டுக்காம எதுக்கு வதைக்கிறே?”
ஆராமுது எழுந்து வந்து சிவபாதத்தின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
“வேண்டாம்டா. எதுவுமே நீ சொல்ல வேண்டாம். சொல்லி என்ன ஆகப் போகிறது.. எதை மாற்ற முடியும்.?. வேறென்னடா கேட்பேன்? நான் இழந்து போனதுக்கெல்லாம் உன்னிடம் காரணம் இருக்கும்னு தெரிஞ்சிக்குற வேகத்துல தான் வந்தேன்.. உன்னிடம் காரணங்கள் இருக்கும்னு.. நீதான் காரணம்னு இல்லே.... என்னை விட நீதான் அதிகம் இழந்திருக்கேன்னு உன்னைப் பார்த்தபிறகு தோணுது.. நீ ஏதும் சொல்ல வேண்டாம்.. நாம இழந்ததெல்லாம் போதும்.. எனக்குன்னு நீயாவது எஞ்சணும்.. எல்லாத்தையும் விட்டுத் தள்ளு.. உன் பழைய ஆராமுதா.... அசட்டு நாயேம்பியே.. அந்த அசட்டு நாயாவே இருந்துட்டு போறேன்.. கலங்காம இருடா”.
பற்றின கைகளின் வெம்மையில் அதன் இறுக்கத்தில் அவர்களின் சந்தேகங்கள்,அவநம்பிக்கைகள்,வ ேதனைகள் பொசுங்கின.. ஒரு பேரமைதி சினேகிதர்களின் நெஞ்சில் குடிகொண்டது..
“நீ.. ரொம்ப பெரியவண்டா.. உனக்கு நல்லது செய்வதாய்த்தான் அதையெல்லாம் செய்ய” சட்டென்று சிவபாதத்தின் வாயைப் பொத்தினார் ஆராமுது..
“போறும்.. இப்பத்தானே சொன்னேன்.. விடுன்னா விட்டுடணும்.. பொழச்சிக் கிடந்தா இன்னொரு சமயம் பேசிக்கலாம்.. எல்லாத்தையும் மறந்துட்டு பழைய சிவபாதமா மீசைய முறுக்கிக்கிட்டு முண்டாவைத் தட்டிக்கிட்டு நில்லுடா.. நீ நிப்பே.. உன் முள் கிரீடத்தை இறக்கி வச்சுட்டீன்னா நீ எட்டூருக்கு நிப்பே.. ஒரு வார்த்தை பேசாதே”
“அம்மாடி.!” சமயல்கட்டைப் பார்த்து கூவினார் ஆராமுது.”உன் சம்சாரம் பேரு என்ன.?”
“கற்பகம்”
“அம்மாடி கற்பகம்! சமையல் ஆயிடுச்சுன்னா இலைய போடு தாயி.. எனக்கு கிளம்ப நாழி ஆச்சு.”
கற்பகத்துக்கு தூக்கிவாரிப் போட்டது.. தன் பெயரை சொல்லி கூப்பிட்ட ஆராமுதன் குரலில் இருந்த வாத்ஸல்யம் அவளை உருக்கியது.. அவள் ஏதோ ஒரு பழைய கணக்கு நண்பர்கள் இடையில் சரிசெய்யப் படுவதாய் உணர்ந்தாள். என்ன கணக்கானால் என்ன? இந்த சந்திப்பில் தன் புருஷனுக்கு பல சுமைகள் இறங்கிப் போகும் என உணர்ந்தாள்.‘தன்னை பேர் சொல்லி அழைப்பவன் எனக்கு பந்தப் பட்டவன்..அவயாம்பிகை அனுப்பின தேவதூதன்’
“இதோ.. பத்து நிமிஷத்துல ஆயிடும் அண்ணா!”
“என்னை.. என்னை அண்ணாங்குறாடா!” ஆராமுது நெகிழ்ந்தார்.
“உன்னை குலசாமின்னு சொல்லணும்டா வெறும் அண்ணாங்குறா போக்கத்தவ!”
மேலே ஏதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
ஆராமுது ரசித்து சாப்பிட்டார். கற்பகம் ! தெளிவா ரெண்டு கரண்டி ரசத்தை கையில விடும்மா”
இரண்டுகை ரசம் ஆறு ஏழு என நீண்டது.
கற்பகத்துக்கு கண்ணீர் தளும்பியது. “மெல்ல குடிங்கண்ணா. புரையேறப் போகுது”..
“என்னை யாரும்மா நினைச்சுப்பா? புரையேறுறதுக்கு? ”
‘இனி நான் நினைப்பேனண்ணா’ கற்பகத்தின் மனசு அலறியது..பிள்ளை சுமக்காமல் பாழாய்க் கிடந்த அவள் வயிற்றில் தாய்மை சுருண்டது.
“சரிடா.. கிளம்பறேன். இன்னைக்கு ரொம்ப உடம்பை அலட்டிக்கிட்டே.. படுத்துக்கோ”
“எப்படா திரும்ப வருவே?
“எப்ப வேணும்னாலும்”
“அண்ணா! இது உங்க வீடு”.
ஒரு குழந்தையை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார் ஆராமுது..”எனக்கொரு நமஸ்காரம் பண்ணேன் கற்பகம்”
ஓடிவந்து ஆராமுதன் காலில் விழுந்தாள்..சட்டைப் பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அவள் கையில் திணித்தார்.
”தீர்க்காயுசா இரும்மா. இந்த கிருக்கனை நல்லா பார்த்துக்கோ”
“சரிண்ணா. சீக்கிரமா திரும்பி வாங்க.”
“உன் ரசத்துக்காகவாவது திரும்ப வருவேன்.” வாசலை நோக்கி நடந்தார் ஆராமுது. விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு கையில் ஒரு ரெக்ஸின் பையுடன் சிவபாதத்தின் கண்முன்னே போனபடி......
‘நீ ரொம்ப பெரியவண்டா... அவர் கைகள் தானாய்க் குவிந்தன. போவது தன் பழைய அப்பாவி ஆராமுது இல்லை. புத்தனிவன்.. ஏசுப்பிரபு..
மெல்ல கட்டிலில் சரிந்தார். கற்பகம் தலையணைகளை சரி செய்தபடி சிவபாதத்திடம் சொன்னாள், “மனசுக்கு ஆறுதலா இருக்குங்க.. சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. இவர் நம்மகூட நாலு நாள் இருந்தா நீங்க எழுந்து ஒடுவீங்க.” என்று எழுந்தாள்.
“எழுந்து ஓடுவேனா?”
“அவனை ஊரைவிட்டு ஓட வைடா.. இல்ல உலகத்தை விட்டே ஓட வைப்பேன்.. அப்பாவின் இரைச்சல் சிவபாதம் காதில் ஒலித்தது. சிவபாதத்தின் ஒரே தங்கை ஜமுனா ஆராமுதுக்கு தன் காதலைத் தெரிவித்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி எழுதின கடிதம் அவன் அப்பாவின் கையில் சிக்க ருத்ர தாண்டவம் ஆடினார்.
‘ஜாதி கெட்டநாயி! உன் சினேகிதன்னு வீட்டுக்குள்ள வளைய வரவிட்டது எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியாடா?’
‘இல்லப்பா. அவன் அப்படி இல்லை. இந்த சிறுக்கிய வெட்டுங்க,, ஆராமுதுவை ஏதும் சொல்லாதீங்க.. இப்பத்தான் அடுத்தடுத்து அப்பாவும் அம்மாவும் செத்துப் போயி ஆளில்லாத அனாதையா நிக்கிறான்பா’
“அவன் இல்லேன்னா செத்துபொய்யிடுவேங்கிறாளே கடுதாசில.. அவனை இருக்க விட்டாத்தானே?’
அப்பாவும் பிள்ளையும் ஆலோசித்தார்கள். அப்பாவின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்த அந்த அலுவலகத்தில் ஆராமுதன் பொறுப்பிலிருந்த பணம் இருபதாயிரம் மாயமானது. பொறுப்பாளர் போலீசுக்கு போவதாயும், எழட்டு வருடம் சிறைவாசம் உறுதியென்றும் மிரட்டவைக்கப் பட்டார். கலங்கி நின்ற ஆராமுதனை ஊரைவிட்டே கண்காணாமல் போய்விடும்படி தன் பங்கு வசனத்தை சிவபாதம் சொல்லி கொஞ்சம் பணமும் கொடுத்தனுப்பினான்
.’மறந்தும் இந்தப் பக்கம் வந்து விடாதே. எந்தக் கடிதமும் போட்டுவிடாதே. வடக்கே எங்காவது போய் பொழச்சிக்கோ. இங்க உனக்கும்தான் யாரிருக்கா? கொஞ்ச வருஷம் போனபிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏதும் வண்டி பிடிச்சி மதராஸ் போய் வடக்கே போற ரயிலைப் பிடிச்சியானா
தப்பிச்சிக்கலாம். இங்கே மேற்கொண்டு நான் ஏதும் சமாளித்துக் கொள்கிறேன்.”
ஆராவமுதன் விலகியவுடன் ஆபீஸ்கணக்கு சரி செய்யப்பட்டது. ஆராவமுதனின் இந்த கதிக்கு காரணமான ஜமுனாவுக்கு நடந்த நாடகம் அப்பாவும் பிள்ளையும் பேசிக் கொண்டபோது தெரியவந்தது. வீட்டின் கிணற்றின் ஆழத்தில் நியாயம்தேடி தஞ்சம் புகுந்தாள். எதற்குமே அர்த்தமில்லாமல் போய்விட்டது.
அப்பா! என்ன சாதித்தீர்கள்.? உனக்கேன் பாழும்காதல் வந்தது ஜமுனா? உயிரான சினேகிதத்திற்கு துரோகம் செய்தேன்.. அது உன்னைக் காக்கவென என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன் ஆராமுதா! எனக்குள்ளும் என் அப்பனின் ஜாதி மயக்கம் இருந்திருக்க வேண்டும். தங்கை போய், தகப்பன்தாயும் போய், ரத்தபந்தமென குழந்தைப்பேறும் இல்லாது போய், இன்று ரத்தமும் சுண்டிப்போய் வெளிறிக் கிடக்கிறேன். அரசல்புரசலாய் ஏதோ தெரிந்து வந்த ஆராமுது வெறெதும் கேட்காமல் தன் மௌனத்தால் கொன்றுவிட்டுப் போயிருக்கிறான்.. இல்லை மன்னித்து விட்டுப் போயிருக்கிறான். ‘ஆராமுதா! உன்னைப் பார்த்ததே போதுமடா.. அகலிகைக்கு விமோசனம் வந்தாப்போல உன் ஸ்பரிசம் என் பாவத்தையெல்லாம் கழுவி விட்டது. இது போதும் இது போதும்.’. மாடிவிட்டு கீழே இறங்கினார்..
“மெல்ல மெல்ல” கற்பகம் கைலாகு கொடுத்தபடி உடன்வந்தாள்
“என்ன அண்ணனையே நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?”
“அண்ணன்!”முனகிக் கொண்டே தோட்டத்தில் தரையைப் பார்த்தார் சிவபாதம்.
தரையோடு ஒட்ட வெட்டபட்ட முருங்கை மரத்தின் வேர்த்தட்டில் பொன்பசுமையில் சிறிதாய் துளிர்விட்டிருந்தது.
(முற்றும்)
5 comments:
நிறைவாக இருக்கிறது கதை. வித்தியாசமான முயற்சிக்கும் வெற்றிக்கும் பாராட்டுக்கள்.
அந்தக்காலத்துலே செல் ஃபோன் இல்லயே !! இருந்திருந்தா
கதையே வேற தினுசா போயிருக்குமில்ல....
இந்தக்காலத்துலே இதுபோல நடக்குதா ?
லவ்வாயிடுச்சுன்னா, பெத்த வளர்த்த அம்மாவும் அப்பாவும் என்ன சொல்வாக, என்ன செய்வாக
அப்படின்னு எல்லாம் சிறிசுங்க நினைக்குதா என்ன !!
பாவம் ஆராவமுது ... பாவப்பட்ட ஜன்மம்.
பொழைக்கத்தெரியாத கேசு !!
இதெல்லாம் இருக்கட்டும்.
மோஹன் ஜி !!
இங்கன வந்து ஒரு ஓட்ஸ் தோசை சாப்பிட்டுகிட்டே
தாத்தா ரசிக்கும்படி ஒரு
" ஜில்லுன்னு ஒரு காதல் " கதை எழுதுங்களேன் !!
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
நிறைவு பகுதி உண்மையிலேயே மனதில் நின்றுவிட்டது.
நன்றி அப்பாதுரை!
சூரி சிவா சார்! உண்மைதான். செல்போன் வந்தாலும் வந்தது... எழுத்தாளன் பொழப்புல மண்ணு தான்.
காதல் கதைதானே? அதுவும் ஜில்லுன்னு?!எழுத்திட்டா போச்சு... வானவில்லுக்கு வந்தபடி இருங்க.. அது காதல் மயம்தான்! உங்கள் கருத்துக்கள் நல்ல ஊக்கம் தந்தன. உங்களுக்கு எங்கள் மூவரின் நன்றியும் வாழ்த்தும்...
லக்ஷ்மி மேடம் உங்கள் பாராட்டுக்கு நன்றி!
மோகன்ஜி
வானவில் மனிதன்
வித்தியாசமாக இருந்தது. பாராட்டுகள் மூவருக்கும்.
Post a Comment