நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Saturday, July 31, 2010
ராகவ புரம் ரயில்வே ஸ்டேஷன்!
'க்ராண்ட் ட்ரங்க்' நிதானமாக ஓடிக் கொண்டு இருந்தது. ஒன்பது மணி பகல் பொழுதில், அந்த குளிரூட்டப் பட்ட ' ஏசி சேர் காரி'ன் 'ஸ்க்ரீனை' விலக்கி, மூடியிருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன்.
ராகவ புரம் ரயில்வே ஸ்டேஷன்!
கண நேரத்தில் வந்து மறைந்து போனது ஸ்டேஷன்.
ராகவ புரம்.
என்ன ஒரு அழகான ஊர்! என்ன ஒரு அழகான பெயர்!
'சௌத் சென்ட்ரலி'ல் என்னை மாற்றிய போது, முதன் முதலாக அங்கு தான் 'போஸ்டிங்'. அதை விட்டு வந்து ஒரு பத்து வருடம் இருக்குமா? ஏன் அதற்கு மேலும் கூட இருக்கலாம்.
ஆந்திராவில் ' கரீம் நகர்' ஜில்லாவைச் சேர்ந்த அந்த ஊரில் இருந்த அந்த இரண்டு வருடங்களும்..வருடங்களா .வருடங்கள் அல்ல...என் வாழ்வின் வசந்த உத்சவங்கள்...அல்லவா அவை!
' காஃபி சாப்பிடறேளா?'
' கொஞ்சம் குடேன்'
லலிதா 'ஃப்ளாஸ்க்'கிலிருந்து காஃபி கொடுத்தாள்.அந்த நேரத்திற்கு, அது ரொம்ப சுகமாக இருந்தது.
மனம் மெள்ள பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது.
லலிதாவை நான் ராகவபுரம் கூட்டிக் கொண்டு போகவில்லை.அவள் அப்போது திருச்சி 'ஜங்ஷனி'ல் புக்கிங் க்ளார்க்.
குடித்த காஃபியில் லைட்டாக ஒரு கசப்பு.
அசை போடும் பழைய நினைவுகளூடே ஒரு வித சோகம்...
எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்ப இஷ்டம். குழந்தையே இல்லாத பாவி நான்... இந்த வம்சம்...அரியூர் அனந்த நாராயண கனபாடிகள் என்கிற பாரம்பர்யமான வம்சம்...
அரியூர் அனந்த நாராயண கனபாடிகள் என்கிற அந்த ஆணி வேரின்... காய்ந்து..... தீய்ந்து போன கடைசி வேர்க்கட்டை தான்
அனந்த ராமனாகிய நான் .....
இந்த ஆதங்கத்தினால் கூட குழந்தைகள் மீது எனக்கு பாசம் இருக்கலாம்.
மேலும் குழந்தைகள் தானே என்று அலட்சியப் படுத்தாமல், நாம் மட்டும் கொஞ்சம் பொறுமையாய் இருந்தோமானால், அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்! ஏராளம் !!
வந்து சேர்ந்த முதல், இரண்டு நாட்களுக்கு மிகவும் சிரமப் பட்டேன். மூன்றாம் நாள், காலைப் பொழுதில் ஒரு வாண்டு மெள்ள கதவைத் தள்ளி எட்டிப் பார்த்தது.
' அங்க்கிள்....மீரு கொத்தக ஒச்சாரா?'
' ம்'
அதை தாஜா பண்ண பழைய பேப்பர் ஒன்று கிழித்து, ஏரோப்ளேன் செய்தேன்.
குழந்தை போய் விட்டாள்!
' நாக்கு அங்க்கிள்'
' நாக்கு அங்க்கிள்'
பழைய ஆங்கில தினசரி பேப்பரை எடுத்துக் கொண்டு நாலைந்து நண்டு,சிண்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டன!
அவர்களுக்கும் ஏரோப்ளேன் வேண்டுமாம்!
கொஞ்சம்,கொஞ்சமாய் அவர்களுடன் ஐக்யமானேன். அவர்களில் திவாகர் தான் பெரியவன். ஆறாம் க்ளாஸ். ஷிரவந்தி யு.கே.ஜி. டிங்கு என்கிற ரவி காந்த்...டிட்டு என்கிற அவன் தம்பி சசி காந்த்..ஆஷா..ரூபா...வம்சிகிஷோர்..ரவிச்சந்திர ஸ்வரூப்..ரவா லட்டு என்று கூப்பிட்டால் கோபித்துக் கொள்ளும் ரவிக்குமார் என்கிற பொடியன்....
அந்த ரயில்வே க்வார்ட்டஸில், வந்து சேர்ந்த சில நாட்களிலேயே, நான் ஹீரோ ஆகி விட்டேன்!
' அங்க்கிள்..ஒக்க கதை செப்பண்டி?'
டி.வி.யின் தாக்கம் இல்லாத நாட்கள், அவை!
வாலறுந்த நரி கதை சொன்னேன்...ட்ரீமர்...லிலிபுட்...சாம்ஸன் அண்ட் டிலைலா...ஏக சக்கராபுரத்தில் பாண்டவர்கள் பகாசுரனை வதம் பண்ணியது.....
நான் பட்லர் இங்க்லீஷில் வெளுத்து கட்ட, அதை திவாகர் தெலுங்கில் மொழி பெயர்ப்பான்!
சூழ் நிலையைக் கலைத்தாள்,லலிதா.
' என்ன யோஜனை?'
'ஒண்ணுமில்லே'
அவளுக்கு ஒன்றும் தெரியாது, பாவம்!
மறுபடியும்
ராகவபுரம்!
சில நாட்கள் பாட்டும்...கூத்துமாய் பொழுது ஓடி விடும்!
நான் பாட ஆரம்பிப்பேன்.
'....... அங்கார
இங்கார....
நாமம் சாத்தி,
அனுதினமும்,
அனுதினமும்,
கரம் கூப்பி...
சிங்கார
தேவனே
சீனிவாசா...
சீரங்கத்துப்
பெருமாள
சேவிக்கப்
போறோம்..
ஆமா..
சேவிக்கப் போறோம்..
ஆஹா..
சேவிக்கப் போறோம்...
அந்த கடைசி இரண்டு வரிகளை..'ஆஹா..சேவிக்கப் போறோம்' என்று ஒரு மாத்திரை அழுத்தம் அதற்குக் கொடுத்து, நான் பாட, அத்தனை குழந்தைகளும் 'ஆமா...
சேவிக்கப் போறோம்..ஆஹா..சேவிக்கப் போறோம் என்று கத்த...ஏக குஷி!
அடுத்த பாட்டு..
' நன்னே முன்னே பஜ்ஜதீரே..
முடீ..மே க்யா ஹே....'
அடுத்தது...
' ஸாரே...சஹாங்கே அச்சா...'
'சுன்...சுன் கர்த்தி ஆயே சிடியா..' சொல்லிக் கொடுத்தேன்.
கட்டோ கடைசியாய்...
' ஏக் தோ தீன்...'
கோரஸாய் ஒரே கத்தல்!!
திவாகர் மிமிக்ரி நல்லா பண்ணுவான். ப்ரேக் டான்சும் ஆடுவான்.
சில நாள் எனக்கு 'மூட் அவுட்' டாகி விடும். 'போங்கடா, என்று எல்லாரையும் விரட்டி விடுவேன்.
அடுத்த நாள் சாயங்காலம் ஆஃபீஸ் விட்டு வந்து பார்த்தால், வீட்டு பூட்டைத் திறக்க முடியாது!
சாவி திறக்கும் ஓட்டையில் ஈர்க்குச்சி செருகி இருக்கும்!
ஷிரவந்தியாய் இருக்கும்!
இந்த மாதிரி வேலைகளை அவள் தான் சூப்பராய் செய்வாள்!
ஜி.டி ஓவென்று பெருங்குரலெழுப்பி ஒரு பாலத்தைக் கடந்து செல்ல.....
எனக்கும் ஓவென்று வாய் விட்டு அழ வேண்டும் போல்....
லலிதாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன், ஆதரவாய் !
எனக்கு குழந்தை அவள்!
அவளுக்கு குழந்தை நான்!!!!
Labels:
சிறுகதை
Wednesday, July 21, 2010
மெள்ள இங்கிலீஷ் இனி சாகும்!!!
ஆங்கிலம் நம் யாவருக்கும் ஒரு பொதுவான மொழி. அதைப் பேசுவதை வைத்து ஆளைக் கண்டு பிடித்து விடலாம்.இந்த ஆள் ஆந்திரா வாடு..அந்தாள் U.P. ..இவர் பெங்காலி அவர் பஞ்சாபி என்று பேசும் ஆங்கிலத்தை வைத்து நாம் கண்டுபிடித்து விடலாம்.
வங்காளக் காரர்களுக்கு S அவ்வளாக வராது.ஆனால் J வெகு சரளமாக வரும். CLOSE UP என்பதற்கு CLOJE UP என்று சொல்வார்கள். இப்படித் தான் நான் ஸ்கூலில் படிக்கும் போது NCC OFFICER ஒருவர் வந்தார்.பெங்காலியாக இருக்குமோ என்று எங்களுக்கு ஒரு சம்சயம். அவர் CLOJE UP என்று திரு வாய் மலர்ந்ததும், எங்களது கொஞ்ச,நஞ்ச சந்தேகமும் தீர்ந்தது! நாங்கள் தமிழில் முட்டாள், மடையன் என்று சிரித்துக் கொண்டு அவரிடம் சொல்ல, அவர் பேய் முழி முழிக்க படு ஜாலி. ஆனால் பேரேடு எடுக்கும் போது, ' ராமமூர்த்தி..சீனிவாசன்..கல்யாண ராமன்' என்று எங்கள் எல்லார் பெயர்களையும் சொல்லி .303 RIFLE ஐ த் தூக்கிக் கொண்டு GROUND ல்
ஓட விட்டார். வேர்த்து..விறுவிறுத்து..வாயில் நுரை தள்ளி..நாங்கள் இரைத்துக் கொண்டிருக்கும் போது, ' என்னப்பா தம்பிங்களா, எப்படி இருக்கு' என்று தமிழில் பேசி திகைக்கவும் வைத்தார்!
தமிழ்க்காரர்!!
அது இருக்கட்டும்.
ஒன்று கவனித்தீர்களா?
வடக்கிலிருந்து வரும் ஆங்கிலம், SLANG .. ஆக, ஒரு மாதிரியாக ஆகி இங்கு நம் தமிழ் மக்களின் நாவில் வரும் போது செம்மையாய்...முழுமை பெற்று விடுகிறது!!
MADRAS ENGLISH என்றே அதற்குப் பெயர்! அதிலும் கும்பகோணத்துக் காரர்கள் பேசும் ஆங்கிலத்தில் கிளி கொஞ்சும் என்று பண்டிதர்கள் சொல்வார்கள்!
ஆனால் நம் தமிழ் இதற்கு நேர் எதிர்!
தெற்கில் பேசப் படுகிற முழுமையான தமிழ் இங்கு வடக்கே மெட்றாஸ் வரும் போது கழுதை ஏகத்துக்குத் தேய்ந்து கட்டெறும்பாய் ஆகி விடுகிறது !
உதாரணத்திற்கு திருநெல்வேலி பக்கத்தில் ஒருவர் " என்ன பிள்ளைவாள், சௌக்யமா...எப்படி இருக்கேள்?" என்று வாத்சல்யத்துடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே வார்த்தைகள் சுமார் ஒரு அறு நூறு, அறுநூற்றம்பது கிலோ மீட்டர் பிரயாணப்பட்டு, வருவதற்குள் "இன்னாபா எப்டீக் கீறே?" என்று தேய்ந்து..சிதைந்து..சின்னாபின்னம் ஆகி, திரு நெல்வேலித் தமிழ் என்கிற ஒரு பெரிய எட்டு முழ அங்கவஸ்த்ரத்துடன் கூடிய வேஷ்டி இங்கு மெட்றாஸ் தமிழ் என்கிற சின்னஞ்சிறு கைக்குட்டை ஆக சுருங்கி விடுகிறது!
அது போய்த் தொலையட்டும்....
விஷயத்துக்கு வருவோம்.....
அந்த காலத்து S.S.L.C.களின் ஆங்கில அறிவு யாவரும் அறிந்ததே!. இந்த காலத்துப் பிள்ளைகளின் ஆங்கில ஞானம் எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசித் திரியும் ஒரு கான்வென்ட் சிறுவனைப் பார்த்துக் கேட்டேன்:
" I DID A MISTAKE - இதற்கு PASSIVE VOICE சொல்லு?"
அந்த பையன் சொன்னான்.
" I WAS DONE BY A MISTAKE"
இது எப்படி இருக்கு?????????
Labels:
வெட்டிப்பேச்சு
Sunday, July 18, 2010
இனி......
காது மடல் போலமைந்த...
கர்ப்ப வாச
நீள் துயில் கலைந்து,
எழும்பி,
கை பிடித்து,
பள்ளி...
காலேஜ் சென்று...
பட்டம் சுமந்து..
பதவி கூடி,
கைத்தலம் பற்றி...
கடிமணம் புரிந்து,
பிள்ளைகள் பெற்று...
மார்பிளில் வீடு,
'செல்'லுடன்..
க்ரெடிட்,டெபிட் கார்டு,
கலிஃபோர்னியா மாப்பிள்ளை...
(கம்ப்யூட்டர் டிகிரியில்),
ஃபாரின் டூர்..
(பாரிஸிலிருந்து,வெனிஸ் வரை)
ஹோண்டா சிடி..
'லாப்டாப்' இத்யாதி...
வலுவான உறவுகள்,
வசதியாய் வாழ்க்கை...
எல்லாம் போய்...
இன்று,
வாசலுக்கும்,உள்ளுக்குமாய்...
உறவுகள் காத்திருக்க,
கிழிந்த சீலையில்,
கை,கால் கட்டை விரல்கள்...
கட்டப் பட்டு,
மூக்கோட்டைகளில்..
பஞ்சடைத்து,
இல்லினாய்ஸிலிருந்து..
வரும்,
இளைய மகளுக்காக...
நட்ட நடு ஹாலில்,
நான்........!!!!!!!!!
Labels:
கவிதை
Saturday, July 17, 2010
சபாஷ்...சரியான ஜோடி!!!!
வசந்தனுக்கு காலையில் கண் விழித்ததும்,இடது கையில் சிகரெட், வலது கையில் நியூஸ் பேப்பர்....டீபாயில் சுடசுட ஆவி பறக்கும் காஃபி...மூன்றும் இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று குறைந்தாலும் 'மூட்'
அவுட்டாகி விடும்.
இன்னும் காஃபி வந்த பாடில்லை.
'....குமுதினி....காஃபி ரெடியா?"- இருந்த இடத்தில் இருந்தே கடுப்புடன் கத்தினான், வசந்தன்.
'குமுதினியாம்..குமுதினி...ச்சே..குமுதா...கும்மா..கும்மி...கும்மு.'என்று எப்படியெல்லாம் அழகாகக் கூப்பிடலாம்?'
'மைது டியர்' என்று உற்சாகமாக அழைத்துக் கொண்டே,உள்ளே நுழையும் எதிர் வீட்டு திலீப்பை நினைத்துக் கொண்டாள்.
' நம்மளதும் இருக்கே..சுத்த ரசனை கெட்ட ஜன்மம்!
காஃபியை ' ணங்' கென்று டீபாயில் வைத்தாள்.
அனிச்சையாகப் பார்வை எதிர் வீட்டில் சென்றது.
தன்னை மறந்த நிலையில், மூக்கு ஒன்றுடன் ஒன்று உரசும் போதையில்...கண் துஞ்சி..கட்டி அணைத்து..அவள் நெற்றியில்...கன்னத்தில்..இதழில் ..இன்முத்திரைகள் பதித்து...பிரியா விடை பெற்று..ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்யும் திலீப் ....
தெரு முனையில் அவன் தலை மறையும் வரை கையை ஆட்டிக் கொண்டிருக்கும் மைதிலி...
வசந்தன்....பெயரில் தான் வசந்தம்!!
வெள்ளிக் கிழமை பூ வாங்கிக் கொண்டு ...சம்பளத்துடன் அல்வா வாங்கி வரும் ரகம் இவனில்லை...
ஹூம்.....அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
வீட்டு வேலைகளை முடித்து விட்டு வாசலுக்கு வந்தாள்.
எதிர் வீட்டு வாசலில் மைதிலி!
என்னவோ, அவளைப் பார்த்ததும் வீட்டுக்குக் கூப்பிட வேண்டும் போல் இருந்தது.
" வாங்களேன்..மைதிலி,வீட்டுக்கு.."
வந்தவளை பிஸ்கெட்,காஃபி கொடுத்து உபசரித்தாள், குமுதா.
" மைதிலி..நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க.."
" எப்படி சொல்றீங்க?"
" நீங்க ரெண்டு பேரும் 'மேட் ஃபார் ஈச் அதர்' உங்க மிஸ்டர் மாதிரி கிடைக்கறதுக்கு ரொம்பக் கொடுத்து வைச்சிருக்கணுங்க....'
ஆழ் மனத்து ஏக்கம் வார்த்தை வடிவம் பெற்று...வாயிலிருந்து வந்து விழுந்தன.
விழுந்து...விழுந்து ..சிரித்தாள், மைதிலி.
" எல்லாம் வேஷங்க.. மேடையில்லாம..அரிதாரம் பூசாம...நாடகம் ஆடிக்கிட்டிருக்கோம்...நாங்க.ரெண்டு பேரும்.."
" நாடகமா???"
" உங்கக் கிட்ட சொல்றதுக்கு என்ன ..சின்ன வீடு 'செட்டப்' பண்ணியிருக்காரு அவரு. மனசுக்குள்ள எனக்குத் தெரியாதுன்னு நினைப்பு..நானும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறது கிடையாது."
" குமுதாவிற்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்...இப்படிக் கூட நடக்குமா?"
" ஏன்..நீங்க இதைக் கேட்கக் கூடாதா?"
" யார்...யாரைக் கேட்கிறது? இதெல்லாம் அவங்கவங்களுக்கேத் தோணனும்..நாம கேட்டா, பயம் போயிடும்.."
" என்ன சொல்றீங்க"
" உண்மைதாங்க...நாம கேட்காத வரைக்கும்..'கட்டின பெண்டாட்டிக்குத் துரோகம் செய்யறோமே'ங்கற பய உணர்ச்சி, மனசு மூலைல எங்கேயாவது ஒட்டிக்கிட்டு இருக்கும். நாம கேட்க ஆரம்பிச்சோம்னா..அந்த பயமும் விட்டுப் போய்..வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்துடுவாங்க...'இவளால, என்ன செய்ய முடியும்ங்கற தைர்யம் வந்துடும்!'
"அப்படியும் செய்வாங்களா, என்ன?"
" ஏன் செய்யக் கூடாது? ப்ராக்டிகலா 'திங்க்' பண்ணிப் பார்த்தேன். இவர் துரத்தினார்னா - அம்மா கிடையாது, எனக்கு. அப்பா அண்ணன் வீட்டோடு ஒண்டிக் கிட்டு இருக்காரு - நான் எங்கே போறது? அதனால, தெரிஞ்சதைத் தெரியாதது போல இருந்துடறது தான் புத்திசாலித்தனம் போல் தோணிச்சு.."
" சாரி...மைதிலி, உங்க மனசைப் புண்படுத்திட்டேன்" என்றாள் குமுதா, உண்மையான வருத்தத்துடன்.
" அதெல்லாம் இல்லீங்க..விஷத்தை முழுங்கின வேதனை மாதிரி உள்ளே துடிச்சுக்கிட்டும்...வெளியே நடிச்சுக்கிட்டும் இருக்கிற இந்த கண்றாவியை...யார்ட்டயாவது சொல்லி நானும் இறக்கிக்கணுமில்ல..."
சோகம் அவளையும் மீறி குபுக்கென்று கண்களில் பொங்கியது.
இப்போதும்.......அனிச்சையாகப் பார்வை எதிர் வீட்டில் செல்ல....
தன்னை மறந்த நிலையில், மூக்கு ஒன்றுடன் ஒன்று உரசும் போதையில்...கண் துஞ்சி..கட்டி அணைத்து..அவள் நெற்றியில்...கன்னத்தில்..இதழில் ..இன்முத்திரைகள் பதித்து...பிரியா விடை பெற்று..ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்யும் திலீப் ....
தெரு முனையில் அவன் தலை மறையும் வரை கையை ஆட்டிக் கொண்டிருக்கும் மைதிலி...
ஆற்றாமையால், கண்களைத் துடைத்துக் கொண்டாள், குமுதா இங்கே !!!
பின்குறிப்பு :
இச்சிறுகதை சாவி 22.4.92 இதழில் வெளி வந்தது
Labels:
சிறுகதை
Monday, July 12, 2010
ஓ..........பேருந்தே......!!!!!
(தொடர்ந்து நான்கு நாட்கள் சீட் கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்த போது அங்கு ஒரு நோட்டீஸ் 'உங்கள் பயணம் நற்பயணம் ஆகுக' அந்த எரிச்சலில் எழுந்த கவிதை இது!)
ஓ..........பேருந்தே......!!!!!
இருக்கைக் கொடுக்காத
இடை நில்லாப் பேருந்தே!
இருபதே ஆனாலும்,
மகளிருக்கு பத்திருக்கை,
மாற்றுத் திறனாளிக்கு,
மற்றும் ஓர் இருக்கை,
முதியோருக்கு ஈரிருக்கை
எல்லார்க்கும் இடத்தை,
பட்டா போட்டதினால்..
மிச்சமுள்ள......
மூவெட்டு,நாலெட்டு,
ஐந்தெட்டு, ஆறெட்டு,
அகவை ஆகிவிட்ட
எங்களுக்கோ, வேட்டு!
இருக்கைக் கிடைக்காமல்
இரு கை கொண்டு.....
உந்தன்,
உள்ளேயும்...வெளியேயும்...
உன்னில் எங்கேயும்,
உடுக்கை இழந்தவன்
கை போல ஆங்கே....
கடுக்கன் தொங்குவது
போல் ஆங்காங்கே....
தொங்குகிறோம்...!
இதுவா நற்பயணம்...
பேருந்தே, நீ கூறு ????
Labels:
கவிதை
Sunday, July 4, 2010
ஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....
நீள் பதிவு நெ.4.......
சிருங்கேரியே சாட்சி.........
சுற்றிலும் மலை..தூரத்தில் குதிர்முக் ப்ராஜக்ட்.அற்புதமான சூழல்! சிருங்கேரி நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்!
ஜிலு...ஜிலுவென இருந்தது இடம்....சுற்றிலும் அடர்ந்த காடுகள்.மணி மதியம் பன்னிரெண்டு என்று கடிகாரம் காட்டியதை மனம் நம்ப மறுத்து, இது சாயங்காலம் ஏழரை என்றது !!!!
சிருங்கேரி கோவில் !!!
தரிசனம் முடிந்ததும், மடத்திற்குப் போனோம். மிகவும் ரம்யமான இடம்! அங்கு ஒரு நதி ஓடுகிறது. அதில் தான் புஷ்டியாய் எத்தனை மீன்கள்!
மனிதர்கள் குண்டாய் இருந்தால் கஷ்டம்!ஷுகர்,B.P. என்று ஏதாவது ஒன்று வந்து ப்ராணனை வாங்குகிறது! மீன்கள் உலகத்தில் குண்டாய் இருந்தால் தான் SAFE! அது ஒல்லியாய் இருந்தால் தான் ஆபத்து! குண்டு மீன்கள் அதை சாப்பிட்டு விடும்!!
நாங்களும் சிருங்கேரியில் தான் சாப்பிட்டோம்.ஆஹா...அங்கு சாப்பாடு போடுகிறார்கள், பாருங்கள்! ஒரு வண்டியில் அன்னத்தை தள்ளிக் கொண்டே வர, இரண்டு பேர் மாற்றி...மாற்றி...போட்டுக் கொண்டே வர...என்ன ஒரு சுத்தம்!! ஒரு பருக்கைக் கூட வெளியில் சிந்தாமல்... பரிமாறுவதை ஒரு வேலை என்று அங்கு யாரும் செய்வதில்லை.. அர்ப்பணிப்பு உணர்வுடன் எதை செய்தாலும் அங்கு தெய்வீகம் இருக்கும் என்பதற்கு
சிருங்கேரியே சாட்சி!!
(என்னடா, எந்த கோவில் பார்த்தாலும் சாப்பாடு,சாப்பாடுன்னு போர் அடிக்கறானேன்னு நினைக்காதீங்க!கர்னாடகாவில் எந்த கோவில் சென்றாலும் அங்கு பிச்சைக் காரர்கள் கிடையாது!கோவிலுக்கு வந்து யாரும் முகம்,வயிறு வாடி சென்றது கிடையாது!!வேதம் படித்தவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையே தனி!!!எந்த கோவிலிலும் அர்ச்சகர் காணிக்கை போடுங்கள் என்று யாரையும் சொல்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் தட்டில் விழுந்த நூறு ரூபாய் தாள் ஒன்றினை உண்டியலில் போட்டு விட்டார் ஒரு அர்ச்சகர்!!)
சிருங்கேரி யானை எங்களைப் பார்த்து சினேகமாய் சிரித்தது! அதனுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்! யானைப் பாகன் தமிழ் நாடாம்! அது வேறு,
எங்களுக்கு குஷி! ஊரை விட்டு வரும்போது, மறக்காமல் யானையின் email ID வாங்கிக் கொண்டோம்!!!
எங்கள் க்ரூப்பில் ஒரு குழந்தை அவள் அப்பாவை..(அப்பா செல்லம்)
நொடிக்கொருதரம், அண்ணா..அண்ணா..என்று கூப்பிட,எனக்கும் என் அண்ணா ஞாபகம் வர..( நாங்களும் அப்பாவை அண்ணா என்று தான் கூப்பிடுவோம். நிகழ்வுகள் லேபிள் பார்க்கவும்) நான் 0 போடாமல் செல்லில் பேச...எப்பப் பார்த்தாலும் NOT REACHABLE !!!
எங்கள் அம்மாவின் ஆதங்கம் இது: “நாங்க சின்னக் குழந்தையா இருந்தப்ப..எங்காவது விழுந்து அடிபட்டாக் கூட அண்ணா,அண்ணான்னு தான் கத்துவோமாம்..சூர்ப்பனகை மாதிரி...!!”
O.K. அப்புறம் பார்ப்போமா???
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Posts (Atom)