Tuesday, October 14, 2014

ஒரு நாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ......
  ‍‍‍‍‍‍‍‍============================================================
      SKULL லினை இழந்தவன் தன் இன்னுயிர் இழந்ததது போல்,
      FULL லிலே விழுந்தவன் சுயப்ரக்ஞையை இழந்தது போல்
  பல்லினை இழந்தவன் தன் சொல்லிழந்து போனது போல்,
  செல்லினை இழந்து இங்கு செயலிழந்து போனேனே!
                                               ப்ளாஷ் பேக்
  "ஒரு நாள் கூட இந்த மாதிரி ஆனதில்லை சார்" என்று நான் பெருமூச்சு விட...
  "பாவம் சார் நீங்க..போயும் போயும் உங்களுக்குப் போய் இப்படியா?" என்று ஒவ்வாருத்தனாய் பச்சாதாபப்பட...
பத்து சிவாஜி படங்களை ஒருமிக்க பார்த்தது போல் துக்கம் தொண்டையை அடைக்க..
குட்டி சுவர் ஒன்று கிடைத்தால் குலுங்கி குலுங்கி அழுது விடுவது போல ஒரு ஆத்திரம் வந்து தொலைக்க...
எல்லாரும் என்னை பார்த்துக் கொண்டே செல்லில் பேசுவது போல ஒரு ப்ரமை தட்ட‌….
இதில ஃப்ரெண்ட் ஒருத்தன் என் வயற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது போல யாரும் எனக்கு செல் கொடுத்து உதவக் கூடாது என்று 144 போட்டு விட..
மாஞ்சு மாஞ்சு ஸ்டேடஸ் லைக் கமெண்ட் என்று என்னை குலவை போட‌,
'எப்ப‌டா சாய‌ங்கால‌ம் ஆகும்என்று வழி மேல் விழி வைத்து பார்த்து தொலைக்க‌
அந்த கார்பப்ரேஷன் பஸ்ஸோ ஒவ்வொரு கிலோ மீட்டரையும் ஒவ்வொரு மணி நேரத்தில் கடக்க...
ஒரு வழியாய் என் ஸ்டாப் வந்து.....ஆட்டோ பிடித்து வீடு வந்து

அரக்க பரக்க ஹாலில் இருந்த செல்லை கட்டிக் கொண்டு அரைக்கால் மணி நேரம் அழுதேன்!

Thursday, August 14, 2014

இதம் தரும் சுதந்திரம்!

(ஒரு சின்ன Portrait)
ஆடுவோமே....பள்ளு பாடுவோமே..
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
லால்குடி புது தெரு அக்ரஹாரம்...1947 ம் வருஷம்..ஆகஸ்ட் 15..
கீழக்கோடியிலிருந்து உப்பிலி ஓடி வந்து கொண்டிருந்தான்...
அவனுக்கு தபால் ஆபீசில் 'ரன்னர்' உத்யோகம்!
109 ஆம் நெ. அஹம் ராம சர்மா தன் வலது கையை புருவங்களுக்கு
மேல் வைத்துக் கொண்டு கேட்டார்.சாளேஸ்வரம் அவருக்கு!
"என்னடா உப்பிலி, எதையோ பறி கொடுத்தவன் மாதிரி ஓடி வரே?"
"பறி கொடுக்கலை தாத்தா, கிடைச்சாச்சு"
"எது?"
"சுதந்திரம்....நமக்கெல்லாம் விடுதலை"
அரை குறையாக கேட்டுக் கொண்டே வந்தாள் காமாக்ஷி
"அந்த கட்டேல போறவன்ட்டேர்ந்து அலமுக்கு விடுதலை கிடைச்சாச்சா?"
"அலமுக்கு மட்டும் இல்லே...நம்ம எல்லார்க்கும் விடுதலை"
"என்னடா உப்பிலி சொல்றே?"
அப்போது கிட்டாவையர் வந்தார்..
"பட்டணம் திமிலோகப் படறதாமே"
"நம்ம திருச்சிராப்பள்ளி கோட்டையை எடுத்துக்கும்.....போலீஸ்காராளும்....உத்யோக
காராளும், அங்க இங்க ஓடிண்டு..."
"ஓய் பஞ்சுவையரே வாரும்...இந்த அம்பி சொல்றதை கேட்டேளா?"
"ஆமாண்ணா..நிஜம்மாவே சுதந்திரம் கிடைச்சுடுத்து...இப்பவும் இந்த மௌண்ட் பேட்டன்
இழுக்க விட்டுடுவானோன்னு எனக்கு உள்ளூர பயம்..."
"ஆனா, காந்தி தான் கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாரே"
"காந்தி யாருண்ணா....நம்ம ரயிலடிக்கு ஒர்த்தர் வந்தாரே....நீங்க எல்லாரும் விழுந்து விழுந்து போய் சேவிச்சேளே....அப்பக் கூட அக்ரஹாரத்துல திருடன் புகுந்து..."
"ஆமாம்...மன்னி....அந்த மஹானுபாவர் தான்"
புருஷாளுக்கு சமதையா தன் சம்சாரம் பேசுவது என்னவோ போல இருந்தது, ராம
சர்மாவிற்கு.
"காமு, போடி....போய் எல்லாருக்கும் காஃபி கொண்டு வா...சுதந்திரத்தை நாம
எல்லாரும் காஃபி குடிச்சுண்டே கொண்டாடுவோம்!"
"ஹூக்கும்"
கனைத்துக் கொண்டு முகவாய் கட்டையை தோள் பட்டையில் இடித்துக் கொண்டு
காஃபி போட சென்றாள் காமாக்ஷி.
"புருஷாளுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு போல!"



Monday, August 4, 2014

சிறுகதை வெளியீட்டு விழா .......



  "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்னுள்" என்று விகசிக்கத் தோன்றுகிறது.... நண்பர்கள் வை.கோவும், ரிஷபனும் தம் தம் வலைச்சரத்தில் ஆரண்ய நிவாஸ் சிறுகதை வெளியீட்டு விழா பற்றிய நினைவலைகளை மீண்டும்
மீட்டும் போது....
 
     சும்மா இருக்கவும் முடியவில்லை....
    என்ன செய்வது என்றறியா திகைப்பில்............
    அதுவும் அணிந்துரை பிரபல பதிவர் மோகன்ஜி !
    என்னவென்று சொல்வேனம்மா........
                                               அணிந்துரை

கையிலே பூங்கொத்தாய் அன்பு நண்பர் ராமமூர்த்தி அவர்களின் சிறுகதை தொகுதி.... கண்ணுள்ளே அவரின் சிரித்த முகம்.... மனதிலோ சிறுகதையாவது எது எனும் எண்ண ஓட்டம்.... சுகமாய்த்தான் இருக்கிறது.

சிறுகதை இலக்கியத்தின் முக்கிய வகையா? அல்லது சிறுகதை இலக்கியத்தின் ஆறாம் விரலா? வடிவக்குறுக்கத்தால் தான் ஒரு படைப்பு சிறுகதை ஆகிறதா? இந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

படைப்பாளியின் மனம் உள்வாங்கிய ஒரு கணத்தின் நிகழ்வை,
தன் புனைவின் மூலம் காட்சிப்படுத்தி சிறுகதையாய் வாசகனுக்கு படைத்தளிக்கிறான். அவன் சொன்னதை விடவும், சொல்லாமல் விட்டவையையே வாசகன் மனதில் சிறுகதையாய் தன் புரிதலுக்கு ஏற்ப எழுதிக் கொள்கிறான். ஆக,ஒரு படைப்பாளியின் புத்தியில் விழுந்த பொறியும் கருவும் பற்பல சிறுகதைகளாய் வாசிக்கும் பலராலும் எழுதிக் கொள்ளப் படுகிறது என்பதே என் துணிபு. மிகச்சிறந்த சிறுகதையோ ஒரு வாசகனுக்குள்ளேயே பலவாறாய் படிக்குந்தோறும் உருக்கொள்கிறது. அதிலும் திருப்தியுறாமல் விடுபட்டுப் போன வெளிச்சத்தை மீண்டும் மீண்டும் மனது தேடிக் கொண்டே இருக்கிறது.

இன்றைய வாசகனுக்கு நேரமில்லைதான்...முகநூலும்,ட்விட்டர் கொரிப்பும் நேரத்தை தின்றபின் வாசிப்புக்கு மிச்சம் ஏது? வரும் நாட்களில் தொழில் நுட்பத்தாக்கம் இலக்கியம் பற்றிய கண்ணோட்டத்தையே மாற்றிவிடக் கூடும். இன்று, இயல் இ
சை, நாடகம் என்ற மூன்று கூறுகளில் நாடகம் என்பது சினிமாவாகி,குறும்படமாகி, யூடியூபின் இரு நிமிட சலனமாய் மாறியபடி.... எல்லாமும் மாற்றத்துக்கு உட்பட்டவையே என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

இலக்கிய வாசிப்பின் அதிகபட்ச இருப்பாய் சிறுகதை வடிவம் உருப்பெறுமோ? (இன்றைய நாவலின் இடம் போல..) காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எப்படியோ... சிறுகதை தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும். சிறுகதையை ஒரு பக்கக் கதை என்று மூளி செய்வோமோ? நாலு வரி நச் கதை என்று நறுக்கி வைப்போமோ அறியேன்... ஐந்து நாள் கிரிக்கெட் அரைநாளில் காட்டடி மாட்டடி என்று மாறியதைப் போல ரசனைகள்  மாறலாம். அதிலும் சிறந்த படைப்புகள் கூட சாத்தியமாகலாம்.... சட்டென்று கவிக்கோ அப்துல் ரகுமானின் ஒருவரிக் கவிதை ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.
கவிதைத் தலைப்பு : திருக்குறள்
ஒரு வரிக் கவிதை: மும்முலைத்தாய்.

திரு இராமமூர்த்தியின் கதை தொகுப்புக்கு வருவோம்... இந்தக் கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தவுடன் தோன்றுவது ஒன்றே. இயல்பான கதையோட்டம், ததும்பி வழியும் காருண்யம்.,கச்சிதமான பாத்திரப் படைப்பு... நெருடாத கதைக் களன். கதைகள் முடிச்சுகள் போடப்பட்டு ,அவிழ்த்து புரிந்து கொள்ளும் தடுமாற்றம் ஏதும் இதில் இல்லை.. கதை மாந்தர்கள் அன்னியமில்லாமல் நம் அருகாமையிலேயே நடமாடுகிறார்கள்.

இதன் ஆசிரியரின் பெயரின் ஒரு பகுதியான ஆரண்யநிவாஸ் தான் முதல்கதையின் தலைப்பு. யாரோ முதியவர்க்கு கோவிந்தா கொள்ளி போட்டுவிட்டு அவர் வளர்த்த வாழைக் கன்றின் வழித் தோன்றலின்கண் பழுத்த நேத்தம்பழத்தை நண்பருக்கு தருகிறார் கதாநாயகன்.. இந்த விவரிப்பின்  நெகிழ்வுக்கு அழுத்தம் சேர்க்க அப்போதே ரிடையரான மனசஞ்சலம் வேறு.. பேர்பெற்ற சிறுகதையாளர்களின் கதைத்தொகுதிகளில் இப்படியோர் நெகிழ்வுக்கதை இருக்கும். சம்பிரதாயம் மாறாமல் நம் எழுத்தாளரின் தொகுப்பிலும்  வாழையடி வாழையாக இந்த முத்திரைக் கதை. நன்று.

ஒரு சாப்பாட்டுபிரியரின் அறிமுகமும், அவ்வப்போது தம் செலவில் அவர் சாப்பிடுவது பொறுக்காமல் கதையின் நான் அவரை உதாசீனப் படுத்துவதும்,பின்னர் அங்கலாய்ப்பதும் தேர்ந்த கதை வனைவு சார்வாள் சிறுகதையில்.

இழக்கக் கூடாதது கதையில் மனைவி கணவனுக்கு எழுதும் ஒரு வித்தியாசமான கடிதம் நம்மையும் அலைகழிக்கிறது. தேர்ந்த காட்சிப்படுத்தல் கைகூடியிருக்கிறது.

பாலகிருஷ்ணன் வீடு மற்றுமொரு நல்ல படைப்பு. திருச்சியின் ஸ்டோர் குடியிருப்பின் விவரணைகள் மனதை அள்ளுகிறது. ஒரு ஸ்டோரின் அன்றாட நிகழ்வுகள்.. அங்கிருக்கும் மனிதர்கள், புதிதாய் அங்கு குடியேறி, அசூயை ஏற்படுத்தி, ஆட்டி வைக்கும் அவள்... படித்துதான் பாருங்களேன்..

ராகவபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து செல்லும்போது பழைய நினைவுகளில் மனம் அலைபாய.. குழந்தை இல்லாத தம்பதியினரின் வெறுமை நம்மை சட்டெனத் தாக்குகிறது.

சிறகு முளைக்கும்கதையின் மாலதியும்,’ பிரமோஷன் கதையின் சந்தரும் தேர்ந்த பாத்திரங்கள். பிரமோஷன் கதை மேலாண்மை கூறுகளில் கூர்தீட்டிக் கொண்ட நல்ல படைப்பு.

சாராத்து அம்பி உதவியேற்க வேண்டாமென மாத்தூர் ஸ்டேஷனில் இறங்கும் போது, நாமும் அவனுடன் கூடவே இறங்கி விடுகிறோம்.

மானுடம் கதையின் சாமண்ணா நீரில் மூழ்கி மீண்டபோது வேறொருவனாய்...மனவிகாரங்கள் கழுவப்பட்டவனாய் புதியவனாய் ஞான ஸ்நானம் பெற்று மீளும் உன்னதம்... சபாஷ்!

கருப்பு நிறத்தில் ஒரு பலூன் உயரத்தில் பறக்கவும் முடியும் என்று கதாசிரியர் எழுதும்போது, அது உயரஉயர பறக்கத்தான் வேண்டும் என்று உடன்சேர்ந்து குரலெழுப்பத் தோன்றுகிறது.

குத்துசண்டையில் கொடிகட்டிப் பறந்த உஸ்தாத் சாஹிபு முதுமையில் வாழ்க்கையுடன் செய்யும் குஸ்தியும் ஊடே செல்வியின் வாழ்க்கையும் விளக்குகள் அணையும் போது கதையில் சிறப்பாக விவரிக்கப் பட்டிருக்கிறது.

சொல்லாமலேயே சாந்தாவின் உதாரகுணத்துக்கு பரிசாய் டிரான்ஸ்வர்.... ஈகைத் திருநாள் தூய முஸ்லிம் அமிர்பாய்க்கு கிடைக்கும் ஹஜ் வாய்ப்பு, மேதைகளும் பேதைகளும்கதையில் அரவிந்தன் தன் பெண்ணுக்கு சங்கீதம் கற்றுத் தரும் முயற்சி.. அனைத்தும் அழுத்தமாய் சொல்லப் பட்டிருக்கின்றன.

காயத்ரி கதையில் நானாவை பீடித்த சந்திராகிரகணம் விடும் தருணம் அழகான தருணம்.

அஸ்வத்தாமா அதஹ குஞ்சரஹ கதை மூலம் மகாபாரத காப்பியத்தில் ஒரு புதுகதையை கதாசிரியர் சேர்க்க முயன்றிருக்கிறார். வேதவியாசன் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

அற்பாயுசில் போன ராமநாதனின் அபரகார்யத்தை பண்ணி வைக்க வேண்டிய கட்டாயம் மகாதேவகனபாடிகளுக்கு. வார்த்தைகள் போடும் வேலிகளை வாழ்க்கை பிய்த்துதான் போட்டு விடுகிறது என்பதை சிறப்பாக இந்தக்கதை சொல்கிறது. இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாய் இதையே சொல்வேன்.  
  
 போக்கிடம் இன்றி கணவனின் சின்னவீடு பற்றி கண்டும் காணாமல் போகவேண்டிய துயரம் மைதிலிக்கு சபாஷ்! சரியான ஜோடிகதையில். கதை சொல்லப்படும் விதத்தில் ஆதங்கம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

நியாயம் கதையில் பெண்ஜென்மத்தின் வேதனைகள் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

குழந்தைகளின் பிரச்னைகளை பூதாகாரமாய் பெரிது படுத்தும் பெற்றோரின் இயல்பை முளைச்சு மூணு இலை விடறதுக்குள்ளே கதையில்  லாவகமாய் கையாண்டிருக்கிறார் கதாசிரியர். மீண்டும் சபாஷ்!

இந்த தொகுதியின் ஓரிரு கதைகளை முன்பே படித்திருந்தாலும்,அனைத்தையும் படிக்கும் வாய்ப்பு இப்போதே அமைந்தது.  இந்தத்தொகுதி ஒரு சீரியமுயற்சி என்றே சொல்வேன்.. அன்பர் திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களின் ஓவியங்கள் கதைகளை மேலும் மெருகூட்டுகின்றன. நாணா போன்ற கேரக்டர்களை வெளிப்படுத்தியிருக்கும் அழகு.. அவருக்கு என் பாராட்டுகள்.

 இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்.. இயல்பிலேயே திரு ராமமூர்த்தி அவர்கள் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரின் ஹாஸ்ய ரசனையும், அங்கதத்தையும், சடுதியில் செய்யும் பகடியையும் நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவரின் அடுத்த தொகுதி  நகைச்சுவை மிளிரும் படைப்புகளோடு வெளிவர வேண்டும் என்று கோருகிறேன்.. கோரிக்கை எதற்கு? நண்பருக்கு அன்புக் கட்டளை இடுகிறேன்.

வாய்ப்புக்கு நன்றியும் அன்பும்...

மோகன்ஜி
வானவில் மனிதன்
mohanji.ab@gmail.com

Saturday, July 5, 2014

குறளும்,குறுங்கதையும் (1)
::::::::::::::::::::::::::::::::::::::
"ஏங்க"
"என்னங்க"
"பக்கத்து வூட்ல பெர்ரீசா ப்ரிட்ஜ் வாங்கியிருக்காங்க...நாமளும்....."
"சரி வாங்குவோம்"
ஒரு வருடம் கழித்து...
"இந்தாங்க....அவுங்கூட்ல ஹோம் தியெட்டர் வாங்கறாங்க.."
"சரி....நாமளும் வாங்கலாம்.."
ஐந்து வருடங்கள் அனாவசியமாய் உருண்டோடியது.
"பங்கஜம் வூட்டுக் காரரு இன்னோவா வாங்கப் போறாராம்."
"சரி...அத்த விட பெரிய காரை நாமும் வாங்கலாம்.."
"இப்டி சொல்லி சொல்லியே ஒவ்வொரு தடவையும் என் வாயை அடைங்க...ஆனா ஒண்ணும் வாங்காதீங்க....ம்..நீங்களும், அவரும் கிளார்க்கா ஒண்ணா தான் ஜாயின்
பண்ணிணீங்க..இப்பவும் ஆபீசராகி...ரெண்டு பேரும் ஒரே 'கேடர்' தான்..அவங்கூட்லியும் பெரிசா சம்சாரம் இல்ல..
அவிங்க நாலு பேரு....நாமளும் நாலு பேருதான்....அந்த அண்ணனுக்கு மட்டும் எங்கேர்ந்து பணம் வந்திச்சு....ஹூ....ம் ...அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்"
அந்த நாளும் வந்தது..
"இன்னாங்க...பக்கத்து வூட்டு அண்ணன் இந்த மாசம் ரிடையர்ட் ஆகப் போறாராமே.."
"ஆமாம்..பரிமளம்...க்வார்ட்டர்சை காலி பண்ணப் போறாங்க...டவுன்ல வீடு பார்த்திருக்காரு..பெரிய காரை வைக்கணுங்கிறதுக்காக பெரிசா வீடு பார்த்திருக்காங்க...பதினைஞ்சாயிரம் ரூபாய் வாடகையாம்!"
"அம்மாடியோவ்...அது சரி...நீங்களும் அவர் வயசு தானே..."
"ஆமாம்..அடுத்த ரெண்டு மாசத்துல நானும் ரிடயர்டாகப் போறேன்!"
"என்னங்க திடும்னு  கல்லைத் தூக்கிப் போடறீங்க....நாமளும் க்வார்ட்டர்சை காலி பண்ணனுமா..அடி ஆத்தி எங்கே போவோம்?"
"கவலையே படாதே பரிமளம்...பணத்தை FD ல போட்டிருக்கேன்..அது மெச்சூர் 
ஆயிடும்...அதுல நாம வீடு வாங்கலாம்"
"எப்டீங்க இவ்ளவ் பணம்?"
"கேட்டியே...இது நல்ல கேள்வி...எதுக்கெடுத்தாலும் பக்கத்து வூட்டுக் காரனை 
பார்க்கக் கூடாது...அவன் அத்த வாங்கினான்....அவன் இத்த வாங்கினான்னு தேவை இல்லாம 
ஜம்பத்துக்கும்....ஆடம்பரத்துக்கும் நாமும் வாங்கிறதனால தான் நாட்டில பண வீக்கம் வருது
இதை DEMONSTRATION  EFFECT ம்பாங்க...இத்த நான் படிச்சதினால சுதாரிப்பா நடந்துண்டு காசை சேமிச்சு வைச்சிருக்கேன்...அந்த பணத்துல இப்ப நம்ம தேவைக்கு நாம வீடு வாங்கப் போறோம் சரியா?"
"சாரி" - என்றாள் பரிமளம் தலை குனிந்து கொண்டு!

குறள்:
பிறன் மனை சிறிதும் நோக்காதான் இல்லில்,
சரண் அடைவாள் செய்யும் தன்னால்.
(பின் குறிப்பு: செய் - திருமகள்)

Thursday, May 8, 2014

டிப்டாப்!

லண்டன் ...
பிக் பென் கடிகாரத்தை, 'ஓட்டு கேட்க வரும் அரசியல் வாதி பொது ஜனத்தை 
அண்ணாந்து பார்ப்பது' போல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு விவசாயி.
ஒரு டிப்டாப் ஆசாமி அங்கு வந்தான்.
" என்ன பார்க்கிறே?"
"கடிகாரம் சூப்பர்!"
"உனக்கு வேண்டுமா?"
"ஆமாம்"
"ஆயிரம் பவுண்ட் அப்பேன்!"
"நிஜம்மாவா"
பக்கத்தில் உள்ள லங்காஷயரை சேர்ந்த விவசாயி அவன். லண்டனுக்கு வந்து
கோதுமை மூட்டையை விற்ற காசு மடியில் இருந்தது. யோசித்து பார்க்காமல்
ஆயிரம் பவுண்ட் பணத்தை டிப்டாப்பிடம் கொடுத்து விட்டான், விவசாயி.
பணத்தை வாங்கிக் கொண்ட அந்த டிப்டாப்  சொன்னான்.
"ஒரு அஞ்சு நிமிஷம் நில்லு...நான் ஏணி கொண்டு வந்துடறேன், அதை எடுத்து தர"
"சரி"
போனவன் போனாண்டி தான்...
பாவம், விவசாயி ....
ஒரு மூன்று மணி நேரம் காத்திருந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினான்...
அடுத்த நாள்....
அந்த டிப்டாப் அதே இடத்துக்கு வந்தான்..
என்ன ஆச்சர்யம்!
இன்றைக்கும் ஒரு பட்டிக்காட்டான் அந்த பிக்பென் கடிகாரத்தை அண்ணாந்து பார்த்துக் 
கொண்டிருந்தான்..
"அட....இன்னிக்கும் நரி முகத்தில் முழிச்சிருக்கோம் போல் இருக்கே!"
ஆவலுடன் அவனிடம் சென்றான் அந்த டிப்டாப் ...
"என்னப்பேன், கடிகாரம் வேண்டுமா?"
"ஆமாம்"
"ஆயிரம் பவுண்ட்"
இடுப்பிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான், அவன்.
"அச்சச்சோ..."
தன்னை மீறி கத்தி விட்டான் அந்த டிப்டாப்...
நேற்று அவனிடம் ஏமாந்த அதே விவசாயி!
டிப்டாப் சுதாரித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பதற்க்குள் சட்டென அவனைப்
பிடித்துக்கொண்டு அந்த விவசாயி சொன்னான்:
" டேய்.....நேத்திக்கு ஏணி கொண்டு வரேன்னு சொல்லி ஏமாத்தினா மாதிரி இன்னிக்கும் ஏமாத்தலாம்னு நினைச்சியா?"
டிப்டாப்புக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
"அப்படி ஏமாத்தலாம்னு நினைச்சா அத்த உடனே மறந்துடு...நீ இங்ஙன இரு.இங்கே பக்கத்தில் தான் என் மச்சான் வீடு இருக்கு.....நான் போய் ஏணி கொண்டாறேன்!"




Sunday, April 20, 2014

உல்லாஸ வேளை!

மனைவியிடம் மருள்வோர் சங்கத் தலைவர் மகாமுனியை ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி
கண்டார்.அந்த பேட்டியில் கேட்கப் பட்ட கேள்விகள்:
"தங்கள் வாழ்க்கையில் நடந்த உங்களுக்கு மிகவும் பிடித்த சுவாரசியமான நிகழ்வாக
  எதைக் கருதுகிறீர்கள்? தங்களுக்குப் பிடித்த கல்லூரியில் சேர்ந்தது?"
"இல்லை"
"தங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்த நன்னாள்?"
."ஊகூம்"
"காதலியின் முதல் முத்தம்?"
"அதுவும் இல்லை"
"திருமண நன்னாள்"
"இல்லவே இல்லை"
"ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆன நாள்"
"இல்லை"
"நீங்களே சொல்லுங்கள் சார்"
மகாமுனி தாவாங்கட்டையை சொறிந்து கொண்டு மோட்டு வளையைப் பார்த்தார்.கண்கள் 
சொருகிய நிலையில் அந்த இனிய காட்சி அவர்மனக்கண் முன் விரிந்தது.ஒரு ஆழ்ந்த மௌனம்.
நிருபரும் அதைக் கலைக்க விரும்பவில்லை.பொறுமையாகக் காத்திருந்தார்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் தொடர்ந்தார்,மகா முனி.
".....,இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.... அது ஒரு பொன் மாலைப் பொழுது. என் 
மனைவிக்கு கடும் ஜுரம்.இருவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டருக்காக காத்திருந்தோம்..
வழக்கம் போல் தொணதொணப்புடன் மனைவி.....ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு,
ஒருநர்ஸ் வந்து...."
"நர்ஸ் வந்து..?"
"தர்மா மீட்டரை என் மனைவி வாயில் வைத்து, நர்ஸ் தன் கை கடிகாரத்தைப் பார்க்க,
நான் ஆனந்தத்துடன்,மௌனமான என் மனைவி முகத்தைப் பார்க்க...அந்த டிக்..டிக்..டிக்..
தருணங்கள் தந்த சந்தோஷம் தான் என் வாழ்விலேயே,நான் அடைந்த  மிகப் பெரிய 
சந்தோஷம்!" 
மறுபடியும் கண்கள் சொருகிய நிலையில் அவ்வினிய காட்சியை மனக் கண்ணில்
மகா முனி மனக் கண்ணில் கொணர முயல, அந்த நிசப்தத்தை இடையூறு செய்யா வண்ணம்
அந்த இடத்தை காலி செய்தார், நிருபர் கனத்த இதயத்துடன்!


Sunday, March 16, 2014

புழுவும்,நானும்!



ஒரு சாவகாசமான மாலைப் பொழுது....
புழு ஒன்றுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
"ஆமாம் ....நீ யார்?"
"நான் மனிதன்..."
"இன்னும் சொல்லலாமே..."
"நானா....வடமன்...திருச்சி ஜில்லா...பூர்வீகம் லால்குடி பக்கமுள்ள அரியூர்....வைஸ்வாமித்ர,
தேவராத,ஔதல என்கிற மூன்று ரிஷிகளின் வழி வந்தவன்..ஆனால்..."
"என்ன ஆனால்?"
"கொஞ்ச நாள் முன்னால் கண்டம் விட்டு கண்டம் போய் வந்தேன்...அதனால்....."
"என்ன அதனால்?"
"தினுசு,தினுசாய் மனிதர்கள்.....பிரிட்டன்,சைனா,ஜப்பான்,ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து,
 வந்த வெவ்வேறு இன, மத,கலாச்சார மனிதர்கள்.....அவர்களை எல்லாம் பார்த்த போது,,,"
"பார்த்த போது?"
"என்னை அரியூர்,ஆங்கரை,திருச்சி,இந்தியா என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அறிமுகப் படுத்திக்
  கொள்ள விரும்பவில்லை....என்னை ஒரு International citizen என்று சொல்லிக் கொள்ள ஆசை!"
"நான் கூட இந்த பிரபஞ்சத்தில் ஒரு பிரஜை!....அது சரி...உனக்கு சொந்த பந்தம்?"
"பெற்றோர்....உற்றார்.....உறவினர் ...என்று ஏகப்பட்ட பேர் எனக்கு,உனக்கு?"
" இப்பூமியில் உள்ள அத்தனை ஜீவன்களும்..."
விஷமக் கார புழுவாக இருக்கும் போல இருக்கிறதே....நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும்...
மௌனத்தை கலைத்தது புழு.
"வீடு,வாசல்?"
"ஆரண்ய நிவாஸ் என்று பெயர் என் வீட்டிற்கு....நிஜமாகவே ஆரண்யம் தான்...எக்க சக்க
பழ மரங்கள்..."
"போதும்....நிறுத்து.....ஒரே அருவருப்பாக இருக்கிறது..."
சட்டென ஒரு மின்னல் என்னுள்....இந்த பிரபஞ்சத்தில் எனக்குள்ள அத்தனை உரிமைகளும்
அதற்கும் இருக்கிறது..உயிர்களுக்குள் என்ன பேதம்? அவரவர்  கர்ம வினைப்படி நான் மனிதனாக,
அது புழுவாக பிறந்திருக்கிறோம்...அவ்வளவு தான்...
தெளிவு பிறந்தது என்னுள்....என்னை நானே உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்...
"புழுவே....உன்னிலும் தாழ்ந்தவன் நான்..." என்றேன் நாத் தழுதழுக்க..
"அட மனுஷா...இன்னுமா அந்த 'உன்னிலும்' மை விட வில்லை நீ?"
குலுங்கி..குலுங்கி சிரித்தது அந்த பொல்லாத புழு!







Thursday, March 13, 2014

என் சகோதரி ஜெயந்தி சிவகுமாரின் கவிதைகள்....


1. இனப் பெருக்கம் 

    செய்துகொண்டேயிருக்கிறது...

     மொழி,

     அம்மா என்ற வார்த்தையை,

     தாயில்லாத

     குழந்தைகளுக்கு!

  2. கரப்புகளின்

      இறுதி யாத்திரையில்,

      எறும்புகளின் 

      ஊர்வலம்!

   3. வயல்களில்,

       அபார்ட்மெண்டுகள்....

        பசுமரத்தாணியாய்,

       வயல்கள்!

   4. குடங்களில்,

        வழிந்து,

        ததும்புகிறது,

        நிலா! 

     5. சொத்துக்களை,

          பிரித்துக்

          கொண்டிருந்தனர்...

          அண்ணன்,தம்பிகள்!

          வேர்களை படர

           விட்டுக் கொண்டிருந்தது,

           கொய்யா!

        6.சண்டைபோட்டுக்கொண்டு

           சாப்பிட்டனர்,

           கூட்டாஞ்சோறு!

         7.காதலுக்காக,

             கயிற்றை சுருக்கும்

             போது,

              கான்க்ரீட்

              போட்டுக்கொண்டு 

              இருந்தது,

              உனக்கான,

              வார்த்தைகள்!

           8.வயலை 

              விற்று, 

               fees

              கட்டினார்,

               விவசாயக் கல்லூரி,

               அட்மிஷனுக்கு!

            9.இஸ்திரி போடுபவரின்

                சுருக்கம் விழுந்த,

                வயிறு!

                எதிரில்,

                கஞ்சி போடப்பட்டு,

                 துணிகள்!

இவை அனைத்தும் முரண் என்கிற தலைப்பில்!

அவர் பத்திரிகைகளுக்கு கவிதைகள் அனுப்பிக் கொண்டிருந்தவர்....ஒரு குடும்ப சந்திப்பில் " ஏதாவது இப்ப எழுதுகிறாயா?" என்று நான் கேட்ட கேள்விக்கு, சடசடவென 

வாயிலிருந்து, விழுந்த வார்த்தைகள் ஒரு நொடிப்பொழுதில் 

கவிதைகளாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு விட்டன!Hats off to Smt. ஜெயந்தி சிவகுமார்!

Saturday, March 8, 2014

கல்யாண சாதனை!



அவ்ளவ் தூரம் நாக்கில் நுரை தள்ளி, ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் ஓடினவனுக்கு, தண்ணீர் குடிக்கக் கூட உபயோகப்படாத கோப்பை பரிசாகத் தருகிறார் போல்,இப்பொழுதெல்லாம் கல்யாணங்கள் ஆடம்பரமாக நடத்தப் படுகின்றன.நகரின் மையம் பகுதியில் பிரமாதமான மஹால்....

பொதுவாக கச்சேரி கேட்பவனுக்குத் தான் அஸாத்ய சகிப்புத் தன்மையும்,அபாரமான பொறுமையும் வேண்டும்...ஆனால், கல்யாண மண்டபத்தில் பாடுகிறவனுக்குத் தான் இது வேண்டும்.....ஒரு கல்யாணத்திற்கு போயிருந்தேன்...ஒரு பிரபல கச்சேரி வித்வான் அபூர்வமான ராகங்களில் உயிரைக் கொடுத்து பாடிக் கொண்டிருக்க, ஒருவரும் அதை கேட்காமல் அங்கும்,இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்....

 அப்படியும், பக்கத்தில் இருந்த ஒருவர் "ஸார், இது பைரவி தானே" என்று சங்கீத்த்தைப் பற்றி தன்னுடைய மேதா விலாஸத்தை என்னிடம் காண்பிக்க முயற்சிக்க, நானும் பதிலுக்கு "பைரவியே தான்" என்று சொல்ல, சட்டென்று ஒரு நடுத்தர வயது மாது திரும்பி, "நான் தான் பைரவி...சேஷ ஐயங்காரின் பெண் வயிற்று பேத்தி...எம் புள்ள ரெண்டும், அமெரிக்கால......நியூ ஜெர்ஸில இருக்கறவனுக்கு, இப்ப பார்த்துண்டு இருக்கோம்....யாராவது வடகலைல பொண்ணு இருந்தா சொல்லுங்கோ"ன்னு instantஆ அப்ளிகேஷன் போட, இந்த பைரவி பேச்சுனால, அந்த பைரவியைக் கேட்க முடியாமப் போச்சு!

சரி.....சாப்பிடவாவதுப் போகலாமென்றால், அது இதை விட கொடுமை! 

தொகுதி உடன்பாடு ஏற்பட்டு,தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு சீட்டாவது கிடைச்சுடும்....ஆனா,கல்யாண பந்தியில் சீட்டு கிடைக்கிறது அவ்வளவு கஷ்டம்!

அப்பாடா.......பந்தியில் ஒரு வழியாக இடம் கிடைத்து, உட்கார்ந்தோமானால், சுவையான பதார்த்தங்களை கரண்டி காம்பால் பரிமாறுகிறான் காண்ட்ராக்டர்....இதுல ஒருத்தன் 'வெந்த வெங்காயத்துல விளக்கெண்ணெய் ஊற்றுகிறார்' போல, " ஸார், சாதிக்கட்டுமா?" என்று கேட்க, "சாதிச்சது போதும்!" என்று எரிச்சலுடன் எழுந்து கொண்டேன்!

Tuesday, March 4, 2014

காதல்

காதலித்துப் பார்!
புரியும்....
காதலித்தால்
Bar!!!!

Wednesday, January 1, 2014

அடியேனின் குறள் அஞ்சலி
-----------------------------

1. மண்ணுலகில் செய்த மகத்தான பணி தொடர 
    விண்ணுலகம் சென்றாயோ நீ.
2. வெற்றுடம்பு வெண்தாடி கொண்ட இவன்
    சிற்றெறும்பிற்கும் செய்யான் தீங்கு.
3. மக்கிய உரமும் மண்புழுவும் இருக்குமட்டில்
    மன்னுலகம் மறவாது உனை.
4. மின்னும் மணி அரிசி பசுந்தாள் உரம் இட்டால்
    இன்னும் ஒரு கவளம் கொள்.
5. பண்ணிற்கு ஆழ்வார் பலர் இருந்த மாநிலத்தில்,
    மண்ணிற்கு இவனே கதி.
6. உழவினைத் தொழிலாகக் கொண்டோர்க்கெல்லாம் இக்
    கிழவனே இனி நல் தெய்வம்.
7. நிலம் என்னும் நல்லாள் நம்மாழ்வார் என்றாலே
    பலம் பல கொள்வாள் நயந்து.
8. செயற்கை உரமிட்டால் செத்தொழிந்து போவீரென,
    செவ்விளக்கு காட்டிய செம்மல்.
9. மண்ணைப் பொன்னாக்கும் ரசவாதம் அறிந்தவனை,
    விண்ணுலகம் ஏற்கும் வியந்து.
10. நல்லார்க்கு தெரியும் இவனொருவனால் தான்,
      எல்லோர்க்கும் பெய்தது மழை.