Saturday, September 29, 2012

என் விகடனில் நான் !



  ஒரு வாரம் முன்பு .......
  ஆபிசிலிருந்து வீடு வந்து கொண்டிருந்த போது ....
  "சார்....ராம மூர்த்தி  ..."
   எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம் ...என் செல்லில் அடிக்கடி WRONG CALL வரும் ..ஒரு நாளைக்கு குறைஞ்சது நாலு தடவையாவது WRONG NUMBER     சொல்லாம நான் தூங்கினது கிடையாது.முன்ன பின்ன தெரியாத
நம்பரிலிருந்து எனக்கு ஒரு கால் ....
   ஒருக்கால் வேற ஏதாவது  ராங் ராமமூர்த்தியோ ?
  " ஆமாம் ..நீங்க ?"
  " சார் ...நான் ஆனந்த விகடனிலிருந்து பேசுகிறேன் ..நீங்க என் விகடனுக்கு
அப்ளை பண்ணி இருக்கீங்க .. அதுல உங்க 'பிலாக்'கை  போடப் போறோம் ..
உங்க போட்டோவை என்னோட  email ID க்கு நாளைக்குள்ள அனுப்புங்க சார் "
    ஒரு நொடி ஆகாயத்தில் பறந்தேன் நான் ...
    நானா.... என் பிளாக் ... என் விகடனிலா .... 
   இப்போது கொஞ்ச நாட்களாக முற்றிலும் புதிதாய் வந்த விகடனில் அந்த
பழைய என் விகடன் காணாமல் போக .. அதை நெட்டில் தான் பார்க்க முடியும் என்பதை நண்பன் சொல்ல...
   அன்று சாயந்திரமே எனக்கு விகடனிலிருந்து போன் !
   என்ன ஒரு ஆச்சர்யம் ?
   ஒரு வாரத்தில் பப்ளிஷ் ஆகும் என்று மனதிலிருந்து ஒரு குரல் !
  அந்த ஏழு நாட்கள் .........
   பத்து மாத கர்ப்பிணி போல் பதைப்புடன் காத்திருந்தேன்
   இதோ ..என் பிலாக் பற்றிய அறிமுகம் ..........பாரம்பர்யமான
  ஆனந்த விகடனிலிருந்து.....
  அந்த லிங்க் இதோ .............
   http://en.vikatan.com/article.php?aid=24367&sid=686&mid=33
   ......
   விகடனுக்கு நன்றி !
   என் விகடன் 
  இனி
  'என்' விகடன்  !!!
   .
   

Wednesday, September 19, 2012

விளக்குகள் அணையும் போது....(மீள் பதிவு)

கைகளும், கால்களும் கட்டப் பட்ட 
நிலையில் தனது அகன்ற மார்புடன் படுத்துக்
கிடந்தார், உஸ்தாத் ஷாஹுல் ஹமீது சாஹேப் அவர்கள். அறுபது வருடங்கள் 
அவருக்காக உழைத்த அந்த உடம்பு ஓய்வு
எடுத்துக் கொள்ள ஆரம்பித்தது. இராமநாத
புரம் மாவட்ட மண் போல, கடினமான அவருடைய முகம் இறுகிப் போய்க் கிடந்தது. வாய் ஓரங்களில், ஈக்கள் குளிர்
கால பார்லிமெண்ட் கூட்டத்தொடரை 
நடத்திக் கொண்டிருந்தன. நான்கு நாட்கள்
வயதான தாடி,அந்த முகத்திற்கு கம்பீரத்தையே கொடுத்தது. 
' இதோ பாருய்யா, பேப்பர்காரன் உனக்கு 
மருவாதி கொடுத்துப் போட்டிருக்கான்" என்று செல்லி அவர் மீது தினசரியை வீசினாள்.அதில் " குத்து சண்டை வீரர் ஷாஹுல் ஹமீது மாரடைப்பினால் காலமானார்.அன்னாருக்கு வயது அறுபத்து மூன்று" என்ற விளம்பரம் வந்திருந்தது. இன்னமும், அவர் மீது விசுவாசமுள்ள, யாராவது சிஷ்யப் பிள்ளை, பத்திரிகைக்கு
அனுப்பி இருப்பான்.இருக்கும் வரை கவனிக்காமல், இறந்த பிறகு கூப்பாடு போடும் உலகம் தானே இது!
'மௌத்தாகி' தன்னுடைய கடைசி காரியத்துக்குக் கூட ஏழை செல்லியை எதிர்பார்க்கும் நிலயில் இருந்த போதும்,
அந்த முகம் தெளிவாகவே இருந்தது. அவருக்குத் தெரியும், செல்லி எந்த குறையும் 
வைக்க மாட்டாளென்று! 
ராத்திரி முழுக்க செல்லி, அந்த கட்டில் 
காலையேப் பிடித்துக் கொண்டு, கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.எந்த வித பயமும், அருவருப்பும் இல்லாமல் !
'உம்... காலம்' என்று அலுப்புடன் எழுந்தவள்,
தன்னுடைய குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்தாள். வானம் பொல பொலவென்று விடிந்திருந்தது.
அவர் வந்து எத்தனை நாட்கள் இருக்கும்? கணக்குப் போட்டுப் பார்த்தாள்,செல்லி. நேற்றைய தினத்தை சேர்த்து, நாற்பது நாட்கள் ஆகியிருந்தது. செல்லிக்கு அவரை
ஆரம்பத்தில் அடையாளம் தெரியவில்லை. மேட்டுத்தெருவில், கட்டிட வேலை முடிந்து, திரும்பிக் கொண்டிருந்தாள் அவள். கையில் ஒரு கிழிந்துப் போன சூட்கேஸுடன் அவர் வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.
என்னமோ, அவரைப் பார்த்தவுடனே,கேட்கவேண்டும் போலத் 
தோன்றியது, அவளுக்கு. 
'எங்கே போகணும், பெரீவரே' என்று அவள் கேட்டவுடன்,'எங்கேன்னு தெரியலே,
தாயி' என்று பரிதாபமாக அவர் பதில் சொன்னதை நினைத்துக் கொண்டாள்.
தினமும் இரண்டு ரூபாய்க்கு குறைவாகவே
சம்பாதிக்கும் சித்தாள் செல்லி, அவருடைய
பதிலைக் கேட்டதும், தன்னுடைய வீட்டிலேயே அவருக்கு தங்க இடம் கொடுத்தாள். அப்போது கூட அவளுக்குத் 
தெரியவில்லை.
இரண்டு,மூன்று நாட்கள் கழித்து, அவளுக்கு லேசாக சந்தேகம் வர, அவரைக்
கேட்டாள்.' ஆமா தாயி, நான் தான் அது' என்று சொல்லும்போதே, அவருக்கு கையும், காலும் நடுங்கின. 'எப்படி இருந்த உடம்பு,
இப்படி ஆயிடுச்சேய்யா' என்று சொல்லி கண் கலங்கும் போதும், அவருடைய வரண்ட கண்களிலிருந்து, பொட்டுக் கூடக் கண்ணீர் வராது.
" உம்...நுப்பது வருஷம் வாள்ந்தவங்களும் இல்லே. நுப்பது வருஷம் தாள்ந்தவங்களும் இல்லேன்னு தெரியாமலா சொன்னாங்க..."
என்று குடிசைக்குள்ளே, திரும்பியவள், அந்த சிம்னி விளக்கைப் பற்ற வைத்தாள்.'குபுக்'கென்று எரிந்த விளக்கு, சிறிது நேரத்திலேயே, உஸ்தாது போலவே உயிரை விட்டது. 'அடச்சீ...' என்று கெட்ட
வார்த்தை சொல்லி விளக்கைத் திட்டியவள்,
அவருக்குக் கேட்டிருக்குமோ என்று பயந்து
கொண்டு கட்டிலைப் பார்த்தாள்.'நீ தான் செத்துப் பூட்டியே, உனக்கு எப்படி கேக்கும். நா ஒரு மடச்சி' என்று தனக்குள், அலுத்துக் கொண்டாள். 'இந்த நாப்பது நாளா, ஏதாவது,வாய் தவறிசொல்லிவிட்டு, கட்டிலப் பார்க்கறது பளக்கமா இல்லே போயிடுச்சு'
என்றாள். 
'யாருக்காவது சொல்லி அனுப்பனுமா' என்று யோசித்துப் பார்த்தாள், செல்லி. அவருக்கு நெருங்கிய சொந்தமென்று யாரும் கிடையாது என்று அவரே சொல்லியிருக்கிறார். 'ஏன்யா, உனக்கு புள்ள குட்டி எதாவது இருக்கா' என்று அவள் கேட்டதற்கு, 'பொண்டாட்டியே இல்ல தாயி''
என்று தன் பொக்கை வாய் தெரியச் சிரித்திரிக்கிறார், அவர். 
'பேச்சிமுத்து பயகிட்ட சொல்லியாகணும்' என்று நினத்தவளுக்கு உடனே 'பேச்சிமுத்து
என்ன செய்வான் என்பதுமில்லை தெரிஞ்சு 
கிடக்கு' என்று இழுத்தாள்.ரெண்டு ரூபா காசைக் கொடுத்து,'ஏதாவது பண்ணிக்கோ, ஆயா, ஆள விடு' என்று கூசாமசொல்லிடுவானே அந்த பாவிப் பய.
உஸ்தாது வந்த புதிதில், பேச்சிமுத்துக்கு அவரைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று ஆவலோடு அவன் குடிசைக்குள் ஓடினாள் செல்லி. 'தோ பாரு நீ ஏதாவது வெவரம் கெட்டத்தனமா அந்தாள் கிட்ட சொல்லிடாதே' என்று அவளுடைய உற்சாகத்துக்கு 'ஃபுல் ஸ்டாப்' வைத்தவன்,
இரண்டு,மூன்று நாட்கள் கழித்து அவரைப் பார்க்க வந்தான். வந்தவன் சாதரணமாக வரவில்லை. ஏகக் கூச்சலுடன் வந்தான்.'பாயி, எனக்கு நல்ல பொளப்பை குடுத்தே. உனக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியாத நிலையில் இருக்கேனேன்னு ஏக அழுகை அழுதான். அத்தனையும் நடிப்பு. சொந்தமாக சைக்கிள் ரிக் ஷா. பொண்டாட்டியத் தவிர இரண்டு கூத்தியாரு வேற. அவனாலயா முடியாது...விசுவாசம் கெட்ட பய !
செல்லி, பேச்சிமுத்து போன்றவர்கள் தயவை நாடிக் கொண்டிருக்கும் உஸ்தாத் ஷாஹுல் ஹமீது சாஹேப் ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்தவர் தான். சுழன்று கொண்டிருக்கும் காலச்சக்கரம் மேலே இருப்பவரை கீழே தள்ளி விட்டது! 
ஒரு இருபது,இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு குத்துச்சண்டை 
உலகில் கொடி கட்டிப் பறந்தவர் இந்த உஸ்தாத். உடல் பயிற்சி சாலை ஒன்று வைத்திருந்தார். இவரிடம் குஸ்தி பயின்ற பையன்கள் ஒருவரும் சோடைப் போகவில்லை. 
போட்டி, பந்தயம் என்று கலந்து கொண்டு,
எல்லாரையும் வெற்றி வாகைசூடி கொண்டு வருவார் உஸ்தாத். கலந்து கொண்டால், வெற்றி இவருக்குத் தான் என்ற நிலை இருந்தது. அந்த காலத்தில் பரிசுப் பணத்தை
ஏகமாகக் குவித்த அவர், அத்தனையும் தனக்காகச் செலவழித்து விடவில்லை. எத்தனையோ பிள்ளைகளுக்கு, ஸ்கூல் பீஸ் கட்டியிருக்கிறார். எத்தனையோ ஏழைகளுக் க்குச் சாப்பாடு போட்டிருக்கிறார். வெறும் சோற்றாளாகத் திரிந்து கொண்டிருந்த இந்த பேச்சிமுத்துவை, அதட்டி,உருட்டிப் பணிய
வைத்து, சைக்கிள் ரிக் ஷா வாங்கிக் கொடுத்து, அவன் வீட்டில் விளக்கெரியச் செய்திருக்கிறார்.
' நாம சாப்பிடற சாப்பாடு, நம்ம சாப்பாடு இல்ல தாயி, குர்பானி கொடுக்கிறதைத் தான்
பிறகால, நாமே சாப்பிடறோம்'னு வாய் ஓயாம சொல்லுவியே அந்த சொல்லு, உன் வாழ்க்கையிலே பொய்யாப் போச்சேய்யா என்று கட்டில் காலில் ' மொடேர் மொடேர்'
என்று அடித்துக் கொண்டாள், செல்லி. உஸ்தாதிடம் கை நீட்டிய ஒருவரும் அவருக்குக் கை கொடுக்கவில்லையே. வாஸ்தவம் தானே! 
இந்த நாற்பது நாள் பழக்கத்தில செல்லியும்
உஸ்தாதும் ரொம்பவும் அன்னியோன்யமாகப் போய்விட்டார்கள்.
இருவருக்கும் மனுஷ ஆதரவு தேவை. ஆண்டவன் சேர்த்து வைத்தான்.
உஸ்தாது சொல்லுவார்,' நாம ஒதவி செஞ்சவங்ககிட்ட, ஒதவியை எதிர்பார்க்கக்
கூடாது. அந்த மாதிரி பிறகால உதவும்னு நினைச்சுக்கிட்டே உதவி எதுக்குச் செய்யணும்? அதுக்கு தென்ன மரத்த வளர்க்கலாமே'ன்னு.
'இப்பக் கூடப் பாரு தாயி, உஸ்தாது இந்த
மாதிரி ஒரு குடிசையில கஷ்டப் படறான்னு பேப்பரில ஒரு வார்த்தை போட்டாப் போறும். அத்தனை பயலுவளும் கதறிண்டு வந்துடுவானுங்க. பேச்சி முத்துவைப் பாத்தியா, தன்னால உதவ முடியல்லேன்னு எப்படி அழுதான்'னு அவர் சொல்ல கேட்கும் போது, செல்லி மனதுக்குள், குமைந்து கொண்டிருப்பாள்.
'அதெல்லாம் அந்த காலம்யா. இப்பல்லாம் 
ஏற வைச்ச ஏணியை எட்டி உதைக்கிற காலத்தில இல்ல நாம பொழப்பை நடத்திக் கிட்டு இருக்கோம்....'
உஸ்தாது ஒவ்வொருத்தர்போல பழைய காலத்தை நினைத்து குமைந்து கொண்டிருக்க 
மாட்டார். போன பொருளைப் பற்றி அவர் துளிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் புகழ் என்னும் போதைக்கு அவரும் அடிமை ஆனார்.
'இதோ பாரு தாயி, அந்த சூட்கேசை எடு, தொள்ளாயிரத்து அறுபதில தினமணிலே என் போட்டோவைப் போட்டிருக்கான் பாத்தியா
அறுபத்தி அஞ்சிலே தந்தில, என்னைப் பத்தி எழுதியிருக்கான் என்று அந்த 'பேப்பர் கட்டிங்'கை யெல்லாம் எடுத்து செல்லிக்கு காட்டுவார். செல்லியும் ஒவ்வொரு எழுத்தாக, எழுத்துக் கூட்டி அவருடைய பெருமைகளைப் படிப்பாள். 
' அந்த காலத்துல நான் பெரிய ஆளு. நம்ம சந்தில, நான் வந்தேன்னா..ஒரு பயலும் பேச மாட்டானுங்க. அவ்வளவு மரியாதி. நான் என்ன சொல்லப் போறேன்னுட்டு அத்தனை
ஜனங்களும், காத்துக் கிட்டு இருக்கும் தெரியுமா' என்று அவர் ஆரம்பித்தால், செல்லி திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பாள். செல்லிக்கு உஸ்தாது சீரும், சிறப்புமாக வாழ்ந்த விதம் தெரியாமலா இருக்கும். இருந்தாலும், அவர் சொல்லி, அதைக் கேட்பதில் ஒரு ஆனந்தம்.
நேற்று மதியத்திலிருந்து சாப்பிடவில்லை. ஆதலால் ஏகமாக பசி எடுத்தது செல்லிக்கு.இரண்டு பொறைக்கும், ஒரு டீ க்கும் அவளிடம் காசு இருக்கிறது.இருந்தாலும், 'அவரை' வைத்துக் கொண்டு சாப்பிடத் தோன்றவில்லை. வயிற்றை புரட்டுகிறார்போன்ற பசியை அடித்துத் துரத்தியது துக்கம்.
'ஏதாவது சில்லறை தேறுமா' என்று உஸ்தாதைப் புரட்டினாள் செல்லி. குற்ற உணர்வு நெஞ்சை அமுக்க,' எல்லாம் உன் காரியத்துக்குத் தான்யா' என்று உதட்டைப்
பற்களால் கடித்துக் கொண்டு, புரட்டினாள்.தலை மாட்டிலிருந்து நாலு ஐந்து ரூபாய் நோட்டுகள் விழுந்தன.பேச்சிமுத்துக்கு விவரத்தைத் தெரிவிக்க ஓடினாள். அவனுடைய இரண்டு ரூபாயும் அப்போது தேவையாக இருந்தது. 

நன்றி : 11.5.1986 தினமணிகதிர்
0likes

  
                         
          

Sunday, September 16, 2012

காய்கறிக்காக கொல்லைப் புறம் சென்ற அண்ணா....

வீடு சின்னதாய் இருக்கிறதென்று எல்லாரும் ஆண்டார் வீதி, மணிவாசகம் ஸ்டோர் வீட்டை விட்டு மறுபடியும் கிராமத்திற்குப் போனோம்..1969 ல் குழந்தைகள் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற ஆசையில் கிராமத்திலிருந்து  நகரத்துக்கு குடி பெயர்ந்து சரியாக இருபத்திஒன்பது வருடம் கழித்து, அதாவது 1988ம் வருடம் ..மறுபடியும் கிராம வாழ்க்கை!
         நெருப்புப் பெட்டி போன்ற ஸ்டோர் வாழ்க்கையில்  எங்களின் அந்த நீண்ட வருடங்கள் மிக மிக ரம்யமானவை..’யாவரும் ஓர் குலம் ..யாவரும் ஓர் குடி’ என்ற ’பாரதவிலாஸ்’ வாழ்க்கை..எங்களைப் பார்த்து இமானுவலும் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். வாசலில் உள்ள அந்த பொதுக் கிணறு
அருகில், ’எல்லாம் மாயை தானா?’ என்று புருஷோத்தமன் ஸார் அந்த கால தேவதாஸ் பாடல்களை ..உடைந்து போன காதலை..அப்படியே உள் வாங்கி  உணர்ச்சி வசப் பட்டு பாடுவார்.
         கல்லூரி படிப்பு முடித்த நாங்கள் கொஞ்ச நாட்கள் அந்த கிணறு இருக்கும்இடத்திற்கு கொஞ்சம் தள்ளி  வாலிபால் விளையாடினோம்.
           நான்  கிரி, ராமமூர்த்தி சார்,இம்மான், பாபு, சுரேஷ் என்று எல்லாரும்
கூடி ஊர்க்கதை பேசும் இடம்!
            வினுவிற்கு மகா பாரத கதைகள் சொன்ன இடம்..
            காதிற்கு வெகு அருகாமையில் ட்ரான்ஸிஸ்டர் வைத்துக் கொண்டு, கவாஸ்கர் ,பிரிஜேஷ் படேல் பார்ட்னர்ஷிப் ஸ்கொயர் ட்ரைவ் அடிக்கையில் எதற்கடா அந்த ஹிந்திக் காரன் ’அக்லிகேம்’ என்று சொல்கிறான் என்று நாங்கள் அலுத்துக் கொண்ட இடம் ..
           அந்த கிணறுக்கு வாயிருந்தால் ( சாரி..வாய் தான் அவ்வளவு அகலத்திற்கு இருக்கிறதே)  பேசும் சக்தி இருந்தால், பேசும்!
 என்னுடைய ஒன்பதாம் வகுப்பில் நகரத்துக்குச் சென்ற நாங்கள், நான் பள்ளி, கல்லூரி படிப்பு முடித்து, வேலைக்கும் சேர்ந்து ,ஆறு வருடம் அதில் சர்வீஸும் ஆகி, என் கல்யாணம் ஆகி அடுத்த வருடம், மறுபடியும் கிராமத்தின் மீது படை எடுப்பு!
             இந்த முறை நாங்கள் சென்றது ஆங்கரை அல்ல!
             கீழ வாளாடி அக்ரஹாரம்!
             அந்த காலத்தில் நானூறு ரூபாய் வாடகை கொடுத்தவர்கள் நாங்கள் தானாம்..பட்டணத்திலிருந்து வந்தவர்கள் இங்கு வாடகையை ஏத்தி விட்டார்கள் என்றொரு முணுமுணுப்பு அப்போது இருந்ததாம்..
              கீழ வாளாடி ரயில்வே ஸ்டேஷன் ஒரு அற்புதமான இடம்.அங்கு தான் நானும், சீனுவும் AICWA FINAL பேப்பர்களுக்கு படித்துக் கொண்டு இருப்போம்.
வேர்க்கடலை..பட்டணம் பக்கோடா என்று படிக்கும் பொழுது அருமையாகப் போகும்..ஜிலுஜிலுவென தென்றல் காற்று வீசும் ....தூக்கம் அப்படியே கண்ணை சுழட்டும்!
              அங்கு மார்கழி மாதம் விடியலில் எழுந்து பஜனைக்குப் போவோம்..சுடச் சுட வெண்பொங்கல்..பாடிய ஆண்டாள் பாசுரமெல்லாம் அடியோடு  மறந்து விட்டது..ராதா கல்யாணம்..சீதா கல்யாணம் என்று அமர்க்களப் படும்!
                பொங்கலன்று பாவை விழா என்று அக்ரஹார நடுத் தெருவில் ஸ்டேஜ் போட்டு சிறு பிள்ளைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.. நான் கூட எஸ்.வி.சேகர் பாணியில் பத்து பதினைந்து நகைச்சுவை தோரணங்களை ஒன்று சேர்த்து, ஒரு மேடை நாடகம் எழுதி கொடுத்தேன்!
                ஒரு தடவை சென்னையிலிருந்து, சித்தப்பா பையன் தம்பு வந்திருந்தான்..
                 “ வாடா தம்பு வா..இன்னிக்கு நீ வருவேன்னு சூப்பர் சமையல் ..தோ காய்கறி எடுத்துண்டு வரேன்...”  உற்சாகமாய் அண்ணா!
                 “ இதென்ன புது கூத்து..எல்லாரும் காய்கறி வாங்க, வாசலுக்குத் தானே போவா..இந்த பெரியப்பா கொல்லைப் பக்கம் போறாளே” - என்றான் தம்பு.
       அவன் சொன்னது வாஸ்தவம் தான்..
       வீட்டின் கொல்லைப் புறம் போன அண்ணா, தளதளவென வெள்ளரிப் பிஞ்சுகள்...முருங்கைக் காய்கள்..புடல்..என்று  கை கொள்ளாத காய்கறிகளுடன் !
        அத்தனையும் தோட்டத்தில் அண்ணா வளர்த்த காய்கறிகள்!
        அன்று அம்மா பண்ணின அந்த அரைச்சு  விட்ட முருங்கைக் காய்
சாம்பார் ........
          இன்றும் மணம் வீசுகிறது மனமெல்லாம்!

Tuesday, September 11, 2012

எழுதப் படிக்க மட்டும் தெரிந்திருந்தால்..............


நகரின் பிரதான மையத்தில் இருந்தது அந்த பிள்ளையார் கோவில்.அவனுக்கு
அந்த கோவிலில் தேங்காய் உடைக்கும் வேலை..மடப்பள்ளி உண்டை கட்டி உணவு...அப்புறம் வாரம் ஐம்பது ரூபாய் சம்பளம்..  நிம்மதியாய் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை!
        அதற்கு வந்தது வினை!
        அதுவும் பிள்ளையார் கோவில் குருக்கள் உருவில்!!
        எப்படித் தெரியுமா?
        ஒரு நாள் அந்த குருக்கள் ஒரு லெட்டரை கொடுத்து போஸ்ட் பாக்ஸில் போடச் சொன்னார்..இவனும் போட்டு விட்டு வந்தான்.
       ரெண்டு நாள்  கழித்து அந்த லெட்டர் அவர் விலாசத்துக்கே வந்தது..
       அப்போது தான் தெரிந்தது அந்த குருக்களுக்கு ‘மறந்து போய் தன் வீட்டு விலாசத்துக்கே  போஸ்ட் பண்ணினது! ஒரு ஆதங்கத்துடன்  அவனைக் கேட்டார்..
        ‘..அப்பா நீயாவது பார்த்திருக்கலாமே..எந்த அட்ரசுக்கு லெட்டர் போனதுன்னு..’
           அவன் சொன்ன அந்த  பதில் தான் அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது..
        ‘..சாமி எனக்கு எளுத படிக்கத் தெரியாதுங்களே!’
         குருக்கள் எழுந்து உட்கார்ந்தார், ஆச்சர்யத்துடன்!
        ‘..என்ன உனக்கு எழுத, படிக்க தெரியாதா?’
        ‘ஆமாமுங்க’
         ‘இந்த காலத்துல இப்படி ஒரு ஆளா?’
         ‘ என்ன பண்றது..அப்படியே விட்டாச்சு’
         ‘ நான் விடப் போறது இல்ல..உனக்கு கொஞ்சம், கொஞ்சமா சொல்லித் தரேன்..என் கிட்ட நீ படிச்சுக்கோ..’
         ‘ சரிங்க’
           அத்துடன் அவர் விட்டு விடுவார் அவர் என நினைத்தான்.ஆனால், நினப்பதெல்லாம் தான் நடந்து விடுவதில்லையே!
           அடுத்த நாள்..
           ‘ அப்பா ..இங்க வா..இந்தா ஸ்லேட்.. உனக்காக வாங்கியிருக்கேன்..இன்னிலேர்ந்து வித்யாரம்பம்’
             அவனுக்கு படிக்க துளிக்கூட விருப்பமே இல்லை!
             அவரும் அவனை விடுவதாக இல்லை!!
            அன்றைக்கு ஆரம்பித்தது தான் சனி!
             ஒரு கால கட்டத்தில்  அந்த குருக்கள் அவனால் எழுத படிக்க முடியாமல் போகவே, கோபத்துடன் அவனை கல்தா
பண்ணி அனுப்பி விட்டார்!
              மறு நாள் சங்கட ஹர சதுர்த்தி!
              அந்த குருக்கள் கொடுத்த காசுக்கு சின்னதாய் ஒரு தேங்காய், பூ கடை போட்டான்..கோவில் வாசல் முன்!
                எல்லாருக்கும் ஆச்சர்யம்!
               ‘ வேலை போயிடுத்துங்க, எனக்கு..தேங்கா,பூ, பழம் நம்ம கடையில வாங்குங்க சார்..இது தான் நம்ம பொழைப்பு இனிமேல்’
                கோயிலுக்கு வந்த எல்லாரும் அவன் மேல் இரக்கப் பட்டு அவன் கடையில் பூஜை சாமான்கள் வாங்கினார்கள்..
                 கொஞ்ச நாளில் ஊர் கடைவீதியில் ஒரு ஜவுளிக் கடை வைக்கும்
அளவிற்கு வியாபாரம் வளர்ந்தது..
                 என்ன ஒரு அதிர்ஷ்டம் அவனுக்கு!
                 ஒரு பத்து வருடத்தில் அந்த ஊர் பெரிய பணக்காரன் ஆகி விட்டான் அவன்!
               இப்படித் தான் ஒரு நாள் பேங்குக்கு போக வேண்டிய கட்டாயம் அவனுக்கு! எப்போதும் அவன் உதவியாள் தான் பேங்க்குக்கு போவதெல்லாம் .அன்று அந்த உதவியாள் லீவ் ஆதலால் அவன் பேங்க் போக வேண்டியதாயிற்று!
               பேங்க் மேனேஜர் கேட்டார்.
                “ எவ்ளவ் டெபாசிட்?”
                “ பத்து லட்சம்”
                 அசந்து போய் விட்டார், அவர்..டெபாசிட் ஃபார்ம் ஃபில்லப் பண்ணி இவனிடம் பவ்யமாய் கொடுத்தார்..
                 இவன் அவரிடம் ஸ்டாம்ப் பேட் கேட்டான்.
                  “எதுக்கு?”
                   “எனக்கு SIGN பண்ணத் தெரியாது..அந்த ஸ்டாம்ப் பேட் இங்க்ல
கை நாட்டு வைப்பேன்..”
                   “இவ்ளவ் பெரிய பணக்காரர் , உங்களுக்கு  கையெழுத்துப் போட
தெரியாதா?”
                   “கையெழுத்தென்ன..எழுத ..படிக்க கூட தெரியாது?”
                    “ அப்டியா...உங்க நாலட்ஜுக்கு நீங்க மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தா...”
                     சிரித்துக் கொண்டே சொன்னான், அவன்.
                     “ பிள்ளையார் கோவிலிலே தேங்கா உடைச்சுண்டு இருந்திருப்பேன்!”            
           
       - (மூலம் :  சாமர்செட் மாமின் சிறுகதை ஒன்றின் தழுவல்)
.
   

Friday, September 7, 2012

வெண்பா என்கிற பெண்பால் !

இப்போது எதற்கு  எடுத்தாலும் எழுத்துக்களை மடக்கிப் போட்டு எழுதி புதுக் கவிதை என்று பூரித்துப் போகிறோமே அது போல அந்த காலத்தில்
எழுத முடியாது. அதிலும் வெண்பா இருக்கிறதே ..அப்பப்பா கொஞ்சம் தப்பா போனாலும், 'என்ன கர்மமடா இது என்று நொந்து  நூடில்ஸ் ஆகி,
தன் தலையில் புண் வருமாறு குட்டிக் கொள்வார் சாத்தனார்.
         இவராவது பரவாயில்லை. வில்லிப் புத்தூரார் என்று ஒருவர் அவர்
வெண்பா தளை தட்டினால், எங்கிருந்தாலும் உடனே ஓடி வருவார்.' உன்
பாடல் கேட்டு என் காது என்ன  துன்பம் அடைந்தது தெரியுமா ? அது போல்
நீயும் அனுபவிக்க வேண்டும் 'என சொல்லிக் கொண்டு , காது குரும்பையால்
நம் காதுகளை குத்திப்  புண்ணாக்கி விடுவார்.
       அப்பப்பா இந்த காலத்தில் அந்த கஷ்டங்கள்  இல்லை ! யார் வேண்டுமானாலும் வெண்பா எழுதலாம். யாரும் அடிக்க வர மாட்டார்கள் !
ஏதாவது திட்டினால் காதை பொத்திக் கொண்டு நாம் ஓடி விடலாம் !    
வெண்பாவிற்கு வக்காலத்து வாங்கி அடிக்க வரும் ஆட்கள் இல்லாத
தைரியத்தில் அடியேனும வெண்பா எழுதத துணிந்ததின் விளைவே இது !
      ஒரு பெண் தன்   நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்  மூன்று ஆண்களை
எதிர்கொள்கிறாள். தகப்பனாக ... கணவனாக ...மகனாக ...அவர்கள்
குறுக்கிடுகிறார்கள் !அவள் இந்த மூன்று ஆண்களைச் சார்ந்து தான் வாழ
வேண்டும் தன் வாழ்நாள் முழுவதும்  என்பது எழுதப் படாத விதி !
    அந்த கற்பனையில் வெண்பாவை பெண் பாலாக்கினேன்!
    சாத்தன், வில்லி என்ற ஆண் துணை இல்லாத அழகிய  வெண்பாவைக்
கண்டதும்  கவிஞன்    ஒருவன் மனத்துள் சின்னதாய்  குறுகுறுப்பு  !ஆசை தீர அவளுடன் பேச வேண்டும் . நேரம் காலம் தெரியாமல் அவளுடன் உரையாட  வேண்டும் .துணைக்கு இலக்கிய ரசனை உள்ள  நண்பன் ஒருவன் அருகில் இருந்தால் 'கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் ' போல அற்புதமாய் பொழுது போகுமே ..அதனை செயல் படுத்த விழைந்து  உடனே ஆருயிர் நண்பனைக் கூப்பிடுகிறான்
'....வெண்பா என்கிற அழகிய பெண் பாவோடு பேசலாம் வா நண்பா ' என்று!


அந்த பாடல் இது தான்  !

   "' நன்  பாவிலென்ன நஞ்சைக் கலந்தாயோ?' -  என
     முன் போல் கொக்கரிக்க வில்லியும் ஈங்கில்லை, 
     வெண்பா நிர்க்கதியாய்.. அவளுடன் உரையாட
     நண்பா நீ வந்து விடு " - என்றான்  களிப்புடனே !
 
         
                                          -------
      
 
                    

Wednesday, September 5, 2012

வெண்பாவிற் புகழேந்தி!

அது ஒரு அத்தாணி மண்டபம்..பக்கத்தில் பெரிய, தாமரை பூத்த தடாகம் ஏதோ விசேடம் போலும்! மக்கள் அங்குமிங்கும் பரபரப்பாய் போய்க் கொண்டிருக்க,
வாசலில் அருமையான இன்னிசை..லவ,குசர்களைப் போல் இரு சிறார்கள்
ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள்..
          உள்ளே கமகமவென சமையல் மணம்..அந்த தவசிப் பிள்ளையைப் பார்த்தால், ராஜகுமாரிக்கு எங்கோ பார்த்த ஞாபகம்! தன் செல்வங்களான அந்த ‘லவ,குசர்களை’ சமையல் கட்டில் கொண்டு போகச் சொல்கிறாள், மந்திரியிடம்..அவனும் அச்சிறார்களை அங்கு கொண்டு போய் விடுகிறான்..சமையல் செய்யும் அந்த தலைமை சமையல் காரனுக்கு இச்சிறார்களைப் பார்த்ததும் என்னவோ தெரியவில்லை..அவர்களுடன் பாசத்துடன் பேச விழைகிறான்..அவன் ஏதோ சொல்ல, அவர்கள் அதற்கு தங்கள் குஞ்சு கைகளை ஆட்டிக் கொண்டு....
         என்ன தான் நடக்கிறது..போய்ப் பார்ப்போமா?
         அந்த தவசிப் பிள்ளை சொல்கிறான்,’ மக்காள் நீவிர் என் மக்கள் போல்கின்றீர் .. நீர் யார் மக்கள் ?”
           குழந்தைகளுக்கோ படு கோபம்! இவன் யார் இவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டு இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறான்..இந்த சமையல் தொழில் செய்பவனின் பிள்ளைகள் போலவா நாம் இருக்கிறோம்? தாத்தா பெரிய சாம்ராஜயபதி..வீம மகராசன்..தாய் ராஜகுமாரி.. நாம்  நள மகராஜன் பெற்றெடுத்த செல்வங்கள்... நம் தந்தை நம்மிடம் இருந்தால், இவன் இப்படி ஒரு கேள்வி கேட்கத் துணிவானா?’ என்று ஏங்கின அந்த பிஞ்சு நெஞ்சங்கள்..
அது ஒரு பாடலாக உருவெடுக்க..
        அந்த காட்சியை கவிஞர் நம் கண் முன்னே நிறுத்துகிறார் பாருங்கள்..
        யாராலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை!
        அந்த வெண்பா இதோ!
        நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லோ  
        தஞ்சாரோ மன்னர்...அடு மடையா....
        எஞ்சாது தீமையே கொண்ட சிறு தொழிலாய்,
        எம் கோமான் வாய்மையே கண்டாய் வலி!
        அதைக் கேட்ட அந்த தவசிப் பிள்ளையின் கண்களில் தான் என்ன ஒரு கண்ணீர்..மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த தமயந்தியின் நெஞ்சம் வெடித்து விடுமோ என்று ஒரு சோகம்..
          நளனிடமே நாங்கள் நளனின் குழந்தைகள் என்று சொல்லும் அந்த உணர்வு பூர்வமான காட்சியை ஒரு யுட்யூபில் பார்ப்பது போல உள்ளதா?
புகழேந்தி ஒருவரால் தான் இவ்வாறு காட்சியை வடிவமைக்க முடியும்!

Monday, September 3, 2012

கருணையினால் அல்ல!

ஸ்ரீதருக்கு ஜாலி மூட் வந்து விட்டால், சுந்துவை அப்படியே தூக்கிக் கொண்டு போய் விடுவான், கடை வீதிக்கு..’அப்பா நான் பெரிசா ஆய்ட்டேன்..உன்னோட
நடந்து வரேன்’ என்றாலும் கேட்க மாட்டான். அன்று ஆஃபீஸில் மேனேஜர் அவன் செய்த காரியத்தை புகழ்ந்து பேச, உச்சிக் குளிர்ந்த ஸ்ரீதர்
இதோ கடைவீதியில், சுந்துப் பயலைத் தூக்கிக் கொண்டு!
“ அப்பா நாக்கு பஞ்சு மிட்டாய் வேணும்”
“இந்தாடா கண்ணா?”
“ரெண்டா..  நேக்கே... நேக்கா?”
“ஆமாண்டா கண்ணா, ரெண்டுமே நோக்கு தான்”
    அவனுடைய குஞ்சு கரங்களில் அந்த பஞ்சு மிட்டாய்களைத் திணித்தான், ஸ்ரீதர்.
  காய்கறிகள் வாங்கிக் கொண்டு திரும்பும் போது, ஒரு பிச்சைக் காரன்!
  அவனுக்கு சில்லறை இருக்கும் போது போடுவான், ஸ்ரீதர்..இப்போது ரூபாயாகத் தான் இருக்கிறது..பத்து ரூபாயைப் போட மனம் இல்லை..
மெள்ள அவனைக் கண்டும் காணாமல  கிளம்பினான்.ஸ்ரீதர்.....
 “சாமீ....ஏதாவது சில்லறை போடு சாமீ”
“சில்லறை  இல்லப்பா..போய்ட்டு வா..”
“சாமீ..சாமீ..”
விட மாட்டான் போல இருக்கிறது..சீக்கிரமாய் இந்த இடத்தை விட்டுக் கிளம்ப வேண்டும்..சில்லறை கொடுத்து அவனைப் பழக்கியது எவ்வளவு கெடுதலாய்ப் போய் விட்டது..இனி மேல் இந்த ராஸ்கலுக்கு எதுவும் போடக் கூடாது..
  “சாமீ..சாமீ..” - அந்த ஆள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்..
 ஸ்ரீதருக்கு கொஞ்ச நஞ்சமில்லை கோபம்..சூடாக ஏதாவது சொல்லி விட வேண்டும்..
“என்ன?”
  ஒரு வெட்டு வெட்டுவது போலத் திரும்பினான்,ஸ்ரீதர்.
“சாமீ கோச்சுக்க கூடாது....இந்தாங்க உங்க பர்ஸ்.. நீங்க வேகமாக வரும் போது கீழே விழுந்து விட்டது..”
  என்ன சொல்வதென்று தெரியவில்லை.. சட்டென்று சுடர் விட்டு எரியும் தீயில், ஜில்லென  தண்ணீர் பட்டது போல..
நன்றியுடன் பர்சை வாங்கி அதிலிருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை நீட்டினான்,ஸ்ரீதர்..
“வாணாம் சாமி...சில்லறையா இருக்கும் போது தா..இது வாணாம்..”
    ”இந்தா இதை வைச்சுக்கோ அங்க்கிள்”
          சுந்து தன்னுடைய இரண்டு  பஞ்சு மிட்டாய்களையும்  அவனுக்கு தாரளமாகக் கொடுக்க, தனக்கே பஞ்ச் கிடைத்தது போல இருந்தது ஸ்ரீதருக்கு.!.