( இருதயம் பலகீனமாக
உள்ளவர்கள், PRAGNANT LADIES, பதினெட்டு
வயதுக்குட்பட்டவர்கள் தயவு செய்து இதனை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்
படுகிறது )
என்னுடைய சிறுகதை தொகுப்பை ஏகப் பட்ட
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறு பதிப்பு வெளியிட இருக்கிறேன்..மேலும் ஐந்து
லட்சம் பிரதிகளுக்கு MINISTRY OF DEFENCE லிருந்து
புதிதாய் ஆர்டர் ஒன்று வந்துள்ளது.
எல்லையில் பல்லாயிரக் கணக்கில் குவிந்துள்ள
சீன படைகளுக்கு பதிலளிக்கும் விதமாய் RAW AND ANALYSIS WING பரிந்துரையின் பேரில், என் சிறுகதை
பிரதிகளை ஹெலிகாப்டர் மூலம் தூவ முடிவு செய்திருக்கிறார்கள்.சீன மொழி
பெயர்ப்புக்கு லூலாலீ என்ற சீன அறிஞருடன் ஒப்பந்தம் ஒன்று போடப் பட்டுள்ளது.
இந்த சிறுகதை தொகுப்பு உங்கள் கைகளில் தவழும் போது நான் பாதுகாப்பாக
வாஷிங்டனிலோ,ஹூஸ்டனிலோ அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் லிலோ இருப்பேன் என்பதை நாடறியும்
என்பதை சொல்லிக் கொள்ளக் கூட என் அடக்கம் தடுக்கிறது!.
ஏற்கனவே முதல் பதிப்பு விற்பனையின் சிகரத்தை எட்டியது உங்களுக்கு
நினைவிருக்கலாம்.அது சம்பந்தமாய் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
எனது நண்பரின் பையனுக்கு ரொம்ப வருடமாய் வரன்
குதிராமல்,கட்டோ கடைசியாய் ஒரு பெண் வீட்டார் 'பிள்ளை' பார்க்க வந்தார்கள். நண்பர் என்னையும் அழைத்திருந்தார்.
பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு, சொஜ்ஜி,பஜ்ஜிகளின் ஊடே, என் சிறுகதை
தொகுப்பையும் திணித்தோம்.'போய் கடிதம்
போடுகிறேன்' என்று சொல்லி விட்டுப்
போனவர்கள் தான்! 'அட, இதுவும் பூட்ட கேஸ்' என்று தீர்மானித்த சில நொடிகளிலேயே, பெண்
வீட்டாரிடமிருந்து போன்! "பொண்ணுக்கு உங்க பையனைப் பிடிச்சிருக்கு..அந்த
புஸ்தகம் தான் பிடிக்கவில்லை!" என்று.
இது நடந்த ஒரு வாரம் கழித்து நண்பர் என்னைப்
பார்க்க அலறிக் கொண்டே வந்தார். "டேய்.. ஆராரார்...ஆயிரம் பிரதிங்க
அர்ஜெண்ட்டா வேணும்...இப்பத் தான் பெண் வீட்லே சொன்னாங்க "அவங்க சொந்தக் காரங்க,ப்ரெண்ட்ஸ்ங்கன்னு கல்யாணத்திற்கு நிறைய பேர் வருவாங்களாம்! அவங்களை நல்ல
படியாய்,திருப்தியாய் கவனிச்சக்கணும்னு!"
அந்த என்னோட ஆயிரம்
பிரதிகள் அந்த கல்யாணத்துல என்னன்னவெல்லாம் செய்தது என்பதை என் தன்னடக்கம் மறுபடியும் தடுப்பதால் நேயர்களின்
கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.
ஒரு சமயம், மீன் பிடிக்கச் சென்ற நம் மீனவர்கள் மீது
இலங்கை கடற் படையினர், சுட எத்தனிக்க, நம் மீனவ நண்பர்கள் என் சிறுகதை தொகுப்பை அவர்கள் மீது,
வீச அந்த இலங்கை கடலோரக் காவல் படையினர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாய்ந்ததை நான் சொல்லா விட்டால் வரலாறு என்னை மன்னிக்காது!
இது போல் தான் பாகிஸ்தானில் சிறைப் பிடிக்கப்
பட்டுள்ள நம் படை வீரர்கள் அந்த சிறை அதிகாரிகளிடம்
நம் புத்தகங்களின் ஆங்கிலப் பதிப்பைக் கொடுக்க,அடுத்த வாரமே அவர்கள் ராஜ மரியாதையோடு இந்தியா வந்ததை
அத்தனை சுலபத்தில் மறக்க
முடியுமா என்ன?
எதற்காக இதை இங்கு சொல்கிறேன் என்றால்,
நாடு ரொம்ப மோசமாய் போய்க்
கொண்டிருக்கிறது..தற்காப்புக்கு நீங்கள் இனி வரும் என்னுடைய ஒன்றிரண்டு பிரதிகளை
வாங்கி வைத்துக் கொண்டீர்களென்றால், உங்களுக்கு
ஏதாவது இடுக்கண் வரும் போது, அது உங்களைக் காப்பாற்றும் என்பது திண்ணம்! ஒரு சாதாரண பிஸ்டல் வாங்குவதற்குக்
கூட லைசென்ஸ் வாங்க வேண்டும். என் சிறுகதை
தொகுப்பிற்கு அத்தகைய லைசென்ஸ் எதுவும் வாங்கத் தேவையில்லை என்கிற விஷயம் உங்களுக்கு நான் அளிக்கும் ஒரு உபரி
தகவல்!
-----------