Wednesday, September 28, 2011

செருப்பாலூரில்.......


செருப்பாலூர்!
உங்களுக்கு வேண்டுமானால் ஊரின் பெயர் வினோதமாய் இருக்கலாம்..ஆனால், எனக்கு..கிரிக்கு..சிகாமணி சித்தப்பாக்கு...பாலு சித்தப்பாக்கெல்லாம் ..செருப்பாலூர் என்று சொன்னால் போதும்..கண்களில் மின்னல் தெறிக்கும்..பேச்சில் குஷி பிறக்கும்..
சிகா சித்தப்பாக்கு அவருடைய ஃப்ரண்ட்ஸ் ஷாஹுல் ஹமீது..பாசித்... கிருஷ்ணன்..முத்துக்குமரன்..STO..ஹெட் க்ளார்க் சோம சுந்தரம்.. லஸ்கர் நேசையன்..என்று ஞாபகம் வரும்..
லஸ்கர் நேசையன் பற்றி..
PWD யில் லஸ்கர் வேலை.என்று பெயர்...ஆனால் முழுக்க..முழுக்க பாட்டிக்கு PET..பாட்டி எது சொன்னாலும் செய்வார்..எது வாங்கி கொண்டு வா என்றாலும் ..அது புலிப்பால் என்றாலும் வாங்கி வந்து விடுவார்.. சிகா சித்தப்பா தான் செக்‌ஷன் ஆஃபீசர்..அவரை ஆபீஸ் வேலைக்காக சித்தப்பா எதுவும் சொல்ல முடியாது..பாட்டி SHIELD ஆக இருந்து கொண்டு அவரை காப்பாற்றி விடுவார்..பாட்டியின் சிபாரிசில் சிகா சித்தப்பாவிடமே நேசையன் காரியம் சாதித்துக் கொண்டு விடுவார்..என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. நேசையன் என் இன்னொரு பிள்ளை என்று பாட்டி அடிக்கடி சொல்லும் அளவிற்கு பாசம் உள்ளவர்.. நாங்கள் அங்கிருக்கும் போதே, அவருக்கு தக்கலைக்கு ட்ரான்ஸ்பர் ஆகி விட்டது. அதற்குப் பிறகு சதாசிவம் என்று ஒருவர் வந்தார்..அவர் எங்களுடன் அவ்வளவாய் ஒட்டவில்லை..
தாத்தாக்கு கோபால் பிள்ளை..(அவர் எங்களுக்கு ட்யூஷன் வாத்தியார்!) பாட்டிக்கு நேசையன்... நேசையன் கொண்டு வந்த சீனு என்கிற நாய்குட்டி!
எனக்கும்..கிரிக்கும்...செருப்பாலூர் என்றால் பெரிய லிஸ்ட் ஞாபகம் வந்து விடும்!
அயனிப் பழம்..கொல்லாம் பழம்..பேயன் வாழை..இதை அடுப்பில் சுட்டுத் தருவார் பாட்டி!
சிகா சித்தப்பா ஃப்ரீயா இருக்கும் போது, ஆஃபீஸ் ஜீப்பில் எங்களைக் கூட்டி கொண்டு செல்லும் இடங்களான பேச்சிப் பாறை..பெருஞ்சாணி டேம்..திற்பரப்பு ஃபால்ஸ்..பத்மனாப புரம் அரண்மனை..குலசேகரம் மார்க்கெட்..
செருப்பாலூர் எங்கிருக்கிறது என்று சரியாக ஞாபகம் வரவில்லை..ஆனால், மார்த்தாண்டத்திற்கும், குலசேகரத்திற்கும் நடுவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்..
திருச்சியிலிருந்து வந்த அந்த கூட்டுக் குடும்பம் இரண்டாகப் பிரிந்து...அண்ணா,அம்மா,பாலுசித்தப்பா,முரளி எல்லாரும் நாகர்கோவிலில்..தாத்தா..பாட்டி..சிகாமணி சித்தப்பா.. நான் ..கிரி..சகுந்தலா அத்தை..(அவர்களுக்கு கொஞ்ச நாளில் கல்யாணம் ஆகி மெட்ராஸ் போய் விட்டார்கள்)எல்லாரும் செருப்பாலூரில்!
நாங்களும் முதலில் அண்ணா,அம்மாவோடு தான் இருந்தோம்... நான் மூன்றாவதும்..கிரி ஒன்றாவதும் நாகர்கோவிலில் தான் படித்தோம்..ஆனால் அண்ணாவிற்கு ’கோதையார் லோயர் கேம்ப்’பிற்கு ட்ரான்ஸ்வர் ஆகி விட்டதால், அங்கு அப்போது ஸ்கூல் இல்லாத காரணத்தினால், நான் நான்காவதும், கிரி இரண்டாவதும் செருப்பாலூரில் தாத்தா, பாட்டியிடம் படித்தோம்.
சிகாமணி சித்தப்பா ராயல் என்ஃபீல்ட் வைத்திருந்தார்...பிரமாதமாய் ஜீப் ஓட்டுவார்..ஙோய்..ஙோய் சித்தப்பா... நானும் வரேன் சித்தப்பா என்று நானும்,கிரியும் அழுவோம்..அவர் எங்களை விட்டு ஆஃபீஸ் போனால்!
நாங்களும் எங்கள் ஃபெரண்ட்ஸ் ( வலது பக்கத்து வீட்டில் அம்பிகாபதி..அமராவதி அக்கா..ஒரு சின்ன தம்பி பெயர் மறந்து விட்டது ஹெட்க்ளார்க் சோமசுந்தரம் மாமா வீடு அது..இடது பக்கம் STO முத்துக் குமரன் சார் வீடு..அவர் பையன் ரமணி கிரி வயது)
எல்லாரிடமும் எங்கள் சிகா சித்தப்பா மோட்டார் சைக்கிள்..கார்..ஜீப்..ஏன் ஏரோப்ளேன்..ஹெலிகாப்டர் எல்லாம் சூப்பரா ஓட்டுவார் என்று சொல்ல..அவர்களூம் வாயில் ஈ புகுந்தது தெரியாமல் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்..
பெரிய பெரிய ஓட்டு வீடு..இன்ஸ்பெக்‌ஷன் பங்களா போல்! சுற்றிலும் பசுமை...ஆங்காங்கே ரப்பர் எஸ்டேட்..மரத்தை நேர்வகிடில் கத்தியால் கீறி..கொட்டாங்கச்சி வைத்திருப்பார்கள்..ரப்பர் பால் அதில் வடியும்!
பாடம் நடத்தியது போக கோபால் பிள்ளை ஒரு நாள் எங்களுக்கு கதை சொல்வார்..மறு நாள் காகிதத்தில் பந்து செய்ய கற்றுக் கொடுப்பார்..சிகாமணி சித்தப்பா கல்யாண ஃபோட்டோவில் கோபால் பிள்ளையை இன்னமும் அடையாளம் காட்டுவேனாக்கும் நான்!
தாத்தா,பாட்டி,சிகாமணி சித்தப்பா போயாச்சு!
அண்ணா,அம்மா,பாலு சித்தப்பா, நான்,கிரி எல்லாருமாய் ஒரு வண்டி எடுத்துக் கொண்டு நாகர்கோவில் வேப்பமூடு சித்ரா லாட்ஜில் ரூம் எடுத்துக் கொண்டு..
மறுபடியும் அந்த செருப்பாலூரைப் பார்க்க வேண்டும் என்று கொள்ளை ஆசை?
அப்படியே நேசையன்.. நாகர் கோவில் நாகராஜன் (இப்போது வாத்யாராம்..அங்கு புரோகிதரை வாத்யார் என்று சொல்வார்கள்)அவர்கள் சகோதரிகள் கீதா அக்கா..பாலா அக்கா எல்லாரையும்
பார்க்க வேண்டும் என்று ஆசை...முடியுமா?
ஹே..செருப்பாலூர்..என்கிற என் ஆருயிர் . நண்பனே...
உன்னை எப்போது காண்பேன், இனி?

Friday, September 23, 2011

INNINGS DEFEAT !!!!!


’குல்லா போட்ட நவாபு..செல்லாதுந்தன் ஜவாபு’
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் பட்டோடி ஞாபகம் வந்து விடும்..
சிம்மம் என்றால் சிவாஜி!
டைகர் என்றால் பட்டோடி!!
அந்த பட்டோடி நவாப் ....
இனி இல்லை!!!
சித்தப்பாவுடன் கிரிக்கெட் பற்றி பேசும்பொதெல்லாம், அவர் பேச்சில் பட்டோடி வராமல் இருக்க மாட்டார்...
முதலில் பட்டோடி...
பிறகு நாரி காண்ட்ராக்டர்...
பட்டோடியின் ஃபோர்..சிக்ஸர்..அந்த பேட்டிங் ஸ்டைல்..சூப்பர் ஃபீல்டிங்!
எல்லார்க்கும் பிடிக்கும்...எமனுக்கும் பிடித்ததோ..
அவரின் அபாரமான நகைச்சுவை உணர்வு....
”PRIVY PURSE BILL" PASS ஆன சமயம், அவர் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்.
அவரின் நண்பர் ஒருவர் இதைப் பற்றி சொல்ல, அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
“ நவாப் ஆப் பட்டோடி என்று இல்லாவிட்டால் என்ன? ஜான் ஸ்மித் என்று கூப்பிடுங்களேன்....”
அந்த மெச்சூரிட்டி எத்தனை பேருக்கு வரும்?
ஒன்று தெரிகிறது..
இறைவனிடம் யாரோ நம்ம ஊர் கிரிக்கெட்டைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும்..
அதனால் அவருக்கு உடனே நம்ம பட்டோடி ஞாபகம் வந்திருக்க வேண்டும்..
ஏதோ நாம் சந்தையில் நல்ல கத்திரிக்காயை எடுக்கிறார் போல், அவரும் எழுபது வயது என்று கூட பாராமல் எடுத்துக் கொண்டு விட்டார்..
அவரை எடுத்துக் கொண்டு விடலாம்..
அவர் பற்றிய சுகமான நினைவுகளை எடுக்க முடியுமா, என்ன?
பலரை மரணம் வெல்கிறது..
ஆனால், ஒரு சிலரோ அந்த மரணத்தையே வெல்கிறார்கள்...
எங்கோ..தொலை தூரத்தில் ‘ குல்லா போட்ட நவாபு..செல்லாது உந்தன் ஜவாபு’ என்ற பாடல் கேட்கிறது....
சன்னமாக....
ஆனால்,
சோகமாக.......

Friday, September 16, 2011

மாத்தி யோசி...!


ஒரு ஊர்ல,அந்த ஊர் எல்லைல... ஒரு மரத்தடியில, ஒரு ஓல்ட் லேடி நிறைய வயர்களை வைச்சுண்டு எதையோ அசெம்பிள் பண்ணிண்டு இருந்தாளாம். அந்த சமயம் பார்த்து ஒரு காக்கா அங்க வந்துச்சாம்...
...’வந்து?’
அந்த ஓல்ட் லேடி அசந்திருக்கும் போது,அசெம்பிள் பண்ணி வைச்சிருந்த ஒரு ’பாம் டாப்பை’ லபக்னு தூக்கிண்டு பறந்து போயிடுச்சாம்.
“அச்சச்சோ அப்புறம்?”
அந்த காக்கா ஒரு உச்சாணி மரக்கிளையில உட்கார்ந்துண்டு அந்த ‘பாம் டாப்பில’ படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது,அந்த பக்கமா நரி ஒண்ணு வந்ததாம்....
“ நரி வந்து?”
...நரி வந்து..”காக்கா..காக்கா நீ நம்ம சாய் சரண் மாதிரி நல்லா பாட்டுப் பாடுவியாமே .ஒரு பாட்டு பாடேன்.. ” என்று சூப்பர் சிங்கர் ரேஞ்சுக்கு அதை கொம்பு சீவி
விட, நம்ம காக்காக்கு ஏக சந்தோஷம்.. நாமளும் அந்த ‘மாமா...மாப்ளே’ பாட்டை ட்ரை பண்ணிப் பார்க்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப..”
” யோசிச்சிட்டு இருந்தப்ப..அந்த காக்கா என்ன பண்ணிச்சு? பாட்டு பாடிச்சா?”
” ... பாடலாம்னு தான் நினச்சது..ஆனா..”
“ என்ன ஆனா?”
“ இரு சொல்றேன்.. நரி உசுப்பேத்தி விட்டுச்சா..காக்காக்கு ஏக சந்தோஷம் நாம பாடற பாட்டையும் கேக்கிறதுக்கு ஒரு நாதரி பய இருக்கானேன்னு ...”
” காக்கா பாடிச்சா...?”
“ பாடலாம்னு தான் நினச்சது..அதுக்கு திடீர்னு அதோட தாத்தா சொன்னது ஞாபகம் வந்துச்சா..”
“ தாத்தா காக்கா என்ன சொல்லிச்சு?”
வாயில இருந்த பாம் டாப்பை காலுக்கு இடுக்கில வைச்சுகிட்டு நம்ம காக்கா அந்த நரி கிட்ட சொன்னது;
“ லே நரியே..உங்க தாத்தா எங்க தாத்தாட்ட வடை சுட்ட கதையை எங்கிட்ட விலா வாரியா சொல்லிட்டு..பேராண்டி..பேராண்டி நா ஏமாந்தா மாதிரி நீயும் ஏமாந்துடாதேன்னாரு..அதனால.. நாம் ஏமாற மாட்டேன்..உன் வேலையைப் பார்த்துட்டுப் போன்னு
சொல்லவே..அந்த நரியும் தலையை தொங்க போட்டுகிட்டு ஓடிப் போயிடுச்சாம்...”
இது தான் நரி பன்னு தின்ன கதை!!
எதுக்கு இவ்வளவ்.. பில்டப்னு கேக்கறீயளா?
எங்க பார்த்தாலும்..யாரைப் பார்த்தாலும் ”மாத்தி யோசி..மாத்தி யோசி”ன்னு உயிரை எடுக்கிறாங்க..
அதனால்ல.. நரி, பாட்டிட்ட காக்கா சுட்ட வடையை சுட்ட கதையை நாமளும் தான் எத்தனை நாளக்குத் தான் சொல்லிக்கிட்டு இருக்கிறது..?
அதான் கொஞ்சம் மாத்தி யோசிச்சுட்டோமில்ல..........

Tuesday, September 13, 2011

(5) குறளும், குறுங்கதையும்!!


பெரிய பாராட்டு விழாவாக்கும் அது!
மிகப் பிரபலமான விஐபிக்கள் அங்கு குழுமியிருந்தனர்.
ஒரு பெரிய கம்பெனியை நிர்வகிக்கும் வந்தனாவிற்குத் தான்
அந்த பாராட்டு!
அதுவும் மிகச் சிறிய வயதில்!
ஒரு சாதாரண காண்ட்ராக்டரின் பெண் உலகின் மிகப் பிரபலமான பத்து பெண்களில் ஒருவராய்,அதிலும் ஐரோப்பா கண்டத்தில் பவர்ஃபுல் ஆன தேசத்தின் பெண் முதல்வருக்கு அடுத்தபடியாய்... நம் வந்தனா அதில் ஆறாவது ரேங்க்!
ஒரு மேல் நாட்டுப் பத்திரிகை பட்டியலிட்டது!
அதற்குத் தான் இந்த பாராட்டு விழா!
வந்தனாவைப் பெற்றவரை பேசச் சொன்னார்கள்!
காண்ட்ராக்டர் ஏகாம்பரம் பேச ஆரம்பித்தார்.
ரத்னசுருக்கமான பேச்சு!
“ எனக்கு மேடையில் எல்லாம் பேச வராதுங்க ..இதுக்கல்லாம் காரணம் யார்னு நினைக்கிறீங்க..சாதாரண மரங்கள் தான் ..”
ஒரு நொடி அவர் மெளனிக்க....
மரமா....கூட்டத்தில் சலசலப்பு!
“ ஆமாம் பெரியவர்களே..வந்தனா ப்ளஸ் டூ முடிச்ச சமயம், எம்.பி.பி.எஸ் படிக்க ரொம்ப ஆசைப் பட்டாள்...அப்ப ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தாத் தான் சீட் கிடைக்குங்கிற நிலை..அதிர்ஷ்ட வசமாய் எனக்கு நம்ம புலிவார்டு ரோடில் மரம் வெட்டும் காண்ட்ராக்ட் கிடைத்தது..இது ஆண்டவனாப் பார்த்துக் கொடுத்ததம்மா.. நீ எம்.பி.பி. எஸ் தாராளமாய் படி என்று நான் சொல்ல, அந்த காண்ட்ராக்ட் நான் எடுக்கக் கூடாது என்று தீர்மானமாய் இருந்த பெண் தான் வந்தனா!அப்பா மழை வரணும்... நம்ம நாடு சுபிட்சமாய் இருக்கணும்னா, மரத்தை வெட்டக் கூடாது என்று பிடிவாதமாய் மறுத்து விட்டாள்..இந்த லாபத்தினால் தான் நான் டாக்டருக்குப் படிக்கணும்னா,எனக்கு அது வேண்டாம் என்றாள்..அதனாலேயே, என்னால் அவளை டாக்டருக்குப் படிக்க வைக்க முடியாமல் போயிற்று..ஆனால்..இன்று புகழின் உச்சாணி கிளைக்கு அவளைக் கொண்டு வந்தது அன்று வெட்டப் படாத மர்ங்கள் சிந்திய ஆனந்த கண்ணீர் தான்..”
ஒரு ஒற்றைக் கொட்டு அப்ளாஸ் முழங்க, தொடர்ந்து ஐந்து நிமிட கர ஒலிகள் அந்த இடத்தை..ஆக்கிரமித்தன அப்போது!

என் குறள் : விசும்பின் துளியும் இனி வீழாது, அடுக்கடுக்காய்
பசுமரங்கள் வெட்டப் படுங்கால்.

Wednesday, September 7, 2011

(4) குறளும், குறுங்கதையும்!!


அம்மா கூனிக் குறுகி நின்றாள்...
“ நாம் பாட்டுக்கு சொல்லிண்டே இருக்கேன்..பேசாம இருக்கியே..என்ன நெஞ்சழுத்தம் உனக்கு?”
“ நா என்ன பண்றது, அம்மு..என் கையில ஒண்ணும் இல்ல...”
அம்மாவின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்தது
“ அன்னிக்கு இதே வார்த்தையை நானும் சொல்லிட்டு துண்டை உதறித் தோளில போட்டுண்டு போயிருக்கலாமோல்யோ? ஏன் போகலை”
“ உனக்கு பெரிய மனசு அம்மு”
“ அதெல்லாம் ஒண்ணுமில்லே.. நான் ஏமாளி..அன்னிக்கு அப்பா இவர் கையைப் பிடிச்சுண்டு உங்கள நம்பித் தான் ஐந்து பெண் குழந்தைகளையும் விட்டுட்டுப் போறேன்னு சொன்னப்ப இவர் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா...கவலையேப் படாதேங்கோ.. நான் பார்த்துக்கறேன்னு சொல்லி உங்க ஐந்து பேருக்கும் கல்யாணம் ஜாம்..ஜாம்னு பண்ணலியா..அதுக்கு இது தான் பிரதியுபகாரமா?”
“ அம்மு...எங்க மாமனார்..மாமியாரைக் கேட்க வேண்டாமா?”
“ பேஷாக் கேளு..அவா ஒண்ணும் சொல்ல மாட்டா..”
.....ஐயோ... நானா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு சொன்னேன்..ஏதோ அப்பா..தன் அந்திம காலத்துல அத்திம்பேர் கையைப் பிடிச்சு சத்தியம் வாங்கிண்டார்னா... நான் எந்த விஷயத்துல பொறுப்பு...அதுக்கு பர்த்தியா என் குழந்தையை சுவீகாரம் கேட்கறியே நீ....என்னால எப்படி அம்மு என் குழந்தையை பிரிஞ்சுட்டு இருக்க முடியும்?...
அம்மா பேசவில்லை..அம்மா கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் பேசியது.
புரிந்து கொண்ட நான் அம்மா புடவைத் தலைப்பை என்னுள் போர்த்தி கொண்டேன்.
”...டேய்..சீனு..இங்க வாடா..இனிமே நான் தான் உன்னோட அம்மா..” ஹிஸ்டீரியா வந்தது போல் கத்த,
“ இல்லை..இல்லை.. நீ பெரீம்மா.....”
ஹீனஸ்வரத்தில் நான் முனக, அம்மா அழ ஆரம்பித்தாள், அப்போது!

என் குறள் : எந்நன்றி சொன்னார்க்கும் உய்வுண்டாம்- உய்வில்லை
செய்நன்றி சொன்ன மகற்கு!