நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Sunday, November 27, 2011
காணாமல் போன கதலி!
அது ஒரு ப்ரும்மாண்டமான கோவில்..
தமிழின் ஒவ்வொரு மாதத்தின் பெயரிலும்
ஒவ்வொரு வீதி!
விஸ்தாரமான இடம்..
நந்த வனம்..தெப்பக் குளம்..யானை,குதிரை லாயங்கள்..
மடப்பள்ளி..பூக்கடை.
அர்த்த ஜாம மண்டபம்
.என்று சகல விதமான
செளகரியங்களுடன்..
சுற்றி வந்து இதோ கர்ப்பக்ருஹம்...
நிசப்தமான சூழலைக் கிழித்தாற்போல்,
என்ன சப்தம் அது?
உற்று கவனிக்கிறோம்!
அங்கு பலம்(பழம்),தளம்(இலை)
பத்ரம் புஷ்பங்களுக்குள் போட்டி,
யார் பெரியவன் என்று?
எல்லாம் பேசிப் பேசி
அசந்து போய் விட,
கதலி பலம் (வாழைப் பழம்)
மட்டும் கர்வத்துடன்
பேசியது..ஏன் கத்தியது..
உங்களில் அத்தனை பேரிலும்
நானல்லவோ சுவை உள்ளவன்..
நான் தான் பெரியவன்..
பம்மிக் கிடந்தன,
பாக்கி அத்தனையும்!
பகவானின் நிர்மால்ய தரிசனம்!
தளத்தை மாலையாக்கி,
பகவானின் கழுத்தில்
போட்டார்கள்......,
புஷ்பம் தலயில் சூடப் பட..
பாதார விந்தங்களில், பத்ரம்!
கலங்கிப் போய் கதலி நிற்க,
எங்கிருந்தோ வந்த எலி ஒன்று,
அதைக் கவ்விக் கொண்டோட,
கர்வத்துடன் பேசிய கதலி,
அங்கு,
காணாமல் போயிற்று!
Labels:
சிறுகதை
மர்டர்..
”ஷஷாங்”
“எஸ்”
“ ஷஷாங்.. நான் தான் க்ரைம் பிராஞ்ச் மயில்வாகனன் பேசறேன்..இங்க பல்லாவரத்தில ஒரு கொலை நடந்துருக்குப்பா..”
“ சார்..சார்..இப்பத் தான் எனக்கும் ஷைலஜாவிற்க்கும் மேரேஜ் ஆகி, ஹனிமூன் கிளம்பிட்டிருக்கோம்..ப்ளீஸ்”
“ அட..உனக்கும்..ஷைலஜாவிற்கும் கல்யாணாமா சொல்லவே இல்லையே படவா....எனி ஹோ கங்க்ராட்ஸ்!எங்க ஹனிமூன் போறீங்க?”
“சார்..சார்...தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க..எனக்கும், அவளுக்கும் தனித் தனியா கல்யாணம்.
அவ புருஷனோட நைனிடால் போறா.. நான் என் வைஃபோட குலு மணாலி போறேன்.. நம்ம ஸ்னிஃபர் டாக் துப்பறியும் நிறுவனம் பத்து நாள் லீவ்!”
“ஷஷாங்..சின்ன வேலை தாம்ப்பா இது! நீ வந்தா அரை மணி நேரத்தில கண்டுபிடிச்சுடலாம்..
உங்க ஹனிமூன் செலவை டிபார்ட்மெண்ட் ஸ்பான்ஸர் செய்யும்..ப்ளீஸ்பா”
ஃபோன் வைக்கப் பட்டது.
“ஷைலு”
“எஸ். ஸார்..பல்லாவரம் போகணும்..மயில்வாகனன் சார் பேச்சு..சசி அண்ட் சேகர் சசிதரன் கொலை..கொலையா..தற்கொலையான்னு சந்தேகம்..பார்ட்னர் சேகர் சந்தேகப்பட்டு புகார் கொடுத்திருக்கார்..சந்தேகப் படும்படியாய் எதுவும் இல்ல..ஆனா, சசிதரன் சாரோட ட்ரைவர் சம்பவம் நடந்த அரை மணி நேரத்துல அப்ஸ்காண்டு ஆயிட்டாரு..போதுமா..
மூச்சு வாங்க ஷைலு சொல்லிக் கொண்டு போக, ஒரு ஸ்டேஜில் கண்களை மூடி கொண்டான், ஷஷாங்க்! சாரி...இது ஓவர்..கட்டின தாலி ஈரம் கூட காயல..அதுக்குள்ள துரோகம் பண்ணக் கூடாது..”
“அட”
அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் பல்லாவரத்தில்!
மயில்வாகனன் முன்னாலேயே வந்திருந்தார்.
ஃப்ரான்சிக் ரிப்போர்ட்..குறுக்கு விசாரணை....ஃபோட்டோ எல்லா சடங்குகளும் முடிந்தது.
சசிதரன் தலைமாட்டில் ஒரு பேப்பர், ஷஷாங்க் கவனத்தைக் கவர்ந்தது..
பக்கவாட்டில் ஒரு புத்தகம்.
துப்பறியும் சாம்பு.
“சார்..சேகர் சார் எங்கே?”
“இப்பத் தான்பா வீட்டுக்குப் போனார்..அங்க போனா பார்க்கலாம்..ஜீப் வேணுமா?”
“வேண்டாம்”
க்ரிங்..க்ரிங்..
சேகர் திறந்தார்..கண்கள் அழுதுக் கொண்டிருந்தன..
“வாங்க”
ஆஃபீஸ் ரூம் கூட்டிக் கொண்டு போனார்.
“ரொம்ப நல்லவர் சார் என் பார்ட்னர்..எங்களுக்கு விரோதிகளே இல்ல..பிசினஸ் நல்லா டெவலப் ஆயிட்டிருக்கும் போது, திடீரென்று தாழி உடைந்தாற் போல்..”
குலுங்கினார், சேகர்.
“ சார்..கூல் டெளன்..” சமாதானப் படுத்தினான், ஷஷாங்க்.
" அவரோட ட்ரைவர் எப்படி?”
“ நல்ல பையன் சார்..துருதுருன்னு இருப்பான்..இவரும் அவனை கண்ணான்னு தான் கூப்பிடுவார்..சந்தேகமே பட முடியாது, சார்”
பேசிக் கொண்டு இருக்கும் போது, சேகரின் கை ஏதோ பேப்பரில் கிறுக்கியது. காற்றில் அது பறந்து வந்து ஷஷாங் சட்டையில் ஒட்டிக் கொண்டது!
”அப்ப வரேன், சார்”
அடுத்த ஒரு மணி நேரம் ஆகி விட்ட நிலையில்,
க்ரிங்..க்ரிங்..
ஆஃபீஸ் ஃபோன்!
“ஷஷாங்.. நான் மயில் வாகனன்”
“ சார், கல்ப்ரிட்டைக் கண்டுபிடிச்சாச்சு”
“யாருப்பா?”
“ பார்ட்னர் சேகர்!”
“எப்படிப்பா சொல்றே? ரொம்ப மரியாதையான மனுஷர்பா அவர்!”
“ சார்..அவர் தான் கொலை பண்ணியிருக்கார்.அவர் இவருக்கு ஒரு புக் ப்ரெசண்ட் பண்ணியிருக்கார்..அதில ஒவ்வொரு முனையிலும் ஸ்லோ பாய்ஸன்..சசிதரனுக்கு ஒரு பழக்கம்.அவர் பக்கத்தை புரட்டும் போது,எச்சல் பண்ணித் தான் அடுத்த பக்கம் புரட்டுவார்..
அது..அந்த ஸ்லோ பாய்ஸன் கொஞ்சம் ..கொஞ்சமாய் உள்ள போய்..”
“அது சரி..அந்த புக்கை அவர் தான் கொடுத்தார்ங்கறதுக்கு என்ன ஆதாரம்?”
“ரொம்ப சிம்ப்பிள்! சேகருக்கு ஒரு பழக்கம். அவர் ஒரு இடத்திற்கு வந்தார்னா அங்க இருக்கிற பேப்பர்ல ஒரு கார்ட்டூன் வரைந்து விடுவார்..அந்த புக்கில் இரண்டு, மூன்று பக்கங்களில் கார்ட்டூன்!”
“ அப்ப அந்த ட்ரைவர்?”
“ சேகர் தான் அவருக்கு லீவ் கொடுத்து அனுப்பியிருக்கார்”
“வெரி குட்..அங்கியே இரு. செக் அனுப்பறேன்”
ஷைலூ.........
மெளனம்!
“சாரி சர்.. நான் அப்பவே எஸ்கேப் ..டேக் ஆஃப் டு நைனிடால்!”
ஷஷாங் செல் ஃபோன் கொஞ்சியது!
Labels:
சிறுகதை
தொழில் தர்மம்!
”..லே மூக்கா..இங்க வாடாலே..”
“ந்தா”
ராக்கப்பனும், மூக்கனும் தோஸ்த். மூக்கனுக்கு ராக்கப்பன் பையன் வயசு இருக்கும்..தொழில்னு வந்துட்டா,அதெல்லாம் பார்க்க முடியாது..அப்ரசண்டியா... கிப்ரசண்டியா ...ஏதோ ஒண்ணு தொழில் கத்துக்க்ற சிஷ்யன்... மூக்கன்..என்ன தொழில்னு கேக்கறீயளா? வேறென்ன?
பிக்பாக்கெட்டு...திருடறது தான்..
கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாதுன்னு சொல்வாங்களேன்னு நீங்க முணுமுணுக்கிறது காதில விழறது..என்ன செய்ய?
வர,வர ராக்கப்பன்னுக்கும் வயசாயிட்டேப் போவுது..முன்ன மாதிரி முடியல..இந்த மூக்கன் பய மட்டும் கொஞ்சம் படிஞ்சான்னா, தன் பொண்ணு கழுத்தில மூக்கனை விட்டு மூணு முடிச்சு போடச் சொல்லிட்டு, கிருஷ்ணா..ராமான்னு ஏதாவது கோவில்லப் போய்..
திருட வேண்டியது தான்!
“அண்ணாத்தே..அண்ணாத்தே”
“என்னடாலே”
“இதைப் பாரு”
பெரிய வீடு..காவலில் நாய் இல்ல..கூர்க்கா குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.
சரித்தான்..இன்னிக்கி யார் முவத்தில முழிச்சோமோ..
சந்தோஷமாய்
பம்மினான்..
பதுங்கினான்..
ராக்கப்பன்.
“ஏய் வாடாலே மூக்கா..”
திடீரென்று நின்றான், ராக்கப்பன்.
” என்ன அண்ணாத்தே?”
“உஷ்..கிளம்பு என்னோட”
கொழுத்த பசு மாடு ஒன்றை விட்டு விட்டு சிங்கம் ஏமாற்றத்துடன் செல்ல, குட்டியும் தொடர்ந்தது, ஏக்கத்துடன்!
”எதுக்கு அண்ணாத்தே கிளம்பிட்டீங்க?”
“வீடு ஆருது?”
“தெர்லே”
“..அது மந்திரி மாடசாமி வூடுடா”
“பயந்துட்டீகளா?”
“பயமா..எனக்கா? மந்திரின்னா ஆரு?”
”தெர்ல”
“ திருடன்டா மாப்ளே, திருடன்! திருடன் வீட்ல, திருடன் திருடக் கூடாது..அது தொளில் தர்மமில்ல..”
ஆங்கமாய் மூக்கன் தலயில் ராக்கு குட்டு ஒன்று வைக்க..
அக்...கா....ங் ன்று கத்தினான் மூக்கன் வலி தாங்காமல்!
Labels:
சிறுகதை
Saturday, November 26, 2011
டாலரும்..ரூபாயும்!
என் நண்பனின் மகனிடம் ஸ்கைப்பில் பேசினேன்..
அடிக்கடி அவனுடன் பேசுவது வழக்கம் .மேலும் அவன் என் ஸ்டூடண்ட்.
அங்கு காஃபி இரண்டு டாலராம்..தோசை ஐந்து டாலராம்..
“என்னப்பா, காஃபி நூறு ரூபாயா? தோசை இரு நூற்றைம்பது ரூபாயா?”
இப்பொழுதெல்லாம் ஒரு டாலர் ஐம்பது ரூபா ஆகிறதே!
“அங்க்கிள்...எதையும் ரூபாயில் கன்வெர்ட் பண்ணாதீங்க..மயக்கம் தான் வரும்.
இது நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும்.
சலூனுக்கு சென்றிருந்தேன்.
ஆவின் பால் கட்டண உயர்வு..பஸ் கட்டண உயர்வு அமுல்படுத்திய நேரம்.
முடிதிருத்துபவர் உணர்ச்சிவசப் பட்டு சொல்லிக் கொண்டிருந்தார்.
”என்னிக்கு பால் விலை ஏறும்னு சொல்லி வாய் மூடலை..அதுக்குள்ள டீக்ககடையில டீ விலை ஏத்திட்டான், சார்.பஸ் பாருங்க மெய்ன்கார்கேட்டுக்கு நாலு ரூபா..என்ன் அநியாயம்..
காய்கறி அது உச்சத்தில நிக்குது..”
பொறுமி தள்ளினார், அவர்.
பேசும் போது,என் தலையில் அவர் கத்தி விளையாடிக் கொண்டிருந்தது.
நான் ஏன் பதில் பேசுகிறேன்..
ஒரு வழியாய் முடித்தார்.
நூறு ரூபாய் நோட்டு நீட்டினேன்.
அவர் ஐம்பது ரூபாய் பாக்கி கொடுத்தார்.
என்னது..இருக்கிற நாலு முடியை வெட்ட ஐம்பது ரூபாயா..என்ன ஒரு அநியாயம்?
மனசு அடங்கவேயில்லை..
யாரிடமாவது சொல்லி ஆற்றி கொள்ள வேண்டும் போல் இருந்தது.
எதேச்சையாய் கண்ணன்..நண்பனின் மகன்... வந்தான் லைனில்..
“சொல்லுங்க, அங்க்கிள்.
நம்மூர் எப்படி இருக்கு?”
“கண்ணா..அதையேன் கேட்கறே? .இங்க.. விலை வாசி எக்கசக்கமா எகிறிடுச்சு.., பஸ் சார்ஜ்..பால் கட்டணம் எல்லாம் ஏறிடுச்சு இப்ப முடி வெட்டிக்க ஒரு டாலர் வாங்கறாங்க. நம்மூர்ல.”
“ஐயையோ ஐம்பது ரூபாயா அங்க்கிள்?”
“கண்ணா..எதையும் ரூபாயில கணக்குப் போடாதே!
மயக்கம் தான் வரும்!”
Labels:
சிறுகதை
Friday, November 25, 2011
காலம்!
..அவன்..
லலிதாவா அது!
எவ்வளவு நாளாயிற்று, பார்த்து?
முப்பது வருடங்கள்..
நிச்சயமாய் இருக்கும்.
யதேச்சையாய், நாகர்கோவில் சம்பந்தி தம்பி பிள்ளை கல்யாணம்.
பார்த்தால், பச்சைக் கலர் பட்டுப் புடவையில்..
அவளுக்கு பச்சை என்றால் ரொம்பவும் பிடிக்கும்.
பச்சைக் கலர் தானே அவளை அடையாளம் காட்டியது.
காலம் போட்டுப் புரட்டியதில்,
ஒன்றிரண்டு வெள்ளி மயிர்களைத் தவிர,
அவளிடம் வேறு வித்யாசம் இல்லை.
பஸ்ஸில் பயணிக்கையில்,
அவள் பக்கத்தில் நின்று கொண்டு..
”..என் கண்மணி என் காதலி”- அந்த காலத்து
பிரபலமான அந்த பாடலை முணுமுணுக்க....
அவளும் மெலிதாய் பதிலுக்கு ஹம் செய்ய..
விதி விளையாட..எங்கெங்கோ பிரிந்து.
இப்போது லலிதா..
ஒரு சின்ன சபலம்..
நினப்பே ஒரு சுகமாய்..
அந்த சுகத்தில் ஒரு லயிப்பாய்..
எனக்காக காத்துக் கொண்டு இருக்கிறாளோ,
இன்னமும்?
..அவள்..
பார்த்தவுடனே தெரிந்து விட்டது,
அவர் ராம் தானென்று.
என்ன கொஞ்சம் தொப்பை போட்டு விட்டது..
வருடங்கள் ஆனால் தான் என்ன..
தலை வழுக்கை விழுந்து..
ஆனால் அந்த கண்கள்
மட்டும் இன்னமும் குறும்பாய்..
அது தானே அவரை
காட்டி க் கொடுத்தது?
அந்த இளம் வயது வசந்தத்தை,
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
இப்படியும் இருக்குமோ?
எனக்காக..இன்னமும்..
அவர் காத்துக் கொண்டு இருக்கிறாரோ?
..பொது..
நீ... நீங்க லலிதா இல்ல?
ஆமாம்... நீங்க ராம் தானே?
அடுத்தது?
அதை..அதை..
எப்படி கேட்பது?
இருவருக்கும் மனத்துள்
ஆசாபாசத்துடன்..
அந்த கேள்வி எதிரொலிக்க..
திடீரென்று ஒரு குரல்!
தாத்தா என்று ஒரு சிறுமி,
ராமின் காலை கட்டிக் கொள்ள..
பாட்டி என்று ஒரு பொடிசு
லலிதாவைக் கட்டிக் கொள்ள..
யாருக்காகவும், யாரும் காத்துக்
கொண்டிருக்காத..யதார்த்தம்
இருவரையும்
கலகலவென சிரிக்க வைத்தது!
Labels:
சிறுகதை
Wednesday, November 23, 2011
ஓரி காக்கை..
ராமாமிர்தத்திற்கு சந்தோஷமும் இல்லை..துக்கமும் இல்லை.. அவருடைய அபிப்ராயம் கேட்டால்,அவர் அந்த காலேஜ் ப்ரோபஸரின் மூன்றாவது பெண்ணைத் தான் செலக்ட் செய்வார்..ஆனால், லலிதாவிற்கு அந்த வரன் பிடிக்காது.. அந்த பேங்க் மேனேஜரின் பெண்ணைத் தான் அவள் தேர்வு செய்வாள்!ஏனென்றால், அவர்களுக்கு ஒரே பெண். ஆசை.. ஆசையாய் செய்வார்கள்.
”அம்மா, ஜோஸ்யர் சொல்லிட்டார்..இரண்டு வரனும் நன்றாகப் பொருந்துகிறது என்று” - இதை சொல்லி விட்டால், அவர் கடமை முடிந்தது.
விஷயம் இது தான்!
அவர்கள் பையன் சுனிலுக்கு பெண் பார்க்கிறார்கள்..தரகர் கொடுத்த வரன்களில், இரண்டு வரன்கள் அவர்கள் தகுதிக்குப் பொருத்தமாக இருந்தது..இப்போது இரண்டுமே பொருத்தம் என்று ஜோஸ்யர் சொல்லி விட்டார்.
பேங்க் மேனேஜருக்கு ஒரே பெண்..அவர் மனைவியும் அரசு உத்யோகம்.. நன்றாகவே செய்வார்கள்..மேலும் பெண் வேலை பார்க்கிறாள்.
புரபஸருக்கு நான்கும் பெண்கள்..இது மூன்றாவது பெண்..இன்னும் ஒரு பெண்ணை கரையேற்ற வேண்டும்..ஒரு சம்பளம்! இதில் உறவுகள் ஜாஸ்தி.தொண்ணூறு வயதில் கொள்ளு தாத்தா, பாட்டி இருக்கிறார்களாம், கல்யாணப் பெண்ணிற்கு! பெரிய குடும்பம்!
“ என்ன ஆச்சு?”-லலிதா.
“ இரண்டுமே நல்லா பொருந்தறதாம்..”
“ அப்படீன்னா, அந்த புரபஸரோட பெண்ணையே பார்க்கலாம்..”
“ என்ன லலிதா, அது பெரிய சம்சாரம்...கும்பல் சொல்லி மாளாது”
“ அது தான் நமக்கு வேணும்.. நான் ஓரி காக்கை..உங்க வீட்லயும் அப்படித் தான்.. நமக்கும் ஒரே பையன் தான்..இதுல பெரிய சம்சார குடும்பத்தில சம்பந்தம் வைச்சிட்டா தான், நமக்கு உறவுகளோட அருமையே தெரியும்..இந்த பொண்ணு, நம்ம பையனை நல்லா கவனிச்சுப்பா... நாம வயசானதும், நம்மளையும் பெத்த தாய், தந்தை போல் கவனிச்சுப்பா..உறவு தான் வேணும் பணம் வேண்டாம்”
லலிதா சொல்ல..சொல்ல அப்படியே மகிழ்ச்சியில் திக்கு,முக்காடி போனார், ராமாமிர்தம்!
Labels:
சிறுகதை
Tuesday, November 15, 2011
வர வீணா...ம்ருது பாணீ..!!!
”வரச் சொல்லுங்க?”
வந்தேன்.
சோஃபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவர்கள்.
எனக்கு செம எரிச்சல்..லேசாய் பயம் வேறு.
“பாடச் சொல்லுங்க”
காலையிலிருந்தே தொண்டை சரியில்லை..போதாததிற்கு விஷயத்தை மோப்பம் பிடித்த
ப்ரண்ட்ஸ்களுக்கு ஐஸ்க்ரீம்..
அது மக்கர் செய்தது.
“வர வீணா..ம்ருது பாணீ”
கீச்சுக் குரலில் அந்த கத்தல் என்னையே என்னவோ செய்தது..
கேட்பவர்களுக்கு எப்படி இருக்கும்?
“ நேற்றிலிருந்து உடம்பு சரியில்ல..அதனால தான்”-
அப்பா சப்பை கட்டு கட்டினார்.
ரொம்பவுமே நெர்வஸாய் இருந்தார்,அவர்.
அம்மா அதற்கு மேல்!
இதுவும் தட்டிப் போய் விடுமோ என்கிற கவலை இருவருக்கும்!
“இப்ப எல்லாம் யாரு பாட்டு பாடறாங்க. ஏதோ சம்பிரதாயம், அவ்வளவு தான்”
என்றாள் என் அத்தை.
சற்று நேரம் மெளனம்!
அப்பா தான் மெளனத்தை கலைத்தார்.
“சமையல் செஞ்சா சூப்பரா இருக்கும்”
“அப்படியா?”
அடுத்தது பிஸ்கெட்..ஸ்வீட்..காரம்..காஃபி.
அப்புறம் இருக்கவே இருக்கிறது..
”கொஞ்சம் தனியாப் பேசணுமே”
“போய் லெட்டர் போடறோம்”
எதுவும் இல்லை இவர்களிடத்தில்!
பிடித்து விட்டது என்றார்கள்.
உடனேயே, முகூர்த்தத்திற்கும் நாள் குறித்தாகி விட்டது.
அவர்கள் போனதும், அப்பா சந்தோஷத்தில் குதித்தார்.
“வெள்ளிக்கிழமை ராகு காலத்துல அர்ச்சனை பண்ணிணது வீண் போகவில்லை”
சந்தோஷம் தாங்காமல்,அப்பா, அம்மா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தேன், நான்.
“டேய் பாலு, இனிமே உனக்கு ஒரு குறையும் இல்ல” என்று என்னை கட்டிக் கொண்டார்,ஐந்தாவது பிள்ளையான என்னை கரையேற்றி விட்ட அப்பா!
Labels:
சிறுகதை
Tuesday, November 8, 2011
ஈகை திருநாள்....
தக்கலையிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது,
லாரி.வண்டியை ரொம்பவும் நிதானமாக ஓட்டி வந்தார் அமீர்பாய். இந்த காலத்து பசங்களைப்
போல,போட்டாபோட்டி போட்டுக்கொண்டு, அவருக்கு ஓட்டத் தெரியாது.எதிலும் நிதானம்
தான்.அதனால் தான், ரொம்ப காலமாக மல்லாரி அண்ணனுக்கு வண்டி ஓட்டிக் கொண்டு
இருக்கிறாரோ என்னவோ...
"என்னவே..அமீர்பாய் ? அவனவன் அஞ்சு ஆறு வருஷம் தான் 'டைவரா' இருக்கான். அப்புறம்
முதலாளி தலைல,மொளவாயை அரைச்சுட்டு, அவனே சொந்தமா லாரி வாங்கி ஓட்டறான்.
எல்லாப் பயல்களும், பம்மாத்து பயலுவ. நீரு என்னடான்னா, விடாம இருபது வருஷமா,
ஒரே வண்டியை ஓட்டறீரு..என்னவே சேத்தீரு ?"
கரீம் பாய் இடித்துக் காட்டும் போதெல்லாம் இரு கைகளையும் மேலே தூக்கி, ஒரு சிரிப்பு சிரிப்பார்.
" அல்லா இருக்கிறானாம்.பார்த்துக் கொள்வானாம்!"
அமீர் பாய்க்கு வயது ஐம்பது,ஐம்பத்தைந்து ஆகிறது. மகள் சல்மாக்கு போன ரஜப்
மாசத்தில தான் பந்தக் கால் நட்டு,'சேரா' கட்டி,மல்லிகைப் பூவினால் மணமகன் முகம்
மறைக்க, நிக்காஹ் முடித்து வைத்தார். மருமகன் தங்கமான புள்ள. தோவாளையில்
சொந்தமாக விறகுக் கடை வைத்து நடத்துகிறான். நம்ம 'மஹ்லா'வுல, அந்த மாதிரி
புள்ளயப் பார்க்கறது அபூர்வம்.
நிதானமாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைச் சக்கரத்தில் சிறிது நாட்களாகவே
தடங்கல். ஒரு கவலையும் இல்லாத அமீர் பாய்க்கு, பணமுடை. ஒரு முன்னூறு ரூபாய்
தேவையாக இருக்கிறது. அது மட்டும் கிடைத்தால், அவர் நினைத்த காரியம் நடந்து
விடும். முதலாளியிடம் கேட்க மனம் வரவில்லை. அவராகத் தருகிறாரா.. பார்க்கலாம்.
இது தான் அவரிடம் ஒரு குணம். யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார். இது நாள் வரை
சம்பளத்தை உசத்த வேண்டும் என்று முதலாளியிடம் அவர் கேட்டதே இல்லை. மல்லாரி
அண்ணனாகப் பார்த்து, ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. அதையும், அப்படியே மகள்
சல்மாவிடம் கொடுத்து விடுவதுடன், அவர் கடமை முடிந்தது.
நாகர்கோவில் வந்து விட்டது. வண்டியை நிறுத்தினார்.
கொஞ்ச நாட்களாகவே, க்ளீனர் பையன் கமால் அவரை நச்சரித்துக் கொண்டு
இருக்கிறான். இவர் போய் முதலாளியிடம் சொல்ல வேண்டுமாம், அவனுக்கு ரம்ஜான்
ஈதுவிலிருந்து சம்பளத்தை உசத்த சொல்லி!
"அண்ணே" - தலையை சொறிந்து கொண்டு வந்தான் கமால், இப்பவும்.
" ராவுத்தரே கொக்காப் பறக்கறாராம். குதிரைக்கு கோதுமை அல்வா கேக்குதாங்
காட்டியும் ! போடா அப்பாலே.." என்று நாக்கைத் துருத்தியவாறே கையை ஓங்கிக்
கொண்டு வந்தார் அமீர் பாய். அவன் நகரவில்லை. அவனுக்குத் தெரியும் அவர்
அடிக்க மாட்டென்று.
" உம்ம மாதிரி நானும் நுப்பது வருஷம் வண்டியைக் களுவ வேண்டியது தான் ..."
முணுமுணுத்துக் கொண்டே வாளியுடன் சென்றான் கமால்.
அமீர் பாய் யோசித்துப் பார்த்தார். இந்தப் பயலுக்காவது, ஏதாவது கேட்கலாமென்று.
முதலாளி தப்பாக எடுத்துக் கொண்டால்....வேண்டாம்...வேண்டாம்..அவனுக்கும் நம்ம
மாதிரி கிடைக்கும் போது கிடைக்கட்டும்.
இது நாள் வரை மகள் சல்மா அவரை 'அத்தா..அதை வாங்கித் தா..இதை வாங்கித்தா..'
என்று வாய் திறந்து கேட்டதில்லை. எல்லாத்துக்கும்' உம்ம இஷ்டம்' என்கிற பதில் தான்
மகளிடமிருந்து வரும். தகப்பன் குணம்.
மறு நாள் ஈது பண்டிகை!
ஆண்டவனின் சன்னிதானத்திலே, ஆண்டி முதல், அரசன் வரை அனைவரும் சமம்
என்பது போல, பஞ்சப் பராரிகளுக்குப் பக்கத்திலேயே, பட்டாடை உடுத்திய கனவான்களும்
'அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...ஹம்து' என்று ஒருமித்து, ஏகநாயகனின் தெய்வீக
முழக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். புனித நோன்பினை முடித்த பெருமிதம், அத்தனை பேர்
முகங்களிலும் தெரிந்தது. கேவலம், மானிட இச்சைகளை முழுவதுமாக, முப்பது நாட்களுக்கு
வெறுத்துத் தள்ளுவேன்....ஏன் தள்ளியாகிவிட்டது ...என்ற உணர்வே அங்கே மேலோங்கி
இருந்தது. மனதுக்கு ஒவ்வாததை வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்ற நெஞ்சுரம்
தொழுகைக்கு வந்த அனைவரிடமும் பிரதிபலித்தது.
ஜமாத்தின் முதல் வரிசையிலேயே, மல்லாரி அண்ணனுக்குப் பக்கத்திலேயே, அமீர்பாய்
நின்று கொண்டிருந்தார்.எல்லாரையும் விட ஆண்டவன் தான் உயர்ந்தவன் என்பது போல
அனைவரும் மெய் மறந்து நின்றிருந்தனர்.
'சுஃபான ரப்பியுல் அலீம்!....'
மனதுக்குள் மனனம் செய்து...டவுன் ஹாஜியார் மண்டியிட, அனைவரும் உணர்ச்சிப்
பெருக்குடன் குனிந்து மண்டியிட்டார்கள்.
அமீர் கரடுமுரடானவர் தான் ! ஆண்டவனின் சன்னிதானத்திலே, சிறு குழந்தை போல
ஆகி விட்டார். இந்த 'ட்ரிப்பு' எப்படியாவது போயாவணும்... கண்களில் அவரையும் மீறி
கண்ணீர் வழிந்தோடியது.
ஹாஜி ஸாப் அடுத்த 'ரஹ்-ஆத்' துக்காக எழுந்து நின்றார். அமீர் பாயினால் எழுந்திருக்க
முடியவே இல்லை.
மிகவும் சிரமப் பட்டு எழுந்தார்.
'துஆ' முடிந்ததும், ஒருவரை ஒருவர் 'முலாக்கத்' செய்து கொண்டனர். முதலாளியும்,
தொழிலாளியும் அணைத்துக் கொண்டனர்.
"இங்க சித்த வாரும்.." மல்லாரி அண்ணனால் தாங்க முடியவில்லை. இவரை ஒதுக்குப்
புறமாக அழைத்துச் சென்றார்.
"நீரும் என்னண்ட விசுவாசமா இருந்திருக்கீரு... உமக்கு நா ஒண்ணும் செய்யலேங்கறது
என்னை உறுத்திக்கிட்டு இருக்கு...ஒம்ம மக நிக்காஹ்க்குக் கூட அஞ்சு நூறு தான்
கொடுத்தேன். நீரு இது வரை, எதையும் திருப்தியோடத் தான் வாங்கி இருக்கீரு ...கொறச்ச..
கூட என்கிற முணுமுணுப்பு உம்மண்ட கெடையாது. அதனால, நீரு ஓட்டற லாரியை உமக்கே
இந்த ரமலான் நாளிலே தரேன் எடுத்துக்கும்.." என்றார் அதே கண்டிப்புடன்!
" மொதலாளி.."
அமீர் பாயின் நா தழுதழுத்து, அவரைக் கூப்பிட்டது.
"என்ன?"
" ஒரு சின்ன விஷயம்"
இது நாள் வரை இல்லாமல், இன்று தான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார், அமீர் பாய்.
"சொல்லும்"
" அந்த கமால் பையனுக்கு நுப்பது ரூபா சம்பளம் கூட கொடுங்க"
" என்ன சுத்த கூறு கெட்ட ஆளா இருக்காரு...இவருக்கு ஏதாவது கேளுங்கன்னா..
அவனுக்கு கொடுக்க சொல்றாரு.." - மனத்துள் நினைத்தார் மல்லாரி அண்ணன்.
" சரி "
" எனக்கு ஒரு முன்னூறு ரூபா...கடனாகத் தாரும்.."
" எதுக்கு? இவருக்கு எதுக்கு முன்னூறு ரூபா.அதுவும் கடனாக?...."
கடன் வாங்கி போகக் கூடாது என்கிற விவரம் அமீர் பாய்க்கு நன்றாகவே தெரியும்.
ஏதோ உணர்ச்சிப் பெருக்கில் உளறிக் கொட்டி விட்டார்!
" ஹஜ்ஜுக்குத்தான்!!!"
" மாப்ளே.."
அவரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார், மல்லாரி அண்ணன்.
" உம்ம பணம் மாப்ளே.உம்ம .நுப்பதாயிரம் ரூபா... சம்பளத்திலிருந்து ஹஜ்க்குப் போக பேங்க்ல
போட்டு வைச்சது கிடக்கு.. போயிட்டு வாரும்..வேணாம்..வேணாம்..என்னையும்
கூட்டிட்டுப் போங்க..."
ஒரு பத்தரை மாற்றுத் தங்கத்தை உரசிப் பார்த்து விட்டோமே!
குற்ற உணர்வில், பொது இடம் என்பதயும் மறந்து அழுது விட்டார், மல்லாரி அண்ணன்!
கண்ணீரின் ஊடே மிகவும் வெளிராகத் தெரிந்தார், அமீர் பாய்!
பின் குறிப்பு: 1. இது ஒரு மீள் பதிவு..
2. பத்திரிகை : தினமணி கதிர் (1980 வாக்கில்)
3. எழுதியவர் : “தரன்” என்கிற நான்.
Labels:
சிறுகதை
Friday, November 4, 2011
அலாஸ்காவும்,ஐஸ் பெட்டியும்!!!
பனி விழும் நாளில், ஊட்டியில் வாக்கிங் போவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!
எதிர்த்தாற் போல் மிஸ்டர் சுகவனேசன்...
சுகவனேசன் ஒரு விசித்ரமான பேர்வழி..என் மீது ஒரு ’பெரிய கம்பெனியில் மனித வள மேம்பாட்டுத் துறையில் பொறுப்பான உத்யோகம் பார்த்து இளைப்பாறுகிறவர்’ என்கிற மரியாதை உண்டு. மேட்டுப் பாளையத்தின் ஒரு பெரிய தொழில் அதிபர் இப்படி என்னுடன் வித்யாசமில்லாமல் பழகுகிறாரே என்று என்னுள்ளும் ஆச்சர்யம்!
இப்படித் தான் போன வாரம் நான் காரமடை ரங்கநாத பெருமாளை சேவித்து விட்டு வரும் போது,சர்ரென்று படகு போன்ற கார் ஒன்று என்னை இடிக்கிறார்போல் வந்தது..யாரடா என்று பார்த்தால், நம்ம சுகவனேசன்!
“ வாங்க சார்.. நம்ம ஆஃபீஸ்க்குப் போலாம்”
” என்ன விஷயம்?”
“ இன்னிக்கு ஒரு இன்ட்டர்வ்யூ..மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் செலக்ஷன்.. நீங்க இன்ட ர்வ்யூ கமிட்டி மெம்பர்..”
என் அனுமதி கோரப் படவில்லை..அவராகவே தீர்மானித்து அந்த க்ஷணமே அதை அமுல் படுத்தியும் விட்டார்!
அது தான் சுகவனேசன்!
இன்ட்டர்வ்யூ நடந்தது..வந்த பையன்களில் ஒரு பையன் எக்கசக்க ஸ்மார்ட்..அவன் ஒருவன் தான் டை கட்டியிருந்தான்..அவன் சொன்னது இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது..
“...சார்...தயவுசெய்து தற்பெருமை என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்! 'I AM ABLE TO SELL FRIDGES TO ESKIMOS..IT'S TRUE' என்றான்..அலாஸ்கா போன்ற தூந்திர பிரதேசத்தில் ஐஸ் பெட்டிகள் விற்பேன் என்று சொல்வதற்கு எவ்வளவு ’ஸ்மார்ட்னெஸ்’ வேண்டும்..அவனுக்குத் தான் மிக அதிகமான மார்க் கொடுத்திருந்தேன், நான்!
இதோ..இதோ...நெருங்கி விட்டார், சுகவனேசன்.
“ குட்மார்னிங், ராகவன்”
“ குட்மார்னிங் சார்..என்ன ஆச்சு இன்ட்டர்வ்யூ?”
“ செலக்சன் ஆச்சு”
” அந்த டை போட்ட பையன் தானே?”
“ சாரி..அவனில்ல.. நீங்க என்ன ..எல்லாரும் தான் அவனுக்கு ஜாஸ்தி மார்க் போட்டீங்க ..ஆனா, நான் செலக்ட பண்ணலே?”
“ ஏன்..ரொம்ப கெட்டிக் காரப் பையன்..அலாஸ்கால கூட ஐஸ் பெட்டி விற்பேன்னானே?”
“ அந்த ATTIDUDE தான் பிடிக்கல..தேவையில்லாத சாமானை கஸ்டமர் தலையில கட்டறது அவனோட தனிப்பட்ட சாமர்த்தியமா இருக்கலாம்....அதனால, ஷார்ட் ரன்ல வேணா நம்மோட டார்ஜெட் அச்சீவ் ஆகலாம்...ஆனா,கம்பெனிக்கு நல்லதா அது?லாங் ரன்ல பார்த்தா நம்மளோட குட்வில் இல்ல ERODE ஆயிடும்?....அதைத் தானே நாம பார்க்கணும்!
..அதனால தான் அவனை செலக்ட் பண்ணல..”
திகைத்து நின்றேன், நான்!
Labels:
சிறுகதை
Subscribe to:
Posts (Atom)