Sunday, August 26, 2012

அபர காரியம்!

”என்னது, ராமனாதன் போய்ட்டானா?”
“ராம நாதன் போய்ட்டானா?”
“நம்ம ராமனாதனா?”
மகாதேவ கனபாடிகள் அந்த எண்பத்தைந்து வயதிலும் முடியாமல், தள்ளாடி தள்ளாடி நடந்து கொண்டிருக்கிறார்.
“மகாதேவ மாமா, நம்ம ராமனாதனா?”
“என்ன ஆச்சு?”
“ராமனாதன் ஒரு கிரஹப்ரவேசத்துக்குப் போய்ண்டிருந்தானாம்..கொஞ்சம் லேட்டா ஆனதினால, வண்டிய கொஞ்சம் வேகமாய் விரட்ட, எதிர்த்தாற் போல ஒரு லாரிக் காரன் அடிச்சு, ராமனாதன் ஸ்பாட்லேயே அவுட்!”
“என்ன அவசரம்?”
“ஒரே நேரத்தில இரண்டு இடத்தில வைதீகத்துக்கு ஒத்துண்டு இருக்கான் போல இருக்கு..அந்த கிரஹப்ரவேசத்துல கொஞ்சம் லேட்டா ஆய்டுத்துங்கிறதால,மோட்டார் சைக்கிளை கொஞ்சம்  வேகமா வரலாம்னு நினைச்சிருக்கான்..”
“அச்சச்சோ..பாவமே!”
“இப்ப எல்லாம் இவாளுக்கும் காசு மேல ஆசை வந்துடுத்து..எல்லாரும் மோட்டார் சைக்கிள் வைச்சிருக்கா..ராமனாதன் இதுல ஒரு படி மேல போய்ட்டான்..கேட்டரிங் ஆளோட லிங்க் வைச்சுண்டு, இவனே ஏற்பாடு பண்ணிடறான்..அதுல கமிஷன் வேற..கேட்டா சம்பாதிக்கும் போது சம்பாதிச்சா தான் உண்டு என்று வேதாந்தம் பேசுவான்.இப்ப பாரு என்ன
ஆச்சுன்னு?”
“அடக் கடவுளே!”
எல்லார் பேச்சையும் கேட்டுண்டு மகாதேவ கனபாடிகள் நடந்து கொண்டு இருக்கிறார்.ஆச்சு..இன்னும் அஞ்சு நிமிஷம் தான் அந்த ’கட்டேல போறவன்’
அஹம் வந்துடும்..
’..அவன் தான் கட்டேல போய்ட்டானே..இன்னும் என்னடா மகாதேவா அவனுடன்?’- தன் நினைப்பே தன்னை கூச வைத்ததும், இன்னும் குறுகிக் கொண்டு நடந்தார், மகாதேவ கனபாடிகள்.
 “ மாமா, இந்த பையன் ஒரு விதத்தில அனாதை தான்.. நான் தாய் மாமன்..எனக்கு பலத்த சம்சாரம்.. நீங்க தான் இவனை உங்க பையனா எடுத்து வளர்த்து வேதம் சொல்லித் தரணும்..”
    திருவிடைமருதூரிலிருந்து கச்சலாய் ஒரு பிராமணன் வந்து சொன்னது நேற்று சொன்னது போல இருக்கிறது..
   பையன் படு சூட்டிகை! கற்பூர புத்தி!!
   தர்க்கம்..வ்யாகர்ணம்..சூத்ரம் ..என்று மளமளவென்று முன்னேறினான்..கொடுக்கிற தட்சிணை மீது ஆசை வைக்காதேடா ராமானாதா என்று அவர் சொல்ல ஆரம்பிப்பதற்க்குள், ராமனாதன் எங்கோ சென்று விட்டான் ..ப்ரயோகம் அவனுக்கு தண்ணி பட்ட பாடு..யார், யார் எப்படி எப்படி சொன்னால் கேட்பார்கள்  என்பதை  நன்றாகவே  தெரிந்து வைத்திருந்தான்.தன்னுடைய அத்தனை சாமர்த்தியத்தையும் அப்படியே தட்சிணையாக மாற்றினான், கெட்டிக் காரன்!”
  “ராமனாதா காசாசை வேண்டாம்டா..வைதீகன் பரம லெளகீகனா ஆய்டக் கூடாதடா..”
  அவன் அதை கேட்கும் மன நிலையில் இல்லை!
  ”உங்களுக்கு தேவை இல்ல..எனக்கு அப்படியா? மூணு குழந்தைகள் சாஸ்ட்ராவில இஞ்ஜினீயரிங் படிக்கிறது..எவ்வளவு செலவாகும்?”
   கொஞ்சம் பணம் வந்ததும் திமிர்  துண்டு போல் தோளில் சுவாதீனமாய் வந்து உட்கார்ந்து கொண்டது !
   மேலும் இவர் அவர்கள் கொடுத்ததே போதும் என்று வாங்கிக் கொள்வது ஏக எரிச்சல்! போகிற வருகிறவர்கள் எல்லாம் வேறு மகாதேவ மாமா  எவ்வளவு கண்ணியமாய் இருக்கிறார்..அவரோட சிஷ்யன் ராமனாதன் இப்படி ஆட்கொல்லி பிசாசா இருக்கிறானே என்று அவன் காது படவே பேச
ஆரம்பித்து விட்டார்கள்!
     அதோ...ராமனாதன் அஹம் வந்து விட்டது!
     இவரை கண்டதும் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள் கல்பு, ராமனாதனின் பெண்டாட்டி!
    “மாமா உங்க சிஷ்யர் இப்படி பண்ணிட்டு போய்ட்டாரே!”
    குழந்தைகள் மூன்றும் அவர் காலை கட்டிக் கொண்டு அழுதன!
    ரொம்ப நாளாச்சு அவர் இங்கே வந்து..எப்ப அவன் அப்படி சொன்னானோ அவன் மூஞ்சியில விழிக்கக் கூடாதுங்கிற வைராக்யம்!
    “யார் வரேன்னிருக்கா?”
    “ எல்லாரும் இவர் சொன்ன இடத்துக்கு போய்ட்டா..யாராலயும் வர முடியாது இவருக்கு நீங்க தான் மாமா பண்ணி வைக்கணும்”
      கதறி அழுதாள், கல்பு.
     ” நானா?”
       மனசுக்குள்  மீண்டும் வந்தான் ராமனாதன் ஒரு வெறிச் சிரிப்பில்!
     “.....ஓய்..காசு வாங்காதேன்னு என்னை சொல்லாதீர்..என்னால முடியாது..சம்பாதிக்கும் போது சம்பாதிச்சாத் தான்..உண்டு..வேணா ஒண்ணு பண்றேன்.. உம்மோட  காரியத்துக்கு  நான் ஃப்ரீயா வந்து பண்ணித் தரேன் ஒரு பைசா கூட தட்சணை வாங்காம! நான் பண்றதா நீர் நினைச்சுண்ட அந்த  பாவத்துக்கு அது ப்ராயச்சித்தமா இருக்கட்டும்  ஓய்!”
      

Thursday, August 16, 2012

ஆண்டார் வீதியும் நானும்!

வடக்கு ஆண்டார் வீதி மணிவாசகம் ஸ்டோர் வாசம் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவம்..
    ஏற்கனவே சொன்னது போல், சின்னஞ்சிறு வீடுகள்..’காமன்’ கிணறு..’காமன்’ குழாய்..அண்ணா ஒருத்தர் தான் சம்பளம் நாங்கள் குழந்தைகள் ஐந்து பேர்..அண்ணா, அம்மாவைச் சேர்த்து ஏழு பேர்.எங்கள் ஐந்து பேரை வைத்து பெற்றோர்கள் குடும்பம் நடத்தினார்கள்.. எங்கள் ஐவரில், ஒருவர் கூட அப்பா,அம்மாவை வைத்துக் கொள்ள முடியவில்லை..சொன்னால் வெட்கக் கேடு..மாசக் கடைசியில் கை மாற்றாக அண்ணா பென்ஷன் பணத்திலிருந்து HANDLOAN வாங்கித் தான் நாங்கள் காலட்சேபம் பண்ணுகிறோம்..”என்னடா, ரெண்டு பேர் சம்பாதிக்கிறீங்க..என்ன கஷ்டம் உனக்கு?” என்று அண்ணாவும் பணம் கொடுக்கும் போது கேட்டதில்லை..வாழும் வாழ்க்கையே நாயர் புலி வாலை பிடித்தகதை போல் இருக்கிறது..இதில் என்னத்தை சொல்ல?
    ஏப்ரல், மே காலங்களில் அந்த கால கட்டத்தில் ‘படி எட்டணா பால்’ என்று கூவி கூவி விற்பார்கள்..பால் ஜோராய் ’திக்’காக இருக்கும். ஜோசப் காலேஜ் ஹாஸ்டல் லீவ் என்பதால், பால் தாராளமாய் கிடைத்த காலம் அது!
   சாயங்காலம் ஏழு,எட்டு மணிக்கு இப்போழுதெல்லாம் நெட்டில் உட்கார்ந்து உடம்பையும், மனசையும் கெடுத்துக் கொள்கிறார் போல் அப்போழுது கிடையாது.. நேஷனல் காலேஜ் க்ரெள்ண்டில் தூப்புல், கீரன் கதைகள் நடக்கும்..ராதா கல்யாணம்...கும்பகோணம் சங்கர் பஜனை எல்லாம் நடக்கும்..
மனசு ரொம்பவும் சந்தோஷமாய் இருந்த கால கட்டம் அது!
    “இத்தனைக் கஷ்டங்களுக்கும் யார் காரணம் நாரதா?”
     “இந்திரா?”
     “என்னது?”
     “ நான் இந்திரனைச் சொன்னேன்!”
        கீரன் ஏற்ற, இறக்கத்தோடு சொல்லும் போது, பயங்கரமான கைதட்டல்!
அப்போது எமர்ஜென்ஸி வந்த புதிது..இந்திரா என்று நாங்கள் இந்திரா காந்தியை நினைக்கப் போக, அவர் தேவர்கள் தலைவன் இந்திரனை சொல்வதாக பேசுவது சூப்பர்!
   எப்போதாவது சினிமா போவோம்..அதுவும் எதிர்த்த அஹம்..பக்கத்து அஹம் என்று கூட்டம் சேர்த்து கொண்டு போவோம்..கோடை சமயத்தில் பிஷப் ஹீபரில் எக்ஸிபிஷன் நடக்கும்..அந்த பஞ்சு மிட்டாய்..டெல்லி அப்பளம்..மிளகாய் பஜ்ஜி..குடை ராட்டினம் என்று சண்டை நடக்கும்!
   வீட்டில் அவ்வப்போது வறுமை அழையா விருந்தாளியாய் வந்து எட்டி,எட்டிப் பார்த்தாலும், நாங்கள் அதை ’கேர்’ பண்ணினால் தானே? இருப்பதை வைத்து ரொம்ப சந்தோஷமாகவே காலம் தள்ளினோம்..
அந்த கஷ்டத்திலும் அலெக்ஸில் சீட்டு கட்டினோம்..ஒரு காஃபி பில்டர் கிடைத்தது கணிசமான விலையில்!
      ஒரு தலைகாணிக்கு இரண்டு, மூன்று குழந்தைகள் சண்டை போட்டுக் கொள்வோம்..வலு குறைந்தவனிடமிருந்து வலுக்கட்டாயமாய் தலைகாணி பிடுங்கப் படும்..ஆனால், பாதி ராத்திரியில் அந்த குழந்தை இவனிடமிருந்து தலைகாணியை நைசாய் எடுத்து, தன் தலையில் வைத்துக் கொள்வான்!
      வெள்ளிக்கிழமை ஆண்டார்வீதியிலிருந்து, மலைக் கோட்டை ..திருவானைக் காவல் என்றெல்லாம் நடந்து போயிருக்கிறோம்..இன்று பக்கத்தில் உள்ள கோவிலுக்குக் கூட போக முடியாமல் நெட்டில் புதைந்து போய் இருக்கிறோம்...
     டபுள் பெட்ரூம்..ட்ரிபில் பெட் ரூம் என்று இன்றைய கால கட்டத்தில் எல்லாருமே (அண்ணா, அம்மா உட்பட) வசதியாகத் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..
     ஆனால், ஒரு தலைகாணிக்கு நாங்கள் ஐந்து பேர் அடித்துக் கொண்ட ஆனந்தம் ..அந்த சந்தோஷம்..வருமா இனி?
      போனது..போனது தான்!!