Tuesday, November 22, 2016

பணம் நீ அப்பா!

குறிஞ்சி....
மலையும்...மலை சார்ந்த 
நிசப்தமான இடம்....
எப்போதாவது பறவைகள் கத்தும்..
சுற்றிலும் குன்றுகள் ....மூலிகைசெடிகள், கொடிகள் ..
அதனால் திக்கெட்டும் கமழ கமழ மூலிகை மணம்!
இயற்கை தன் அழகு அனைத்தையும்,அங்கே கொட்டினார்போன்ற அற்புதமான ஆரண்யம்..
அங்கு கோலோச்சிக் கொண்டிருந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு கணீரென்று ஒரு குரல்!
ஆ....கோலூன்றிக் கொண்டிருந்த அந்த கிழவி தான் பாடிக் கொண்டிருக்கிறாள்..
அதோ...அந்த குன்றின் மீது ஒரு சிறுவன், அரை யணிந்து!
ஆஹா...அவன் முகத்தில் தான் என்ன ஒரு தெய்வீக களை!
அங்கு என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது?
வாருங்களேன்...
போய் பார்ப்போமா?
ஒரு நிமிஷம்...
அதற்கு முன், இதனுடன் தொடர்புடைய சம்பவம் ஒன்று திருக்கைலாயத்தில் நடக்கப் போகிறதாம்...
முதலில் அங்கு செல்வோம்,நாம்!
----------------
திருக்கைலாயம்...
"நாராயண...நாராயண"
என்னது, திருக்கைலாயத்தில் நாராயண நாமமா?
ஆம்...
நாரதர் தான், விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருக்கிறார்...
இறையனாரின் தவம்  அந்த நாராயண ஸ்ம்ருதியில்   கலைய,கண்களை திறந்து பார்த்தார்..
"வா, நாரதா!" 
 கனிவு த்தும்பும் குரலில் வரவேற்றார், எமை ஆளும் ஈசன்!
பரஸ்பர குசல உபசாரங்கள் முடிந்ததும், நாரதர் தம் ஜோல்னா பையிலிருந்து எதையோ எடுத்து,பரமசிவனிடம் பணிவுடன் நீட்ட, உடனே அதை சிவ பெருமான் தன் புதல்வர்கள் இருவரையும் கூப்பிட்டு  கொடுக்க, மூஷிகத்தில் முழு முதற் கடவுளாம் வினாயகன்  செல்ல,  அதற்கு சற்றேறக்குறைய அரை நிமிஷ நேர மட்டில்  எம்பெருமான் இளங்கோ தன் மயில் வாகனத்தில் விருட்டென்று வேகமாக செல்ல.....அவ்வாறு அவர்கள் சென்றது தான் நம் ஊனக் கண்களுக்கு தெரிந்ததே தவிர, அவர்களுக்குள் அங்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை..
அதனாலென்ன...பரவாயில்லை..
தொடர்ந்து அருகில் சென்று அங்கு நடப்பதை கவனிப்போம்,வாருங்கள்..
இப்போது, நம் கண்களுக்கு  திருக்கைலாயம் மட்டுமல்ல..வினாயகப் பெருமானும்,ஆறுமுகப் பெருமானும் தெளிவாகத் தெரிகிறார்கள்..
வினாயகப் பெருமான் நிதானமாக  அந்த கட்டிடத்திற்கு செல்கிறார்...
ஆ..இதென்ன ...வினாயகப் பெருமானை விட இளவலிடம் துடிப்பு அதிகமாக இருக்கிறதே!..
மயிலிலிருந்து மயிலையில், சர்ரென்று இறங்கிய முருகன் அங்குள்ள பேங்குக்குச் செல்ல,அங்கு அனுமார் வாலை விடப் பெரிய கூட்டம்...
இவர் முறை வர, அரை நாள் ஆகி விட அங்குள்ள கேஷியர் இவரிடம் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார்.
"முருகப் பெருமானே..முதலில் தங்களிடமுள்ள ...நாரத முனி தங்கள் தந்தையிடம் கொடுத்த அந்த ஆயிரம் ரூபாயை டெப்பாசிட் செய்யுங்கள்..நாளைக்கு அதை நூறு ரூபாயாக நீங்கள் 'ட்ரா' பண்ணிக் கொள்ளலாம்...இந்தாருங்கள்..pay in slip பிடியுங்கள்  இதை fill up செய்து கொண்டு அந்த கவுண்டரில், டெப்பாசிட் செய்து விட்டு நாளைவாருங்கள்...OK.., next?"
என்று, அடுத்த ஆளை அட்டெண்ட்  பண்ண ஆரம்பித்தார்,அவர்!
கொடுத்த Pay in Slip ஐ தப்பும், தவறுமாய் fill up செய்து கொண்டு  அவர் சொன்ன கவுண்டர்  போய் பார்த்தார், திருமுருகன்.
"முருகா, தங்கள் PAN number?"
"PAN நம்பரா?"
"Permanent Account Number, முருகா!"
"அப்படி என்றால்?"
க்யூவில் பின்னால் நின்றிருந்தவர் முருகனின் தோளை தட்டி சொன்னார்...
"ஐயா, தமிள் கடவுளே, இங்கிருந்து, ஆறு கடை தள்ளி, ஆறுமுகம் அண்ட் கோ ன்னு ஒரு கம்பெனி இருக்கு..அங்ஙன போயி ஒங்க details ஐ கொடுத்தீங்கன்னா, ஆன்லைனில் ஒடனே அவிங்க அப்ளை பண்ணிட்டு ... ஒங்களுக்கு PAN Number அங்ஙனயே 
தருவாங்க...அதை வாங்கி கிட்டுத் தான்  இங்ஙன நீங்க வரணும், போங்க,போயிட்டு வாங்க!"
அவர் அதிர்ஷ்டம்...  PAN Number அடுத்த நாள் தான் கிடைத்தது.
இன்று க்யூ கொஞ்சம் தான், பரவாயில்லை...
தந்தை கொடுத்த அந்த ஆயிரம் ரூபாயை டெப்பாசிட் செய்தார்.
அதற்கு அடுத்த நாள் ஆதிசேஷன் போல நீ.......ளமாக இருந்த க்யூவில் கால் கடுக்க நின்று, பத்து பழைய நூறு ரூபாய் நோட்டுகள் வாங்கி,மயில் வாகனத்தில் மங்கள்யான் ஸ்பீடில் முருகன் கைலாயம் சென்றால், 
அங்கு இறையனார் சரக், சரக்கென்று புத்தம் புது பத்து நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்..
நாக்கில் நுரை தள்ள வியர்த்து, விறுவிறுக்க வந்த முருகனைப் பார்த்து,
" வா....முருகா, வா...நீ வேகமானவன்..பேங்குக்கு சென்று மாற்றிக் கொண்டு வருகிறாய்...ஆனால் உன் அண்ணன் வினாயகன் இருக்கிறானே, அவன் உன்னை விட விவேகமானவன்..அவன், வெகு சுலபமாய் என் பெயருக்கு அவனிடம் கொடுத்த ஆயிரம் ரூபாயை இங்கு பக்கத்தில் உள்ள கைலாசபுரம் போஸ்ட் ஆஃபீசில் மணி ஆர்டர் செய்து விட்டு, முந்தா நாளே தன் வேலையைப் பார்க்க போய்  விட்டான்..அவன், M.O. அனுப்பிய அந்த ஆயிரம் ரூபாயை போஸ்ட் மேன் இப்போது தான் பத்து புத்தம் புதிய தாள்களாக, என்னிடம் கொடுத்து விட்டுச் செல்ல, அதைத் தான், எண்ணிக் கொண்டிருக்கிறேன்...நீயானால், சுத்தமாக இரண்டு முழு நாட்களை வேஸ்ட் செய்து விட்டு வருகிறாய்...."
பரமன் சிரித்துக் கொண்டே சொல்ல,
முருகனுக்கு ரோஷமான ரோஷம்!
கண்கள் இரண்டும் ஜிவ்வென்று சிவக்க...
கோபத்துடன், அரையில் வெறும் கோமணத்துடன், 
மலை மேல் ஏறி விட்டான், குழந்தை!
எவ்வளவு நாள் பசியும், பட்டினிமாக அங்கு கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறானோ?
..........
இதோ...
முதலில் நாம் கண்ட அதே காட்சி!
அமுதினைத் தோற்கடிக்கும் தீந்தமிழில் கணீரென்று ஔவை பாடிக் கொண்டு இருக்கிறாள்..
ஔவை தந்த தமிழினால் கோபம் மறைந்து,சற்றே கண் திறக்கிறான் முருகன்!
அன்பு மணம் கமழும் ஔவை முகத்தை பார்க்க பார்க்க.. அந்த அறுபடை வீடு கொண்டவனின் அழகு முகமும் கொஞ்ச நேரத்தில்,சாந்த ஸ்வரூபம் ஆயிற்று...
 இதோ..ஔவை பாடிய அப் பாடல், மலையில் மோதி எதிரொலிக்கிறது...
"பணம் நீ அப்பா!
ஞான பணம் நீ அப்பா!!
தமிழ் ஞான பணம் நீ அப்ப்ப்..........பாஆஆஆஆ!"
                                   .......சுபம்............




  





Thursday, November 3, 2016

தத்துவ விசாரம்!

ஆராரோ எனை ஆர்ஆர்ஆர்  என்றழைக்க,
ஏஆரார் என்று மற்றுமவர் கூச்சலிட,
'மூவாரே நீரெ'னமூன்று நான்கு பேர் கூவ,
'ஆரடா இவன்?' என எனைநான்  அறிந்திலேனே!
...................
என்னிலே என்னை நான் 
உணர்ந்து  கொண்ட,
வேளையில்,
விண்ணிலே ஒளிருமவ்
விண்மீன் போலாச்சுதே!
மண்ணிலே வந்துதித்த,
மாந்தர்க்கு சாபமாம்..
உன்னிலே உன்னை நீ,
உணராமலிருப்பதே!




கோவை தந்த நட்புகள்!


"ஹல்லோ..யார் பேசறது?"
"ராம மூர்த்தி"
"ராம மூர்த்தின்னா?"
"ஆரண்ய நிவாஸ்!"
"ஆர்.ஆர்ஆரா...ஹ்ஹ்ஹா..சௌக்யமா?"
"சௌகர்யம் சார்...இப்பத் தான்,நம்ம கோபாலகிருஷ்ணன் சார் சொன்னார்...நீங்க வந்திருக்கீங்கன்னு..இது அவர் போன்லேர்ந்து தான் பேசறேன்..அதான்.."
"ரயில் ஏறியாச்சு...அடுத்த தடவை நாம் சந்திக்கலாம்.."
கந்தசாமி சார் எனக்கு பிலாக்கில் அறிமுகம்...'சாமியின் மன அலைகள்' என்ற பிலாக்கில்  ஹ்யூமராக எழுதுபவர்...அதிலும் அவருடைய டைமிங் காமெடி மாஸ்..'நமக்கு நாமே திட்டம் மாதிரி,சுயமாக ஹேர் கட் செய்து கொள்வது எப்படி?' என்று படு அசத்தலாக எழுதியிருக்கிறார்..
பொதுவாக, Face Bookல் எழுதுவது ஒரு மாதிரி...Blog ல் எழுதுவது வேறு மாதிரி...Face Book ல் wide readability கிடைக்கும்..ஆனால், ஒவ்வொருவருக்கும் நெருக்கம் இருக்காது..ஹலோ..ஹலோ...தான்..
ஆனால், Face Book அளவிற்கு Blog கிற்கு Mass attraction கிடையாது..இருந்தாலும், அதில் இருக்கும் நட்பு ஆழமாக இருக்கும்...என் அனுபவம் இது!
    சார், அக்ரிகல்ச்சர் காலேஜ்ல ரிடையர்ட் ப்ரபஸர்..மண் வள பரிசோதனையில் டாக்டரேட்...இஸ்ரேல்,நெதர்லாண்ட்ஸ்,யுஎஸ், பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுக்கு சென்றவர்...
எளிமையானவர்....அதற்கும் மேல் அன்பானவர்!
    அடுத்த முறை கோயம்புத்தூர் சென்ற போது, கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணையர், கந்த சாமி சார் இவர்கள் இருவரையும் சந்திப்பதற்காக ப்ளான்.கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணையர் "வாங்கோ!" என்றார்...      
நண்பர் கோபால கிருஷ்ணனிடமிருந்து கந்தசாமி சார்  நம்பர் வாங்கி பேசினேன்..'ட்ரைவிங் ல இருக்கேன்,அப்புறம் பேசறேன்' என்றார்..அப்புறம் பேசினார்..
"எத்தனை நாள் இருப்பீர்கள்?"
"நாளைக்கு கிளம்பறேன்.."
"நோ சான்ஸ்!"
இது தான் எங்கள் உரையாடல்!
நண்பர் கிருஷ்ண மூர்த்தி கிருஷ்ணையரைப் பார்த்தேன்...முன் பின் தெரியாத எங்கள் மேல் அவருக்குத் தான் என்ன ஒரு வாத்ஸல்யம்...சுவையான அனுபவம்  அவரை சந்தித்தது..அவர் அஹத்தில் மாமி கொடுத்த டீ  அதை விட சுவையானது! இன்னமும் நாவில் இனிக்கிறது...மறுபடியும் அவரை பொன்னி டெல்ட்டாவில் மல்லாடி கச்சேரியில் பார்த்தது, மறக்க முடியாத அனுபவம்...நொச்சியத்தில் நடந்த சண்டி ஹோமத்திற்கு கோவையிலிருந்து வந்திருக்கிறார், மனிதர்! மஹாப் பெரியவாள் மீது, அளவு கடந்த பக்தி, அவருக்கு. நொச்சியம் எனக்கு வெகு சமீபம்..'க்ஷத்ராடன பாவியாகி விட்டோமே'என்று என் மீது எனக்கே வெறுப்பு...இவரை, நம்ம கோபால கிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்..அவரும் தம் பிலாக்கில் மஹா பெரியவர் பற்றி படிப்பவர் மனம் கசிய எழுதியிருக்கிறார்..இருவரையும் பேச விட்டு மஹாபெரியவாளின் காருண்யத்தை காது குளிர கேட்க வேண்டுமென ஒரு ஆசை ...ம்..பார்ப்போம்!
இந்த முறை கோவை வந்த போது கந்த சாமி சாரைப் பார்ப்பதாகப்   ப்ளான்..பயந்து கொண்டே தான், போன் பண்ணினேன்..'நான், எதிர்பார்த்தது போல, ட்ரைவிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுவோம்' என்றார்.
செல் போன் அடித்தது, மாலையில்..
"ஹலோ...கந்த சாமி பேசறேன்..கோவையில் எத்தனை நாள் இருப்பீர்கள்?"
"வெள்ளிக்கிழமை வரை!"
"அப்ப நாளைக்கு நாம மீட் பண்ணுவோம்...அன்னபூர்ணாவில் ப்ரேக் பாஸ்ட்..எங்கே தங்கி இருக்கீங்க?"
"தாமஸ் பார்க் பஸ் ஸ்டாண்ட் பக்கம்!..நாம் வேணா வழி சொல்லட்டுமா?"
"வேண்டாம்...எனக்கு தெரியும்..கூகுள் மேப் சர்ச் பண்ணி ஷார்ப்பா எட்டரைக்கு வந்து விடுவேன்"
வாக்கிங் போய் விட்டு, நாங்கள் எட்டு மணிக்கு வரும் போது, கெஸ்ட் ஹவுஸில் அவர் எங்களை வரவேற்றார்.
Punctuality maintain பண்ணுவது பெரிய விஷயம்! அதற்கு அரை மணி நேரம் முன்பு. வருவது ..மேன்மக்களால் மட்டுமே சாத்யம்!
அவருடனான சந்திப்பு இனிமையானது..
அவருக்கு கர்னாடிக் ம்யூஸிக் பிடிக்கும்....மதுரை மணி,ஆலத்தூர் ப்ரதர்ஸ். பிடிக்கும்..நிறைய தேவன் கதைகள் படித்தது தான் தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு அடித்தளம் என்றார்..அவருடைய பெண் சிங்கப்பூர் போயிருக்கும் போது, தனக்கு வாங்கி வந்த pen drive பற்றிக்கூறினார்...அவருடைய Technology updation எனக்கு உண்மையிலேயே ப்ரமிப்பை தந்தது...எல்லாவற்றையும் விட அவருடைய படு ஸ்டைலான ட்ரைவிங்...வெகு confident...வெகு நேர்த்தி!
விடைபெறும் போது அவர் சொன்னார்...
".....ப்ரெண்ட்ஸ் நிறைய பேர்  'துபாய்க்கு வா'ங்கறாங்க...போணும்னு ஆசையாகத் தான் இருக்கு...ஆனா , 'உனக்கு இந்த கோவையை சுற்றி இருபது கிலோ மீட்டர் போக வரை தான் விஸா..'ன்னு என் பொண்ணு ஆர்டர் போட்டிருக்கா" 
  சொன்ன கந்தசாமி என்ற அந்த இளைஞர்  வயது எண்பத்திஇரண்டு!
   .............,

Friday, August 26, 2016

இப்படி ஒரு விபரீத ஆசை எனக்கு!

அன்பானவர்களே!
முதலில் ஒரு family tree construct செய்ய ஆசை.
பார்ப்போம்....
அதற்குள்  இன்னொன்றும் தோன்றியது...
ஆனந்தரங்கம் பிள்ளை தமிழ் போல இப்படி ஒரு டாக்குமெண்ட் நாமே பண்ணினால் என்ன என்று?
அதாவது,
பத்தொன்பது,இருபதாம் நூற்றாண்டுகளில், நம் நினைவில் நிற்கும்/நீத்தார் உறவு பற்றிய சில சுவையான நிகழ்வுகளை ஒரு சிறுகதை வடிவில்  செய்யலாமே...மொத்தம் எட்டு கேரக்டர்ஸ் .அப்பா வழியில் எட்டு, அம்மா வழியில் எட்டு என்று இரண்டு சிறுகதை தொகுப்புகள்.
அதுவும் அந்தந்த கேரக்டரே narrate செய்வது போல...(உதாரணத்திற்கு  ஆங்கரை தாத்தாவே நம்மோடு பேசுவது போல) 
அதில், ப்ரைவசி வேண்டாம். குடும்ப ரகசியம் வேண்டாம்...அந்தரங்கம் புனிதமானது. அது வழிவழியாய் மனத்தளவில் ஒவ்வொருவராய் எடுத்து செல்ல வேண்டிய ஒன்று! அதை தவிர அந்த உறவினர் பற்றி பெருமையாய் பேசப்படும் சந்தர்ப்பங்கள் எத்தனை? எத்தனை? 
அந்தந்த காலத்து சம்பவங்கள்...ஊடே அந்தந்த காலத்து அரசியல் நிலை...(கல்கியின் தியாகபூமி போல!) சுவை கூட்ட கொஞ்சம் கற்பனை கலந்து..exaggeration  என்பது இல்லாமல்...
இதில் photo இருக்காது...ஆனால், அந்த கேரக்டர் அச்சு அசலான  சாயலில் சித்திரமாக இருக்கும். 
இதில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இருக்கிறது. உங்களுக்கு அந்தந்த முன்னோர்களுடன் நீங்கள் feel செய்த சம்பவங்களை என்னுடைய/Lakshminarayanan Rajagopalan இன்பாக்சில் அனுப்பினால் document செய்து கொள்கிறோம்.
'எந்த ஊரில், எந்த நாளில், எங்கு காண்போமோ?' என்கிற ஏக்கத்தை உடைத்து தூள் தூள் ஆக்கி விட்டதே  இன்டர்நெட்! ஆகவே நம் முந்தைய தலைமுறை பற்றிய நம் அனுபவங்களை நாம் அடிக்கடி share செய்து கொள்ளலாமே!
அத்தனை சிறுகதைகளையும், Father related/Mother related family gathering ஒன்று நடத்தி, எல்லாருடைய wishes உடன்(நமக்கு தெரியாமல் ஏதாவது விட்டுப் போனது இருந்தால்)சேர்க்கலாம். Private Circulation ஒவ்வொரு குடும்பத்திற்கும், சிறுகதை வெளியிட்ட பிறகு பத்து,பத்து பிரதிகள்!
இப்போது, எனக்கு ஐம்பத்தொன்பது வயது ஆகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் நமது சென்ற தலைமுறையினர் இருக்கிறார்கள்..இந்த யக்ஞத்தில் அவர்களுடைய participation நிச்சயம் நமக்கு வலு கூட்டும் என்று நம்புகிறேன்.
இந்த ப்ராஜெக்ட் குறைந்தது மூன்று வருடங்களாவது இழுக்கும்.
இப்போதிருந்து Data collect செய்து கொள்ளலாம்...
இந்த ப்ராஜெக்ட்க்கு இன்ஸ்ப்பிரேஷனே நண்பர் Narayanan Bala அவர்கள் அவயாம்பா என்ற என்னுடைய முற்றிலும் கற்பனையான சிறுகதைக்கு கொடுத்த உணர்வு பூர்வமான விமர்சனம் தான். மிக்க நன்றி Narayanan Bala sir.
அப்புறம் யோசித்துப் பார்த்ததில், private circulation எதற்கு? Public circulation சிறுகதைகளே வெளியிடலாம் என்று தோன்றியது. ஒவ்வொருவர் வீட்டிலும் அவயம்,அம்புஜம்,கிட்டு,சீனு,ராமையா,ஶ்ரீமதி,ப்ரணதார்த்தி,குஞ்சம்மா என்று நிறையவே இருப்பார்கள்.அவரவர் பெயருக்கேற்றார் போல அவரவர் குணங்கள்!
உதாரணமாக  எனக்கு பட்டுப் பெரியம்மா...உங்கள் குடும்பத்தில் அது பட்டு அத்தை, பட்டு மாமி,பட்டு அக்கா என்று இருக்கலாம்...மேலும் பட்டு என்ற பெயரே ஒரு குடும்ப சுமைதாங்கியாக...ஒரு தியாக சீலராக...அன்பே ஓர் உருக் கொண்டாற் போல ...நம் பெரும்பாலான குடும்பங்களில் generalise ஆகவில்லையா Gurumurthy
எதற்கு இவ்வளவு ப்ப்ளிக்காக இதை நான் சொல்கிறேன் என்றால், நம்மில் நிறைய பேருக்கு எழுத வருகிறது. ' நம் தாத்தா, பாட்டிகளை பற்றி நாம் எழுதியதை நம்முடைய கொள்ளுப்பேரன், கொள்ளு பேத்தி என்று நாளைக்கு யாராவது ஒருவர் படிக்க மாட்டார்களா?
தளிர்கள்  என்றாவது ஒரு நாள் தம்தம் வேர்களை பார்க்காதா?
நாம் விட்டுப் போகும் இத்தகைய 'பொக்கிஷங்கள்' இன்றைய எலக்ட்ரானிக்ஸ் சூழலில் நமக்குப் பிறகு ஒரு இருநூறு,முன்னூறு வருடங்களாவது பயணிக்காதா?'
என்கிற பேராசை தான்!



Friday, July 29, 2016

பல்லுக்குப் பல்! சொல்லுக்கு சொல்!!



வாசல் கேட்  க்ரீச்சிட்டது ...
வந்தவன் ராம்குமார் ...
ராம் குமாரே தான்!
அவர் பெண் ஸ்வேதா தான் அவனை அறிமுகப்படுத்தியது.
ராம்குமார் ஸ்வேதா ஆபீசில் அவளோட வேலை  பார்க்கிறவன்..
In fact அவளோட டீம் லீடர்...
படு ஸ்மார்(த்த)(ட்டான) பையன்!
சொந்த ஊர் திருவிடை மருதூர்......
ஆரவாமுதன் வலங்கை மான்.
ஐயங்கார்!
வாரம் தவறாமல் இரண்டு தடவை வந்து விடுவான். வரும் போது போன் செய்து விட்டுத் தான் வருவான். நல்ல குணம்.செவ்வாய் கிழமை,வெள்ளிகிழமை 
ஏழு மணிக்கு அவன் வருவதை வைத்து செல்லில் டைம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அவ்வளவு பங்க்சுவல். அதைப் போல, எட்டரை மணிக்கு 'டின்னர் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று ஆன மட்டும் சொன்னாலும் கேட்க மாட்டான். 'அம்மா பசியோடு காத்துக் கொண்டிருப்பாள்' என டாணென்று கிளம்பி விடுவான்.
வழக்கமாக அவனுக்காக ஆரவாமுதன் மூன்று பட்டணம் பகோடா ப்ளஸ் டிக்ரி காபியுடன்
காத்துக் கொண்டிருப்பார்..
இரண்டு மாதங்களாக  அவனைக் காணோம்!
அவரும் ஸ்வேதாவை கேட்கவில்லை. எங்காவது on sight போயிருப்பான்! 
ஆனால், அவன் வராதது தான் அவருக்கு எதையோ பறி கொடுத்தாற் போல இருந்தது.
இன்று அத்தி பூத்தாற் போல அவனிடமிருந்து போன்!
இதோ அவனே வந்து விட்டான்..அவருக்கு ஏக சந்தோஷம்!
இன்று அவனுக்காக சமையல் கார மாமியிடம் சொஜ்ஜி, பஜ்ஜி ஸ்பெஷலாக செய்ய சொல்லி இருந்தார்.
பஜ்ஜியும்,சொஜ்ஜியும் சூடாக இருந்தது.
ஆனால்,வந்த ராம் குமாரோ அதை விட சூடாக இருந்தான்!
வந்தவன் சேரில் உட்காரக் கூட இல்லை!
"இரண்டு மாசமா, நான் வரலியே,,ஏன் வரலைன்னு கேட்கக் கூட ஒங்களுக்கு தோணலை?"
"எங்காவது பெல்ஜியம்,ஹாலண்ட்னு ஆபீஸ் வேலையாய் டூர் போயிருப்பாய்..முதல்ல உட்காரு அப்பா.."
"ஸ்வேதா ஏதாவது சொன்னாளா?"
"அவளிடம் நான் எதுவும் கேட்கவில்லை!"
"ரெண்டு மாசமா நான் இங்கே வந்துண்டிருக்கேனே..எதாவது பேசி இருக்கேனா, நான்?"
"நீ பேசலை..நான் தான் எதாவது பேசிண்டு...இப்ப அதுக்கென்ன? வா..உட்கார்,,,சூடா பஜ்ஜி, சொஜ்ஜி உனக்காக காத்துண்டு இருக்கு..வா, சாப்பிடு.."
"அது இருக்கட்டும், நான்...."
"நீ எதுவும் பேச மாட்டே..'உம்'னு கேட்டுண்டு இருப்ப..நான் தான், டிபன்ஸ் அக்கவுண்ட்ஸ்ல அந்த காலத்துல,நடந்த கதை எல்லாம் சொல்லிண்டு இருப்பேன்..மீரட் ல, நான் இருக்கறச்ச, நாலாவது வெள்ளிகிழமை பேங்க்ல விதட்ரா பண்ணின பணம், திங்கள் கிழமை சாலரி டிஸ்பர்ஸ்மெண்டுக்கு வரும்..லெட்ஜர் போஸ்டிங் திங்கள் கிழமை ஆகி இருக்கும்...ஆனா,பாஸ்  புக்ல வெள்ளிக் கிழமை என்ட்ரி! கேட்டால், போஸ்டிங்  போட மறந்துடுச்சும்பான்...அது எப்படி இரண்டு மாசத்துக்கொரு தடவை மறக்கும்?
அந்த சனி,ஞாயிற்றுக் கிழமை அக்கவுண்டண்ட்டும், கேஷியரும் ஜோடி சேர்ந்துண்டு, அந்த கேஷை ரொட்டேஷன்  விட்டு, கொஞ்சம் காசு பார்த்ததை நான் கண்டு பிடிச்சேன் ..அதுக்கு எனக்கு பரிசு  ஜபல்பூர் ட்ரான்ஸ்பர்....ஜபல்பூரில.."
"போதும்...நிறுத்துங்க...இந்த ரெண்டு மாசமா நான் உள்ளூரில தான் இருந்தேன்.."
"பின்ன ஏன் இங்கே வரலை?"
"ரெண்டு மாசம் முன்னால நான் ஸ்வேதாட்ட ப்ரபோஸ் பண்ணினேன்.."
"அடப் பாவி!"
நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயற்சி செய்தார்,ஆரவாமுதன்!
"பொறுங்க ....ஆனா, அவ என்னை ரிஜக்ட் பண்ணிட்டா...அதனால.."
"அதனால?"
"செவ்வாய் கிழமையும், வெள்ளிக் கிழமையும் இனி மேல் ரொட்டீனா இங்கே வருவேன்.."
"வந்து?"
"எப்ப ஒங்க பொண்ணு என்னை வேண்டாம்னு சொல்லிட்டாளோ, அதனால இனிமேல் என் டர்ன்!"
"அப்டீன்னா?"
"இங்கே வந்து நான் இனிமேல் எங்க ஆபீஸ் ப்ரதாபங்களை ஒங்க கிட்ட அளந்து விடுவேன்...நீங்க எப்படி நான் அப்ப 'உம்' 
கொட்டினேனோ...அது போல  இனிமேல் நீங்க எனக்கு 'உம் ' கொட்டணும்!"
............





Monday, July 25, 2016

தொழில் தர்மம்!

"யோவ்..நில்லு!"
"நிக்கறேன்"
"இன்னா...அந்த பக்கத்தில இருக்கோங்கற தெனாவட்டா?"
"ஒம் பக்கத்தில் நின்னாலும் அப்டி தான் இருப்பேன் ராஜா..என் இயல்பு அது!"
"மவனே, ஓவரா பேசற நீ, பைல என்ன?"
"ஆனந்த விகடன்,மங்கையர் மலர்,குமுதம் ஜோதிடம் "
"யோவ்...பர்ஸ்ல எவ்ளவ் வச்சிருக்கே?"
"பஸ்சுக்கு காசு...காலைல சில்லறை இல்லைன்னு கண்டக்டர் கொடுத்த இரண்டு ஹால்ஸ்"
"கய்தே....கிண்டலா பண்ற? ..பர்ஸ்ல துட்டு  எவ்ளவ் வச்சிருக்கேன்னு கேட்டா.."
"அதான் சொல்றேன்ல....மூணு க்ரெடிட்  கார்டு, ரெண்டு டெபிட்  கார்டு இருக்கு...மொத்தம் ஆறாயிரம் ரூபா நெட்டா சம்பளம் க்ரடிட் ஆச்சு..ஆயிரம் ரூபாய் பேங்க் கொள்ளைகாரனுக்கு மினிமம் பேலன்ஸ் வச்சுட்டு,இல்லாட்டி அவன் அம்பது ரூபா டெபிட் பண்ணிடுவான்...பாக்கி ஐயாயிரம் ATM ல இருக்கு, எடுத்துக்க"
"சாவு கிராக்கி...மோதிரம் செயின்னு எதனாச்சும் ..."
"அல்லாத்தையும்  safest safety lockerல அதாம்பா அடகு கடைல வச்சிருக்கேன். அவனுக்கு இருக்கற insurable interest பேங்க் காரனுக்கு கூட கிடையாது"
"இன்னா கஸ்மாலம்  ஸொல்ற நீயி?"
"தோ பாரு..ஒனக்கு ஒரு எழவும் புரியாது..பக்கத்துல எதனாச்சும், ATM இருக்கா..வா..எடுத்து தரேன்..எனக்கும் பஸ்சுக்கு டைம் ஆச்சு...ஒன்னோட பேசிண்டு இருக்க எனக்கு நேரமில்லை!"
"ஓங்கார்டு தானா...அது, இல்லாங்காட்டி.."
"மெய்யாலுமே எங் கார்டு தான்பா, ஒனக்கு கொடுக்கறதுல எனக்கு என்ன இன்ட்ரஸ்ட்னு கேக்கறியா? சம்பள பணம் திருட்டு போச்சுன்னு ஒரேடியா நிம்மதியாவாவது இருப்பேன்.."
"இன்னாபா ஸொல்ற நீயி....ஒன் சம்பளம் எவ்ளவ்? எப்டி குடித்னம் நடத்துறே?ஆளை பார்க்க ரீஜண்டா வேற கீற!"
"அப்டீ கேளு வாத்யாரே! எனக்கு மாசம் லட்சத்து இருபதாயிரம் ரூபா..சம்பளம் வர்ரது!"
"அடேங்கப்பா.."
"பதறாதே..சொச்சத்தையும் கேளு..அதுல வருமான வரி இருபதாயிரம் எடுத்துட்டு தான் பாக்கி தரான்..அப்புறமா பிஎப் பத்தாயிரம்,க்ரடிட் கார்டுக்கு பதினைஞ்சாயிரம்,கார் லோன் முப்பதாயிரம், வீட்டு EMI முப்பத்தைஞ்சாயிரம்,போன மாசம் வாங்கின ஹேண்ட் லோன் நாலாயிரம் ரூபா போக பாக்கி சம்பளம் ஆறாயிரம் ..இதுல மாசம் பூரா ஓட்டணும்..ஒரு wife மூணு பசங்க....புலி வாலை புடிச்சிகிட்டு இருக்காப்ல தான் ஒவ்வொரு நாளும் போறது!"
"யோவ்..நானே கைல ரொக்கமா பத்தாயிரம் வச்சிருக்கேன்யா"
"அப்ப எனக்கு ஐயாயிரம் தாயேன்..சும்மா நீ ஒண்ணும் தர வாணாம்..வட்டி எடுத்துக்க..அடுத்த மாசம் தந்துடறேன்"
"வாணாம்...ஒன்னயப் பார்த்தா தான் பாவமா கீது வாத்யாரே! இந்தா அல்லாத்தையும் நீயே வச்சுக்க..திருப்பி தர வாணாம்..நான் திருடன்...சமுதாயத்தில ரொம்ப கீள இருக்கற ஆசாமி..நா, எப்டியாவது பொளைச்சுக்குவேன்.."
"உன்னைப் பார்த்தா தான் பாவமா இருக்கு, எனக்கு ! ஒங்கிட்ட காசு வாங்க முடியாத ...கௌரவம் தடுக்கற ....நடுத்தர வர்க்கம்பா நான். ஆமா, திருடனா நீ?அநியாயத்துக்கு இவ்வளவு நல்லவனா இருக்கியே..இப்படி வரவன்,போறவன்...எங்கள மாதிரி ஆபீஸ் காரங்க கிட்ட, திருடின காசை கொடுத்துட்டு அம்போன்னு இருந்தா, நீ எப்படி அப்பா பொழைக்க முடியும்? உங்க வீட்ல எப்படி அடுப்பெரியும்?"
"அதுக்காக? தொளில் தர்மம்னு ஒண்ணு இருக்கில்லே? திருடனா இருந்தாலும்  அத்த நான் மீற முடியுமா?"
"ஆமாம்..ஒம் பேரு!"
"அந்த களுதைய இப்ப எதுக்கு கேட்கறே நீயி?"
"சும்மா சொல்லு...நா தெரிஞ்சக்கறேனே ..உன் பெயரை!"
"கிஞ்சித்தும்பாங்கபா நம்மள! பக்கிரி புள்ள கிஞ்சித்து..ப.கிஞ்சித்து!"
................



                          













Sunday, July 24, 2016

தத்வ ம(ச்)சி!


டி.வி.ல வர்ற வெளம்பரங்க அல்லாத்தையும் பாருங்க....உத்து உத்து கவனிங்க....ஆனா, எதையும் நம்பி ஆர்டர் பண்ணாதீங்க!
ஆர்டர் பண்ணினீங்க.....
அம்புட்டு தான்!!
உதாரணத்துக்கு ஒண்ணு!
ஓல்டு ஏஜ் பேரடைஸ்!
தனி தனி ஊடுங்க......காமன் டைனிங் ஹால்.....ரிச் வெஜ் மீல்ஸ்...ரீடிங் ரூம்....பிட்னஸ் பார்க்...
கர்னாடிக் ம்யூசிக்.....கம்யூனிட்டி சென்டர்....டெம்பிள் விசிட்...டாக்டர் விசிட்...வீணை, தவில், தம்புரா...ப்ளூட்டு...புல்லாங்குழல்..
அல்லாமே, வெறும் அறுபது லட்சம்னு தான்னு சொல்லி ஒங்க காசை அல்லாத்தையும் புடுங்க ட்ரை பண்ணுவாங்க...
அங்ஙன தான் நாம உஜாரா இருக்கணும்!
அதுக்கு பதிலா...
LKG,UKG போற பச்ச மண்ணுங்க...அத்த கூட்டிட்டு போற தாய்மாருங்க...ப்ளஸ் டூ பசங்க...காலேஜ் கேர்ள்ஸ், ஆபீஸ் கோயர்ஸ், நடுத்தர வயசு...இப்டி அல்லாரும் கலந்து கட்டி இருக்கற இடத்தில வூட்டை வாங்கி போடுங்க...
வாள்க்கை லவ்லியாவும், லைவ்லியாவும் போகும்!
நான் வடக்கு ஆண்டார் வீதில இருந்தப்ப, ஜனங்கலாம் கலந்து கட்டி இருந்ததுங்க..
எங்க க்ரூப் படிச்சு வேலை வெட்டி இல்லாத பட்டதாரிங்க ஒரு ஆறேழு பேரு அப்படியே, ஆண்டார் வீதி நெ.1 
வீட்டுக்கு ஒரு க்ரூப்பா போவோம்..
அடுத்த அஞ்சு நிமிஷத்துல அங்க நம்ம போஸ்ட் மேன் வருவாரு...அவரு வூட்டுக்கு வரதுக்கு நாளியாகும்...நாம இங்ஙன ஆண்டார் வீதி மொகணை போனா, 'மாடும் மேச்சா மாதிரி ஆச்சு..மச்சின்னுக்கும் பொண்ணு பாத்தா மாதிரி ஆச்சு'ன்னு மல்டி பர்ப்பசா வேலை நடக்கும்..
எங்க க்ரூப்பை பார்த்ததும், "தம்பிங்களா, நாளைக்கு ஒங்களுக்கு ஆர்டர் தரேன்..என்று பாசிட்டிவ் வாக சொல்லிட்டுப் போவாரு, அவரு வழக்கம் போல..
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வரவில்லை என்பதற்காக, disappointment ஆகாமல், ஆபீசுக்கு லொங்கு லொங்கு என்று பின்னங்கால் பிடறியில் பட ஓடும் அக்காகளுக்கு 'டாடா'காண்பித்து விட்டு, அப்படியே சங்கரம் பிள்ளை ரோடு வந்தால், அன்ன தான சத்திரம் வரும்...அங்கு எனக்கு கொஞ்ச நாள் கழித்து, ஒரு விபத்து...இன்று வரை எனக்கு இருக்கும் ஊமை காயங்கள்...இதை தவிர,  'காற்றில் இணை கையை தூக்கிக் கொண்டு வர, அதனை அப்படியே கன்னத்தில் வாங்கும் கலை'யை எனக்கு கற்றுக் கொடுத்த அஸ்திவாரம் அது என நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்...அதனை தனிப் பதிவாக பிறிதொரு சமயம் எழுதுகிறேன்...
   எங்கே விட்டேன்...ஆ..சங்கரம் பிள்ளை ரோடு..அங்ஙன சமயபுரம்,மணச்ச நல்லூர்,லால்குடி,ஜீயபுரம் ஊர்களிலிருந்து SR காலேஜ் வரும் பெண்களுக்கு வலிப்பு காட்டி விட்டு,பிறகு அப்படியே பட்டர்ஒர்த் ரோடு, வடக்கு ஆண்டார் வீதி உள்ளூர் பெண்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு வீடு வந்து படுத்துக் கொண்டு டிஃபன் சாப்பிடுவோம்..(ஊட்ல 'வேலை வெட்டி இல்லாம, உட்கார்ந்துண்டு சாப்பிடறது பாரு'ன்னு யாரும் நம்மள சொல்லக் கூடாது, அதான்!)
அப்ப எளுதின கவிதை ஒண்ண வாசிக்கறேன், கேளுங்க..
        பட்டத்தை 
        பறக்க விட்டு,
        பரதேசி போல்,
        முடி வளர்த்து,
        பக்கவாட்டில்,
        கிருதாவை,
        பாங்குடனே,
        வளர்த்து விட்டு,
        இஞ்சி தின்ற 
        குரங்கு போல்,
         எப்போதும் முகம் 
        தொங்கி,
        கடை வீதி,
        நடந்து சென்றால்,
        ஜவுளி கடை 
        பொம்மை கூட,
        சட்டென,
        திருப்பி கொள்ளும்!
சமீபத்தில் நான் unemployed graduate ஆக இருக்கும் போது  திட்டு வாங்கின PU படித்த இளஞ்சிட்டு ஒன்றை எதேச்சையாக சந்தித்தேன்...
       தலை நரைத்து, விந்தி விந்தி நடந்து உடம்பு எக்கசக்கமாய் ஊதிப் போய் இரண்டு டிபன் பாக்சுடன் காமகோடியில் Lkg, ரெண்டாங்க்ளாஸ் படிக்கும் பேரன், பேத்திகளுக்கு ஊட்டி விட போய் கொண்டிருந்தாள்..
     'இன்னும் தாத்தா ஆகவில்லை' என்று தோள்களை குலுக்கிக்கொண்டு நடந்தேன்.
எதற்கு இவ்வளவும் சொல்கிறேனென்றால், அன்று நாங்கள் ..அன்றென்ன இன்றும் பலதரப்பட்ட மனிதர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
அத்த விட்டுட்டு, கரன்சியால காது குடையற வசதி வந்தால் கூட ..அங்ஙன..அதாங்க அந்த old age segment ல போய் மாட்டிக்காதீங்க!
வாள்க்கை காத்து போன பலூன் போல புஸ்ஸுனு போயிடும்!
ஏதோ,இன்னிக்கு ஒங்க எல்லாரும் இத்த சொல்லணும்னு தோணிச்சு!
அம்புட்டு தான்!
வா......ரே.....ன்!!

Saturday, July 23, 2016

பழிக்குப் பழி!

மெய்ஞானம் கண்ட குருவானவர் மெள்ள நடந்து கொண்டிருக்க, சீடர்கள் அவரை மௌனமாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்...
ஆறு ஒன்று குறுக்கிட்டது..
குரு நீந்தி கொண்டிருக்கிறார்...
சீடர்கள் தொடர்கின்றனர்...
அப்போது...
'என்னை காப்பாற்றுங்கள்'...
தீனமாய் ஒரு குரல் ..
அழகிய இளம் பெண் ஒருத்தி ஆற்றில் மூழ்கி கொண்டிருந்தாள்..
மனதை கல்லாக்கிக் கொண்டு குரு நீந்தி கொண்டிருக்க, சீடன் ஒருவன் அந்த பெண்ணை தன் முதுகில் தூக்கிக் கொண்டு, கரை சேர்த்தான்...
ஏகத்துக்கு தண்ணீர் குடித்து உப்பிப் போயிருந்தாள் அவ்வழகிய இளம் பெண்..
பக்கத்தில் ஒரு பாறையில் அவளை மல்லாக்க கிடத்தி, வயிற்றிலும்..மா..
தகுந்த முதலுதவி செய்து, திரும்பி வந்தான் அந்த சீடன்...
ஒரு வாரம் கழித்து குரு மெலிதான குரலில் அவளைப் பற்றி கேட்க, சீடன் சொன்னான்..
"குருவே, இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறீர்கள்?"
இதுவல்ல கதை!
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகி இருக்கும்..
இப்போதும் குரு நடந்து கொண்டிருக்கிறார்..
சீடர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்..
ஒரு அசந்தர்ப்பமான இடத்தில் குருவின் எதிரில் அவருடைய பூர்வாசிரம வூட்டுக் கார அம்மாள் 
எதிர்பட்டாள்.
"இன்னாய்யா...ஒன்ன எங்கெல்லாம் தேடறது?"
நிராயுதபாணியாக குரு நிற்க, அவருடைய உத்தரீயத்தை கோர்த்து பிடித்தாள் அவள்.
குருவின் முகத்தில் ஈயாடவில்லை..
"சன்யாசி ஆனால், தப்பிச்சுடலாம்னு பார்த்தியா?"
கலங்கி போய் நின்றார்,குரு!
"ந்தா...ஆறு மாச ஊட்டு வாடகை பாக்கி ஆறாயிரத்தை குடுத்தா தான் நான் உன்னைய இங்கேர்ந்து போக விடுவேன்"
ஈவு இரக்கமற்ற அந்த House Owner  உத்தரீயத்தினால், குருவானவரின் கழுத்தை சுற்றிக் கொண்டிருக்க...
ஆறாயிரம் கொடுத்து அவரை விடுவித்தான், ஒரு சீடன்..
ஆம்...அந்த அழகிய இளம் பெண்ணை ஆற்றிலிருந்து காப்பாற்றிய அதே சீடன் தான் இவன்!
தழுதழுத்த குரலில் குரு சொன்னார்..
"இன்னும் ஆறு மாதத்தில் செட்டில் செய்து விடுகிறேன்.."
ஆறு மாதமும் கடந்தது...
சிஷ்யன் இப்போது கேட்டான்.
குரு சொன்னார்..
"இன்னுமா நீ சுமந்து கொண்டிருக்கிறாய்?"
........

Wednesday, July 20, 2016

உள்ளதை சொல்லுகிறேன்...அதிலும் நல்லதை சொல்லுகிறேன்!

ஒரு நீண்ட இடைவெளியில் இருக்கிறேன் ...
நான் அதிகம் புதிய சினிமா பார்த்தவன் இல்லை ....
பார்ப்பதற்குரிய சந்தர்ப்பமும் இது வரை கிடையாது..
இப்போது தான் நிறைய புதிய படங்கள் பார்க்கும் சந்தர்ப்பம்..
வாரத்தில் பத்து பதினைந்து புதிய படங்களுக்கு மேல் பார்க்கிறேன்..
ஒன்று கூட மனதில் பதியவில்லை...
ஒரே குழப்பம்...'இந்த படத்தை தான் பார்த்தாச்சே...இல்லை இது வேற..ஊகூம்...அது தானே இது...' போன்ற குழப்பங்கள்...
ஒரே பார்முலா....ஒரே அடிதடி.....காமெடி போய் ஒவ்வொரு ப்ரேமிலும் காம நெடியாய்...
வயலன்ஸே சர்வ வியாபியாய் ...
கமர்ஷியல்....வசூல் என்பதே ப்ரதானமாய்...
இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு நம் நாட்டில் அறுபது விழுக்காடுகளுக்கு மேல் இளைஞர் தான் இருக்கிறார்கள்...இருக்கப் போகிறார்கள்...அந்த இளைஞர்களுக்கு Mass Visual Media என்கிற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் சமுதாய உணர்வு என்பது துளிக்கூட இல்லாமல், அவர்களால் வசூல்  என்பதை மட்டுமே தாரகமாக கொண்டு எடுக்கப் படும் இத்தகைய மசாலா படங்கள் எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தப் போகிறதோ?
     Mass க்கு பிடித்ததைத் தான் நாங்கள் கொடுக்கிறோம், என்கிறார்கள், அவர்கள்.
    அவர்கள் கொடுத்ததினால் தான் எங்களுக்கு பிடிக்கிறது என்கிறார்கள், இவர்கள்.
    குற்றவாளிகளை விட, குற்றங்களை நியாயப்படுத்துபவர்கள் தான் நாட்டை கெடுக்கிறார்கள் கொஞ்சம் அதிகமாகவே!
    எப்படி ஐயா, சாதாரணமாக ஒரு வீட்டை கட்டும்போது,செங்கல் வைத்து சுவர் எழுப்பும் வேலையை எலக்ட்ரீஷியனும், கதவு, ஜன்னல் போன்ற தச்சு வேலைகளை செய்ய பிளம்பரும் முன் வந்தால் ஏற்றுக் கொள்ள முடியாத நம்மால், கவர்ச்சி,காமெடி,Fight,Romance என்று சகலத்தையும் ஒரு ...ஒரே ஒரு ஹீரோ எடுத்துக் கொள்ளும் போது,எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது?
    ஏதோ எனக்கு தோன்றியதை சொல்லி விட்டேன்...
    ஒரு வழியாய் மனதிலிருந்த பாறாங்கல்லை மெள்ள மெள்ள நகர்த்தியாகி விட்டது..
    அப்பாடா!
......

Thursday, July 14, 2016

சுய விமர்சனம்!

இதற்காகத் தானா ஆசைபட்டாய் இராம மூர்த்தி?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
. கொஞ்ச நாள் யோகா கற்றுக்கொண்டேன்....ஹட யோகி என்று பெயர் வாங்க ஆசை..Preliminaryஐ     கூட தாண்டவில்லை! Practice விட்டு இரண்டு மாமாங்கம் ஆயிற்று!
. உலகமே திரும்பி பார்க்குமாறு ஒரு சிறுகதை...ஒரே ஒரு சிறுகதை ..ஒரு சிறுகதை தான், எழுத ஆசைபட்டேன்...முடியவில்லை!
. பெயருக்குப் பின்னால், அரை டசன் Post Graduate போட்டுக் கொள்ள ஆசைபட்டேன்...கால் டசன் தான் முடிந்தது!
. Flute ல் ரவிச்சந்திரிகா என்னும் ராகத்தை ராகம் தானம் பல்லவியாக ஒரு மணி நேரம் ஸோலோவாக கொடுக்க முயற்சி செய்தேன்...கமகம் சுத்தமாக வரவில்லை...கல்யாண வசந்தம் வர்ணத்தோடு காலாவதி ஆயிற்று,அது!
. வெண்பா எழுத ஆசைபட்டேன்..சீர்கள் இல்லாத தொடையை தட்டிக் கொண்டு, கொக்கரித்துக் கொண்டிருக்கிறது  தளை, இன்னமும்!
. Dabmash ம் பண்ணினேன்...ஊகூம்!
. காமெடி try பண்ணியதில்   அழுகை வந்தது.
. அரிய பெரிய தத்துவங்களை எளிய இன்னிசை தமிழில் கீர்த்தனைகள் எழுதி உத்தம வாக்கேயனாக ஆசை...அப்படியா என்று கெக்கலித்தது உள்ளம்!
. Strategic Management ல் சிகரம் தொட ஆசை. கை வசம் ஒரு டிப்ளமா கூட இல்லை!
. காளிதாசனின் சாகுந்தலத்தை சர்க்கம் சர்க்கமாக அனுபவிக்க ஆசை..ஆனால், வடமொழியில் ஒரு அட்சரம் கூட தெரியாது!
. அண்டா நிறைய ஆசை இருக்கிறது...ஸ்வாசத்திற்கு அடுத்ததாய் ஆர்வமும்  இருக்கிறது...
கற்றுக் கொண்டே இருப்பேன், காலம் பூராவும்!
இப்போது, Caricature Drawing ல் அடியேன்!
..............


Friday, July 8, 2016

மகாமகம் 2016

கும்பகோணம் மகாமகம்....
---------------------------
கும்ப கோணம் மகா மகத்திற்கு, திருச்சி மலைக் கோட்டை தெற்கு வீதி ஜகதீச சாஸ்திரிகளின் பார்யா பட்டம்மாள், வலங்கை மான் பக்கத்தில் மாத்தூர் என்ற கிராமத்திலிருந்து அம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் சுவாமி நாதன், அவர்களது தங்கை கல்யாணி, வந்திருக்கிறார்கள்.....
கல்யாணிக்கு கல்யாணம் ஆகி விளையாட்டு போல, இரண்டு வருடங்கள் ஆகி விட்டது...குழந்தை பாக்கியம்.... ஊகூம்....
குளக்கரையில், சாஸ்திரிகள் சப்த கன்னியருக்கு ஏதோ பரிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்...
அவர் முன் ஏழு கும்பம், அரிசி, பருப்பு,வாழைக்காய், உருண்டை வெல்லம்..என்று நைவேத்தியத்திற்கு 
உரிய பொருட்கள்...பெரிய பெரிய தலை வாழை இலைகளில் வைக்கப்பட்டு...
"நல்லா வேண்டிக்குங்கோ...இந்த குழந்தைக்கு புத்ர பாக்யம் உண்டாகும்"
சாஸ்திரிகள் சொல்ல, மூவரும் மனமுருகி வேண்டிக் கொள்ள, சாஸ்திரிகள் அவர்கள் முகங்களில் கும்பத்திலிருந்து ஜலத்தை, மாவிலையால் தெளிக்க....
......................................
(ஐம்பத்தொம்பது வருடங்கள் கழித்து, மறுபடியும் ஒரு மகாமகம் இந்த 2016 ல்)

"அம்மா...அம்மா..."
"யாரு?"
"ஶ்ரீதர்"
"ஶ்ரீதரா....இப்பத்தான் அம்மா சொல்லிண்டிருந்தா, சினிமா மாதிரி டக்னு வந்து நிக்கறே..இதென்ன கையில்?" - அண்ணா.
"கும்ப கோணம் மாமாங்கம் போயிருந்தேன்...அங்கேர்ந்து தீர்த்தம், கொண்டு வந்திருக்கேன்..கார்த்தால குளிக்கும் போது,ப்ரோக்ஷணம் பண்ணிக்கோங்கோ!"
அம்மா கண்களில் திடீரென கண்ணீர்...
"இந்த மாதிரி ஒரு மாமாங்கம் போது தான் நான், அம்பி மாமா,பட்டுப் பெரியம்மா மூணு பேரும்
அங்கே சப்த கன்னியருக்கு ஏதோ பரிகாரம் செய்ய...."
அம்மா சொல்ல சொல்ல முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்!





Friday, June 24, 2016

சுண்டல்!

பள்ளி கொண்ட பெருமாள் சற்றே கண் விழித்தார்...
"என்ன ஸ்வாமி"
"பூலோகத்தில் யாருக்கும் சிரத்தை இல்லை...பக்தி செய்வோரும் யாரும் இல்லை...."
"எப்படி சொல்கிறீர்கள்? ஊரே அமர்க்களப் படுகிறதே..ஆங்காங்கே ஒவ்வொரு காலனியிலும் சின்ன சின்ன 
கோவில்கள்...யாகம்...சொற்பொழிவு...அமர்க்களம் படுகிறதே ஸ்வாமி!"
"எல்லாம் வேஷம் தேவி..மாலுக்கு போய் வந்ததை பெருமையாக சொல்வது போல் என்னை பக்தி செய்வதை பெருமையாய் சொல்கிறார்கள்..ஒரு..ஒரே ஒரு பக்தனை எப்போது காண்பேனோ?"
பெருமூச்சு விட்ட பெருமாள் கண்ணில் திடீரென ஒரு மின்னல்.
"தேவி...அதோ பார்...ஒலிப் பெருக்கியில் announce பண்ண, எல்லாரும் திமு திமு வென ஓட...அதோ..அங்கே ஒருவன் மெய் மறந்து பக்தி செய்து செய்து கொண்டிருக்கிறானே..வா..வா..போய் பார்ப்போம்"
"என்ன ஸ்வாமி இது...அவர்கள் என்ன announce செய்கிறார்கள்? இவர்கள் ஏன் கபாலி பட முதல் ஷோவுக்கு ஓடுவது போல் முண்டியடித்து இப்படி ஓடுகிறார்கள்..அந்த ஒருவன் மட்டும் ஏன் எந்த ஸ்மரணையும் இல்லாமல், இப்படி மெய் மறந்து பக்தி செய்கிறான்?"
"வா,வா தேவி...சீக்கிரம் போகலாம்,வா"
"சஸ்பென்ஸ் தாங்கவில்லையே ஸ்வாமி!"
"பெருமாள் கோவிலில் சுண்டல் தருவதாக announce பண்ணினதும் மக்கள் எப்படி ஓடினார்கள்...அவன் ஒருவன் மட்டும் எப்படி பக்தி செய்கிறான், பாரேன்..விசாரிக்கலாம் வா!"
இருவரும் அவனை நெருங்கி விட்டார்கள்..
பெருமாளுக்கு ஏக பெருமை!
"பக்தா..உன் பக்தியை கண்டு மெச்சினேன்..சுண்டல் என்று announce பண்ணியும் பதறாமல் நீ மட்டும்...."
பெருமாளின் குரல் தழுதழுத்தது.
"இன்னாது நான் சுந்தர லிங்கம் இல்லை சாரே!"
வலது கையால், வலது காதை பிடித்துக் கொண்டு இடது புறமாக அவன் திரும்ப,
மயங்கி விழுந்தார்,பெருமாள்..
முழிப்பு வந்ததும் நல்ல வேளை...பழசு எதுவும் ஞாபகம் வரவில்லை, அவருக்கு.
அனைத்தும் அறிந்த ஆதிசேஷன் மட்டும் அநிச்சையாய் பெருமூச்சு விட்டான்,அப்போது!

Saturday, June 18, 2016

குரு. உபதேசம்!

"குருவே, இந்த கட்டைக்கு ஒரு சந்தேகம்!"
"ம் ..சொல், சிஷ்யா?"
"எல்லாமே, கர்ம வினைப் படி தானே நடக்கிறது?"
"ஆம், சிஷ்யா..இதிலென்ன திடீரென சந்தேகம்,உனக்கு?"
"பின் தெய்வ பலம் ததேவா என்று ஏன் சொல்கிறார்கள்,குருவே?"
இவனுக்கு புரிகிறார்போல எப்படி சொல்வது என குரு யோசித்தார். உத்தரத்தில் கருந்தேள் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.
"சிஷ்யா, அங்கே பார்..என்ன தெரிகிறது?"
"கருந்தேள் குருவே!"
"தேள் உன்னை கொட்டுகிறது என்பது உன் கர்மா.தெய்வத்தினாலும் உன்னை காப்பாற்ற இயலாது?"
"சரி..அப்ப தெய்வ பலம் என்பது?"
"தேள் கொட்டிய அதே சமயம் உன் வீட்டில் தேள் கடிக்கு மருந்து இருப்பது தான் தெய்வ பலம்!ஸ்வாமி அங்கு கொட்டிய இடம் வலிக்காமல் இருக்க, உன் வீட்டு அலமாரியில் மருந்து வைத்து விடுவார்.."
"அப்ப, தெய்வ பலம் இல்லை என்றால்?"
எரிச்சலுற்ற குரு சொன்னார்:
"தேள் கொட்டுவதற்கு முன்னாலேயே, தேள் கடி மருந்து கொட்டிப் போறது!" 

Friday, June 17, 2016

நித்யாவின் பாட்டு!

என் பெண் நித்யா US ல் இருக்கிறாள்..அவளைப் பார்க்க நாங்கள் போயிருந்தோம்...ஒரு நாள் ஏகாந்தமான மாலை வேளையில் அவள் எனக்காக பாடிய பாடல் இதோ!
https://www.youtube.com/watch?v=4N4nvob6XhM

கோரா கும்பர்

"என்னைத் தொடாதே...உன் விட்டலன் மீது ஆணை...என்னைத்தொடாதே!"
பெண் புலி கர்ஜித்தது..
துளசியை அடிக்க ஓங்கிய கை ஓங்கியபடியே.....
நடந்த காரியம் என்ன சாதாரணமானதா?
கொலை ஐயா...கொலை!
பகவத் ஸ்மரணை இருக்க வேண்டியது தான்...
அதற்காக இப்படியா?
அளவுக்கு அதிகமானால் பக்தியும் நஞ்சாகி விடுமா,என்ன?
நஞ்சாகி விட்டதே........
பெற்ற தகப்பனே தன் பிஞ்சு குழந்தையை கொல்வதாவது?
என்ன ஒரு அக்ரமம்?
ப்ரம்மத்தில் லயித்தவனுக்கு எல்லாமே ப்ரம்மானந்தம்  என்று விட்டு விட முடியுமா,என்ன?
காலுக்கடியில்...ரத்த விளாறாய்...சேறோடு...சேறாய்....சிசு!
பெற்ற தகப்பனின் காலே, காலன் ஆகி விட்டதா?
தூளியில் படுத்துக் கொண்டிருந்த குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு,பக்கத்து கடைக்குச் சென்றாள், துளசி.
வந்து பார்த்தால், குழந்தையைக் காணோம்!
கணவனை உலுக்கினாள்....பர உலகில் பகவத் ஸ்மரணையில் ஈடுபட்டிருந்தவன் இவ்வுலகுக்கு வந்தான்...
எதேச்சையாக கணவன் காலடியில் பார்த்தவளுக்கு........
ஐயோ...என்ன ஒரு அவலம்?
அவள் அங்கு போனதும் குழந்தைக்கு முழிப்பு வந்து விட்டது....அம்மா...அம்மா..என்று கத்திப்பார்த்தான்...அம்மாவைத் காணோம்!
தூளியிலிருந்து குதித்தவனுக்கு,வாசலில் அப்பா இருப்பது தெரிந்தது....
ப்ப்பா...ப்பா...என்று கத்தினான்,குழந்தை...
விட்டல....விட்டல...என்கிற ஸ்மரணையுடன்,கால்கள் மண்ணை பிசைந்து கொண்டிருக்கும் கோராவிற்கு குழந்தையின் குரல் கேட்கவில்லை!
தகப்பன் பக்கத்தில், வந்த குழந்தை மண்குழியில் தவறிப் போய் விழுந்து விட...
இது எதுவும் தெரியாத நிலையில், மண் பாண்டங்கள் செய்ய குழியில் இருந்த மண்ணை கால்களால் பிசைந்து கொண்டு...விட்டலன் ஸ்மரணையில்....ஜடமாய்....
குழந்தையாக வந்தவன் மகானுபாவன்...ஒரு வருடம்...ஒரே வருடத்தில் தன் கர்ம வினை முடித்து,
அதுவும் ஒரு பாகவத சிரோன்மணியின் பாதம் பட்டு...என்று ஆயிரம் வியாக்யானம் கூறலாம்...
ஆனால், தாய்மை என்பது வெறும் மாயை அல்லவே!
பத்து மாதம் சுமந்தவளுக்குத் தானே அந்த பிள்ளையைப் பெற்ற  வலி தெரியும்?
இத்தனைக்கும் காரணம் விட்டலன் என்று அந்த பாண்டுரங்க விட்டலன் மீது அவளுக்கு அடாத வெறுப்பே வந்து விட்டது!
"விட்டலன்....விட்டலன்...என்று எப்போது பார்த்தாலும் பக்தி செய்தாயே....அந்த விட்டலன் இருக்கிறானா, இன்னும்?அவன் கையை இதோ வெட்டி விடுகிறேன்,பார்"
வெறி கொண்டவள் போல,பூஜை உள்ளிற்கு அரிவாளுடன் சென்றாள்,துளசி...
தான் செய்த அடாத காரியத்தினால்,கூனி குறுகி நின்ற கோராவிற்கு , 'விட்டலனை வெட்டப் போகிறேன்' என்று அவள் சொன்னதும், எங்கிருந்து தான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ?
'என் விட்டலனின் கைகளையா,வெட்டப் போகிறாய்!'
கோபத்துடன், அவளை அடிக்க கையை ஓங்கிய போது தான்...
அந்த பெண்புலி கர்ஜித்தது...
"என்னைத் தொடாதே...உன் விட்டலனின் மீது ஆணை...என்னைத் தொடாதே!"
...................
ஆம்...இந்த துயர சம்பவம்  நடந்து முடிந்து, இப்போது இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.
ஒரு நாள்  கால் வலி உபாதையால்,முனகிக் கொண்டு,அப்படியே கோரா தூங்கி விட, மனம் பொறுக்க மாட்டாமல், அவருடைய கால்களில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வந்தாள்,துளசி..
சட்டென்று முழிப்பு வந்து விட்டது,அவருக்கு..
"என்னைத் தொடாதே! விட்டலனின் மீது ஆணை இட்டிருக்கிறாய்,நீ"
துளசியின் கண்களில் இருந்து அநிச்சையாய் வழிந்த  அந்த இரண்டு சொட்டு கண்ணீர்த்துளிகளைக் கூட தன் கால்களின் மீது பட விடாமல், பொறுக்க முடியாத அந்த வலியிலும் தன் கால்களை நகர்த்திக் கொண்டார்,கோரா.
அவள் மீதுள்ள கோபத்தினால், அல்ல,அது!
விட்டலன் மீது அவள் வைத்துள்ள சத்தியத்தினால்!!
..................
வாரிசு வேண்டுமே என்கிற கவலை வந்து விட்டது துளசிக்கு.. அதனால் தன் வாழ்க்கையை தன் சகோதரி சாந்தனுவுடன்  பங்கிட்டு கொள்ளவும் துணிந்தாள்,அவள்.
'பகவத் சங்கல்பம் அப்படி என்றால், அப்படியே ஆகட்டும்!' - என்றார்,கோராவும்.
கல்யாணம் முடிந்ததும்,துளசியின் தகப்பனார்,கோராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.
"மாப்பிள்ளை...சாந்தா பாய் வேறு ஆள் இல்லை...துளசியை நடத்துவது போல், அவளையும் நீங்கள்,நடத்த வேண்டும்!"
ஆம் என்பதற்கு அடையாளமாய் தலை ஆட்டினார்,கோரா.
துளசியைப் போலவே,சாந்தனுவையும் தன்னை தொட விடாமல் பார்த்துக் கொண்டார்,கோரா!
மனிதனுக்கு வாக்கு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம்?
துயரத்தின் உச்சிக்கு சென்ற அந்த சகோதரிகள் இருவரும் ஒரு நாள்,'அவர் தானே,நம்மைத் தொடலாகாது...நாம் அவரைத் தொட்டால் என்ன' என்கிற தாபத்தினால்.....
ஆம், தாபம் தான் அது!
மரத்தில் படருகின்ற கொடிகளுக்குத் தான் பெண்மைக்கே உரிய அந்த தாபம் புரியும்..
தன்னுள் முளைத்த விதை...
பூவாகி......பிஞ்சாகி ...காயாகி...கனிந்த மரமாகும்,தாய்மையென்னும் தாபம்!
விழித்துக் கொண்ட கோரா விதிர் விதிர்த்து நின்றார்!
விட்டலனின் சத்தியத்தை மீறிய கைகள், இனி எதற்கு?
தன் கைகள் இரண்டையும் படாரென்று வெட்டிக் கொண்டு விட்டார்...
ஹா...என்ன ஒரு கோரம்!...என்ன ஒரு பயங்கரம்!! 
...............
கைகள் இரண்டையும் இழந்த நிலையில்,இப்போதும் கோரா மண்ணை பிசைந்து கொண்டு இருக்கிறார்...அவருடைய இரு பத்னிகளும் மண் பாண்டங்கள் செய்கிறார்கள்...ஆனால்,அவர் செய்ததைப் போல் அவ்வளவு நேர்த்தியாக இல்லை...விற்பனை சற்று மந்தம் தான்!
ஒரு கால கட்டத்தில், கடன் சுமை ஏறி, குடி இருக்கும் வீடு ஏலத்திற்கு வந்து விட்டது!
உடும்பு விட்டால் போதும் என்கிற நிலை கோராவிற்கு...
ஆனால், வீட்டை ஏலத்துக்கு எடுத்த ஸ்யாமளன் என்பவன் விடுவதாக இல்லை..
அவர் நிலை கண்டு இரங்கி, 'எனக்கு ஆதரவு யாரும் இல்லை...இந்த வீட்டிலேயே,நீங்கள் தயை  செய்து இருங்கள்...தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்' என இறைஞ்சி, அவனும் இப்போது அவர்களுடன் மண் பாண்டங்கள் செய்ய, பிழைப்பு ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது, கோராவிற்கு!
ஒரு நாள்......
எதேச்சையாக அந்த பக்கம் வந்தார்,நாம தேவர்..
ஸ்யாமளனைப் பார்த்த நாம தேவர் 'விட்டலா, இங்கேயா இருக்கிறாய், நீ' என ஆச்சர்யப்பட, கோரா கும்பருக்கு,அளவு கடந்த துயரம்...
"என் ஸ்வாமியையா, இத்தனை நாளாய், நான் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறேன்!"
மயங்கி விழுந்த கோரா, நினைவு திரும்பிய போது,அங்கு அந்த நீல மேக ஸ்யாமளனும் இல்லை..நாம தேவரும் இல்லை...
கோவிலில் பஜனை நடந்து கொண்டிருந்தது...
தன் பத்னி சமேதாராய் , பஜனை நடந்த இடத்துக்கு சென்றார் கோரா..
இவரைக் கண்டவுடன்,நாம தேவர் "வாரும்,கோரா ...இதைப் பிடியும்" என பஜனை சம்ப்ரதாயப்படி சிப்ளா கட்டைகளை கொடுக்க, டக்கென்று அதை வாங்கிக் கொண்டார்,கோரா!
ஆம்...அவருடைய தோள் பட்டைகளில் இருந்து இரண்டு கைகள் அப்போது முளைத்து அந்த சிப்ளா கட்டைகளை வாங்கிக் கொண்டன.
என்னே...அந்த பக்தவத்ஸலனின் கருணை!
விளிம்பு நிலை மனிதர்களிடம் தான் அந்த விட்டலனுக்கு என்ன ஒரு வாத்ஸல்யம்!!
அந்த அற்புதத்தை பார்த்தவர்கள் அப்படியே ஆடிப் போய் விட்டார்கள்.....
ஹர ஹர விட்டல!
ஜெய ஜெய விட்டல!!
விட்டலன் கோஷம் விண்ணைப் பிளந்தது!!!
.........................












Sunday, February 28, 2016

வடை ....வடை...வடை!

'பாதுகாப்பான முறையில் உளுந்து வடை சாப்பிடுவது எப்படி?' என்பதை நண்பர்களுக்கு 
Demonstrate பண்ணிக் கொண்டிருந்தேன்...
டிபன் தட்டில் empty ஆக இருந்த குழியில், நன்றாக வடைகளைப் பிழிய, எஸ்.வி.சேகர் நடித்த ஏதோ ஒரு படத்தில் சொட்டுவது போல,எட்டேகால் அவுன்ஸ் எண்ணை சொட்டியது.
மறுபடியும் ஒரு தடவை பிழியும் போது,மூன்று அவுன்ஸ் சொட்டியது. கைகளை சோப் வாட்டரால் கழுவி, அந்த பிழிந்த வடைகளை சாம்பாரில் ஊற வைத்தேன்...
கண்கொட்டாமல் இதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கேட்டார்...
"ஏன் சார், வடையைப் போய் இந்த பிழி பிழியறீங்க?"
"பார்த்துண்டிருந்தீங்க இல்லே...எவ்ளவ் எண்ணை? அத்தனையும் உடம்புக்கு கெடுதல் இல்லையா?" - என்றேன்.
"இல்லை"
"எப்படி?"
"சார் நம்ம ஒடம்பே ஒரு அசெம்பிளி of machines. இதுல, அசெம்பிளி லைன்ங்கறது food path. அது வழியா உள்ளே போற, இந்த ஆயில் லூப்ரிகண்டாக வேலை செய்யறது...உள்ளே,
இருக்கிற மெஷின்லாம் உராய்வு...தேய்மானம் எதுவும் இல்லாம சூப்பரா வேலை செய்யறதுக்குத் தான் வடைல, ஆயில் அப்ளை பண்ணியிருக்காங்க...நீங்க என்னடான்னா..."
"அது சரி....தேவைக்கு அதிகமா,இவ்ளவ் ஆயில் அந்த food path வழியா ச்ச்சொய்ய்ங்ங்னு உள்ளே போனா, உள்ள இருக்கிற இதயம் அப்டியே அந்த lubricancy ல, வழுக்கிண்டு, கிட்னி பக்கம் போயிடுத்துன்னா....."
நண்பர் பேசவில்லை ....
அவரும் வடைகளை பிழிய ஆரம்பித்து விட்டார்!

Wednesday, January 27, 2016

பீஸ் பீஸ் ஆக ஆக்கும் பேஸ் புக்!

"சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு வந்ததும், சந்தி பண்றது"
"சரி"
"கடைக்குப் போய் மளிகை சாமான் வாங்கிண்டு வரணும்"
"மளிகை கடைக்கு போன் பண்ணேன் ப்ளீஸ்!"
"அது சரி,எப்ப பார்த்தாலும் என்ன FACE BOOK வேண்டி கிடக்கு?"
"இப்ப என்ன பண்ணனுங்கறே?"
"மில்லுக்கு போய் அரிசி மாவு திரிச்சிண்டு வரணும். FACE BOOK லேர்ந்து கொஞ்சம் எழுந்திருங்கோ!"
"FLOW நல்லா வரும், போது தான் DISTURB பண்ணுவ..ஒரு நிமிஷம் இரேன்,ப்ளீஸ்!"
"FLOW ஓ...BLOW ஓ...ஏதோ ஒண்ணு ஒங்களுக்கு நிச்சயம் கிடைக்கத் தான் போறது"
"என்ன சாபமா?"
"ஆமாம்,இங்கே வழியறது போறாதுன்னு,போன்லியும் வழிஞ்சாறது போல இருக்கு!"
"என்ன உளர்றே?"
"அதாரு, ஸ்நேகா...அஞ்சாறு மிஸ்டு கால்!"
எங்கே, என்று பரபரவென போனை எடுத்து,அந்த ஸ்நேகாவிற்கு கால் பண்ணினேன்...
"சாமி....நாந்தேன் பாம்பு புடிக்கற ஆறு முகம் பேசறேன்...எங்ஙன இருக்கீங்க? ஆறு மணிக்கு பாம்பு புடிக்க வரட்டுமா?"
கரகரப்பான கட்டைக்குரல் போனிலிருந்து வந்தது.
இங்கே, உட்கார்ந்து கொண்டிருந்த எனக்கும் உயிர் வந்தது!

Thursday, January 14, 2016

நா நயம்! நாணயம்!!

டொக்....
ஒற்றை ரூபாய் நாணயமொன்று கண்டக்டரின் தோல் பையில் விழுந்தது.
பக்கத்தில் புத்தம் புதியதாய் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு!
'நாம யாரு....நம்ம ஜபர்தஸ்த் என்ன....இந்த தோசிப்பயல் நமக்கு பக்கத்துல சரிக்கு சரியா உட்கார்ந்திருக்கானே' என செம எரிச்சல் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டிற்கு!
அடுத்த ஐந்து நிமிஷத்தில் அந்த ஒற்றை ரூபாய் நாணயம் எடுக்கப் பட்டு விட்டது!
ஒரு வாரம் கழித்து அவை இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்ட போது....
"அண்ணே, எப்டீண்ணே இருக்கீங்க?"- ஒற்றை ரூபாய் நாணயம்..
"நல்லா இருக்கேன்..அங்கேர்ந்து, ஆபீஸ் கேஷ் செஸ்ட்டுக்கு போனேன்....அடுத்த நாளே பேங்குக்குப் போயாச்சு...ஏஸி ரூம் வாசம் தான், கொஞ்ச நாளா..." 
.....இந்த பன்னாடையையும் ஒரு ஆளா மதிச்சு கேட்க வேண்டியிருக்கிறது பாரு!
"ஆமா, நீ எப்டி இருக்க?"
"நாய் பொளப்புண்ணே நம்மளோடது.....ஒரு ஐம்பது  பேருகிட்டயாவது போயிருப்பேன்....அதுல ஒரு புறம்போக்கு ஒரு பிச்சைக் காரனுக்கு என்னைப் போட, அந்த பிச்சைக்காரப் பய என்னை தெருவுல தூக்கி எறிஞ்சுட்டாண்ணே"
குலுங்கி குலுங்கி அழுதது அந்த ஒற்றை ரூபாய் நாணயம்...
"கூல்.....கூல்....." என்று அதை சமாதானப் படுத்தியது, அந்த ஆயிரம் ரூபாய்நோட்டு.
அந்த சமயம், நாதஸ்வரக் குழலோசை, கேட்க கொட்டு மேளம் கொட்ட, மாங்கல்ய தாரணம் நடந்தேறியது...
"மொய் பணம் கொடுத்துட்டு சாப்பிட போலாமா?"
சட்டைப் பையிலிருந்து, ஆயிரம் ரூபாய் நோட்டு எடுக்கப் பட்டது.
"ஒரு ரூபாய் காயின் இருந்தா கொடுங்க....ஆயிரத்தோரு ரூபா கொடுத்தா தான் சபைல மருவாதி!"
மாரில் ஏற்பட்ட எரிச்சலுக்கு,மயிற்பீலியால் மருந்து தடவியது போல இருந்தது அந்த ஒற்றை ரூபாய் நாணயத்திற்கு!