( மனோ சாமிநாதன் அவர்கள் சாப்பாடு பற்றிய தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். அதன் விளைவு இதோ!)
கேள்வி 1 : தங்களுக்கு அம்மா சமையல் பிடிக்குமா..மனைவி சமையல் பிடிக்குமா?
பதில் : சந்தேகம் இல்லாமல் மனைவி சமையல் தான். அவங்க தான் எனக்கு பிடிக்கும்னு
உருளைக் கிழங்கு சேர்ப்பாங்க..அது என்னைப் பிடிக்கும்!
கேள்வி 2 : தங்களுக்கு சமையல் தெரியுமா?
பதில் : என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். நம் ஆடவர்கள் தான் சமையலில் EXPERT.
நளன்..பீமன் என்று! அவர்கள் பெயருக்கு என்னால் களங்கம் வராதது போல்,
சூப்பராய் வென்னீர் வைக்கத் தெரியும்!
கேள்வி 3 : குளிக்கவா..? குடிக்கவா..?
பதில் : அட..அட...இதானே வாணாம்?
கேள்வி 4 : சாப்பாட்டினால் கஷ்டப் பட்டதுண்டா?
பதில் : நிச்சயமாய்..பேப்பர் படித்துக் கொண்டும்...டி.வி. பார்த்துக் கொண்டும் ஞாயிறுக்
கிழமை மத்யானம் இரண்டு மணிக்கு சாப்பிடுவோம். சுவாரஸ்யத்தில் அளவுக்கு
அதிகமாய் சாப்பிட்டு, ஆடு விழுங்கின மலைப் பாம்பு மாதிரி மல்லாந்து
கிடப்பேன். செய்வது தப்பு என்று தெரியும். வேறு வழி!
கேள்வி 5 : புஸ்தகம் படிச்சுகிட்டு சாப்பிடாதீங்கன்னு வீட்டில சொல்ல மாட்டாங்களா?
பதில் : சொல்வாங்களே... நிறைய சொல்வாங்க..புஸ்தகம் படிச்சுகிட்டு சாப்பிட்டா,
சாப்பாட்டோட டேஸ்ட் தெரியாதும்பாங்க...டேஸ்ட் தெரிஞ்சிடக் கூடாதுங்கிறது
க்காகத் தான் நான் புஸ்தகமே படிக்கிறேன்னு சொல்ல மாட்டேன்..மனதுக்குள்ள
நினைச்சுக்குவேன்!
கேள்வி 6 : சாப்பாடு விஷயமாய் எதாவது துயரம்?
பதில் : இருக்கே... நண்பன் ஒருவன் கல்யாணத்திற்கு சென்றேன். எல்லாரும்
முகூர்த்தம் முடிந்ததும்,பந்திக்கு முந்தினார்கள். நான் ரொம்ப கித்தாப்பாக
மக்கள் ஏன் இவ்வள்வு மட்டமாய் நடந்து கொள்கிறார்கள். இன்று நாம் ஒரு
எடுத்துக் காட்டாய் இருக்க வேண்டும் என்று நினைத்து, கொஞ்ச நேரம் கழித்து
சென்றால், ஆட்டம் க்ளோஸ்..படுதா காலி!இதைப் பார்த்த நண்பன் மண
மேடையிலிருந்து கண்களால் ’ஏய் சாரிடா,உன்னோட மொய் கவர் வேணா
இந்தாடா’என்று சொல்ல,வேண்டாம்டா’ என்று அதே கண்களால் சொல்லி
வீராப்போடு வந்தால், நான் கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு வந்திருப்பேன் என்று
எல்லாவற்றையும் ஒழித்துப் போட, ‘ சரி, ஒழியட்டும் சனி’ என்று அந்த
வேளைக்கு வயிற்றை காயப் போட்டேன்..என்ன ஒரு ட்ராஜிடி!
கேள்வி 7 : உணவில் ஏதாவது கட்டுப் பாடு?
பதில் : நிறைய படித்திருக்கிறேன். ஆனால், உடம்புக்கு ஒவ்வாது என்று நாம் ஒதுக்கித்
தள்ளுவோம் என்றால் அது நம் நாக்கிற்கு பிடித்துத் தொலைக்கிறது. நாக்கு,
நம் வீட்டு மருமகள் காம்பவுண்டு சுவரில் சாய்ந்து கொண்டு பக்கத்து வீட்டு
மருமகளிடம் நம்மைப் பற்றி வம்பு பேசுவது போல,அதற்கு பிடித்ததை
சாப்பிடாவிட்டால், வம்பு செய்கிறது..
ஒரு தடவை டாக்டரிடம் செல்ல, “உங்களுக்கு ஒபிசிடி இல்லை..
இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.என்ன ஆயில் யூஸ்
பண்றீங்க?” என்று கேட்க, நான் டக்கென்று “கோல்ட் வின்னர்” என்று
சொல்ல, அதை ”சாப்பிடாதீங்க” என்று அவர் சொல்ல, “ இல்லை,
டாக்டர், டிவி.ல கூட ஒரு டாக்டர் தான் கோல்ட் வின்னரை” ப்ரிஸ்க்ரைப்
செய்கிறார்” என்று நான் மறுதலிக்க, “ அவர் ரியல் டாக்டர் இல்லே..
நான் தான் ஒருஜினல் டாக்டர், நான் சொன்னதை கேளுங்க” என்றார்!
ரொம்ப சிம்ப்பிள்..எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம்
உடம்புக்குக் கெடுதல்.. நாக்குக்கு பிடிக்காதது எல்லாம் உடம்புக்கு நல்லது!
கேள்வி 8 : விரதம் இருப்பீர்களா?
பதில் : ஊஹூம்.. அன்று நண்பன் வீட்டுக் கல்யாணத்தில் இருந்த விரதம் தான்
எனக்கு நினைவு தெரிந்து..
கேள்வி 9 : முடிவாய் சாப்பாட்டைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
பதில் : உணர்வுகளுக்கும், சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு உண்டு.இதோ மகாபாரதம்!
அம்பு படுக்கையில் இருந்த பிதாமகர் பீஷ்மர் பக்கத்தில் எல்லோரும்
அமர்ந்து கொண்டிருக்க, அவர் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ’களுக்’கென்று சிரிப்பு!
பீஷ்மர் : யாரம்மா, சிரித்தது?
பாஞ்சாலி : நான் தான் தாத்தா?
தர்மர் ( கோபத்துடன்) : என்ன திரெளபதி, இது?
பீஷ்மர் : தர்மா... நீ பேசாமல் இரு..போகட்டும் ஏனம்மா, சிரித்தாய்?
பாஞ்சாலி : இப்ப இவ்வளவு நியாய, தர்மம் சொல்றீங்களே..அன்று துரியனின்
சபையில் இதையே சொல்லியிருந்தால் இவ்வளவு மனக்கஷ்டம்..
உயிர் விரயம் தடுத்திருக்கலாமே?
( எல்லாரும் திரெளபதியை கோபத்தோடு பார்த்தார்கள்.மனுஷன் மரணப்
படுக்கையில் கிடக்கிறார்..என்ன கேலி...கிண்டல்..இது?)
---- ஒரு நிமிடம் ம் மெளனம் அங்கு கோலோச்சியது. அதனை உடைத்தார்,
பிதாமகர்)
பாஞ்சாலி : .. நீ சொல்வது சரிதான்.ஆனால் அப்போது நான்
சாப்பிட்டது துரியன் போட்ட உணவு.அந்த தீயவனின் உணவு
என் மதியை மழுங்கச் செய்தது.அவன் செய்தது சரியே என்று
அன்று நினைத்தேன். ஆனால், செரிக்கப் பட்ட அந்த தீய உணவு
எல்லாம்,உன் பர்த்தா பார்த்தன் என் மேல் வீசிய கணைகளால்,
ரத்தமாய் வெளியேற, இன்று தான்...இப்போது தான்... எது
நியாயம் என்று தெரிகிறதம்மா....!