Saturday, February 25, 2012

நகரும் காடுகள்!!!!


ஏதாவது பிரச்னை என்றால், நாம் எல்லாருமே,யாரையாவது குறை சொல்வதிலேயே நம் பொழுதை...காலத்தை..விரயம் செய்து கொண்டு இருக்கிறோம்!..பாருங்களேன்..இன்றைய CURRENT TOPIC ‘மின்வெட்டு’ இது சம்பந்தமாய் நாம், ’நமக்குள்’ என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?
நேற்று மைத்துனர் வீட்டில் ஒரு விசேஷம்..அங்கு நான் சென்றிருந்தேன்.அவர் பையன் ..அரவிந்த் பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு தயார் செய்து கொண்டு இருக்கும் மாணவன்..என்னுடன் பேசிக் கொண்டு இருந்தான்..’கொஞ்ச நேரம் வெளியில் காற்று வருகிறது ..அங்கு போகலாமா’ என்று நான் கேட்டதிற்கு, ‘போகலாமே’ என்றவன், ஃபேன்,லைட் எல்லாவற்றையும் அணைத்தான்.இதே மாதிரி, அங்கு வெயில் என்றவுடன், ரூமுக்கு வர,உடனே சுவிட்ச் ஆன் செய்தான்.பிறகு, சாப்பிட போகும் போது, மறக்காமல், எல்லாவற்றையும் அணைத்தான்..செய்வதில் ஒரு நளினம்....அதுவும்.. விருந்தினர் மனம் புண்படாத மாதிரி செய்ததில் ஒரு நேர்த்தி.. கெட்டிக் காரன்! இதே நிலையில் என்னை கம்பேர் செய்து பார்த்தேன்..அந்த இடை வெளியில் நான் கரெண்ட் ஆஃப் செய்வதில்லை..இதில் என்ன பிரமாதமாய் வந்து விடப் போகிறது என்கிற எண்ணம்....மேலும் எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளி முன் நான் இதையெல்லாம் லட்சியம் செய்வதில்லை என்பதைக் காட்டிக் கொள்வதில் ஒரு ஆடம்பரம்..! கணக்கிட்டுப் பார்த்தேன், நாங்கள் அந்த ரூமில் இல்லாத நேரம் அரை மணி நேரம்! அந்த கெட்டிக் காரப்பிள்ளை, ஒரு அரை மணி நேர மின்சாரத்தை சேமித்தான், யாரும் சொல்லி கொடுக்காமலேயே!..
இப்படி நாம் எல்லாருமே, ஒரு நாளில் ஒரு அரை மணி நேரம் மின்சாரம் சேமித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது..இன்றிலிருந்து நானும் அதை கடைப் பிடிக்க ஆரம்பித்து விட்டேன்....
ஒரு பகலில் நம்மால் கரெண்ட் இல்லாமல் இருக்க முடியாதா..என்று என்னுள் ஒரு உந்தல்!
காஞ்சிப் பெரியவர் சொன்ன பிடி அரிசி திட்டம் போல் நாமும், தினம் ஒரு அரை மணி நேரம் மின்சாரம் சேமித்தால் என்ன என்று தோன்றியது..
எவ்வளவு வந்து விடப் போகிறது என்பவர்களுக்கு ஒரு வார்த்தை!
ஒரு ரூபாய் தானே என்று அலட்சியம் செய்யாதீர்கள்....ரூ 99,99,999/- வைத்துள்ள ஒரு லட்சாதிபதியை கோடீஸ்வரனாக்கும் சக்தி அந்த ஒரு ரூபாய்க்கு உண்டு!
ஏதோ, சமூகப் பிரக்ஞை கொண்டு எழுதும் எழுத்தாளன் என்று என்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக எழுதவில்லை இந்த பதிவு! ஒரு சின்னப் பையனிடம் நான் கற்றுக் கொண்ட பாடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அவ்வளவே!
ஷேக்ஸ்பியர் எழுதிய MACBETH என்கிற காவியத்தில், ஆயிரக் கணக்கான பேர் ஒரு மரத்துண்டு எடுத்துக் கொண்டு சென்றது, ஒரு காடு நகர்வது போல இருந்ததாம்..
அது போல், நாமும் ஒரு சிறிய மரத்துண்டை கையில் எடுத்துக் கொள்வோம்..பெரிய பெரிய காடுகளை நகர்த்திக் காட்டுவோம்!
என்ன வருகிறீர்களா?
இன்று முதல் அட்லீஸ்ட் ஒரு வாரம் தலா அரை மணி நேர மின்சாரத்தை சேமிக்கலாமா? விருப்பமுள்ளவர்கள் ’வருகிறேன்’என்று பின்னோட்டம் போட்டால், மிக்க மகிழ்ச்சி!!

Thursday, February 16, 2012

வேண்டாம் விருது (2) ?????



அதை படிச்சிட்டீங்களா?
வாங்க..வாங்க...
விருது பெற்றவர்களுக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லி வேறு ஐந்து வலைப்பதிவாளர்களுக்கு வழங்க வேண்டுமாம்! அதனால் முதல்ல எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லிடறேன்.
எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள் :
(1) நாவல்கள் படிப்பதுப் பிடிக்கும்..
(2) குறிப்பாக ஜெயகாந்தன்..
(3) அதுவும் கரகரப்பாய் முந்திரி பக்கோடா+ ஏலக்காய் டீயுடன்....
(4) எப்ப தெரியுமா? நீண்ட தூரம் ரயில் பயணம் செய்யும் போது படிக்கப் பிடிக்கும்.
(5) அப்போது பக்கத்தில் COMPANION இருக்க வேண்டும்..தனிப் பயணம் பயனில்லை!
(6) ”எப்பப் பார்த்தாலும் புஸ்தகமா” என்று சொல்லும் போது,அவர்களுடன் பேசுவது பிடிக்கும்..
(7) ”போதுமே..உங்க மொக்கை” என்று அவர்கள் திருப்பித் தாக்கும் போது மறுபடியும் நாவலுக்குள் தலை நுழைப்பது பிடிக்கும்!

இதோ நான் இந்த ஐந்து வலைப் பதிவர்களுக்கு இவ்விருதுகளை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.
(அ) http://aarellen.blogspot.in/
(ஆ) http://nittywrites.wordpress.com/
(இ) http://vasanthamullairravi.blogspot.in/
(ஈ) http://vidyasubramaniam.blogspot.in/
(உ) http://kakithaoodam.blogspot.in/
இந்த ஐந்து பதிவர்கள் இப்ப சத்யாக ஒன்றும் எழுதவில்லை..இந்த விருதுகளாவது அவர்களை தூண்டில் இழுப்பது போல் இழுத்து, வலைக்குள் போட்டுவிடும் என்ற
நன்னம்பிக்கையில்....
உங்கள் நண்பன்...

ஆர்.ஆர்.ஆர்..

டட்டடொய்...........ய்ங்க்......

வேண்டாம் விருது (1) ?????


கணிணியை வழக்கம் போல் திறந்தேன்!
கணிணி பக்கம் வந்து இரண்டு நாட்களாகிறது..
என்ன ஒரு ஆச்சர்யம்?
ஒன்று!
இரண்டு!!
மூன்று !!!
இதில் இரண்டும்,மூன்றும் ஒன்று!!
அடடா..முத்தான விருதுகள்!
எனக்கு?
யாரிடமிருந்து?
முதல் விருது, பிரபல எழுத்தாளர் திரு வெங்கட் நாகராஜ்ஜிடமிருந்து?
சாதாரண விருதா, அது? “THE VERSATILE BLOGGER AWARD" என்று பெயர்!
அடுத்த விருதின் பெயர் :”LIEBSTER BLOG AWARD"
இந்த விருதினை அளித்தவர்கள் யார் தெரியுமா?
இரண்டு ஜாம்பவான்கள்
என்னையும் மதித்து கெளரவப் படுத்தி இருக்கிறார்கள்!
முதல் நபர் வை.கோ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படும் திரு வை.கோபால கிருஷ்ணன்! இரண்டாம் நபர் நம் அன்பிற்குரிய சகோ திருமதி மனோ சாமினாதன்! இவர் ஒரு versatile personality..ஓவியம்,சமையல்,கதை என்று பல துறைகளிலும் தடம் பதித்துக் கொண்டு இருப்பவர்..சூரியனுக்கு முன்னால், ஒரு சின்னூண்டு மெழுகுவர்த்தியை காட்டுவது போல் தோன்றியதால் இவர்களின் BLOGS ஐ இங்கு எழுதவில்லை!
இந்த மூவர்க்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

AT A TIME த்தில் இரண்டு விருதுகள்! அதுவும் மூன்று மிகப் பிரபல நபர்களிடமிருந்து!!
ஒவ்வொரு நாள் நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது,” நீ என்ன நேற்று பெரிசா எழுதி கிழிச்சிட்டே? என்னை கிழிக்க வரே?” என்று கேட்பது போல் பிரமை எனக்கு இருப்பதால், ஒரு வித குற்ற உணர்வுடன் தான் இத்தனை நாட்களும் நாட்காட்டி தாள்களைக் கிழித்துக் கொண்டிருந்தேன்!இனி எனக்கு அந்த பயமில்லை! என் எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது!என்னுடைய self esteem ego வை இவர்கள் தூண்டி விட்டு விட்டார்கள்..
இதோ நான் எழப் போகிறேன்?
ஜிவ்வென்று வானில் பறக்கப் போகிறேன்!!
ஒரு அபரிமிதமான கற்பனை என்னுள்!
இனி மிக மிகப் பிரமாதமாய் எழுதி, தமிழ் நாட்டிலே பிரபலமான ஆளாய் ஆகி, எலக்‌ஷனில் நின்று, வென்று..மிகப் பெரிய VVIP ஆகி, குண்டு துளைக்காத காரில் பயணம்..இஸெட் பாதுகாப்பு வளையம்.. சுற்றிலும்.. உடன் பிறப்புகள்..ரத்தத்தின் ரத்தங்கள்! வட்டங்கள்..சதுரங்கள்...துதி பாடும் காக்கை கூட்டங்கள்... உறவுக் காரர்களுக்கு பெரிய..பெரிய காண்ட்ராக்ட்கள்...மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்தாகி விட்டது! பஸிபிக் பெருங்கடலில் சின்னதாய் ஒரு தீவும் வாங்கிப் போட்டாகி விட்டது?
இனி என்ன கவலை?
எழுந்தது ஒரு வெண்பா!
*************************************************
சொற்றாடல் பல புரிந்து,சொத்து பல சேர்த்து,
கற்றாரைப் புறம் தள்ளி, அரியணையில் நானமர்ந்து,
உற்றாரைப் பேணி, ஊர் மெச்ச வாழ்ந்திட்டு,
நற்றாமரை இலை நீர் போல் வாழ்தலினி எளிதாமோ?
**************************************************
அது சரி,விஸ்ராந்தியாய் ஒரு கால் கிலோ கத்திரிக்காய் பேரம் பேசி வாங்க முடியுமா என்னால்? ஊஹூம்...போச்...எல்லாமே போச்!!! இன்று நான் ஒரு பெரிய ஆள்!
என்னுடைய ’ஐடெண்ட்டிட்டி’...ப்ரைவஸி எல்லாமே எங்கே? எங்கே???
சட்டென நிதர்சனம் நெற்றிப் பொட்டை தாக்கியது!
“...டேய் ஃபூல்....ஒன்றும் ஆகவில்லை கவலைப் படாதே” என்றது ஆழ் மனம்!
அப்பாடா ..தப்பித்தேன்! நல்ல வேளை நான் நானாகத் தான் இருக்கிறேன்!
எந்த வித வாய்ப்பும் எனக்கு கிடைக்காததினால் தான் நான் யோக்யனாய் இருக்கிறேன்!
அது போதும்! எந்த விலை கொடுத்தாவது, நிம்மதியை வாங்கலாம்..அதற்காக, எந்த ஒரு விலைக்கும் நிம்மதியை கொடுக்க முடியுமா, என்ன?
’..சினம் கொண்ட குரங்கு, சிறிது கள்ளினை அருந்தியது போல்..’ என்னை என்ன பாடு படுத்தி விட்டது இந்த விருதுகள்?
போதும்டா சாமி!

Thursday, February 9, 2012

மீண்டும் கல்யாணம்????????!!!!!!!!


(இந்த தலைப்பைப் பார்த்து யாரேனும் தப்பாக அர்த்தம் செய்து கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல..)
என் வாழ்க்கையில்.. நான் கடந்து வந்த அந்த பாதையில்..பாலு சித்தப்பா..குரு..கல்யாணம்...வினு...சீனு...போல், நம்ம ஃப்ரெண்ட் கல்யாண ராமன் வாழ்விலும் ஒருவர் தாக்கம் ஏற்படுத்தினார்..யார் தெரியுமா..
அவனோட தாத்தா!
இவர் சாதாரண தாத்தா அல்ல!
அந்த காலத்திலேயே, அதாவது பிரிட்டிஷ் காரன் காலத்தில, திருச்சி ரயில்வே ஆஃபீஸ்ல, ஹெட் கிளார்க்..ரொம்ப...ரொம்ப... பெரிய போஸ்ட்! எல்லா தாத்தாக்களும் குடுமி வைச்சுண்டு, பஞ்சகச்சம் கட்டிண்டு வைதீகத்துக்குப் போகும் போது,இவர் ஸ்டைலாக..‘க்ராப்’ வைத்து ஃபுல் பேண்ட் போட்டுக் கொண்டு ஆஃபீஸ் போவது வித்யாசமாய் இருக்குமாம்..சொல்லிக் கேள்வி!
அப்படிப் பட்ட தாத்தாவுக்கு ஒரு பழக்கம். பொடி போடுவார்..பொடின்னா..சாதாரண TAS ரத்தினம் பட்டணம் பொடி அல்ல ! OFFICER'S SNUFF னு நெய் பொடியாக்கும்!அப்பவே ரொம்ப காஸ்ட்லி! திருச்சினாப்பள்ளி பெரிய கடை வீதியில..ஒரே ஒரு கடையில் மட்டும் தான் இருக்கும்! அந்த பொடி வைக்க கண்டெய்னர் ஒரு வெள்ளி டப்பா..பார்க்கவே நல்ல வேலைப்பாடோட அழகா இருக்குமாம், அது.
சரி..விஷயத்துக்கு வருவோம்!
நம்ம புள்ளையாண்டான் எஸ்.எஸ்.எல்.சி யில், காலாண்டு தேர்வில், டன் மார்க்! நாம என்ன செய்வோம்..இரண்டு திட்டு..திட்டுவோம்..குடும்ப நிலையை சொல்லிப் புலம்புவோம்..அவன் தாத்தா என்ன செய்தார் தெரியுமா?
அடடா....என்ன ஒரு வில்லத் தனம்..பிரிட்டிஷ் காரனோட பழகிப் பழகி, அந்த குரூரத் தனமும் வந்திருக்கும் போல இருக்கு..இப்ப நினச்சாலும் உடம்பு பயத்துல துள்றது.. நானாயிருந்தா, நட்டுக்கிட்டு போயிருப்பேன்..அவனாக் கொண்டு அதை சமாளிச்சான்!
பீடிகை போதும்..விஷயத்துக்கு வான்னு சொல்றீங்களா...
வரேன்..
”...என் பேரன் காம்போஸிட் மேத்ஸ்ல என்ன மார்க் தெரியுமா...இருபத்தி நாலு மார்க் வாங்கியிருக்கான்.இருபத்தி நாலு மார்க்காக்கும்....” என்று பெருமையாய்...தாத்தா...
யாரிடம் சொல்வார் என்று நினக்கிறீர்கள்?
பக்கத்து வீடு..எதிர்த்த வீடு...இவனோடத்த வயசுப்........
பெண்களிடம் தான்!!!!!!!!!!!
என்ன ஒரு அவமானம்!
கேள்விப் பட்டவுடன் கல்யாணம் குதித்தான்!
அவன் : தாத்தாவ்.... நான் கணக்குல நிறைய மார்க் வாங்கிக் காட்டறேன்..ஒரு பெட்..
தாத்தா : இதப் பாரு.. நீ கணக்கில நல்ல மார்க் வாங்கினா, இந்த பொடி போடறதை அந்த வினாடியே நிறுத்திடறேன்...
அவன் : சேலஞ்ச்?
தாத்தா : சேலஞ்ச்?
சொல்லி விட்டானே ஒழிய, உள்ளூர பயம்..வெளியே தலை காட்ட முடியவில்லை..அந்த பெண்களெல்லாம் அவனைப் பார்த்து சிரிப்பது போல் ப்ரமை..பாவம்!
அகஸ்தியர் நோட்ஸ் வாங்கினான்.. நெட்டுருப் போட்டான்...திரும்ப..திரும்ப ...எழுதிப் பார்த்தான்...
அத்தனைப் பெண்களும் அவனைப் பார்த்து,சிரி..சிரி..என்று சிரித்தார்கள்..
கனவில் தான்!
அந்த DAY OF JUDGMENT நாளும் வந்தது!
ஸ்கூலில் மார்க் லிஸ்ட் கொடுத்தார்கள்..
விழுந்தடித்துக் கொண்டு, வீட்டிற்கு ஓடினான்...
தாத்தாவ்வ்............
என்ன மார்க்?
நூற்றுக்கு தொண்ணூறு!
தாத்தா மானஸ்தர்!
ஷர்ட் பாக்கெட்லிருந்து பொடி டப்பாவை எடுத்தார்....
ஆசை தீர...சர்ர்ர்.ர்.ர்...ர்ர்..........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று ஒரே உறிஞ்ச்!
தூக்கிப் போட்டார், அந்த பொடி டப்பாவை!
கொல்லைப் புறத்தில் இருந்த பாட்டி,அந்த பொடி டப்பாவை நம்ம பேட்ஸ்மேன் போல இல்லாமல் டக்கென்று காட்ச் பிடித்தாள்!
வெள்ளியாச்சே அது!
அதற்குப் பிறகு தாத்தா பொடியைத் தொடவே இல்லை என்பது வரலாறு உரைக்கும் உண்மை!
இது நடந்து ஒரு வருடம் கழித்து.....
தாத்தாவும், பாட்டியும் திண்ணையில் இருக்கும் போது..
அவரிடம் ஒரு பேப்பரை நீட்டினான்.. நம்ம கல்யாணம்!
PUC மார்க் லிஸ்ட்!
அல்ஜிப்ராவில் இருநூறுக்கு இருநூறு!
தாத்தா திண்ணையை விட்டு எழுந்தார்.பாட்டி அவரைப் பிடித்துக் கொண்டு எழுந்தாள்.பாட்டிக்கு தள்ளாமை! அடிக்கடி தாத்தாவையோ...திண்ணையையோ பிடித்துக் கொள்வாள்.
“ நம்மை பிடிச்சதை விடணுமோல்யோ, அதனால.......காசிக்குப் போய் உங்க பாட்டியை விட்டுட்டு வரப் போறேன்”ன்னு தாத்தா காலையில் பேத்திகளிடம் பேத்தியது,ஞாபகம் வரவே,பேராண்டி எக்கச்சக்கமாய் மார்க் வாங்கிய சந்தோஷத்தில்,தாத்தா ஏதாவது ஏடாகூடமாய் செய்து விடப் போகிறாரே என்கிற பயத்தில், பாட்டி தாத்தாவை இறுகப் பிடித்துக் கொண்டாள் ........
என்பது செவி வழிச் செய்தி!
*************************
இது கொஞ்சம் ஓவர் தான்!
ரொம்ப போர் அடிச்சதுன்னு ஒரு சைக்கியாரிஸ்ட்டைப் போய்ப் பார்த்தேன்!
சுமாராய் ஒரு மாட்னி ஷோ பார்க்கிற டைம் ஆச்சு அவர் தரிசனம் கிடைக்க..
அவர் : வாங்க..எனி ப்ராப்ளம்?
நான் : லைஃப் ரொம்ப stress ஆ இருக்கு..மெகானிகலா ஓடிட்டு இருக்கு..பைத்தியம்
பிடிச்சுடுமோன்னு இருக்கு.
அவர் : நான் இருக்கேன்..கவலைப் படாதீங்க..அது சரி எத்தனை நாளா இப்படி இருக்கு?
நான் : ஒரு ஆறு மாசமா இருக்கு சார்!
அவர் : நல்லா தூக்கம் வருதா?
நான் : தூக்கம் சரியா வரலே சார்..
அவர் :கவலைப் படாதீங்க..மாத்திரை எழுதி தரேன்..மாத்திரையால குணாமாறதது இல்ல..
மனசை ரிலாக்ஸா வைச்சுக்குங்க..யோகா பண்ணுங்க..இப்ப ஆரண்ய நிவாஸ் ஆர்
ராமமூர்த்தின்னு ஒருத்தர் இணையத்தில எழுதறார்..அவர் எழுத்தை படிச்சுப் பாருங்க
குபீர்னு சிரிப்பு பொத்துக்கும்..மனசு ரொம்ப லைட்டாயிடும்.
நான் : அந்த ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி நான் தான் சார்!
இது நடந்த அடுத்த நாள் அதே டாக்டர்ட்ட போனேன்..மெடிக்கல் ரீஇம்பர்ஸ்மெண்ட் ஃபாரத்தில கையெழுத்து வாங்க! நர்ஸ் வந்தாங்க..
நான் : டாக்டர் இன்னும் வல்லியே..
நர்ஸ் ; டாக்டர் பத்து நாள் வர மாட்டார்..
நான் : என்ன விஷயம்?
நர்ஸ் : நீங்க தான் சொல்லணும்...உங்களைப் பார்த்ததிலிருந்து அவர் வரல்லே..வீட்டில
கேட்டா, டாக்டரே ட்ரீட்மெண்டுக்கு போயிருக்காராம்..அவரை என்ன தான் சார்
பண்ணினீங்க? நீங்க தான் கடைசி பேஷண்ட்!

Wednesday, February 1, 2012

E = mc2


இந்த உலகில் எல்லாமே ஒன்றை ஒன்று ஒப்பிட்டு பார்க்கும் படியாகத் தான் இருக்கிறது..எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து தான் இருக்கிறது..
ஒரு சாதாரண காஃபியை எடுத்துக் கொள்ளுங்கள்...!
அந்த காஃபியையே..கொடுப்பவர்கள் கொடுத்தால் ....?
அம்மா கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்...அதில் சர்க்கரையை விட பாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்!அதையே ’பெட்டர் ஹாஃப்’ கொடுத்தால்,அந்த டம்ளரின் விளிம்பில் ஆசை ததும்பி இருக்கும்!
ஒரு உதாரணத்திற்கு இப்படி வைத்துக் கொள்ளலாமா?..அதாவது நீங்கள் சாயங்காலம் ஆஃபீஸ் முடிந்து ஐந்தரைக்கு வந்தவுடன்,ஸினிமா போகலாம் என்று காலையில் ‘கமிட்’ செய்து விட்டு,அதனை சுத்தமாய் மறந்து தொலைத்து, ஃப்ரெண்ட்ஸ்களுடன் ப்ரிட்ஜ் விளையாடி...,ஆற அமர ஏழரை மணி சுமாருக்கு வீட்டிற்கு வந்தீர்களானால், அந்த ’பிட்டர் ஹாஃப்’ ஸாரி..ஸாரி..அந்த’பெட்டர் ஹாஃப்’ கொடுக்கும் காஃபி எப்படி இருக்கும்? அந்த ஆறி அவலாய்ப் போன ’வஸ்து’வை ஆற்றுகிற ஆற்றலில் என்ன ஒரு வேகம் இருக்கும்?
வேகம் என்றவுடன் ஞாபகம் வருகிறது..இந்த வேகமும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் இருக்கிறது..இதையும் ஒன்றை ஒன்று ஒப்பிட்டுத் தான் பார்க்க முடியும்..
மூன்று ரூபாய் முப்பத்து மூன்று பைசா வைத்துள்ள பர்ஸை பறி கொடுத்தவன்,அதனை எடுத்தவனைப் பிடிக்கின்ற ஓட்டத்தை விட அந்த பாடாவதி பர்ஸை உள்ளிருக்கும் ‘விஷயம்’தெரியாமல் ‘பாக்கெட்’ அடித்தவன் ஓடுகின்ற ஓட்டம் அபாரமாக இருக்கும்..
தெரு நாய் துரத்தும் போது, நாம் ஓடுகிற ஓட்டம் .....அடாடா..ஒரு சத்தியத்திற்குக் கட்டுப் பட்டு, அதன் எல்லையை தாண்டி வரக் கூடாது என்கிற ஒரு சுயக் கட்டுப்பாடு அந்த நாய்க்கு இருப்பதால் தானே அதன் வேகம் துரத்தப் படுவனின் வேகத்தை விட சற்று கம்மியாக இருக்கிறது..
..பூனை தன்னை பட்சணமாக்கத் துடிக்கிறது என்பது எலிக்கு தெரிவதால் அல்லவா அது தன்னைக் காத்துக் கொள்ள அந்த பூனையின் ஓட்டத்தை விட இப்படி தலை தெறிக்க ஓடுகிறது...
திங்கட்கிழமை காலை ’பீக் அவரி’ல் ஒழுகுகின்ற மூக்கைத் துடைத்துக் கொள்ளக் கூட நேரமில்லாமல், எலெக்ட்ரிக் டரையினைப் பிடிக்க எத்தனை இளம் பெண்கள் ஓடுகிறார்கள்?அவர்களின் வேகம் அந்த எலக்ட்ரிக் ட்ரைய்னின் வேகத்தை விட சற்று அதிகம் தானே!
ஒன்றை கவனித்துப் பார்த்தால் தெரியும்..இவை எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது!
ஆனால், இந்த ஐன்ஸ்டீன் இருக்கிறாரே..அவருடைய புகழ் பெற்ற E = mc2 என்கிற சமன்பாடு உலகிலேயே பிறவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கமுடியாத அதிக பட்ச வேகத்தை உடையது ஒளியின் திசை வேகம் என்கிற ’கான்செப்டை’அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்டது. ஒளியின் வேகம் சார்பற்றது..ஒப்பிட முடியாதது என்பது தான் அவருடைய அசைக்க முடியாத ’ஸ்பெஷல் ரிலேடிவிட்டி தியரி’யின் சாரம்!
இதற்கும் வைத்தான் வேட்டு!
ஜெனிவாவில் உள்ள CERN என்கிற அணு ஆராய்ச்சி நிறுவனம்,பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஒளியை விட திசை வேகம் உள்ள பொருளாக நியூட்ரினோ என்னும் மிக..மிக எடை குறைந்த அணுத்துகளைக் குறிப்பிட்டது.
இந்த நியூட்ரினோ அணுத் துகள்கள் அதிக வெப்ப நிலயில் உருவாகிறது.உதாரணமாக நாலாயிரம் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், சூரியனில் ஹைட்ரஜனும், நைட்ரஜனும் சேரும் போது.ஹீலியமும், நியூட்ரினோவும் வெளிப்படுகின்றன.இந்த நியூட்ரினோ ஒளியை விட அதி வேகமாக செல்லக் கூடியது.
அதாவது,
ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 29,97,92,458 மீட்டர்!என்றால்,
நியூட்ரினோவின் வேகம் ஒரு வினாடிக்கு 29,97,98,454 மீட்டர்!!
நம்மூர் ஜாம்பஜார் ஜக்கு க்வார்ட்டர் அடிச்சுட்டு ச்சொய்ய்ய்ய்ய்ய்........ங்ங்ங்ங்னு..வீசறானே,அந்த பிச்சுவா கத்தியோட வேகம் என்ன தெரியுமா?
வினாடிக்கு 29,97,98,455 மீட்டர்!!!
நாளைக்கே,இந்த ஜாம்பஜார் ஜக்குவின் அருமைந்தன் சைதாப்பேட்டை கொக்கு இதை விட வேகமாக கத்தி வீசலாம்!
ஆக,
‘எல்லாமே’
மாறுதலுக்கு உட்பட்டது தான்!
(பின் குறிப்பு: ப்ளஸ் டூ தேர்வில் BIOLOGY ல் 200/200; MATHS ல் 200/200; CHEMISTRYல் 200/200; ஆனால் PHYSICS ல் மட்டும் 190...192 மார்க் வாங்கி... PHYSICS என்றாலே ஏதோ பூச்சாண்டி..பிசாசு என்று பயப்படும் நம் குழந்தைகளின் பயத்தைப் போக்கி, அது ஒரு பிலாஸபி..அது ஒரு இண்ட்ரஸ்டிங் சப்ஜெக்ட் என்று அவர்களை குஷிப் படுத்துவதற்காக எழுதப் பட்டது)