அவயாம்பா....அகிலாண்டம்...அபீதகுஜாம்பா....
என்ன இதெல்லாம் சுத்த கர்நாடக பெயரா இருக்கா?
முகத்தை சுளிக்காதேள்..
நீங்க, ஏதோ ஒரு கான்வெண்ட் போய்,அங்கே அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்ல இருக்கற ரொம்ப படு பேஷனா இருக்கற பெயரை ஒங்காத்துல பொறந்த குழந்தைக்கு ஆசையா செலக்ட் பண்றேள்....பார்த்தா அந்த பெயரை,ஏற்கனவே ஆதி சங்கர பகவத் பாதாள் தன்னோட சௌந்தர்ய லஹரிலே அம்பிகையை கூப்டூட்டு போயிட்டார் ரொம்ப ரொம்ப காலத்துக்கு முந்தி!
அது போகட்டும்....நான் இங்கே சொல்ல வந்தது....
அவயாம்பா...
அவயாம்பாளைப் பத்தி தெரியுமா,உங்களுக்கு? அவ வேற யாருமில்லை ....என்னோட தாய் மாமா ராம தீக்ஷத்ரோட அஞ்சாம் பொண்ணு....என்னை விட அஞ்சு வயசு சின்னவ.....
அவ அகம் எங்க அகத்தை விட்டு அஞ்சு அகம் தள்ளி இருக்கு...
நான் சின்ன வயசுல இருக்கும் போது விளக்கெண்ணை குடிக்கணும்னு ஒரு வைபவம்...
மூணு மாசத்துக்கொரு தடவை அகத்துல அல்லோல கொல்லோல படும்..
தாத்தா,பாட்டி,அத்திம்பேர்,அத்தை,சித்தப்பா எல்லாருக்கும் அன்னிக்கு இது தான் வேலையே...
அம்மை குத்தறவன் வீடு வீடாய் தேடி போறாப்ல, ஆத்துக்குள்ளே எங்களையெல்லாம் தேடி தேடி பிடிச்சு விளக்கெண்ணையை வாயில ஊத்துவா....அன்றைய மெனு,குட் ரசம்....பருப்பு துவையல் தான்!
இந்த மெனு என்னிக்கு சாப்பிட்டாலும் எனக்கு விளக்கெண்ணெய் ஞாபகம் வந்துடும்...
அவ்வளவு விளக்கெண்ணெய் சாப்பிட்டு இருக்கேனாக்கும், நான்!
அகத்தில் விளக்கெண்ணெய் குடிக்கும் நாளன்று நான் மாமா அகத்திற்கு ஓடிடுவேன்...
ஆனா,சித்தப்பா என்னை பிடிக்க அங்கே வெயிட் பண்ணிண்டு இருக்கிறது தான் அதை விட ஆச்சர்யம்!
பெரியவனானதும் அகத்தில் இருக்கிற சில்லூண்டு வாண்டுகளை தேடி பிடிச்சு விளக்கெண்ணை கொடுக்கற வேலை எனக்கே வந்தது...ரொம்பவும் சந்தோஷமாக செஞ்சேன்....அந்த சமயத்துல தான் மாமா ஆத்துக்கு அடிக்கடி போக வர ஆரம்பிச்சேன்....
ஆனா, இப்ப போறதுக்கான காரணம் அவயாம்பா!
அழகா,பொடிப் பொடியா கத்திரிக்கா....வெண்டைக்கா....அவ நறுக்கறச்சே பார்க்கணுமே..அதுவும் அந்த கொத்தவரங்காயை பொடிபொடியாக அவ நறுக்கற அழகே தனி!
சுறுசுறுப்பா கை வேலை செய்யும்...
அதையே நாள் பூரா ஊஞ்சலிலே உட்கார்ந்துண்டு வேடிக்கை பார்த்துண்டு இருப்பேன்...
நீர் மோர் கொண்டு வந்த மாமி ஒரு நாள் சொன்னா...
"கோபாலா,எங்க அவயத்தை நீ கல்யாணம் பண்ணிக்கறயாடா....இந்தாம் அவளுக்குத் தான்....உங்கப்பா மாதிரியே நீயும் ஸ்கூல் வாத்தியார் ஆகி,அவளை பார்த்துக்கோ"
சொல்லும் போதே மாமி கண் கலங்கியது..
"சரி மாமி"
பிறிதொரு நாள்....சிவன் கோவிலில்....
"கோபாலா...நிஜமாவே என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறயாடா?"
"நிச்சயமாடி"
அம்பிகையின் வாசல் முன் அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தேன்...
தோ...அவளைப் பார்த்து, நான் கதறி....கதறி...அழணும்...இத்தனை வருஷமா நா தேக்கி வச்ச கண்ணீரால, அவ காலை நனைக்கணும் அப்படி நனைச்சா தான், நான், என்னை எழுபது வயசுல விட்டுட்டுப் போன சாவித்திரி...இப்ப இருக்கற என் பசங்க...பேரன்...பேத்திகள்...எல்லாரும் நன்னா இருப்போம்....கன்யா பொண்ணோட சாபம் குலத்தையே கெடுத்துடும்னு நீங்க கேள்வி பட்டதில்லையா?
இல்லாட்டி இந்த தொண்ணூறு வயசுல அங்கியும்...இங்கேயும் அல்லமாடிட்டு இந்த அரியூரில் வந்து ஏன் நான் விழறேன்?
..................
உப்பிலி ஓடி வந்து கொண்டிருந்தான்...
அவனுக்கு தபால் ஆபீசில் 'ரன்னர்' உத்யோகம்!
109 ஆம் நெ. அஹம் ராம தீக்ஷதர் தன் வலது கையை புருவங்களுக்கு
மேல் வைத்துக் கொண்டு கேட்டார்.சாளேஸ்வரம் அவருக்கு!
"என்னடா உப்பிலி, எதையோ பறி கொடுத்தவன் மாதிரி ஓடி வரே?"
"பறி கொடுக்கலை தாத்தா, கிடைச்சாச்சு"
"எது?"
"சுதந்திரம்....நமக்கெல்லாம் விடுதலை"
அரை குறையாக கேட்டுக் கொண்டே வந்தாள் காமாக்ஷி
"அந்த கட்டேல போறவன்ட்டேர்ந்து அலமுக்கு விடுதலை கிடைச்சாச்சா?"
"அலமுக்கு மட்டும் இல்லே...நம்ம எல்லார்க்கும் விடுதலை"
"என்னடா உப்பிலி சொல்றே?"
அப்போது கிட்டாவையர் வந்தார்..
"பட்டணம் திமிலோகப் படறதாமே"
"நம்ம திருச்சிராப்பள்ளி கோட்டையை எடுத்துக்கும்.....போலீஸ்காராளும்....உத்யோக
காராளும், அங்க இங்க ஓடிண்டு..."
"ஓய் பஞ்சுவையரே வாரும்...இந்த அம்பி சொல்றதை கேட்டேளா?"
"ஆமாண்ணா..நிஜம்மாவே சுதந்திரம் கிடைச்சுடுத்து...இப்பவும் இந்த மௌண்ட் பேட்டன்
இழுக்க விட்டுடுவானோன்னு எனக்கு உள்ளூர பயம்..."
"ஆனா, காந்தி தான் கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாரே"
"காந்தி யாருண்ணா....நம்ம ரயிலடிக்கு ஒர்த்தர் வந்தாரே....நீங்க எல்லாரும் விழுந்து விழுந்து போய் சேவிச்சேளே....அப்பக் கூட அக்ரஹாரத்துல திருடன் புகுந்து..."
"ஆமாம்...மன்னி....அந்த மஹானுபாவர் தான்"
புருஷாளுக்கு சமதையா தன் சம்சாரம் பேசுவது என்னவோ போல இருந்தது, ராம
தீக்ஷதருக்கு...
"காமு, போடி....போய் எல்லாருக்கும் காஃபி கொண்டு வா...சுதந்திரத்தை நாம
எல்லாரும் காஃபி குடிச்சுண்டே கொண்டாடுவோம்!"
"ஹூக்கும்"
கனைத்துக் கொண்டு முகவாய் கட்டையை தோள் பட்டையில் இடித்துக் கொண்டு
காஃபி போட சென்றாள் காமாக்ஷி.
"புருஷாளுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு போல!"
காபி கலந்ததும், காமு தன் பெண்ணை கேட்டாள்...
"அவயம்....வாசலில் எத்தனை பேர் இருக்காடி"
அவயம் பார்த்து விட்டு சொன்னாள்...
"அப்பாவையும் சேர்த்து அஞ்சும்மா"
"இந்தா போய் கொடு....சிந்தாம ஜாக்ரதையாக எடுத்துண்டு போ!"
சுதந்திரம் என்றதும் அலமு ஞாபகம் வந்தது, காமுவிற்கு..
"பாவம் ...அந்த குட்டிக்கு பகவான் கண்ணை திறந்து விட மாட்டேங்கறானே!"
அலமுவைப் பற்றி நினைத்ததும்,தன் குழந்தைகளைப் பற்றி கவலை வந்து விட்டது உடனே..
'இங்கே மட்டும் என்ன வாழறதாம்?அஞ்சு அடுக்கு டிபன் கேரியர் போல, அஞ்சு பொண்ணு பெத்து வச்சிருக்கோமே நாம! அதைப் பத்தின கிஞ்சித்தும் கவலை இல்லாம, இந்த பிராம்மணன் பாட்டுக்கு வாசலில் ஜமா பந்தி பண்ணிண்டிருக்கார்...இதுல காபி கச்சேரி வேற?...வைதீகத்துல வரதுல,வச்சுண்டு இதுகளை எப்படித் தான் கரை சேர்க்கப் போறோமோ?'
இதில் ஒரு ஆறுதலான விஷயம்..காமுவோட பிறந்த அகம் கொஞ்சம் வசதியானது.அப்பாக்கு ஐவேஜுக்கு குறைச்சலில்லை....காமுவிற்கும் கொஞ்சம் மஞ்ச காணி சொத்து இருக்கிறது....அப்பப்ப வலங்கைமானிலிருந்து வண்டி வண்டியாய் நெல்,புளி,காய்கறி என்று வந்து இறங்கும்....அப்பா காலம் ஆன பிற்பாடு, வரத்து கொஞ்சம், கொஞ்சமாய் குறைந்து போய் இப்போது சுத்தமாக நின்று போய் விட்டது...
வலங்கை மான் போய் அம்பிகளோட பேசி,தம் பங்கு நிலத்தை விக்கணும்னு நினைச்சுண்டு தான் இருக்கா காமு....அதுக்குத் தான் இன்னமும் நேரம் வரலை!
................
இதோ.
ஜோசப் காலேஜ் வாசல்ல நான் நிக்கறேன்..
அட...அது யாரு...
நம்ம முத்தண்ணாவா?
முத்தண்ணா கண்ணில படாம இருக்கணுமேன்னு பகவானை வேண்டிக்கறேன் ...
முத்தண்ணா கண்ணில படணும்னும் ஆசையாவும் இருக்கு...
ஏன்னா, கையில இருந்த காசெல்லாம் தீர்ந்து போச்சு...
ஊருக்கு போகக் கூட காசு கிடையாது!
ஊர் இருக்கட்டும்...அடுத்த வேள சாப்பாட்டுக்கு என்ன பண்றது?
எப்டி எல்லார் மொகத்திலியும் முழிப்பேன்?
எதோ அசட்டுத் தைரியத்துல, கோட்டைக்கு வந்துட்டேன்...
மிலிடிரியில் சேரலாம்னு...
நேத்திக்கு வச்ச டெஸ்ட் எல்லாம் பாஸ்!
இன்னிக்கு உசரம் கம்மின்னு திருப்ப அனுப்பிச்சுட்டான்,கடன்காரன்!
இல்லாட்டி இப்படியே இவாளோட அலிகார் போயிருக்கலாம்!
இங்கேயே இருக்கலாம்னா,வேற என்ன வேலை எனக்குத் தெரியும்?
இனிமே ஊருக்குப் போகத் தான் முடியுமா?
என்ன அவமானம்?
அதற்குள் முத்தண்ணா பார்த்து விட்டான்...
பளார்னு கன்னத்தில அறை?
பளிச் பளிச்சென்று இன்னும் நாலு அறைகள்!
"அங்கே எல்லாரும் உன்னை தேடிண்டும்....அழுதுண்டும் இருக்கா...எங்கேடா,
போய் தொலைஞ்சே?"
அதற்கும் ஒரு அறை!
"சிக்ஸ்த் பார்ம் பெயிலாயிட்டேன்.....முத்தண்ணா! அதான்....."
"எவன்டா சொன்னான், நீ பெயில்னு? நீ பாஸ்டா!"
அப்படியே ராவ் பகதூர் தேசிகாச்சாரி சிபார்சுல, ஜாம்ஷெட்பூரில் டாடா கம்பெனீல
வேலைக்கு சேர்ந்து...படிபடியாக முன்னேறி ஒரு பொசிஷனுக்கு வந்தப்புறம் தான் அரியூர் வந்தேன்....
வந்தா,அம்மா எனக்கு கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்ணிண்டு இருக்கா....
"அம்மா...நம்ம அவயாம்பாளை கல்யாணம்...."
அம்மா இடி அடின்னு சிரிச்சா....
"ஏண்டா..தமாஷ் பண்றியா?"
"இல்லம்மா...அவ யாரு...ஒன்னோட உடப்பிறந்தான் பொண்ணு தானே?"
"அதுக்காக?"
"அண்ணா தான் ...இல்லேங்கல..அதுக்காக சம்பந்தம் பேசறதாவது....சாதாரண வைதீகன்...என்னவோ மன்னி பேருக்கு கொஞ்சம் சொத்து...பத்து இருந்ததோ...அதை வித்து மூணு பொண்ணை கரையேத்திட்டான்....பாரு...நாலாவது பொண்ணை அவனை மாதிரி ஒரு வைதீகனுக்கு கொடுக்கறச்சேயே அவனுக்கு நாக்கு தள்ளி போச்சு...இப்ப அஞ்சாவதா....அவயம்....ஊகூம்...நான் மாட்டேன்....ஒனக்கு ஒரு உசத்த இடம்....மைலாப்பூர்ல வக்கீலாத்து பொண்ணு சாவித்ரின்னு பேரு....அடக்கமான பொண்ணு..
அவாளே நம்மள தேடிண்டு வந்தா....நானும் அப்பாவும் பேசி முடிவு பண்ணிட்டோம்...நீ தாலி கட்ட வேண்டியது தான் பாக்கி!"
"அம்மா....அவயாம்பா தலைல அடிச்சு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேம்மா..."
"என்னடா...பொல்லாத சத்தியம்? நம்ம சந்தனாம்பாக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் பண்ணி,உன் சத்தியத்துக்கு பரிகாரம் பண்ணிடலாம்....போ....ஒனக்கு எது நல்லது பண்ணனும்னு பெத்தவளான எனக்கு தெரியும்...
கடைசியில் அம்மாவின் பிடிவாதமே வென்றது!
பட்டணத்தில் ஒரு சுப யோக சுப தினத்தில் சாவித்ரியின் கைத்தலம் பற்றினேன்....
அவயாம்பா கல்யாணத்திற்கு வரவில்லை....
அவ அப்பா ...அதான்...என்னோட மாமா...ராம தீக்ஷதர் வைதீக கோஷ்டியோடு மந்திரம் சொல்லிண்டு இருந்தார்...நம்பிக்கை துரோகம் பண்ணியதால், சாவித்ரியை விட மனைப்பலகையில் தலை குனிந்து கொண்டிருந்தேன்,நான்!
கல்யாணம் ஆன பிறகு, அரியூர் போனவன் தான்....
அதற்கு பிறகு வீட்டை காலி பண்ணிக் கொண்டு அப்பா, அம்மாவை அண்ணா சேலம் கூட்டிக். கொண்டு போய் விட்டான்...
அறுபத்தைந்து வருடம் கழித்து இப்போது தான் போய்க் கொண்டு இருக்கிறேன்..
............................
நான் அரியூர் போறேண்டா"
சொன்னவுடனேயே, எல்லாருக்கும் அவ்வளவு சந்தோஷம்!
கொஞ்ச நாளாவே, குசுகுசுவென்று
புள்ள,மாட்டுப் பெண்,பேரன்,அவன் பொண்டாட்டி எல்லாரும் கூடி கூடி பேசிக்கறா...ஜாக்கிரதையாக மெதுவாகத் தான் பேசிக்கறா..கிழத்துக்கு பாம்பு செவின்னு எல்லாருக்கும் தெரியும்..
பேரன் இந்த தடவை அமெரிக்கா போகும் போது அவன் அப்பா,அம்மாவை கூட்டிண்டு போகப் போறான் போல இருக்கு.இந்த extra luggage ஐ எங்கே விட்டுட்டு போறதுன்னு அவாளுக்குள்ள குளறுபடி...குழப்பம்!
இதுல மும்பைல எந்தம்பி அகத்தில் விட்டுட்டுப் போலாம்னு முதலிலேயே அவாளுக்குள்ளே ஏற்பாடு...இது அவன் காதுல எப்படி விழுந்ததுன்னு எனக்கு தெரியல...'கோபாலா....அங்கேயே கல்கத்தாவில் ஏதாவது பார்த்துக்கோ'கூசாம சொல்லிட்டான், அவன்..அங்கே அவன் நிலைமை அப்படி.....எனக்கோ உடன்பிறந்தானைப் பற்றி சொந்த புள்ளைட்ட கூட சொல்ல கூசறது...கௌரவமும் தடுக்கறது!
எப்பவுமே அரியூர் போறேன்னு சொன்னா,இவா எல்லாரும் விழுந்து விழுந்து சிரிப்பா....இப்ப கடகடன்னு,பேரன் ஏர்டிக்கெட் புக் பண்ணிட்டான்....கல்கத்தாலேர்ந்து,மெட்றாஸ் ....அங்கேர்ந்து திருச்சின்னு!
பையன் தன் பங்குக்கு,மாயவரம் லாட்ஜில் மூணு மாசத்துக்கு இடம் போட்டுட்டான்....எவ்வளவு சீக்கிரம் இடத்தை நான் காலி பண்றேனோ அவ்வளவுக்களவு எனக்கு இங்கே மரியாதைன்னு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு!
எப்படிடா ஒரு தொண்ணூறு வயசுக்காரன் அவ்வளவு தூரம் துணையில்லாம போவான்னு அவா யாருமே கேட்கலை...கேட்டா,"நீங்களா போறேள்? ப்ளேன்னா கொண்டு போய் விடறது" ன்னு பதில் வரும்ங்கறது எனக்கும் தெரியும்!
சாவித்திரி இருந்தா,எனக்கு இருக்கற மரியாதையே வேற!
ஆடை இல்லாத மனிதன்,அரை மனிதன்!
ஆம்படையா இல்லாத மனிதன் இந்த ஒலகத்துல, அரைக்கால் வாசி மனுஷன் கூட இல்லை!
என்ன பண்றது...பாழும் வயிறுன்னு ஒண்ணு இருக்கே....
'எல்லாத்தையும்' ஜீரணம் பண்ண!
எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன்..கேட்டுக்கோங்கோ...
இந்த பிராமணனுக்குத் தான் இப்படி...நமக்கு, நம்ம புள்ள....பொண்ணு எல்லாம் தங்க தாம்பாளத்தில் வச்சு காப்பாத்துவான்னு கனவுல கூட நினைக்காதீங்கோ....சிலருக்கு அந்த பாக்கியம் சீக்கிரம் வந்துடறது....ஒரு சிலருக்கு லேட்டா வர்ரது...அவ்வளவு தான்!
இதை என்னவோ சாபம் கொடுக்கறதா,நினைச்சுக்கப் படாது...
யதார்த்தம் ஸ்வாமி...இது தான் யதார்த்தம்
................
இதோ...இந்த பாழடைஞ்ச அக்ரஹாரத்தில் கீழ் கோடி வீடு தான் எங்க மாமாவோடது....ராம தீக்ஷதர்...அவர் சம்சாரம்...மத்த நாலு குழந்தைகள் எல்லாரும் போயாச்சு...அவ மட்டும் தனியா இருக்கா...
ஐயோ....அவளைப் போய் பைத்தியங்கறாளாம்....அவ சாப்பாட்டுக்கு....
பக்கத்தாத்து கோனார் எப்பவாவது ஒரு தயிர் சாத பொட்டலத்தை ஜன்னல் வழியா வீசுவாராம்...
அவ வீட்டை நெருங்கியாச்சு....
அவயம்....அவயம்....அவயாம்பா....
என்னை மீறி கத்துகிறேன்...
எப்படித் தான், இவ்வளவு சக்தி எனக்கு வந்ததோ?
கல்கத்தாவிலிருந்து....சென்னை....சென்னையிலிருந்து திருச்சி.....திருச்சீலேர்ந்து மாயவரம் லாட்ஜ்....வந்து கொஞ்சங்கூட ரெஸ்ட் எடுத்துக்காம.....அங்கேர்ந்து டாக்சி பிடிச்சு.....
அரியூர் வந்து....அந்த வெற்றிலை பாக்கு கடைக்காரனைக் கேட்டுண்டு....அவயாம்பாளைப் பார்த்துட்டேன்.......
அவயம்.....
அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை....நான் வந்திருப்பதை துளிக்கூட லட்சியம் பண்ணாமல் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு..மோட்டு வளையை வெறித்துப் பார்த்துக் கொண்டு......
கதவை தட்டுகிறேன்....
தானாகவே திறந்து கொள்கிறது...
போய் அவள் தோளில் முகம் சாய்ந்து கொண்டு அழுகிறேன்....
சலனமில்லை.....
அவயம்...அவயம்...அவயாம்பா......
தோளை குலுக்குகிறேன்....
ஊகூம்.....
கண்களில் சட்டென மின்னல்...
ஒரு புன்னகை கீற்று...
அவள் தலை மீது கை வைக்கிறேன்....
லொடக்கென்று சாய்ந்து விட்டது, தலை...
ஆ......இதென்ன?
நெஞ்சு இப்படி வலிக்கிறதே,எனக்கு!
கூடவே ஓயாத இருமல்.....
..........................................
..........................................
..........................................
சட்டென்று அசுர பலம் வந்து,இந்த வலி...மூப்பு எல்லாமே மறைந்து, அவயாம்பாளை தூக்கிக் கொண்டு நடக்கிறேன்.....
நீண்ட கணவாய் போல...
ஒரு பெரிய ஸ்டீம் எஞ்ஜின் வெளிச்சம்....
என்னை வழி காட்டிக் கொண்டே செல்ல, செல்கிறேன்......
பெரிய வெளிச்சம் மறைந்து கொண்டே வந்து....
கொஞ்சம் கொஞ்சமாக கும்மிருட்டு எங்களை ஆட்கொள்ள.....
வெளியே பேச்சுக் குரல்...கொஞ்சம் சன்னமாக...
"ஆமாம்...இந்த வயசானவரு தான் அந்த பைத்தியக்கார பாட்டி ஊட்ட விசாரிச்சாரு..அந்த ஊடு எப்ப பார்த்தாலும் பூட்டியிருக்குமே!...அட.....ரெண்டு பேருமே......"
கணவாய்.....குகை.....கும்மிருட்டு....
ஊகூம்......
நினைவு தப்பி விட்டது,எனக்கு!!
...............................................................................................