Wednesday, August 31, 2011

(3) குறளும், குறுங்கதையும் !!!!


இது கதையல்ல நிஜம்!
நேற்று இரவு..அதாவது 31.08.2011 இரவு எட்டு மணி வாக்கில்.. சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
செல்ஃபோன் அடிக்க,
“ மீனா...விஷயம் தெரியுமா? நம்ம சத்திக்கு ஆக்சிடெண்ட்..ஸ்பாட்லேயே...”
அழுகின்ற குரல் இங்கு நன்கு கேட்டது..
“ ஐயையோ..என்னம்மா இது? விளக்கமா சொல்லு?”
“ ஆறரை மணி வாக்கில மோட்டார் சைக்கிளில வெளியில ஃப்ரெண்டை பாக்க கிளம்பும்போது...யாரோ டவுன் பஸ் காரன் அடிச்சுட்டு...”
”என்னப்பா ..யாருக்கு என்ன ?”- நான்.
“ நம்ம சத்தி...”
அதற்கு மேல் எனக்கு விளக்கம் தேவையில்லை..சத்தி ரொம்பவும் நல்ல பொறுப்பான பையன்..எனது ஷட்டகரின் தம்பி..உறவை மீறிய நட்பு!...அன்பான மனைவி..சின்னஞ்சிறு பெண் குழந்தை...எல்லாரையும் இப்படி தவிக்க விட்டு விட்டு எப்படியடா மனம் வந்தது? .
ஆண்டவா நீ இவ்வளவு மோசமானவனா?
ஆறு மணி வரை படு கேஷுவலாய் டிவி. பார்த்துக் கொண்டிருந்தவன்..அடுத்த அரை மணி நேரத்தில் இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..........


குறள் :
ஒரு நாழிகை முன் உளனொருவன் இனி இல்லையெனும்,
சிறுமை உடைத்து இவ்வுலகு.


Friday, August 26, 2011

(2) குறளும், குறுங்கதையும் !!!!



அந்த அஞ்சாம் க்ளாஸ் ஆசிரியர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
காலாண்டு தேர்வு முடிந்து கடைசி நாளன்று இவ்வாறு சொன்னார்:
” புள்ளைங்களா? லீவ் முடிஞ்சு, ஸ்கூல் வரும் போது, கேள்வித் தாள்களுக்கு பதில் எதுவும் எழுதிட்டு வர வேண்டாம்..எந்த கட்டுரையும் எழுத வேண்டாம்...சிம்பிளா ஒண்ணே ஒண்ணு!
லீவில, என்ன ’ஹோம் ஒர்க்’னா,கடவுள எல்லாரும் பார்த்துட்டு வாங்க..உங்க அனுபவத்தை நீங்க சொன்னா போதும்..அதையும் ஒரு பக்கம்...ஒண்ணரை பக்கம்னு எழுத வேண்டாம்..வெறுமன...வாயால சொன்னாப் போதும்..”
உய்யென்று ச்ந்தோஷமாய் கத்திக் கொண்டு ஓடின பிள்ளைகள், இன்று தான் ஸ்கூலுக்கு வந்திருக்கின்றன..
ஆசிரியர் ஒவ்வொருவரையும் கேட்க ஆரம்பித்தார்.
“கோபு.. நீ கடவுளப் பார்த்தியா?”
“ பார்த்தேன் சார்..லீவுக்கு திருச்சி போயிருந்தேன்..அங்கே, உச்சிப் பிள்ளையார் சாமியைப் பார்த்தேன்”
“ பாபு... நீ?”
“ சார்... நான் சென்னை போயிருந்தேன் சார்...அங்க பார்த்தசாரதி கோவில்ல..பெருமாளைப் பார்த்தேன்..”
“ சீனு?”
“ சார்.. நான் லீவுக்கு எங்கேயும் போகலை..ஆனா.. நம்மூர் சாமியை வெள்ளிக்கிழமை போய் பார்ப்பேன்..”
” ரகு... நீ கடவுளப் பார்த்தியா?”
“ சார்... நான் பார்க்கலை சார்?”
” ஏம்ப்பா?”
“ சார்.. நான் எந்த ஊருக்கும் போகலை..உள்ளூரில போயும் சாமியைப் பார்க்கலை..ஆனா, சாமியைப் பார்த்தவனை நான் பார்த்தேன்..சார்..”
“ என்னப்பா சொல்றே?”
“ அம்மா..தீனி வாங்கிக்க காசு கொடுத்தாங்க..தீனி வாங்க கடைக்குப் போறப்ப, ஒருத்தர் பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தார்..அவரைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்துச்சு.. நான் அம்மா தந்த காசுக்கு ஒரு பன் வாங்கி, அவர்ட்ட கொடுத்தேன்..அப்ப அவர் கண்ணைப் பார்க்கணுமே? அந்த கண்ணில நான் சாமியைப் பார்த்தேன், சார் ”
ரகுவை அப்படியே ஆசிரியர் கட்டிக் கொள்ள, ஒவ்வொருவராய் கை தட்ட ஆரம்பிக்க, அந்த கரகோஷம் அடங்க முழுசாய் ஐந்து நிமிடம் ஆகியது!!!

குறள்:

அரிசி,உப்பு,புளி,பருப்பு,எண்ணெய் இவ்வைந்தும்,
பஞ்சாட்சரமாகுமாம் பசித்தவர்க்கு.

Wednesday, August 24, 2011

(1) குறளும், குறுங்கதையும் !!!


(முன் குறிப்பு: திருக்குறள் கதைகள் என்று அந்த காலத்தில் ஆனந்த விகடனில் வந்தது, உங்களுக்கு நினைவிருக்கலாம்.இது அது போல் அல்ல! ஆனால், இதற்கு நீங்கள்ஆதரவு அளித்தால், தொடர்வேன் நிச்சயமாய்)
* * * * * * * * * * * *

ஒரு சந்தோஷ சமாச்சாரம்!
ஆனாலும் சுணங்கியே கிடந்தான், சுந்தர்.
ஆஃபீஸில் உள்ள அனைவருமே அவனைப் பாராட்டினார்கள். கொடுத்த ஸ்வீட்டுக்கு நன்றி கூறினார்கள்.இருந்தாலும் எதையோ பறி கொடுத்தவனைப் போல் இருந்தான், சுந்தர்.
”என்ன சுந்தர்..கங்க்ராட்ஸ்.. அந்த காலேஜ்ல பையனைச் சேர்த்தியே...அங்க தான் நிறைய கம்பெனிங்க காம்பஸ் இண்டர்வ்யூக்கு வருவாங்களாம்...வேலையைப் பற்றி கவலை இல்லையாம்”
”.....ம்...”
“ என்னப்பா, ஜாலியா இருக்க வேண்டிய நேரத்தில சோகமா இருக்கே? சிஸ்டர்க்கு உடம்பு சரியில்லையா?”
“ அதெல்லாமில்லப்பா”
“ அப்ப சொல்லு, உம் பிரச்னை தான், என்ன?”
” ஐந்து லட்சம் கேப்பிடேஷன் கேட்டாங்க..”
“ கொடுத்துட்டே இல்ல..”
“ இல்லப்பா..ஒரு பத்து உதைக்குது..என்ன பண்றதுன்னு தெரியலே!”
“ இப்ப யார்ட்டப்பா இருக்கும்..எல்லாரும் அட்மிஷன்ல இருப்பாங்க..அதுலேயும் மாசக்
கடைசி வேற..”
” என் கிட்ட இல்லப்பா..”
“ ஸாரிடா..கண்ணு...”
“ ஸாரிடா ராஜா..சிஸ்டர் கல்யாணத்துக்கு இப்பத் தான் பிஃப்லேர்ந்து எடுத்துட்டேன்”
அவனை ஒத்தவர்கள்..அவனை விட நிறைய சம்பளம் வாங்குபவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய் கழன்று கொள்ள.....
மிஞ்சியவர்கள் அவனும், கணேசனும் தான்!
கணேசன் ஒரு அட்டெண்டர்..குறைச்ச சம்பளக் காரன்!
” கவலையேப் படாதே, சுந்தர்..பத்து ரூபாய் தானே..ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணு. நான் தரேன் உனக்கு”
சொன்னார்போல் அடுத்த அரை மணியில் பத்தாயிரம் ரூபாய் பணத்துடன் வந்தான், கணேசன்.
ஆனால், அவன் காதில் உள்ள கடுக்கன்கள் மிஸ்ஸிங்!
சுந்தர் பரிதாபமாய் அவன் வெற்றுக் காதுகளைப் பார்க்க, கணேசன் சொன்னான்..
“ கடுக்கனை அடகு வைச்சேன்..பையனைப் போய் சேர்த்துட்டு வா, ராஜா..இப்ப இதுவா முக்கியம்..இரண்டு மாசம் கழிச்சு நீ காசு தந்தா, மீட்டுட்டுப் போறேன்”
அவன் கைகளை அப்படியே எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டான், சுந்தர்.

குறள் : உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே,
கடுக்கன் களைவதாம் நட்பு!

Thursday, August 18, 2011

ஒபாமாவும், நானும் !


பஸ். அதிலுள்ள நாற்பது பேர்களில் நானும் ஒருவன்!
பக்கத்து சீட் காரரின் செல் கிளிக்கியது.
இங்கு நான் என் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.
..பக்கத்து வீட்டுக்கு வந்த கடிதம்..பக்கத்து வீட்டுச் சண்டை..இதையெல்லாம் கேட்பதோ..பார்ப்பதோ கொஞ்சம் கூட நாகரீகமற்ற செயல் என்றாலும் நாம் நியாண்டர்தால் மனிதன் காலத்திலிருந்து இதைத் தான் செய்து கொண்டுதான் இருக்கிறோம்,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்! அந்த வரிசையில் இப்போது செல்ஃபோன் பேச்சும் சேர்ந்து விட்டது! கேட்க வேண்டும் என்ற விருப்பு இல்லாமலிருந்தாலும் அது நம் காதுகளில் விழத் தான் செய்கிறது.. நம் மக்களுக்கும் கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் அந்தரங்கத்தையெல்லாம், அரங்கிற்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்! நாமும் அந்த கண்ராவிகளை எல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டி இருக்கிறது..
செல் ஃபோன் தொடர்ந்தது.
“என்னப்பா..ஆளையே காணோம்..ரிடய்ர்டாயிட்டா அவ்ளோவ் தானா?”
”அதில்லை ஸார்......கொஞ்சம் பிசி.. மாதங்கி என்ன பண்றாங்க?
”LKG சேர்த்தாச்சு..உம் ரெண்டாவது பொண்ணு என்ன பண்றா?”
“அவளும் அமெரிக்கா போயாச்சு..”
“ ரெண்டு குழந்தைகளையும் அமெரிக்கா அனுப்பிட்டு.. என்ன மனுஷன்பா நீ?”
“ அட நீங்க ஒண்ணு.. நம்ம ஊர் கோயமுத்தூர் போறதும் ஹூஸ்டன் போறதும் ஒண்ணு தான்! கோயமுத்தூர் போனா செல்லில் பேசத் தான் முடியும்..ஹூஸ்டன்னா..இங்க ஸ்கைப்ல பார்த்துக்கலாம்!”
”அப்புறம்”
“படிக்கணும்னு ஆசைப் பட்டா..இனிமேல் உங்க ரெண்டு பேருக்கும் ஒபாமா தான் ஒப்பா..அம்மான்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டு அனுப்பிச்சுட்டேன்”
”என்னமோப்பா”
...மனுசன் நகைச்சுவை உணர்வு உள்ளவர் போல இருக்கிறது..ஒபாமா என்றவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது..
அசட்டுத் தனமாய் உடம்பு குறைவதற்கு நாம எல்லாரும் பாடுபடுகிறோமே..அதற்கு பதிலாய் ...
இப்படி செய்தால் என்ன?
எப்படியாவது BMI ஐ அதாவது BODY MASS INDEX மெயிண்டெய்ன் பண்ணனும்.அதுக்கு எதுக்கு உடம்பைக் குறைக்கணும்..கொஞ்சம் வித்யாசமா யோசிக்கலாமே.?
என்ன பண்ணலாம்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப சிம்பிள்..உடம்பைக் குறைக்கறதுக்குப் பதிலாய், உயரத்தை ஜாஸ்தியாக்கினா என்ன?
ஏன்...ஏன்...ஏன்.. அட ஏன் சார் இதுக்குப் போய் முறைக்கிறீங்க? நான் சொன்னதைத் தான் ஒபாமாவும் சொல்றார்..செலவைக் குறைக்க முடியாது..கடன் வேணா கூட வாங்கலாம்னு..அதைப் போய் பெரிசா பேப்பரில போடறீங்க.. நான் சொன்னா மட்டும் இப்படி கோச்சுக்கிறீங்களே?...
முனியாண்டி விலாஸ் மூட்டைப் பூச்சி கூட முட்டை பரோட்டா செய்கிறார் போல...
பக்கத்து சீட்டில் நகைச்சுவை உணர்வுடன் ஒருவர் அமர்ந்தாலே, நமக்கும் அது தொற்றிக் கொண்டு விடுகிறதே?
இன்னமும் அந்த நகைச்சுவை மனிதர் நண்பருடன் செல்லில் பேசிக் கொண்டு இருக்க..
அவரை அப்படியே அம்போ என்று விட்டு விட்டு, நான் மட்டும் பஸ்சை விட்டு இறங்கினேன், மனதை கல்லாக்கிக் கொண்டு!
ஏனென்றால், நான் இறங்கும் ஸ்டாப் வந்து விட்டது!!

"அது சரி..உம்

Sunday, August 14, 2011

முதல் கவிதை!!


பட்டத்தைப் பறக்க விட்டு,
பரதேசி போல் முடி வளர்த்து,
பக்கவாட்டில் கிருதாவைப்
பாங்குடனே வளர்த்து விட்டு,
இஞ்சி தின்ற குரங்கு போல்,
எப்போதும் முகம் தொங்கி,
கடை வீதி நடந்து சென்றால்,
ஜவுளிக் கடை பொம்மை கூட
சட்டென்று திருப்பிக் கொள்ளும்!
(மீள் பதிவு)

Saturday, August 13, 2011

இன்னும் ஒரு பெரியார் வேண்டும்!



இன்னும் ஒரு பெரியார் வேண்டும்,
இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்..
பகுத்தறிவு பாசறை மூடியிருப்பதால்..
போக வழி தெரியாமல்
பிரச்னைகளைக் கொட்ட..
கோவிலுக்கு வந்து விடுகிறார்கள்..
அது என்ன கோவிலா.
.குப்பை மேடா?
இதில் பேரம் வேறு!
மேலும்,
சாமியைப் பார்க்க,
கட்டண சேவை!
கசாப்புக் கடையில் கூட,
கொசுறு கிடைக்கும்..
ஆனால்,
கோவிலில் கிடைப்பதில்லை..
கேட்டால் பூக் காண்ட்ராக்ட்,
முப்பது லட்சமாம்..
எங்கே சொல்ல..
நூறு ரூபாய் கொடுத்து,
தரிசனம் செய்து ..
மீண்டு வந்தால்,
மிஞ்சுவது..
நெஞ்சில் வேர்வை
மட்டும் தான்!!
ஆகவே இனி ஒரு பெரியார்
வந்து பகுத்தறிவு
வாசலைத் திறந்தால்..
பாதிக்கு மேல் ஓடி விடும்
பக்தர்கள் கும்பல்!!!

Tuesday, August 9, 2011

ஏ.கே.47 ம், கடவுளும்!!!


ராமன் கையில் வில்,
காளி கையில் திரிசூலம்,
விஷ்ணுவிற்கோ சக்ராயுதம்,
முருகன் கையிலோ வேல்,,
அனுமனுக்கு கதை,
பட்டாக் கத்தியுடன்
எல்லைத் தெய்வம்..
பக்கத்திலொரு குதிரை..
அதனருகில் தொப்பியணிந்த
துரைசாமி தெய்வம்,
கையிலோ .303 ரைபிள்!
எல்லாவற்றையுடன்
கண்டவுடன் என்னுள்,
எழுந்ததே கேள்வி....
ஏ. கே. 47 வுடன்,
ஏன் இன்னமும் ஒரு
தெய்வத்தைப் படைக்கவில்லை,
மனிதன்???????????

Thursday, August 4, 2011

" ஒரு சிகரெட்டின் கேள்வி?’’


என் உயிரினும் மேலான இனிய உலக மக்களே

என்னை எறிவீர்களா???????
அல்லது,
என்னுடன் எரிவீர்களா!!!!!

இப்படிக்கு,
xxxx

Tuesday, August 2, 2011

காத்திருத்தல்!!!

” இது வாணாம் போ ”
சின்னஞ்சிறு குழந்தையால்
புறந்தள்ளப் பட்ட அதற்கு
அழக் கூடத் தெரியவில்லை..
அதனால்,
நிராகரிக்கப் பட்ட அது,
இன்னொரு குழந்தைக்காக,
காத்துக் கொண்டு இருக்கிறது,
பொறுமையாய்........