Tuesday, August 29, 2017

நடந்தது ஒன்று! புரிந்தது ஒன்று!!


வேறு எதையும் வளர்க்கப் பிடிக்காமல் வெறும் தாடி மட்டுமே வளர்த்துக் கொண்டு,வெட்டியாகப் பொழுதை கழிக்கும் கணவனை ஏவினாள்,மனைவி. 
"த்தா....சும்மாத் தானே தின்னூட்டுக் கீறே...அப்பால மளிகை கடைக்குப் போயி, கொஞ்சம் பெருங்காயம் வாங்கியா!"
கணவனும் வெகு சிரத்தையாய் பெருங்காயம் வாங்கி வந்தான்...
ஆனால், என்ன ஒரு பரிதாபம்....துளிக்கூட பெருங்காய வாசனையே அந்த பாலீதீன் பையிலிருந்து வரவில்லை..அத்துணை கலப்படம்!
"த்த்த்த்தூ....இன்னா மனுஷன்யா,நீயி! இதுவாடா பெருங்காயம் ...யீ!"
முகத்தில் பெருங் காயம் ஏற்படுத்துமளவிற்கு வீசி எறியப்பட்ட அந்த பாலீதீன் பையுடன் மறுபடியும் அந்த கடைக்கு ஓடினான், அந்த ஆசிர்வதிக்கப்பட்ட கணவன்!
கடைக்கார கபோதியை பார்த்ததும்,அவன் வாய் அநிச்சையாய் சத்தம் போட்டது...
       காயமே இது பொய்யடா!
       வெறும் காற்றடைத்த பையடா!!
இந்த வார்த்தைகள் இன்னொரு வேலை வெட்டி இல்லாத தாடி காதில் விழுந்தது!
        ஆஹா......இந்த நிலை இல்லாத உடம்பை பற்றி என்ன ஒரு ஞான அலசல்!
      "யாக்கையைத் தானே கூறுகிறீர்கள்,சாமி!"
       இவனுக்கு, வெந்த புண்ணில் விரட்டி விரட்டி கொத்தும் மனைவி என்கிற அந்த கார்க்கோடக காக்கை ஞாபகம் வரவே, ஆமென பரிதாபமாக தலை அசைக்க...
       "நிலையாமையைப் பற்றி அரை நிமிட நேர மட்டில் அலசின ஞானத் தங்கமே ..  " என அவன் ஆர்ப்பரிக்க,
          சித்த நேரத்தில் சித்தனானான், இவன்!

Monday, August 28, 2017

வருமான வலி!

"....சார் வாங்க..”
“இங்க காம்போதி கனக சபைங்கிறது..”
“கனக சபை நான் தான்.மற்றபடி காம்போதி ராகம் கொஞ்சம் சுமாரா வாசிப்பேன்..அதனால கூப்பிடறாங்களோ ...என்னவோ..”
“ இல்ல சார்..போன மாசம் நாரத கான சபாவில நீங்க காம்போதியை பிச்சு உதறி காயப் போட்டீங்கன்னு கேள்விப் பட்டேன்..”
“அதெல்லாம் சும்மா..யாரோ பொறாமையில சொல்வாங்க..”
”அப்படி இல்ல சார்..தோடி ராஜரத்னம் பிள்ளைக்கு அடுத்தது ராகத்தோட வித்வானைக்கூப்பிடறது உங்களத் தான்னு ஊரே சொல்லுதே..”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்..எனக்கு புகழ்ச்சி பிடிக்காது..யாராவது என்னை புகழ்ந்தாங்கன்னா..’டேய் சபே, நீ நிஜம்மாலும் அவ்ளவோ பெரிய ஆளான்னு..”தனியா ரூம்ல உட்கார்ந்து அழுவேன்..சார் நான்”
”ஓ!"
"திருச்சி வன்னி மரத்தடி வினாயகர் கோவில்ல கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க..ரொம்ப ஜோரா  போச்சுல்ல அது..அங்க வாசிச்ச தேனுகா ரொம்ப சூப்பர்... பேசின தொகைக்கு மேல பத்தாயிரம் கூட கொடுத்தாங்க..அவங்க மனசு கஷ்டப் படக் கூடாதுன்னு ரொம்ப கஷ்டப் பட்டு வாங்கினேன் அத..”
“சபால எல்லாம் எவ்ளவ் தருவாங்க..”
“சார்..சும்மா சொல்லக் கூடாது..அறுபதாயிரத்துக்கு குறைஞ்சு எங்கேயும் ஒத்துக்கிறது இல்ல..கல்யாண கச்சேரிக்கு எல்லாம் போறதுல்ல..உங்கள மாதிரி வேண்டப் பட்டவங்க கூப்பிட்டாத் தான் ஒத்துப்பேன்..
அய்யலூர் ஜமீந்தார் பேத்தி கல்யாணத்துல நான் வாசிச்ச பைரவிக்கு ஒரு ரத்ன ஹாரமே சபைல போட்டு கெளரவிச்சார்..”
” அப்ப நான் வரேன்..’
“ என்ன சார் திடீர்னு போறீங்க.. கச்சேரி பேச வல்லியா ஆமா நீங்க யாரு?”
“இன்கம்டாக்ஸ் ஆஃபீஸர்!”
“ சார்..சார்..சும்மா சொன்னேன் சார்...ஒருத்தனும் தேங்கா மூடி கூட கொடுக்கிறதில்ல.. நீங்க ஏதாவது வரி ..கிரி ..போட்டீங்கன்னா, கடன் வாங்கித் தான் சார் கட்டணும்..சார்...சார்...”

Sunday, August 27, 2017

காலம் மாறலாம்..கௌரவம் மாறுமோ? நெவர்!

"என்னை என்ன 'ஹென் பெக்டு'ன்னு  நினைச்சியா?ஒன் லாக் பென்ஷன் வாங்கறவன்டா, நான்..ஒன் லாக் பென்ஷன் இங்க ஒங்கப்பனைத் தவிர எவனுக்கு  வர்றது?"
ப்ரஸ்டீஜ் பத்மனாப ஐயருக்கு இன்னொரு பெயர் துர்வாசர்..எதற்கெடுத்தாலும் முணுக் முணுக்கென்று கோபம் வந்து விடும்..அதுவும் இந்த முதுமையில் ...அதுவும் .சாவித்ரியை அக்னிக்கு காவு கொடுத்த பின்,தன் இருப்பை காண்பிக்க  அவருக்கு இந்த கோபம்  மிக மிக தேவையாக இருந்தது.
"அப்பா,என்ன சொல்லிட்டேன்னு இப்டி கோச்சுக்கறேள்..ஒங்க நல்லதுக்குத் தானே.."
"என்னடா,எனக்கு நல்லது?பொண்டுகள் புழங்கற இடத்துல, தாழ்ப்பாள் போடாம குளிக்கச் சொல்றே? அறிவிருக்காடா நோக்கு?"
"அப்பா ப்ளீஸ் கத்தாதேள்...இந்த பாத்ரூம் ப்ளோர ஒட்டின கடங்காரன் சொல்ல சொல்ல கேட்காம, வழவழன்னு டைல்ஸ் பதிச்சுட்டான்..வழுக்கி விழுந்துடப் போறேள்னு தான்...தவிர, பாத்ரூம் பக்கத்து ரூமுக்கு யாரும் வர மாட்டா..அதனால தான்.."
"அப்ப நான் பாத்ரூம்ல வழுக்கி விழணுங்கறது தானே  நீ எதிர்பார்க்கிற?"
கிழட்டு சிங்கம் கர்ஜித்தது.
"ஐயோ..அப்பா..எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சுக்காதேள்..ப்ளீஸ் .."
"போடா Fool!"
"தாத்தா,அப்பாவை முட்டாள்னு சொல்லாதேங்கோ?"
"ஆமா...பெர்ரீய மனுஷன் அப்பனுக்கு வக்காலத்துக்கு வந்துட்டான்..எனக்கு முன்னாடி ஒனக்கு ஒங்கப்பனை தெரியுமாடா?"
"ஆமாம்...ஒங்களுக்கு முன்னாடி,எனக்கு எங்கப்பாவைத் தெரியும்..என் முன்னாடி,எங்க அப்பாவை  நீங்க ஒண்ணும் சொல்லக் கூடாத்"
"ஓ!"
அந்த 'ஓ' வில் இப்போது இளக்காரம் இல்லை..கோபம் சட்டென பஸ்பமாகி,அன்பு அங்கு விஸ்வரூபமெடுத்து, பெரியவரின் விழிக்கற்றைகளில் கண்ணீர் துளிகளாய்  இறங்க....
இதற்கான என் குறள்:
....................................
அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்,மற்றெல்லா
பண்பிற்கும் அதுவே தலை!
(என் குறள்; என் கதை யிலிருந்து ....)


.........

Friday, August 25, 2017

ஆசை...தோசை....


"நம்மள மாதிரி, கிச்சன் எங்கேன்னா, எதிர்த்த வூட்லேர்ந்து, கிச்சன்ங்கற பையனை கூட்டிண்டு வர ஒரு ஆளு அசந்தர்ப்பமா தோசை வார்க்க ஆரம்பிச்சான்..."
"அட......startinங்கே சூப்பரா இருக்கே...சொல்லு"
"கேஸ் அடுப்பை பத்த வச்சான்...பத்த வச்சானா..."
"அதான் பத்த வச்சுட்டானே..மேல சொல்லு"
"மாவை நல்லா கலக்கி...ச்ச்சொய்ய்ங்ங்னு தோசை கல்லில் ஊத்தினான்.."
"அப்றம்?"
"அப்றமென்ன...face bookல ஒரு status போட்டுட்டு,அடுப்பை பார்த்தா.."
"பார்த்தா?"
"தோசை எடுக்க வரலை...புதுசா கல்யாணமான பொண்ணு பொறந்த வீட்டுக்குப் போனா மாதிரி,
தோசை, கல்லுல பச்ச்சக்க்னு ஒட்டிண்டு, எடுத்தா கல்லும் கரண்டியோட வரது..."
"அடேடே....அப்றம்?"
"அப்றமென்ன...கல்லு மேல மூடி ஒண்ணு போட்டு மூடினான்..."
"அப்றம்?"
"பெருமாள் கோவில்ல சடாரி வச்சா எப்டி இருக்கும்? நமக்கு மனசு குளிரும்...ஆனா, மாவுக்கு 
மனசு குளிரல...இப்ப தோசை கரண்டிய தூக்கினா.."
"தூக்கினா?"
"கரண்டி அடுப்பையே தூக்கிண்டு வரது!"
"அப்றம்?"
"இதை பார்த்துண்டு இருந்த தேவதை ஒண்ணு,அவன் கிட்டேர்ந்து கரண்டியை வாங்கி தோசை வார்க்க ஆரம்பிக்க..."
"பலே...கேட்கவே ஜோரா இருக்கே...மேல சொல்லு.."
"தேவதை நம்ம ஆஞ்சலினா ஜூலி மாதிரி வெள்ளை வெளேரென்று ஒரு தோசை வார்த்து,அவனுக்கு கொடுத்தது.."
"அவன் என்ன பண்ணினான்?"
"நம்மாளு ஒரு கர்ட்டஸிக்கு  கூட தேங்க்ஸ் சொல்லாம, கம்னு அந்த தோசையை வாங்கி, ஹாட் பேக்ல போட்டான்"
"ம்ம்....அப்றம்?"
"தேவதை பொறுமையா இரண்டாவது தோசையையும் வார்த்து அவனிடம் கொடுத்தது...இது கொஞ்சம் ஸில்க் ஸ்மிதா மாதிரி கருகின கலர்ல இருந்தது.,"
"நம்மாளு என்ன பண்ணினான்?"
"இந்த தோசையையும் எடுத்து ஹாட் பேக்ல போட்டான்!"
"அப்றம்?"
"அப்புறமென்ன?தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன் மாதிரி, அந்த தேவதை நம்ம ஜெயமாலினி மாதிரி ஒரு உப்பின தோசையை வார்த்து இப்ப கொடுத்தது.."
"அதையும் அவன் வழக்கம் போல,ஹாட் பேக்ல வச்சிட்டு, நாலாவது தோசைக்காக காத்துகிட்டு இருந்திருப்பானே?"
"ஆமாம்...ஆனா, அந்த தேவதை நாலாவது தோசை வார்க்க வில்லை.,அது கடுப்பாகி கேஸ் சிலிண்டரை தூக்கிண்டு பறந்து போயிடுத்து...இதுலேர்ந்து உனக்கு என்ன தெரியறது?"
"ஆபத்து காலத்துல, நாம கஷ்டத்துல இருக்கும் போது, நமக்கு வாலண்டியரா வந்து ஹெல்ப் பண்றவங்களுக்கு வாய் நிறைய நன்றி சொல்லணும்...அப்டி சொல்லாட்டி..."
"சொல்லாட்டி?"
"இருக்கிற ஹாட் பேக்கும் பறந்து போயிடும்.....மூணு தோசைகளோட!"
...

Thursday, August 24, 2017

நேத்து ராத்திரி சும்மா!

"நேத்து ராத்திரி சரியா பன்னிரெண்டு மணிக்கு,எங்க பெட்ரூம் கர்ட்டனுக்கு அந்தப்புறம்.."
"அந்தப்புறம்?"
"வெள்ளையா நர்ஸ் மாதிரி ட்ரஸ் போட்டுகிட்டு,ஒரு உருவம்.."
"ம்"
"முதல்ல எம்பொண்டாட்டி தான் அத்தை நோட் பண்ணினா?"
"பண்ணி?"
"பலமா குறட்டை விட்டு தூங்கிகிட்டிருந்த என்னைய எழுப்பினா.."
"எழுப்பி?"
"அந்த வெண்ணிற ஆடை உருவத்தை காமிச்சா?"
"காமிச்சு?"
"காது கிட்ட முணுமுணுன்னு மந்திரம் ஓதினா?"
"ஓதி?"
"அந்த தேவதை காலில் இருக்கிறா மாதிரி கொலுசு வேணும்னா..."
"அச்சச்சோ,நீ என்ன பண்ணே?"
"அதிர்ச்சியில், மயங்கி விழுந்தேன் .."
"ஏன்?"
"நேத்தி ஈவ்னிங்  தான் அவளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு கொலுசு வாங்கி கொடுத்தேன்..மறுபடியுமாங்கற அதிர்ச்சி தான் !"