ஒரு சாவகாசமான மாலைப் பொழுது....
புழு ஒன்றுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
"ஆமாம் ....நீ யார்?"
"நான் மனிதன்..."
"இன்னும் சொல்லலாமே..."
"நானா....வடமன்...திருச்சி ஜில்லா...பூர்வீகம் லால்குடி பக்கமுள்ள அரியூர்....வைஸ்வாமித்ர,
தேவராத,ஔதல என்கிற மூன்று ரிஷிகளின் வழி வந்தவன்..ஆனால்..."
"என்ன ஆனால்?"
"கொஞ்ச நாள் முன்னால் கண்டம் விட்டு கண்டம் போய் வந்தேன்...அதனால்....."
"என்ன அதனால்?"
"தினுசு,தினுசாய் மனிதர்கள்.....பிரிட்டன்,சைனா,ஜப்பான்,ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து,
வந்த வெவ்வேறு இன, மத,கலாச்சார மனிதர்கள்.....அவர்களை எல்லாம் பார்த்த போது,,,"
"பார்த்த போது?"
"என்னை அரியூர்,ஆங்கரை,திருச்சி,இந்தியா என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அறிமுகப் படுத்திக்
கொள்ள விரும்பவில்லை....என்னை ஒரு International citizen என்று சொல்லிக் கொள்ள ஆசை!"
"நான் கூட இந்த பிரபஞ்சத்தில் ஒரு பிரஜை!....அது சரி...உனக்கு சொந்த பந்தம்?"
"பெற்றோர்....உற்றார்.....உறவினர் ...என்று ஏகப்பட்ட பேர் எனக்கு,உனக்கு?"
" இப்பூமியில் உள்ள அத்தனை ஜீவன்களும்..."
விஷமக் கார புழுவாக இருக்கும் போல இருக்கிறதே....நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும்...
மௌனத்தை கலைத்தது புழு.
"வீடு,வாசல்?"
"ஆரண்ய நிவாஸ் என்று பெயர் என் வீட்டிற்கு....நிஜமாகவே ஆரண்யம் தான்...எக்க சக்க
பழ மரங்கள்..."
"போதும்....நிறுத்து.....ஒரே அருவருப்பாக இருக்கிறது..."
சட்டென ஒரு மின்னல் என்னுள்....இந்த பிரபஞ்சத்தில் எனக்குள்ள அத்தனை உரிமைகளும்
அதற்கும் இருக்கிறது..உயிர்களுக்குள் என்ன பேதம்? அவரவர் கர்ம வினைப்படி நான் மனிதனாக,
அது புழுவாக பிறந்திருக்கிறோம்...அவ்வளவு தான்...
தெளிவு பிறந்தது என்னுள்....என்னை நானே உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்...
"புழுவே....உன்னிலும் தாழ்ந்தவன் நான்..." என்றேன் நாத் தழுதழுக்க..
"அட மனுஷா...இன்னுமா அந்த 'உன்னிலும்' மை விட வில்லை நீ?"
குலுங்கி..குலுங்கி சிரித்தது அந்த பொல்லாத புழு!