Saturday, February 27, 2010

சிறுத்தை கடித்து ....


"சிறுத்தை கடித்து பிழைத்தவனும் இருக்கான்...செருப்பு கடித்து செத்தவனும் இருக்கான் " என்றார் நண்பர், நான் சொன்ன ஜோக்கைக் கேட்டதும்!
பாவம், என் பேச்சு அவரை அந்த பாடு படுத்தி இருக்க வேண்டும்!!
எதற்கு இதை சொல்கிறேன் என்றால்.. பேச்சு அவ்வளவு வலிமையானது. பதினான்காம் லூயியின் மனைவி சொன்ன வார்த்தை தானே பிரஞ்சு புரட்சிக்கே ஆரம்பம்.
அப்படி அவள் என்ன தான் சொன்னாள்?
அம்சதூளிகா மஞ்சத்தில், மேரி ஆண்டனாய்ட் படுத்துக் கொண்டே, நாவை சுழட்டி மேலே தொங்கிக் கொண்டிருந்த திராட்சை கனிகளோடு விளையாடும் போது அவள் எரிச்சல் அடையச் செய்த கூக்குரலை கேட்டு அங்கு என்ன சப்தம் என்று வினவ, அதற்கு மந்திரி 'மக்கள் BREAD க்காக போராட்டம் நடத்துகிறார்கள்' என்று சொல்ல, அதற்கு அந்த மகாராணி திரு வாய் மொழிந்தாளாம்:
" IF THEY DON'T HAVE BREAD, LET THEM TAKE CAKES"
எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றியது போல ஆயிற்று அவள் பேச்சு!
வேறு சில பேச்சுக்கள் நிலைமையை தலைகீழாய் மாற்றி விடும். ஜூலியஸ் சீசர் அவருடைய நண்பர் புரூடஸால் கொலையுண்டபோது, அவருடைய இன்னொரு நண்பர் ஆண்டனி பேசிய பேச்சு தானே சூழ்நிலையை தடம் புரட்டியது!
சில பேச்சுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை..உதாரணம். ஆப்ரஹாம் லிங்கனின் "கெட்டிஸ்பர்க் உரை!" சில பேச்சுக்கள் மேலை நாடுகளை நம் கீழ்த்திசை நாடுகளின் கலாச்சாரத்தை உற்று நோக்க வைத்துள்ளது. உதாரணம்.".விவேகானந்தரின் சிகாகோ உரை!"
வெறும் வார்த்தை ஜாலங்கள் அரசு கட்டிலையே அசைத்த வலிமை பெற்றவை என்பதை
நாம் அறிவோம்!!
ஆனால், பேச்சுத் திறமையினால் சாவின் விளிம்பு வரை சென்ற இருவர் மீண்ட கதை தெரியுமா,உங்களுக்கு ?
இப்படியாகத்தான் ஒரு பேச்சாளன் ஒரு நிகழ்ச்சிக்குப் போகும் போது எதிர்த்தாற் போல் ஒரு சிங்கம்! (மீண்டும் ஒரு சிறுத்தை என்றால் VIEWERS களினால் தாங்க முடியாது என்பதால் சிங்கம் என்று மாற்றினேன்!)
அவன் சொன்னான் .
" சிங்கமே...நீ காட்டு ராஜா தானே..அது போல நானும் ஒரு ராஜா தான். எனக்கு பேச்சு சக்ரவர்த்தி என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள் மக்கள்"
" அதுக்கென்ன.." - எரிந்து விழுந்தது,சிங்கம்.
" பக்கத்து ஊரில் மக்கள் என் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்."
" என்னால் அனுமதிக்க முடியாது. நான் பசியோடிருக்கிறேன். உன்னை இதோ
புசிக்கப் போகிறேன்" - கர்ஜித்தது சிங்கம்.
" ஆனாலும் சிங்கமே..ஆவலுடன் அங்கு மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களை ஏமாற்றுவது மகா பாவம். போயிட்டு கட்டாயம் வந்து விடுவேன்.."
மன்றாடினான், அவன்.
சிங்கத்துக்கு மனம் இளகி விட்டது.
" சரி..உன்னை விட்டுப் போக முடியாது. நீ பேசும் மேடையின் அருகில் உள்ள புதர் மறைவில் நான் காத்துக் கொண்டிருப்பேன்.கட்டாயம் வர வேண்டும். ப்ராமிஸ்?"
"ப்ராமிஸ்"
அவன் பேச ஆரம்பித்தான்.....
பேசிக்கொண்டே இருந்தான்...
பேசி முடித்தான்....
கூட்டம் ஒரு வழியாய் கலைந்ததும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற..அந்த புதர் பக்கம் விரைந்தான்..படபடப்புடன்.
அங்கே......
அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்தது!
நம்ம ஆள் நினைச்சான்.
" நல்ல வேளை சிங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. பொழைச்சோம்"
சிங்கம் நினைத்தது.
" நல்ல வேளை. தூங்கறா மாதிரி நடிச்சோமோ ..பொழைச்சோம்..இல்லாட்டி
அந்த ஆள் பேசியேக் கொன்னுருப்பான்..!!! "

Wednesday, February 24, 2010

ஜல்லிகட்டு!!


அந்த இடம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.ஆங்காங்கே அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அனைத்து வயதுக் காரர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். மரணத்தின் விளிம்பில் உள்ள வயசாளிகளும் கொஞ்சம் நேரம் கழித்து வைகுண்டம் போனாலும் பரவாயில்லை என்று மௌனம் காத்தார்கள்!

அங்கே உள்ள கூட்டத்தைத் தவிர, இந்த நிகழ்ச்சியை 'டி.வி'.யிலும் 'டெலிகாஸ்ட்'
செய்வதால், எல்லா மக்களும் டி.வி. முன் வேறு தவம் இருந்தனர்.

என்ன ஒரு குரூரத்தனமான விளையாட்டு இது! ஒவ்வொரு முறையும், வெவ்வேறு விதமாய் மனிதர்கள் ரத்தம் சிந்துகிறார்கள்.
ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ..... ஆடம்பரம்..
எட்டு திக்கு விளம்பரங்கள்.ஊரே பரவசமாய் இதைப் பற்றி பேசுவார்கள். ஆனால் முடியும் போது எல்லார் முகத்திலும் பேஸ்து அடித்தாற்போல் ஒரு வெறுமை ! ஆனால், அடுத்த ஆண்டு வரும்போது, எல்லாருக்குமே...எல்லாமே மறந்து போய் ஒரு பரவசத்துடன்....ஒரு எதிர்பார்ப்பு தொக்கி நிற்க....
" எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே " என்று ஒருவன் குஷியாகப் பாடிக்
கொண்டே செல்ல..அங்கு கூடி இருந்த அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு மைக்கில் ஒலி பரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
" இதோ இன்னும் ஐந்தே..ஐந்து நிமிஷத்தில், நாம் எல்லாரும் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீலவேணி வருகிறான்.....வந்து கொண்டே இருக்கிறான்...இதோ..."
ஒரு பரபரப்பு எல்லாரிடமும் தொற்றிக் கொள்ள, ஜல்..ஜல்..என்று சலங்கைகள் கட்டியம் கூற, மெள்ள நடந்து வந்தான், நீலவேணி.
பிறந்ததில் இருந்து ஒட்டஒட்ட தாய்ப் பால் குடித்து வளர்ந்தவன் தான் இந்த நீலவேணி. தாய் பால் மட்டுமே குடித்து வளர்ந்ததால் அப்படி ஒரு புஷ்டி! ஆள் பார்க்க கம்பீரம்! இதில் கொம்பை ஒட்ட சீவி வைத்திருந்தார்கள். அதில் எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து, பளபளவென்று இருந்தது. குத்தினால், வலியை விட எரிச்சல் அதிகமாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் தான் காரணம்!


எல்லாருடைய கண்களும் நீலவேணியையேப் பார்த்துக் கொண்டு இருக்க..அதோ அங்கே ஒருவன் வெகு தைரியமாய்....!!

வந்தவனைப் பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளை போல இருக்கிறது. நீலவேணி அவனை கொம்பால் குத்தாமல்,அப்படியே அலாக்காகத் தூக்கி,
பக்கத்தில் உள்ள பழங்கள் காய்த்துத் தொங்கும் மரத்தில் போட..எல்லாரும் அந்த பணக்காரப் பையன் வீட்டுக் கன்றுகுட்டி தான் நீலவேணி என்று பேசிக் கொண்டார்கள்!

அடுத்து வந்தவனைப் பார்த்தால் சூழ்நிலைக்குப் பொருந்தாதவாறு ,ஆபீஸ் போகிறவன் போல், பேண்ட்,ஷர்ட்டில் வர,
ஆக்ரோஷத்துடன் நீலவேணி அவன் மேல் பாய்ந்து, புரட்டி..புரட்டி எடுக்க, பரிதாபமாய் குடல் சரிந்து அவன் விழ..ஆம்புலன்ஸ் வந்து அழைத்து சென்றார்கள்!
அவனை ICU வில் வைத்து..VENTILATOR மாட்டி, எதுவும் இருபத்திநான்கு மணி நேரம் கழித்துத் தான் சொல்ல முடியும் என்று டாக்டர்கள் கை விரித்து விட்டார்கள்!!

அதோ அங்கே ஒருவன் வருகிறான். அவனைப் பார்த்தாலே
பஞ்சத்தால் அடிபட்டவனைப் போல இருக்கிறது. அவனையும் சின்னாபின்னப் படுத்தி ஓய்ந்தது நீலவேணி!

எல்லாரையும் ரணப்படுத்தி விட்டு ஜல்..ஜல்.. என்று சலங்கை ஒலி முழங்க...
கொட்டிலுக்கு நீலவேணி செல்ல..

பலத்த கரகோஷம் வானைப் பிளந்தது!

டி.வி. பெட்டியை அணத்து விட்டு எல்லாரும் கனத்த இதயத்துடன் சாப்பிட சென்றார்கள்!!

ஹல்லோ... இது நிஜமாவே ஜல்லிகட்டு தாங்க..நீங்க ஏதாவது அந்த ..
நீலவேணி தான் பட்ஜெட்..அந்த புஷ்டியான மனிதன் நாட்டின் பெரிய பணக்காரர்கள்..அந்த பேண்ட்,சட்டை ..பரிதாபத்துக்குரிய BANK/PUBLIC SECTOR EMPLOYEES ... அந்த பஞ்சத்தில் அடிபட்டவன் ஏழை விவசாயி என்று
பயங்கரமாய் கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல !!!!!

Monday, February 22, 2010

முற்பகல் செய்யின்.......


"சார் உங்க அப்ளிகேஷனைக் கொடுங்க.."
'இந்தாங்க..."
"என்ன சார்..இது..டேட் போடலை..என்ன 'ட்ரைன்'னும் எழுதலை? சரியா FILLUP பண்ணிக்
கொண்டாங்க..சார்...நெக்ஸ்ட்...."
"சார்..ப்ளீஸ்..கொஞ்சம் தயவு பண்ணுங்க...எப்பவும் ஆபீஸ் பையன் தான் ரிசர்வேஷனுக்கு வருவான்..இன்னிக்கு லீவு..அதான் நானே வந்தேன்..தேதி 25.4.2010 வண்டி கொரமண்டல் எக்ஸ்ப்ரஸ்.
ட்ரைன் நெம்பர் கொஞ்சம் எழுதிடுங்க சார்"
"என்ன சார், விளையாடுறீங்களா?QUEUE பார்த்தீங்களா? ஒவ்வொருத்தருக்கும் நான் இப்படி எழுதிக் குடுத்தா, நான் எப்பங்க LUNCH க்குப் போறது..ப்ளீஸ் அந்த போர்டுல எழுதி இருக்கும் . சார்.. நெக்ஸ்ட்"
நிர்தாட்சண்யமாய் குமாரை விரட்டினான் மோகன்.
ஏமாற்றத்தோடு இடத்தை காலி செய்தான்,குமார். அவன் எல்லாவற்றையும் 'பில்லப்' பண்ணி திரும்பவும் QUEUE வில் வருவதற்கு
முழுதாய் அரை மணி நேரமாகி விட்டது. அரை மணி நேரம் தான் பர்மிஷன் கிடைத்தது. டிக்கெட் வாங்க ஒரு மணி நேரமாகி விட்டது.
"ராஸ்கல்...கொஞ்சம் கூட மனுஷத் தன்மை இல்லாம..எங்கிட்ட வராமலாப் போகப்போறான்.."
குமார் மனசுக்குள் கறுவிக் கொண்டு ஆபீஸ் சென்றான்.
என்ன ஆச்சர்யம் ! சொல்லி வைத்தாற்போல் அடுத்த இரண்டாவது நாளே குமாரும்,மோகனும் சந்தித்தார்கள்.
இப்போது குமார் கௌண்ட்டரில்.
மோகன் DD வாங்க QUEUE வரிசையில் !
மோகனுக்கு குமாரை அடையாளம் தெரிந்து விட்டது. அடப்பாவி இவனிடமாய் வந்து மாட்டிக் கொண்டோம் என்கிற பதட்டத்திலேயே தப்பு,தப்பாய் DD APPLICATION FILLUP பண்ணினான்.
இப்போது குமார் டர்ன். DD
யில் டேட் இல்ல.. 'அமௌண்ட் காலம் ப்ளாங்க்.'பயலே..வசமா மாட்டினியா ?
படபடப்புடன் கௌண்ட்டரின் வெளியே நின்றிருந்தான், மோகன்.
"சார்..நிறைய CORRECTIONS பரவாயில்லை..நான் எழுதிட்டேன். உங்க கையெழுத்து நான் போடக்கூடாது..ப்ளீஸ். கையெழுத்து போட்டுத்தாங்க.. அடுத்த ஐந்தாவது நிமிடம் உங்க DD ரெடியாயிடும் "
குனிந்து கொண்டு கையெழுத்து போட்டான், மோகன்.
DD வாங்கும் வரை அவன் தலை குனிந்தே இருந்தது !!!

Saturday, February 20, 2010

தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்!!


சொட்டு நீர்
பாசனத்துக்கு
கொடுத்த
மான்யத்தை,
முறையாக
பயன்படுத்தாமல்,
கஞ்சா செடிக்கு
பயன்படுத்தி
காசு பார்க்கும்
கனவான்களை
நினைந்து
கொண்டால்,
நெஞ்சு பொறுக்குதில்லையே !!

எல்லாம் விதிப்படி நடக்கும் !!


(எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்பதற்கு ஒரு பெரியவர் சொன்ன கதை இது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)
----------

ஒரு வில்வ மரம். இரண்டு சிறுவர்கள் அந்த மரத்தில் ஏறி பூஜைக்காக வில்வ இலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கீழே நடந்த சம்பாஷணை அவர்கள் கவனத்தை ஈர்த்தது.
நெற்றி நிறைய பட்டை.கழுத்தில் ருத்ராக்ஷ கொட்டை. வயிறு ஒடுங்கி, கண்களில் ஏக்கத்துடன்,கிட்டத்தட்ட நம் திருவிளையாடல் தருமிபோல ஒருவன். எதிர்த்தாற் போல தசைகள் சுருங்கி..மங்கலான பார்வை..நடுங்கும் கை,கால்களுடன் ஒரு கிழவன்!
கிழவன்: எங்கே அப்பாபோகிறாய் ?
தருமி போன்றவன் : (போகும்போதே வாய் வைச்சுட்டானா..கிழவன்..அவ்வளவு தான் என்று
மனதுக்குள் நினைத்துக் கொண்டே) என்ன விஷயம்?
கிழவன் : ஒண்ணுமில்ல..ரொம்ப அவசரமாப் போறியே..அதுக்காகக் கேட்டேன்.
த.போ : உங்களுக்கு விஷயம் தெரியாதா?
கிழவன் : என்ன விஷயம்?
த.போ : நம்ம பரிக்ஷீத் மஹாராஜாக்கு தக்ஷன் என்கிற சர்ப்பத்தினால கண்டமாம்.
இந்த பௌர்ணமிக்கு அவர் விதி முடியறது. அதை தடுக்கறதுக்காக அரண்மனை
போறேன்.
கிழவன் : உனக்கு விஷயம் தெரியாதா?
த.போ : என்ன?
கிழவன் : மஹா ராஜாவை எப்படி அந்த தக்ஷன் கடிப்பான்? அவர் தான் ஒரு மண்டபம்
கட்டி அதைச் சுற்றி அகழி. தவிர,நூற்றுக் கணக்கான வைத்தியர்கள்...விஷம்
இறக்கும் மந்திரக் காரர்கள் என்று ஒரு பெரிய கும்பலே இருக்கிறது. தக்ஷனால்
எப்படி முடியும்? அது சரி..நீ போய் அங்கு என்ன செய்ய போகிறாய் ?
த.போ : இவர்கள் இத்தனைப்பேர் இருந்தாலும் மஹா ராஜா என்ன சொல்லியிருக்கிறார்..
கிழவன் : என்ன சொல்லியிருக்கிறார்?
த.போ : ஐயா ....அப்படியே தக்ஷன் கடித்து விட்டாலும், அந்த விஷத்தை இறக்கி,
மஹாராஜாவைக் காப்பாற்றுபவர்களுக்கு பத்தாயிரம் வராகங்களும், ஐநூறு
கிராமங்களும் தருவதாக அரசாங்க முரசு அறிவிப்பவன் சொல்லிக் கொண்டுப்
போனானே நீங்கள் கேட்கவில்லையா...?
கிழவன் : சரி...அப்பா..ராஜாங்கத்தில் இத்தனைப் பேர் இருந்து செய்யமுடியாததை,
தனி ஆளாக நீ என்ன செய்யப்போகிறாய்?
த.போ : எல்லாராலும் முடியாத பட்சத்தில், நான் மஹாராஜாவின் உடலில் பாய்ந்த விஷம்
இறக்குவேன்..
கிழவன் : என்ன தம்பி விளையாடுகிறாயா? தக்ஷன் யார் தெரியுமா? சரி..சரி..வறுமை
கொடியது போலும்! அது தான் சாகத்துணிந்து விட்டாய்!!
த.போ : என்ன உளறுகிறீர்..நான் எதற்கு சாகத் துணியணும்? வறுமையில் தான் நான்
வாடுகிறேன். அந்த கொடிய வறுமையை, என் வித்வத்தினால் போக்கிக்
கொள்ள அரண்மனைக்கு சென்று கொண்டிருக்கிறேன்.
கிழவன் : ஐநூறு கிராமங்களை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?
த.போ : அது தான் யோசிக்கிறேன்...
கிழவன் : நல்லா யோஜனைப் பண்ணினே போ.. உன்னைப் பார்த்தா எனக்கு என் பேரனைப்
பார்க்கிறார்போல இருக்கு..பேசாம சொல் பேச்சு கேட்டுண்டு வீடு போய் சேர்.
செல்வம் இன்று வரும்..நாளை வரும். உயிர் வருமா..? தம்பி நீ ரொம்ப
காலம் வாழ வேண்டியவன். அல்பாயுசில போகாதே..இந்தா ஐநூறு வராகன்.ஊர்
போய் சேர்..
த.போ : உம்ம பிச்சை எனக்கு வேண்டாம்..
கிழவன் : யக்ஞம் ஒன்று செய்யப் போகிறேன். அதற்கு முன் தக்ஷிணையாய் இதை
வைத்துக் கொள்ளப்பா...
த.போ : எனக்கு எதுவும் வேண்டாம். ஆமாம் நீர் யார்?
கிழவன் : (ஒரு சிரிப்பு சிரித்து) நான் தான் தக்ஷன். இதோ இந்த வில்வ மரத்தினை வைத்து
பரிட்சை செய்து பார்த்து விடுவோம். இந்த வில்வ மரத்தில் என் சக்தி
முழுவதையும் பிரயோகிக்கப் போகிறேன். நீ இதை ஒரு சிறு செடியாய் துளிர்க்க
செய்தால் போதும்.என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்..
சரி...நீ தோற்றால்...
த.போ : நான் ஏன் தோற்கிறேன் ??
கிழவன் : சரி ..விதி வலியது..நீ என்ன செய்வாய் பாவம்!!
( தக்ஷன் விஸ்வரூபம் எடுத்தான். மிகப் பெரிய பத்து தலை நாகம். ஆக்ரோஷத்துடன் ஒவ்வொரு தலையும் அந்த வில்வ மரத்தினைக் கொத்த அதிலிருந்து ஆலகால விஷம் போல் புகையுடன் ஒரு பெரு நெருப்பு கிளம்பி, அந்த வில்வ மரம் சற்று நேரத்தில் பஸ்பம் ஆயிற்று. தக்ஷன மறுபடி
கிழ உருவம் எடுத்து அவனைப் பார்க்க, அந்த வித்யார்த்தி கொஞ்சம் கூட அலட்டிக்
கொள்ளாமல், எதோ மந்திரங்களை முணுமுணுத்து,துளி நீரை அந்த சாம்பல் குவியல் மேல்
தெளிக்க, என்ன ஆச்சர்யம். அது சிறிய செடியாய் துளிர்த்து, அடுத்த சில நாழிகையில் பெரிய
மரமாய் ஆகி விட்டது!! )
தக்ஷன் : (நடு நடுங்கி) அப்பா என்னை விட நீ பலசாலி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால்
பரீக்ஷத்தை முடிக்க வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை. விதிப்
படி தான் எதுவும் நடக்கும். நடக்க வேண்டும். என் தலையில் உள்ள நாக
ரத்தினக் கற்களை எடுத்துக் கொள். மஹாராஜா கொடுப்பதாகச் சொன்னதை
விட விலை உயர்ந்த பொருள் இது. வாங்கிக் கொண்டு செல்..எனக்கு
நேரமாகிவிட்டது..
த. போ : ஆஹா... வாங்கிக் கொள்கிறேன். யார் கொடுத்தால் என்ன ? மேலும் விதியின்
போக்கில் குறுக்கிட நான் யார்?
( இவன் நாக ரத்னக் கற்களை வாங்கிக் கொண்டு ஊர் போய் சேர்ந்தான்...அங்கே பரீக்ஷ்த் மஹாராஜா நீராழி மண்டபத்தில் உட்கார்ந்திருக்க, கொஞ்ச நேரத்தில் அந்த அகழியில் ஒரு எலுமிச்சைப்பழம் மிதந்து வர, அதை மஹாராஜா ஆசையுடன் முகர்ந்துப் பார்க்க ..அது
சிறுபாம்பாய் உருமாறி, அவனைக் கொத்த நீலம் பாரித்து மஹாராஜா இறந்தான் என்று முடியும் கதை. இந்த விஷயம் உலகிற்கு எப்படி தெரிய வந்தது ??
அந்த வில்வ மரத்தில் இலைப் பறித்துக் கொண்டிருந்தார்களே... அந்த சிறுவர்கள் மூலம் வழிவழியாய் வந்ததாம் )

Wednesday, February 10, 2010

சார் உங்க கார், தாங்க !!


இப்போதெல்லாம் பேப்பரைப் பிரித்தால் புதிதாய் ஒரு செய்தி உங்கள் கவனத்தை கவரும்.
இது எப்படி சாத்யம் என்று மலைப்பீர்கள். அந்த கம்பெனியின் மீது உங்கள் மதிப்பு கூடும். இது அந்த கம்பெனியின் BUSINESS EXCELLANCE என்று சந்தோஷப் படுவீர்கள். நானும் அப்படி சந்தோஷப்பட்டவன் தான்! ஆனால் இன்னொரு கம்பெனியும் அதே TECHNIQUE ஐ FOLLOW
பண்ணும் போது சில கேள்விகள் என் மனதிற்குள் எழுந்தது. அதை என் BLOG VIEWERS உடன் பகிர்ந்து கொள்கிறேன்!
இது தான் அந்த செய்தி. 'பிரேக் பெடல்' ப்ராப்ளத்தினால் ஒரு பெரிய MULTINATIONAL
CAR COMPANY வாடிக்கையாளர்களிடமிருந்து புதிதாக விற்ற லட்சக்கணக்கான கார்களை வாபஸ் வாங்கிக் கொண்டது.அட என்ன ஒரு CUSTOMER FOCUSED என்று நானும் ஆச்சர்யப் பட்டேன். ஆனால் இன்றும் அதே செய்தி. மற்றொரு கார் கம்பெனி இதே காரணத்திற்காக நான்கு லட்சம் கார்களை வெவ்வேறு நாட்டு கஸ்டமர்களிடமிருந்து வாபஸ் வாங்கிக் கொண்டதாம்!
இங்கு தான் நமக்கு சந்தேகமே! அது எப்படி ஒரே மாதிரியாக வாபஸ் அதுவும் லட்சக் கணக்கில்! ஏதோ ஒன்றை ஒருவன் செய்து கொஞ்சம் காசை கல்லாவில் பார்க்க, கண் மூடித் தனமாக அந்த PIONEER ஐ BENCH MARK செய்கிறார்களோ!
சராசரியாக ஒரு காரின் விலை மூன்று லட்சம் என்று வைத்துக்கொண்டாலும், நான்கு
லட்சம் கார்களின் விலை 12,000 கோடி! மேலும் நான்கு லட்சம் கார் என்பது எப்படி பார்த்தாலும்
அந்த கம்பெனியின் அத்தனை தொழிற்சாலை விற்பனையிலும் ONE THIRD ஆகவாவது இருக்கும்! மொத்த விற்பனையில் ONE THIRD FAULT ஆக இருக்கும் பட்சத்தில் அந்த REPUTED CAR COMPANY யின் QUALITY DEPT. என்ன செய்து கொண்டிருந்தது என்பது
முதல் கேள்வி!
இந்த மாதிரி செய்வதற்கு எதாவது PRECEDENT இருக்கிறதா என்பது அடுத்த
கேள்வி? அப்படி இல்லையென்றால் நம் சந்தேகத்தின் பிடி மேலும் இறுகுகிறது!
கார் என்பது ஒரு ASSEMBLY LINE PRODUCT. இந்த SEGMENTல் CORPORATE CUSTOMERS அவ்வளவாக இல்லை.மேலும் இருக்கும் INDIVIDUAL CUSTOMERS களை அவ்வளவு SHREWD என்றும் சொல்ல முடியாது! மேலும் ' LET THE PURCHASER BEWARE' என்கிற CAUVEAT ஷீல்டாக விற்பனையாளர்கள் கையில் இருக்கிறது!
பட்ஜெட் வெகு அருகில் இருக்கும் நிலையில் நமக்கு ஒரு சந்தேகம். இந்த கார்
COMPONENT எதற்காவது EXCISE/CUSTOMS DUTY அதிகரிக்கப் போகிறார்கள் என்கிற செய்தி அதற்குள் கசிந்து விட்டதா? அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் எதையாவது REPLACE செய்து அதில் லாபம் பார்ப்பார்களா!
இல்லாவிட்டால் அவர்கள் R & D LAB எதாவது புதிதாக எதாவது முக்கியமான பார்ட்டை WITH REDUCED COST REPLACE செய்து காசு பார்க்கலாம் அல்லவா?
AUTOMOBILE SECTOR ல் RECESSION என்று கேள்வி. இந்த மாதிரி WITHDRAWAL AGAINST SALES என்று எதாவது STRATEGY PLAY பண்ணுகிறார்களா?
ஐயா..ஒரு பைசா கூட வாங்காமல் அதே கார்களை வாடிக்கையாளர்களிடம்
திரும்பவும் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் ..FAMILY PLANNING OPERATION க்கு கூட்டிக்கொண்டு போய் KIDNEY திருடும் செய்தி ஒன்றும் நமக்கு புதிது அல்லவே!
ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்!!

Monday, February 8, 2010

வாய் மெய்யைக் கொல்லும்!!


கசாப்புக் கடை
வீட்டு சேவல்
சிலிர்த்தெழுந்து..
விடியலில்
கூவியது..
'நான் உயிரோடிருக்கிறேன்'
என்று!

பசியோடிருக்கும்
பாம்புகளுக்கு
தன் இருப்பை
வெளிப்படுத்துக்
கொண்டிருந்தன
தவளைகள் தன்
வாயினால்...

துரியன் விழுந்ததை
வாய் பிளந்து....
இதழ் விரித்து
நகைத்தாள் பாஞ்சாலி..
பாரதப் போர்
மூண்டது!!

மௌனியாய்
இருக்கும் வரை,
'தன்னை
அறிந்தவன்' என
உலகு சொல்லும்
வாயைக்
காட்டினால்,
அதே உலகம்
அவனையே
அரிந்து விடும்!!

பதி பக்தி !!!



(என்னுடைய நண்பரும், நானும் ஒரு லஞ்ச் அவரில்
நிகழ்த்திய சம்பாஷனையின் சாராம்சத்தை இங்கே தருகிறேன்)

நான் : ஹாஸ்பிடல்ல.. எத்தனை வருஷம்
இருந்தீங்க?


நண்பர்: மூன்று வருஷம் அங்கே மெடிக்கல்
ஸ்டோர்ஸ்ல இருந்தேன்..


நான் : வேலை எப்படி? டைட்டா இருக்குமா?


நண்பர் : சில நேரங்கள்ள...ரொம்ப பிசியா
இருக்கும்...

நான் : அப்படியா?

நண்பர் : நான் ஆபீஸ் வந்த உடனேயே
ப்ரேயர் பண்ணிப்பேன்..'ஆண்டவா..
இன்னிக்கு என் டூட்டி டயத்தில யாரும்
மண்டையை ப் போடக்கூடாதுன்னு..
நான் : ஏன்?


நண்பர் : என்னோட டூட்டில ஒண்ணு..
யாராவது ஆஸ்பத்திரியில் செத்துப்
போய்ட்டா..ஆம்புலன்ஸ் ஏற்பாடு
பண்றது.. போன்ற அது தொடர்பான
வேலைகள்..நேற்றை வரைக்கும் பேசி
கிட்டு இருந்து விட்டு,அடுத்த நாள்
ஆள் காலின்னா நமக்கே 'ஷாக்'காத்
தான் இருக்கும். இல்லீங்களா..இதுல
சொந்தக்காரங்க...குய்யோ..முறையொன்னு
கூப்பாடு போட்டா..நமக்கு டென்ஷன் தான்!
நான் : ஆமாமாம்....


நண்பர் : சுகமாகி டிஸ்சார்ஜ் ஆகிப் போனா
சந்தோஷம் தான்...


நான் : நிச்சயம் இருக்கும்..


நண்பர் : இதக் கேளுங்க...உங்களுக்கே
சிரிப்பா இருக்கும்..

நான் : ஆஸ்பத்திரியில சிரிப்பா..?
சொல்லுங்க..சொல்லுங்க...


நண்பர் : நம்ம எம்ப்ளாயீ தான் அவர். ஒரு வாரம்
'பெட்'டில இருந்தார்.அவங்க சம்சாரம் ..ஒரு
பையன்..சின்ன குடும்பம்..அவங்களுக்கும்
இங்கேயே டோக்கன் கொடுத்து டீ, பன்,காபி,
பலகாரம், சாப்பாடு எல்லாம் சாப்பிடுக்கலாம்..
டிஸ்சார்ஜ் பண்ணும்போது அந்த அம்மாவைப்
பார்க்கணுமே..ஒரே சோகம் தான்..
நான் : எதுக்கு வருத்தப்படணும்? குணமாகித்தானே
போறாங்க..


நண்பர் : என்னன்னு தெரியல்லே...


நான் : அடப் பாவமே..


நண்பர் : மிச்சத்தையும் கேளுங்க..அடுத்த அரை மணி நேரத்தில்

ஆட்டோவில திரும்பவும் வந்தாங்க..அந்த ஐயா தலை
பூரா ஒரே ரத்தம்... என்னம்மான்னேன் நான்
பதட்டத்துடன்..


நான் : என்ன ஆச்சாம்?




நண்பர் : அதுக்கு அந்த அம்மா சொல்றாங்க..இங்கேர்ந்து டிஸ்சார்ஜ்
பண்ணிட்டுப் போனோமா..வீட்டில் போய் கட்டில்ல
படுத்தாரு. என்ன ஃபேன் போட சொன்னாரு..போட்டேனா..
திடீர்னு அந்த ஃபேன் கழண்டுபோய் அவர் தலைல விழுந்துடுச்சு..
சொல்லும் போதே அந்த அம்மாக்கு சிரிப்பு தாங்கலைன்னா
பார்த்துக்குங்க..


நான் : எதுக்கு சிரிக்கணும்?


நண்பர் : இதேயே தாங்க நானும் கேட்டேன்..அதுக்கு அந்த
அம்மா..'அட போங்க தம்பி..உடம்பு குணமானா
இந்த எளவெடுத்த மனுஷன் அதை ஆக்கிப் போடு..
இத ஆக்கிப் போடுன்னு என் உசிரேயில்ல
எடுத்துடுவாரு..' ன்னாங்க..


(இந்த சம்பாஷனைக்குப் பிறகு என் சகதர்மிணியிடம் சாதாரணமாய்
காஃபி, டிபன் கேட்பதற்குக் கூட பயமாக இருந்தது, ஒரு வாரத்திற்கு)

Friday, February 5, 2010

அங்கீகாரம்.....


அஞ்சோ, பத்தோ
கடன் வாங்கி,
தன்மானத்தை தவிர,
(அது விலை போகாது !)
அத்தனையையும்,
விற்று காசாக்கி,
அத்யாவசிய செலவுகளையும்
குறைத்து..
பெரியவளான அவன்,
தங்கைக்குச்செய்யும்,
சடங்குச்செலவையும்,
அவளின் படிப்பு
செலவையும்
கணிசமாய் குறைத்து..
அப்பா,அம்மா,தங்கை..
என்று எல்லாரும்,
அவனை ஆசையாய்
படிக்க வைக்க......
அந்த ஏழைக்குடும்பம்,
செய்த தியாகத்தின்
விலை தான்
என்ன?
அரசு அறிவிப்பு..
பையன் படித்த,
அந்த பாழாய்ப்போன,
பல்கலைக் கழகத்தின்
அங்கீகாரம் ரத்தாம்!
அட கடவுளே .....!!!!

Thursday, February 4, 2010

காயத்ரி........


(என்னுரை: 'காயத்ரி' என் மூன்றாவது குழந்தை.தினமணி கதிரில் 10.2.85 அன்று சுப ஜனனம். இருபத்திநான்கு வருடங்கள் ஆனாலும், என் நெருங்கிய நண்பர்கள் இன்னமும் 'காயத்ரி'யை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சரி..சரி ..புரிகிறது.... உங்களுக்கும் 'காயத்ரி'க்கும் நடுவில் நான் எதற்கு? விடைபெறுகிறேன், வணக்கம்)
* * * * * * *

'சுக்லாம்பரதரம் ..... சொல்லுங்கோ' என்று அந்த காவேரி ஆற்றங்கரையில் ஆவணி அவிட்டத்திற்கு வந்திருப்பவர்களைப் பார்த்து, இயந்திர கதியில் சொல்லிக் கொண்டிருந்தான், நாராயணன். பிடிப்பில்லாமல், மனதின் லயிப்பில்லாமல், அவன் சொன்ன வார்த்தைகளை மந்திரங்களாக நினைத்து, பின்னால் பயபக்தியுடன் சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கூட்டம்.
காரணம் இல்லாமல் இல்லை. உணர்ச்சி வசப் பட்டுக் கொண்டு,கண்களில் நீர் கசிந்துருகி, பதம் பிரித்து, அர்த்தத்துடன் ஒவ்வொரு வேத மந்திர உச்சாடனையையும் ஸ்பஷ்டமாக, உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டிருந்த நாணா இன்று இல்லை. செத்துப் போய்ட்டான். இவன் வேறு யாரோ. வெளி நாட்டில் சொல்வாளே ரூபாவோ,ரோபாவோ ஏதோ ஒண்ணு. அதைப் போல எந்திர மனுஷன் தான் இதோ இங்க நின்னுண்டு சொல்லிண்டு இருக்கானே இவன்.
வாய் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், கண்கள் வந்திருந்த தலைகளை எண்ணிக் கொண்டு இருந்தது. மனதோ, தலைக்கு முக்கால் ரூபா என்று கணக்குப் பார்த்துக் கொண்டு இருந்தது.
யாருக்காக சேர்க்கப் போகிறான் நாணா? உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு, இந்த உலகில் ஒட்டிக்கொண்டிருப்பது அவனுடைய அம்மா தான். அம்மாவிற்கு அவன் மேல் அபரிமிதமான பாசம். ஆஸ்த்துமாவிற்கு அவள் மேல் பாசம். பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறது. குரங்குப் பிடி தான்.
மனசுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறானே, தட்சிணை.. அது அம்மாவை சந்தோஷப் படுத்தாது. இவன் அம்மான்னு வாய் கொள்ளாம கூப்பிடறதே போறும் ..அதுவே ஆனந்தம் அந்த ஜீவனுக்கு.
...இதோ இங்க நிக்கறாளே, இவாளைப் போல கார்த்தாலே பத்து மணிக்கு ஆபீசுக்குப் போய்,அரட்டை அடிச்சுட்டு, சாயங்காலம், புதுசா குளிச்சவன் போல, 'பளிச்' னு ஆத்துக்கு ஓடோடி வராளே... அது மாதிரி இல்லையேன்னு தான் ஏக்கமா இருக்கும். அதுக்கென்ன பண்றது? வைதீகன் தர்ப்பக் கட்டையை தூக்கிண்டு தான் போகணும். டை கட்டிண்டு ஆபீஸ் போக முடியுமா? குடுமியோடு, டையை கற்பனை செய்து பார்த்தான். கவிந்து கொண்டிருந்த துக்கத்திலும், மின்னல் கீற்றாக சிரிப்பு மலர்ந்தது, மனதிற்குள்.
'சூர்யஸ்ய... மாமன்யஸ்ய..' மனம் சூரியனை நினைக்கவில்லை. சந்திராவை நினைத்துக் கொண்டிருந்தது.
அவனைப் போல் தான் அவளும். ஆனா ஒரு வித்தியாசம். அவ அம்மா, நாலு ஆத்துக்கு உபகாரம் பண்ணக் கிளம்பிடுவா..எதாவது விசேஷம்னா, அவாத்திலே கனகத்து மாமியோட சமையல் தான் மணக்கும்.
கனகத்து மாமி, தம் பொண்ணு சந்திராவையும் ஒத்தாசைக்கு கூட்டிண்டு போவா. அந்த காலத்து, கல்லிடைகுறிச்சி மாதிரி, வட்டமா, பெரிய ஆத்து கூடத்தில, எல்லாரும், ஊர் வம்பு பேசிண்டும், அப்பளாத்துக்கு வட்டு இட்டுண்டும், இருக்கும்போது தான் ஒரு நாள் நாணாவின் கவனத்தைக் கவர்ந்தாள், சந்திரா.
தாழ்வாரத்திலே வெய்யில் வந்தா மணி பன்னிரெண்டுன்னு தெரியும். தெரிஞ்சுண்டும், வாசல் வழியா போற நாணாவை சந்திரா எதுக்கு கூப்பிடணும்?
இந்தாங்கோ, நாணு சாஸ்திரிகள்வாள், மணி என்ன ஆறது? சித்த சொல்லுங்களேன்'.
கண்களில் குறும்பு மின்ன அவள் அன்று கேட்டதை நினைத்துக் கொள்கிறான், நாணா..
அவனை யாரும் நாணு சாஸ்திரிகள்னு கூப்பிடமாட்டா. அதுக்காக 'டேய் நாணா'ன்னும் கூப்பிடறது கிடையாது. கும்பகோணம் ராஜா வேத பாடசாலைல படிச்ச புள்ளையாண்டாங்கற மரியாதை அவனண்டை ஒட்டிண்டு இருக்கும்.
"விசாலாட்சி அம்பா சமேத விஸ்வநாத ஸ்வாமி ஸன்னிதௌ, அகிலாண்டேஸ்வரி அம்பா சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.."
" சமையல்காரா ஆத்தில பொறந்ததே போறும். தர்ப்பை பிடிக்கிற வாத்யாருக்கு வேற வாக்கப் படணுமா நான். நன்னா கதை சொன்னே நாணா, போ. எனக்கு வர ஆம்படையான் சின்ன வேலையில் இருந்தாலும் பரவாயில்லே..டெய்லி ஆபீஸ் போயிண்டு வந்துண்டு இருக்கணும். அதான் என் ஆசை."
'மளுக்'கென்று நாணாவின் ஆசையை ஒடித்துப் போட்டு விட்டு, வெகு ஸ்டைலாக நடந்து சென்று விட்டாள் சந்திரா.
அதான் என் ஆசை. அதான் என் ஆசை.. சினிமால சொல்றாப்பல, ஏதோ ஒண்ணு, மனசுல படீர்..படீர்னு வந்து அடிச்சது, நாணாவுக்கு.அவனையும் மீறி வாயிலே அதான் என் ஆசைன்னு சொல்ல வந்துடுத்து. தன்னை ரொம்பவும் கட்டுப்படுத்திண்டு, 'ஆனந்த வல்லி அம்பா சமேத நாகநாத ஸ்வாமி ஸன்னிதௌ'ன்னு ஒரு வழியா சமாளிச்சுண்டுட்டான்.
தேவதைகளுக்கு அர்க்யம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள் எல்லாரும். முழங்காலளவு தண்ணியில் நின்று கொண்டு,நாணா கரையில் நின்று கொண்டு மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
சே என்ன பொழைப்பு இது.. ஒவ்வொருத்தன் எவ்வளவு அமெரிக்கையா இருக்கான். இந்தக் காலத்திலும் நாம் காயத்ரியைக் கட்டிண்டு மாரடிக்கணும்னு தலைல எழுதியிருக்கே..என்ன
பண்றது...!
இதான் கடைசி ஆவணி அவிட்டம். தலையை சிரைச்சுண்டு, இன்னும் பத்து நாள்ல, பட்டணத்தைப் பாக்க ஓடிப்போக வேண்டியது தான். வாசு ஏதோ ஆட்டோ ஓட்டறானாம். ஏதாவது 'ஒர்க் ஷாப்ல' கிளீனர் வேலையாவது வாங்கித் தர மாட்டானா...! அப்புறம் கொஞ்சம் காசு சேர்த்துண்டு இப்ப என்னடி சொல்றேன்னு சந்திராவைப் பார்த்து நாலு கேள்வி கேக்கணும்.
'சொல்லுங்கோ... ஓம் பூர்ப்புவஸ்ஸுவஹா...தத்ஸ விதுர்வரேண்யம்...'
அவன் காயத்ரி மந்திரத்தை சொல்லிக் கொண்டே போக எல்லாரும் கோரஸாக சொன்னார்கள்.
இது தான் நாம பண்ணி வைக்கிற கடைசி ஆவணி அவிட்டம். அதனால சிரத்தையா, மந்திரம் சொல்வோம்னு, தீர்மானம் பண்ணிண்டான், நாணா.
நாணா என்ன நாணா... பட்டணம் போனதுக்கப்புறம், கிராப்பு வைச்சுண்டு, மீசை வைச்சுண்டு, நம்பளைப் பார்த்தாலே 'டிப் டாப்பா' இருக்கணும்.எல்லாரும் மிஸ்டர் நாராயணன் ஸார் இருக்காரான்னு கூப்பிடணும்..கலர் கலரா சட்டை போட்டுக்கணும்..பேண்ட் போட்டுக்கணும்..
எல்லாரும் ஒருவரை ஒருவர் நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். புதுசா யாரோ ஒருத்தர் நாணா பக்கம் வந்தார்.அவருடன் கூட கோடி ஆத்து சீனு.
" நாணா.. இவர் நம்மூருக்கு புதுசா வந்திருக்கார்.டெல்லியில பெரிய ப்ரொஃபஸரா இருந்து ரிடையரானாராம்.உன்னோட பேசணும்னு ஆசைப்படறார்" என்றான் சீனு.
"நமஸ்காரம்..." என்று கை கூப்பியவர், அப்படியே அவன் கையை வாத்ஸல்யமாய் பிடித்துக் கொண்டார். 'இந்த இருபது வயசில அவனவன் எப்படி அலையறான்.பழமை மாறாம உங்களைப் போல சில பேர் இருக்கிறதால்தான் நாட்டில மழை கொஞ்சம் பெய்யறது.. சும்மா சொல்லக் கூடாது...மந்திரத்தை எல்லாம் ஸ்வர சுத்தமா நன்னா சொல்றேள். நானும் டில்லில பார்த்திருக்கேனே..என் பர்ஸ் மேல தான் நாட்டம் எல்லாருக்கும். காயத்ரிக்கு அர்த்தம் கூடத் தெரியாது. பெரீசா தர்ப்பக் கட்டையை தூக்கிண்டு வந்துடும் சாஸ்திரிகள்னு.."
சொல்லிச் சொல்லி மாய்ந்து போனவர், அவனது கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். நாணாவிற்கு மனது நெகிழ்ந்து போய்விட்டது.
நானும் சம்ஸ்கிருத காலேஜ்ல லெக்சரரா, இருந்துட்டுத் தான் வந்திருக்கேன். இத்துனூண்டு வயசுல இவ்வளவு ஞானத்தைப் பார்த்தது இல்ல..தீர்க்காயுசா இருக்கணும்...." அவர் சொல்லிக் கொண்டே போனார்.
நாணாவிற்குப் பெருமை தாங்கவில்லை. குடுமியை முடிந்து கொண்டவன், கணீரென்று மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தான்.
சந்திராவாவது, ஒண்ணாவது !!!!

Monday, February 1, 2010

ஒரு எச்சரிக்கை !


நம் கிராமங்கள்
சுயத்தை
இழந்து
வெகு
நாட்களாகி
விட...
நகரங்களோ...
புதியவர்
வருகையினால்,
திணறி திக்குமுக்காட...
அடுத்த நான்கு
வருடங்களில்,
ஐநூறு
துணை நகரங்கள்...
உருவாகாவிட்டால்,
குப்பங்களும்,
சேரிகளும்,
காங்க்ரீட் கட்டிடங்களால்,
மிளிரும் நகரங்களை
விழுங்கி விடுமாம்...
என்ன செய்யப் போகிறோம் ???