Tuesday, November 6, 2012

வேறென்ன கேட்பேன் - (2)

சுழல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தை.......

கல்லி ......மிட் ஆப் ....மிட் ஆன் பாயின்ட்களில்
பிரபல பிலாக்கர்கள் பீல்ட் செய்ய....
இதோ.......
மோகன்ஜி  அந்த பக்கமிருந்து பந்தை வீச ...
இப்போது  பேட் செய்ய வருபவர் .....
பிரபல எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் .
 http://rishaban57.blogspot.com/2012/11/2.html
இதன் முதல் பகுதியைப் படிக்க


இனி இரண்டாம் பகுதி இதோ..


ஆராமுதின் பக்கம் வந்து சிவபாதம் உட்கார்ந்ததை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
'எழுந்துப்பாரான்னு கிடந்த மனுசனா இவுரு..'

அப்படி ஒன்றும் உடம்பு சொல் பேச்சு கேட்கவில்லைதான். கால் ஒரு பக்கம் இழுக்க கை ஒரு பக்கம் இழுத்தது. பிடிவாதம் ஜெயித்தது. பால்ய நண்பனைப் பார்த்த வேகமோ.. அல்லது மனதின் குதியாட்டமோ. பதறிப் போய் பற்றிக் கொள்ள வந்தால் உதறியதில் வீம்பு தெரிந்தது. ஆராமுது பிடித்துக் கொண்ட போது உடன்பட்டதில் லேசாய் பொறாமையும் கோபமும் வந்தது.

"தட்டு போதும்டா"

ஆராமுது சொன்னதைக் கேட்காமல் வாழை இலை. புது எவர்சில்வர் டம்ளர். சுடச் சுட இட்லி. சட்னி.

ஆராமுதுக்கு உள்ளே ஏதோ தளும்பியது. அவமானம் பின்னுக்குப் போய் ஆதி நாட்களின் பிரியம் மேலோங்கியது. எது கிடைத்தாலும் பகிர்ந்து கொண்ட நட்பு.

"ரொம்ப காரமா.. எண்ணை ஊத்துடி.. " சிவபாதம் இரைந்ததில் குரலில் கணீர்.
"அதெல்லாம் இல்லை.."
"இன்னும் ரெண்டு வைக்கட்டுமா"

அம்மா.. அம்மாவின் ஞாபகம் வந்தது. கேட்கக் கூட மாட்டாள். போட்டு விட்டு போவாள். வயிற்றைப் பார்க்காமல் மனசைப் பார்த்து ஊட்டிய காலம்.

சுடச் சுட காப்பி. சிவபாதம் மீண்டும் கட்டிலுக்கு வர.. பக்கத்தில் ஆராமுது. வயிறு நிறைந்து, மனம் மட்டும் குமுறிக் கொண்டு. எங்கிருந்து ஆரம்பிப்பது.. சுவர் காலண்டர் பின்னோக்கி போன பிரமை.

மகன், மருமகள், மனைவி பற்றிய விசாரிப்புகளுக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மனம் ஒட்டவில்லை. அதை சிவபாதமும் புரிந்து கொண்டதாலோ என்னவோ டக்கென்று பேச்சை நிறுத்தி ஏதோ கேட்டார்.

"ஆராமுது.. டேய் ஆராமுது"
"ஆங்க்.. என்ன"
"உன் கவனம் இங்கே இல்லைதானே"

ஆராமுது அவனையே வெறிக்கப் பார்த்தார். மனசுக்குள் ஒரு உக்கிரம் கிளம்பிவிட்டது. உன்னால் தானே.. உன்னால் தானே..

"என்னடா.. ஏதாச்சும் பண்ணுதா.. கொஞ்சம் படுக்கறியா.. பிரயாணம் ஒத்துக்கலியா"
சிவபாதம் குரலில் அக்கறை பீரிட்டது.

ஆராமுது தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். உன் பேச்சைத் தானே இத்தனை நாள் கேட்டேன்.
"வெளியே போயிட்டு வரேன்.."
"ஏண்டா.. இப்பதானே வந்த.. இரு.. அப்புறமா போகலாம்.." சிவபாதம் கெஞ்சிய குரலில் சொன்னார்.

ஆராமுது அதற்குள் எழுந்து விட்டார். சிவபாதம் முகத்தைப் பார்க்கவில்லை. கோபம் தெரிந்து விடும்.
"பத்து நிமிஷம்.. வந்துருவேன்"

படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டார்.
"அவன் போறான்டி.. கூப்பிடேன்"
சிவபாதம் மனைவியிடம் சொல்லியது கேட்டது.

"பச்சைப்புள்ளையா அவரு.. போயிட்டு வந்துருவாரு.."
ஆராமுது சிவபாதம் அருகில் அந்த நிமிஷம் இருக்கப் பிடிக்காமல் இறங்கி வந்து விட்டாரே ஒழிய.. தெருவுக்கு வந்ததும் எங்கே போவதென்று புரியவில்லை. தன்னிச்சையாய் கால்கள் நடந்தன. பண்டாபீஸ் இங்கேதானே.. எங்கே காணோம்.. முப்பது வருஷத்துக்குப் பிறகு தேடுவதில் ஒரு அபத்தம் புரிந்தது மனசுக்கு. தெருவின் முகம் மாறிப் போயிருந்தது. யாரோ கூப்பிடுவது போல.. இல்லை.. விரட்டுவது போல.. காலகள் வேகமாய் நடக்க பின்னாலேயே வந்து கையைப் பிடித்து இழுத்தார் ஒருத்தர்.

"அது நான் இல்லை.. நான் இல்லை" அலறினார் ஆராமுது.
"ஸார்.. பர்ஸை கீழே போட்டு போறீங்க.."
பர்ஸ். முகத்துக்கு எதிரே காட்டினார். ஆமாம். என் பர்ஸ். என் பணம்.

"தொலைச்சவுங்களுக்குத் தான் அந்த அருமை தெரியும் ஸார்..பிடிங்க.. பத்திரமா வைங்க"
தொலைச்சவங்க.. எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் வார்த்தைகள் உயிரோடு நின்று மிரட்டுகின்றன.

 'பாவி.. வெளங்குவியாடா நீ.. நல்லா இருப்பியா..'
'நான் இல்ல.. நான் இல்ல'
ஆராமுது வாய் விட்டு அலறி இருக்க வேண்டும். எதிரே இரண்டு மூன்று பேர் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

'புத்தி சரியில்லையா'

ஆராமுது திரும்பி நடக்க ஆரம்பித்தார். வேணாம், சிவபாதம்கிட்ட போயிரலாம்.. படியேறியபோது மீண்டும் நாயின் குரைப்பு.

"வந்துட்டாரு உங்க நண்பர்"
சிவபாதம் உடம்பு நடுங்கியது இவரைப் பார்த்து.

"நீ திரும்பப் போயிடுவியோன்னு பயந்துட்டேன்.."
"இல்ல" முனகினார் ஆராமுது.

"உன் கிட்ட பேசணும்டா"
"ம்ம்.."
"அவர் கொஞ்சம் படுக்கட்டுமே.."
"ஓய்வு எடுக்கறியாடா"
"ம்ம்"

பூக்குழி மிதித்த மாதிரி உடம்பு எங்கும் அனலடித்தது. தலைக்கு உசர கட்டை வைத்து மின் விசிறியின் அடியில் படுத்தார்.
இறந்த காலம் உயிர் பெற்று எழுந்து இரைச்சல்கள் கேட்டன.

"டேய்.. ஆராமுது.. நல்லா இருப்பியாடா.. '

'அவனை என்ன கேள்வி.. பிடிங்கடா'

'இரு கொஞ்சம் விசர்ரிக்கலாம்..'

'விசாரிக்க என்ன இருக்கு.. கையும் களவுமா பிடிச்சாச்சு'

'சிவபாதம் நீ இதுல தலையிடாதே..'

சிவபாதம் சட்டென்று ஒதுங்கியதைப் பார்த்து ஆராமுது அரண்டு போனார்.

டேய் சிவபாதம்..”
கூட்டம் மெல்ல மெல்ல முன்னேறியது. சிவபாதம் நகர்ந்து கொண்டே பின்னுக்கு போவது தெரிந்தது. அவன் கண்களில் தெரிந்த மிரட்சி.. கெஞ்சல்.. பயம்..

ஆராமுதுவுக்கு இன்னது செய்வதென்ற நிதானம் தொலைந்தது.



                                                                                                       (தொடரும்)

 இதன் 3ம் பகுதியை ஆரண்யநிவாஸ் - மூவார் முத்து தொடர்கிறார்...




7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... தொடர்கிறேன் அடுத்த தளத்தில்...

ஜீவி said...

இதோ உங்கள் கோர்ட்டில் பந்து.
எப்படி விளையாடப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்.
கோல் நிச்சயம்ங்கறது சம்சயம்.நீங்க விளையாடி முடிச்ச ஜோர்லே ஜோரா ஒரு தபா கைதட்டி ரசிக்கிறோம்.. ஓ.கே.வா?..

Anonymous said...

வணக்கம்,
ஆரணிய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி,(அண்ணா)

படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள் சேவையை

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

மோகன் அண்ணா பந்து வீசு, அதை ரிஷபன் ஜி! அடித்து ஆட, பந்தை மூவார் முத்து பிடிக்கப் போகிறார்! தொடரட்டும் சுழல் தொடர்! :) காத்திருப்பின் ஆவலோடு நாங்களும்....

வெங்கட் நாகராஜ் said...

மோகன் அண்ணா பந்து வீசு, அதை ரிஷபன் ஜி! அடித்து ஆட, பந்தை மூவார் முத்து பிடிக்கப் போகிறார்! தொடரட்டும் சுழல் தொடர்! :) காத்திருப்பின் ஆவலோடு நாங்களும்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

'எதையும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொன்னாத் தான் எனக்குப் புரியும்' என்பது எப்படித் தெரிந்தது உங்களுக்கு வெங்கட் ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


Thanks to all visitors in my blog.