Wednesday, March 27, 2013

ஆரண்ய நிவாஸம்.....

இனி ஓய்வு தான்... அதுவும் நிரந்தர ஓய்வு!
உனக்கு வயதாகி விட்டது, இனி நீ ஆஃபீஸ் வர வேண்டாம்..ரெஸ்ட் எடுத்துக் கொள் என்று ஆஃபீஸில் சொல்லி விட்டார்கள்....
பார்க்கப் போனால், ஞாயிற்றுக் கிழமை தான் ரிடய்ர்ட்மெண்ட் வர வேண்டும் எனக்கு! அன்று வார விடுமுறை என்பதால், சனிக் கிழமையே அவசர,அவசரமாய் ரிடய்ர்ட்மெண்ட் ஆக்கி விட்டார்கள்!
          ஆஃபீஸ் நண்பர்கள் வீட்டிற்கு வந்து, உபசாரத்திற்கு என்னை பார்ப்பதும், பதிலுக்கு  நான் அவர்களுக்கு டிஃபன், காஃபி என்று பிரதி உபசாரம் செய்வதுமாக  இரண்டு மூன்று நாள் பொழுது ஓடி விட்டது..
         இப்போது அவரவர்கள் அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்..என் மனைவி கூட ஆஃபீஸ்க்கு கிளம்பி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
   
       தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு, விஸ்ராந்தியாய் கொல்லைப் பக்கம் ஒரு குளியலும் போட்டு விட்டு ஸ்வாமிக்கு ஸ்லோகம் சொல்லி, டிஃபன் சாப்பிட்டு பேப்பர் படிக்கப் போகும் போது........,
      காலிங்பெல் அடிக்கும் சத்தம்!
      என் இலக்கிய நண்பர் வரதன்!
      பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது..எதேச்சையாய் இந்த பக்கம் வந்தாராம்..அப்படியே ஒரு எட்டு என்னைப் பார்த்து விட்டு போலாம் என்று வந்திருக்கிறார்..
     ஆஃபீஸ் இருக்குமே..போயிருப்பாரோ..இல்லாவிட்டால் ரிடையர்ட் ஆகியிருப்பாரோ என்ற சந்தேகம் எதுவும் துளிக்கூட இல்லாமல்..’என்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டதே..பார்த்தால் பேசி விட்டுப் போகலாம்’ என்று வந்திருக்கிறார்..ஆப்த நண்பர்!
     சுட்ட  ஏத்தம்பழம்  இரண்டு இருந்தது...ஒரு டீ கலந்து  குடுத்தேன்...
     ஏத்தம் பழமா...ஜோர்..ஜோர்...எனக்கு ரொம்பப் பிடிக்குமே” என்று ஆசையாக சாப்பிட்டார்...
    “வரதன் இந்த  ஏத்தன் பழத்துல ஒரு கதை ஒண்ணு இருக்கு.. நீங்க கிளம்பும் போது சொல்றேன்”
    “ சரி”
     “நிறைய விஷயங்கள் பேசினோம்...அவர் ஓய்வூதியம் வாங்க போராடிய
கதையை சொன்னார்..வாழும் வாழ்க்கையே ரொம்ப போராட்டமாகப் போய் விட்டது என்று ஏகத்துக்கு வருத்தப் பட்டார்...
       அவர் கவிதைத் தொகுப்பு ஒன்றை பரிசாகக் கொடுத்தார்..பையனுக்கு சரியாக வேலை அமையவில்லை என்று வருத்தப் பட்டார்..அவருடைய சிறு கதைத் தொகுப்பை M.A. க்கு வைத்துள்ளதைப் பற்றி சிறு  குழந்தை போல சந்தோஷப் பட்டார்.அவருடைய சிறுகதைகளை ஆராய்ச்சி செய்ய வந்த மாணவன் ஒருவன் ’டாக்டரேட்’ வாங்கியதை தன்னிடம் சொல்லவில்லை என்று ஏக்கப் பட்டார்...
      இரண்டு பேருக்கும் பேசுவதற்கு ‘சப்ஜெக்ட்’ இல்லாததினால் கொஞ்ச நேரம் மெளனம்..
      அவருடைய கவிதைத் தொகுப்பை வருடினேன்!
      அவருடைய கவிதைகளிலே எனக்குப் பிடித்த அம்சம் ஒரு அழகிய ஃபோட்டோவை எண்ணி நாலே   நாலு எளிமையான வரிகளில் கொண்டு வந்து விடுவது தான்!.
        உதாரணத்திற்கு....
       “.........கண்ணாடிக் குழல்களில்
       ஆரஞ்சு சாறு நிரப்பப் பட்டது
       போன்ற அழகிய விரல்கள்..”
       இதோ இன்னொரு கவிதை....
       அம்மா இனி இல்லை..அம்மா அன்போடு கொடுத்தனுப்பிய தயிர்சாதமும்,
வடு மாங்காயும் இனி கிடையாது என்பதை எவ்வளவு நாசுக்காய் வெளிப் படுத்துகிறார்!
       “ .........சுத்தமாய்த் தேய்த்து
          கழுவப் பட்ட
          அந்த கனமான
          எவர்சில்வர் டிஃபன் பாக்ஸ்
          வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறது.....”
          ஒரு கவிஞரின் கவிதைகளை அவர் முன்னாலேயே படித்துக் கொண்டிருப்பது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம்!
        லேசாய் கனைத்தார் வரதன்!
      “அப்ப வரட்டுமா?”
      புத்தகத்தை மூடவே மனதில்லாமல் ’சரி’ என்று  ஆரண்ய நிவாஸத்தின் வாசல் கேட் வரை சென்று  வழி அனுப்பி விட்டு வந்தேன்.
        சற்று நேரத்தில் வாசலில் காலிங்பெல் அடித்தது!
        லாண்டரிக்கு துணி எடுக்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்து கதவைத் திறந்தவனுக்கு ஆச்சர்யம்!
        மறுபடியும் வரதன்!
       “எதுக்கு வந்தேன் தெரியுமா?”
       “கண்ணாடி கூடு மறந்து போய் வைச்சிட்டீங்களா?”
       “ இல்லை..அந்த ஏத்தம் பழக் கதை?’’
       “ அட... நான் மறந்துட்டேன் இல்ல..”
        வாத்ஸல்யத்துடன் அவர் கையைப் பற்றிக்கொண்டு வாசலில் உள்ள
கார்டன் சேர்களில் அமர்ந்தோம்...அந்த உச்சி வெயிலிலும் பக்கத்தில் உள்ள
மாமரத்திலிருந்து ஜிலுஜிலுவெனக் காற்று வீசியது..
        ”ம் சொல்லுங்க”
        “சொல்றேன்”
          மனது பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது...அன்று நடந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கும்...யாரிடமும் இது வரை பகிர்ந்து கொணடதில்லை...வரதனிடம் சொல்லப் போகிறேன் என்று நினைக்கும் போது ஆழ்ந்த பெருமூச்சு வந்தது..
          ஆவலுடன் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார், நண்பர்.
                (இதன் தொடர்ச்சி 01.04.13 அன்று வெளிவரும்)
   
   
 .
   

Saturday, March 23, 2013

வழுக்கையால் விழுந்த தலை !




"விழுந்திடுத்துப்பா”
“என்னப்பா..என்ன?”
“வழுக்கை”
இடுப்பை குனித்து ஜப்பான்காரர்கள் வணக்கம் சொல்லும் வண்ணம், தன் வழுக்கை விழுந்த  தலையை வருத்தத்துடன்  காண்பித்தான் விஸ்வம்.
”இது தானா.. நான் கூட என்னவோ..ஏதோ என்று பயந்துப் போய் விட்டேன்”
“என்னப்பா இது நான் ஏதோ சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ கிண்டல் பண்றியே?”
“இது ஒண்ணும் கவலைப் படுகிற விஷயம் இல்லையப்பா..எல்லாருக்கும் தான் வழுக்கை விழறது..வாஷிங்டன்,ஐஸனோவர், நிக்ஸன், டிகால், குருச்ஷேவ்...”
  ” இருப்பா..இரு... நம்ம நாட்டுத் தலயில  யாருக்கும் வழுக்கை இல்லையா..?”
 “ பொறு அப்பேன்...ஜவஹர்லால்  நேரு..ராஜாஜி, ஏன் மஹாத்மா காந்தியே கூட..”
   “ இருப்பா..இது எவ்வளவு மனசுக்கு கஷ்டமா இருக்கு?”
   “தம்பி...வருத்தப் படாதே..இதுல ரொம்ப நல்லது இருக்கு..அழுக்கு சேராம தலை பளிச்னு இருக்கும்...ஐடி கார்டை தூக்கிட்டுப் போகிறார்போல சீப்பைத் தூக்கிண்டு போக வேண்டாம்...பேன் தொல்லை இல்லை...கண்ணாடி முன்னாடி ரொம்ப நேரம் நின்னு தலை வாரிக்க வேண்டாம்..அதனால, நேரத்துல பஸ்ஸை பிடிச்சுடலாம்...”
     ”என்னவோ போ” என்றான் அலுப்புடன்!
     உடனேயே ஒரு வெண்பாவை எடுத்து விட்டேன்..அதற்குப் பிறகு தான் அடங்கினான், அவன்!
அந்த வெண்பா இதோ:

அழுக்கு,பொடுகு,பிசிக்கினால் படும் பாடில்லை
வழுக்கி விழுந்திடுமே வந்துறையும் பேன்களெல்லாம்,
அழகன்  இவனென்று வயசுப் பெண்களும்  நேசிக்கும்,
வழுக்கையால்  விழுந்த தலை!


Wednesday, March 20, 2013

காணாமல் போனவர்கள் !!!!


”மாமி, எங்கம்மா ஒரு டம்ளர் காஃபி பொடி உங்காத்திலேர்ந்து வாங்கிண்டு வரச் சொன்னா, 
ஒண்ணாம் தேதி வந்ததும் கண்டிப்பா தருவாளாம்” என்று உரிமையுடன் காஃபி பொடி கடன் கேட்டு வரும் பக்கத்து வீட்டுச் சிறுமி........
************************************************
“ என்னடா அப்படிப் பார்க்கிறே.. கண்ணாடி சீசால தண்ணி கலந்து ‘சிரப்’னு சொல்லி ஏமாத்தற என்னையே உங்கப்பா ஏமாத்திட்டார்..”
“எப்டி டாக்டர்?”
“அப்ப அரச மரத்தடி தெரு மாடில என் க்ளினிக் இருந்தது..உங்கப்பா அப்ப குந்தால வேலை..ஊட்டிலேர்ந்து உங்களுக்கு ஸ்பெஷலா உருளைக் கிழங்கு வாங்கி வந்திருக்கேன்’னு சொல்லி கீழே வாசல்ல கடை போட்டிருந்தவன்ட்ட வாங்கி என் தலையில கட்டிட்டார்டா..”
“உங்களுக்கு எப்டி டாக்டர் தெரியும் அது?”
“ நான் மாடி ஜன்னலேர்ந்து பார்த்துக் கிட்டு இருந்தேன்லே...ஹஹ்ஹா”
பேஷண்டிடம் சினேகபாவத்துடன் இருக்கும் டாக்டர்
************************************************
“என்ன மாமி பாப்பா, பட்டணத்திலேர்ந்து வந்திருக்கா?”
“ ஆமா செட்டியார்”
“ நல்ல சமாசாரம் தானே”
“ ஆமா...முழுகாம இருக்கா”
“ கவலையேப் படாதீங்க... நம்ம தாய்மானவர் இருக்காரு...வாளத் தார் ஒண்ணு சாத்தறேன்னு வேண்டிக்குங்க..சுகப் பிரசவமாயிடும்” என்று சொல்லிக் கொண்டு வாத்ஸல்யத்துடன் வீசைக் கல்கண்டை மளிகைக் கடை சாமான்களுடன் இலவசமாய் கொடுக்கும் மளிகைக் கடைக் காரர்...
************************************************
”சாமண்ணா, ஒரு அல்வாத் துண்டு, நெய் ரோஸ்ட், ஒரு காஃபி என் கணக்கில எழுதிக்க “ என்று முதலாளியிடம் ஜம்பமாய் சொல்லிக் கொண்டே வெளியே வரும் ஹோட்டலில் ’அக்கவுண்ட்’ வைத்துக் கொண்டிருக்கும் ஆசாமி..
************************************************
“சார் போஸ்ட்... தம்பி உனக்கு நாளைக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தரேன் என்று வேலைக்கான ஆர்டர் வரும் என்கிற நம்பிக்கையில் தனக்காக காத்திருக்கும் வேலை இல்லா பட்டதாரியிடம் கனிவாய்ச் சொல்லும் போஸ்ட்மேன்!
************************************************

அம்பிப் பயலுக்கு விளக்கெண்ணையை புகட்டுவதற்குப் பாடுபடும் தாத்தா,பாட்டி, அத்தை,அத்திம்பேர் மற்றும் குடும்ப நபர்கள்.மூக்கைப் பிடித்துக் கொண்டு அடம் பிடிக்கும்
அந்த அம்பிப் பயல்.அவன் படும் பாட்டைக் கண்டு அழும் பாக்கி வாண்டுகள்... சின்னக் குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொடுக்கும் வைபவம் இப்போது 
இருக்கிறதா?   
************************************************
ஒரு முப்பது,முப்பத்தந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த இவர்கள் எல்லாம் இன்றைய கால கட்டத்தில் எங்கே போய் விட்டார்கள்?

Saturday, March 16, 2013

ரயில் ஸ்னேகா!


ஒரு நீண்ட நேர ஓட்டத்திற்குப் பிறகு அந்த ரயில் பெரிதாய் பெருமூச்சு விட்டுக் கொண்டு, ஸ்டேஷனுக்கு வந்து நின்றது.
  “சார்....காஃபி....சார்...காஃபி..”
  “டீ.........டீ........டீ.......”
 “இட்லி வடை....சார் உப்மா......உப்மா....”
 “ஹிண்டு...எக்ஸ்ப்ரஸ்....ஆனந்த விகடன்..”
“சார்...போளி....போளி.....”
      வியாபாரிகளின் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது.
      அந்த பருத்த மனிதர், மேல் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார்..அவருக்கு இது காறும் இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஆசாமி, ஒரு மரியாதைக்குக் கூட  அவரிடம் சொல்லிக்கக்  கூட மாட்டாமல் ஒரு வழியாய் இறங்கி விட்டான்..
      அந்த ஸீட்டில் நாம் உட்காரலாமா என்று நினைத்தார்...உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்..அவன் உட்கார்ந்திருந்த இடம் கூட அவ்வளவு எரிச்சல் உண்டாக்குமளவுக்கு
அவரை ‘போர்’ அடித்து விட்டான் அந்த ஆள்!
    பசி வயிற்றை கவ்வவே, கையோடு கொண்டு வந்த டிபன் பாக்சைத் திறந்தார்.
    மிளகாய் பொடி தூவிய அந்த மல்லிகைப் பூ போன்ற இட்லிகள் ஒவ்வொன்றாய் அந்தர்த்யானமாகிக் கொண்டிருந்தது...
    “....பேச்சு கொடுத்தால் தானே பேசுகிறான்கள்..வாய் மூடி மெளனமாய் இருந்து விட்டால்....” என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, டக்டக்கென்று பூட்ஸ் கால்கள் சப்தமிக்க கோட்டு சூட்டுடன் ஒரு அழகிய இளம் பெண்  எதிர்த்தாற் போல் உட்கார்ந்தாள்....
    பரவாயில்லையே என்று  நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ஸ்டேஷனில் இறங்கின அந்த பழைய ஆள் மனதுக்குள் வந்து மறுபடியும் பயமுறுத்தினான்!
   ரயில் சினேகிதம் எல்லாம் நமக்கு செளகர்யமான ஸீட் கிடைக்காத வரை தான் கொண்டாடப் பட  வேண்டும்..வசதியாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது எதற்கு அனாவசியமாய் வாய்
வளர்த்துக் கொள்ள வேண்டும் அடுத்த ஆளிடம்?
    சட்டென கண்களை மூடிக் கொண்டு தூங்குகிறார்போல பாசாங்கு செய்யலாமா என்று எண்ணினார்..உடனே எண்ணத்தை மாற்றிக் கொண்டார்...
   டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எப்படி தூங்குவது?   
   இதற்குள் ரயில் கிளம்பி விட்டது.
   சினேகிதமாய் சிரித்தாள் அந்த இளம் அழகி.
   “அதற்குள் வெயில் ஆரம்பிச்சாச்சு...இல்லையா  சார்”
   ஆம் என்பது போல தலையை ஆட்டினார்..
   ”என் பெயர் ஸ்னேகா”
   இதற்கும் மெளனமே அவர் பதிலாய் இருந்தது! 
  ”சார்....மதுரைக்கா போறீங்க..”
  ”..”
 “சும்மா..பேச்சுக்குத் தான் சொல்றேன்...ஓடற ரயில்ல உங்களுக்கு ஏதாவது     ஆச்சுன்னா....நெருப்புன்ன உடனே வாய் வெந்துடுமா என்ன?”
  “..”
  “பரவாயில்ல.. நான் ஒரு இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட்..”
  ”..”
  “ஏதாவது நம்ம கிட்ட பாலிஸி போட்டீங்கன்னா..”
  ”..”
  “இது மார்ச் மாசம் நல்ல எண்டெளமோண்ட் பாலிஸி ஒண்ணு இருக்கு...போட்டீங்கன்னா...இன்கம்டாக்சுக்கு SAVE பண்ணினா மாதிரியும் ஆச்சு”
 “..”
 “முத ரெண்டு ப்ரீமியம் நான் கட்டறேன்..மூணாவதிலிருந்து நீங்க கட்டினாப் போறும்”
 “..”
 “பரவாயில்லை சார்..தெரிஞ்ச மனுஷனாப் போயிட்டீங்க..உங்களுக்காக மூணு பிரீயமும்  நானே கட்டறேன்..”
 “..”
  “என்ன சார்...பேனா வேணுமா...பேப்பரும் வேணுமா..இந்தாங்க”
  “..”
  “என்னது... நான் படிக்கணுமா...’சார் நான் ஒரு செவிட்டூமை... நீங்க பேசினது ஒண்ணுமே புரியவில்லை’...அடப் பாவமே... நான் வரேன் சார்”
அந்த இன்ஸ்யூரன்ஸ் ஏஜண்ட் இடத்தை காலி செய்ததும், இவர் ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா...என்று தன் சாமர்த்தியத்தை நினைத்து தனக்குத் தானே நன்றாக  வாய் விட்டு சிரித்தார்.
அதற்குப் பிறகு, அரை மணி நேரம் கழித்து,குய்யோ,முறையோ என்று கூச்சலும் போட்டார்.....
ரயிலை விட்டு இறங்கிய அந்த ஸ்னேகா சும்மா இறங்காமல்,இவர் சூட்கேசையும் கூட எடுத்துக் கொண்டு இறங்கியது தான் காரணம்!

Saturday, March 2, 2013

ஹ..ஹ..ஹஹ்ஹ்ஹாஹ் ஹா !


பஸ்ஸில் தொங்கிக் கொண்டு தான் வந்தேன் என்று சொல்ல வேண்டும்..
அப்போது என் பின்னால் யாரோ கை தட்டி கூப்பிடுவது போல் இருந்தது ..
பார்த்தால் நண்பர். அவரது வலது பக்கம் உள்ள நபர், எழுந்திருக்க,
முயற்சிக்க எனக்கு அந்த சீட்டை கொடுக்கத் தான் நண்பர் விரும்பியிருக்கிறார்..
நானும் ஒரு வித பரபரப்புடன் அந்த சீட்டைக் கைப்பற்றி உட்கார்ந்து கொண்டேன் .
     "சார், நான் தான் உங்களுக்கு இடம் கொடுத்தேன் .."என்றார் பெருமையாய் !
    " சார் மன்னிக்கணும் ..நீங்க எனக்கு இடம் கொடுக்க வில்லை!'
      இது என்னடாது வில்லங்கம்  பிடிச்ச ஆளை பக்கத்துல உட்கார  வைத்திருக்கிறோம்  என்று நினைத்தது
போல இருந்தது அவர் பார்வை..
     இருந்தாலும், சமாளித்துக் கொண்டு கேட்டார் ..
     " எப்டி சொல்றீங்க?"
     "சார்...நான் எங்கே உட்கார்ந்திருக்கேன் ?"
     "என் பக்கத்திலே .." -
     சொல்லும் போதே பயம் தெரிந்தது!
     " உங்களுக்கு அது எந்த பக்கம் சார்?"
     " வலப் பக்கம்..."
     "அப்ப வலத்தைக் கொடுத்துட்டு, இடம் என்று சொல்றீங்களே சார் .."
என்றேன் ..
    இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு இரண்டு ஸ்டாப் முன்னாடியே, எனக்கு 'இடத்தை'க்கொடுத்து விட்டு மரியாதையாய்  இறங்கிக்   கொண்டார், நண்பர்.   
உங்களுக்கு நான் ரொம்பவே இடம் கொடுத்து விட்டேன் என்று சொல்லாமல்
சொல்வது போல் இருந்தது அவர் செய்கை !  
அதே நண்பர் மறு நாள் ஆபீஸில் என் சீட்டிற்கு வந்து 'குட்மார்னிங்' என்று சொல்ல,  நானும் குட்மார்னிங் என்றேன்.
"பரசு..ஒரு விஷயம் .." 
"சொல்லுங்க.."
"நாய் கிட்ட Tiger biscuit போட்டா அது உங்களை விட்டுட்டு பிஸ்கட்டை சாப்பிடும்..டைகர் கிட்ட நாய் பிஸ்கட் போட்டா அது பிஸ்கட்டை விட்டுட்டு உங்களை சாப்பிடும்...இதுலேர்ந்து என்ன தெரியறது ?"
"ஒன்று மட்டும் தெரியறது..'
"என்ன .."
"போயும்...போயும்..சீட்டிற்கு வந்து ஒங்களுக்கு குட்மார்னிங் சொன்னேனே ..
அது தப்புன்னு தெரியறது .."
  காலை உதைத்துக் கொண்டு சென்றார் பரசு...
 எனக்கு ஏக திருப்தி ... 
  "இதே பரசுவிடம் ஒரு வாரம் முன்பு நான் போய் குட்மார்னிங் சொல்ல,
அவர் அதற்கு விழுந்து விழுந்து சிரிக்க..எதற்கு அவர் சிரிக்கிறார் என்று நான் 
வழக்கம் போல் முழிக்க ...."சாரி சார்.நீங்க ஏதோ ஜோக் சொல்றீங்களோன்னு  
 நினைச்சேன்.." என்று அவர் போட்ட மொக்கைக்கு பதில் மொக்கை தான் 
   இன்று நான் செய்தது!
 ..